Published:Updated:

கம்பெனி ஸ்கேன் : காவேரி சீட்ஸ்!

கம்பெனி ஸ்கேன் : காவேரி சீட்ஸ்!

கம்பெனி ஸ்கேன் : காவேரி சீட்ஸ்!

கம்பெனி ஸ்கேன் : காவேரி சீட்ஸ்!

Published:Updated:

இந்த வாரம் நாம் ஸ்கேன் செய்யப்போகும் கம்பெனி காவேரி சீட்ஸ் (kaveri seeds) எனும் விவசாயத்துக்கு விதைகள் சப்ளை செய்யும் ஒரு நிறுவனத்தை. 1976-ம் ஆண்டு THM ராவ் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டுச் செயல்பட்டு வந்தது. ஒரு புராப்ரைட்டரி வகை ஹைப்ரிட் சோளத்துக்கான விதையைத் தென்னிந்தியாவில் அறிமுகப்படுத்தியதுதான் இந்த நிறுவனத்தின் முதல் பெரிய வெற்றி எனலாம்.

இந்தவகை ஹைபிரிட் சோள விதைகளை இந்த நிறுவனம் தன்னுடைய சொந்த ஆய்விலேயே கண்டுபிடித்ததும், இந்தவகை விதைகள் விவசாயிகள் நடுவே பெருமளவில் வெற்றி பெற்றதும் தான் THM ராவ் எனும் நிறுவனம் காவேரி சீட்ஸ் கம்பெனி லிமிடெட் என்ற பெயர் மாற்றத்துடன் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட பெரியதொரு நிறுவனமாக மாறுவதற்கு அடிகோலியது.

கம்பெனி ஸ்கேன் : காவேரி சீட்ஸ்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

  தொழில் எப்படி?

இந்திய விதைச் சந்தை உலக அளவில் ஐந்தாவது பெரிய சந்தையாகும். ஏறக்குறைய உலக விதை விற்பனை வியாபார அளவில் 4.4% வர்த்தகம் இந்தியாவில் நடக்கவும் செய்கிறது. நகரமயமாக்கலும், விளைநிலம் குறைவதும், விவசாயப்பணியில் குறைந்த நபர்களே ஈடுபடுவதும் அதிக மகசூலைத் தரும் விதைநேர்த்தியின் தேவையை அதிகரித்துக்கொண்டே இருக்கும். இந்த நிலை தற்போதைக்கு மாற வாய்ப்பில்லை என்பதால் தொடர்ந்து விதை நிறுவனங்களுக்கு வியாபாரத்துக்கான வாய்ப்பு இருந்து கொண்டேயிருக்கும் எனலாம்.

இந்தியாவைப் பொறுத்தவரையில் நெல், கோதுமை மற்றும் சோளம் ஏக்கருக்கு கிடைக்கும் சாகுபடி உலக சராசரி சாகுபடியைவிடக் குறைவாகவே உள்ளது. எனவே, சாகுபடியை உயர்த்த விவசாயிகள் முற்படும்போது வீரிய ரக விதைகளை நோக்கி நிச்சயமாய்ச் செல்ல ஆரம்பிப்பார்கள் எனலாம். 

கம்பெனி ஸ்கேன் : காவேரி சீட்ஸ்!

அதேபோல், இந்தியாவில் இன்றைய தேதியில் ஹைபிரிட் வகை விதைகளின் உபயோகம் குறைவாகவே உள்ளது. இதுவும் இந்தத் துறை வேகமான வளர்ச்சியைக் காண வாய்ப்பிருக்கிறது என்பதையே காட்டுகிறது.

விதை விற்பனை என்பது ஒரு தொழிலாக உருவெடுத்திருப்பது கடந்த 25 ஆண்டு காலக்கட்டத்தில்தான். இந்தத் துறையில் போட்டி வருவது கொஞ்சம் கடினமான விஷயம். ஏனென்றால், ஆராய்ச்சி, நிலம், விவசாயிகளின் நெட்வொர்க் எனப் பல முட்டுக்கட்டைகள் இந்தத் துறை யில் நுழைவதற்கு இருக்கவே செய்கிறது.

இந்திய விதை உபயோகத்தில், விவசாயிகளே தங்களுடைய விளை நிலத்தில் உற்பத்தியில் சேர்த்துவைத்து விதைக்கும் விதையின் பங்கு 75 சதவிகிதமாகவும், வியாபாரரீதியாக வாங்கி விதைக்கப்படும் விதைகளின் பங்களிப்பு 25 சதவிகிதமாகவும் இருந்து வருகிறது. இன்றைய சூழ்நிலையில் பருத்தியில் 95 சதவிகிதமும், நெல்லில் ஐந்து சதவிகிதமும், கம்பு பயிரில் 50 சதவிகிதமும், சோளத்தில் 55 சதவிகிதமும், காய்கறிகளில் 20 சத விகிதமும் ஏனைய பயிர்களில் 12 சதவிகிதமும் வீரிய விதைகள் நம் நாட்டில் பயன்படுத்தப்படுகிறது. எனவே, இன்னமும் இந்தத் துறையில் வளர்ச்சிக்கு வாய்ப்புள்ளது.

  கம்பெனி எப்படி?

அகில இந்திய ரீதியாக வேகமாக வளர்ந்துவரும் விதை நிறுவனம் இது. பருத்தியில் 17 சதவிகிதமும், சோளத்தில் 13 சதவிகிதமும், கம்பு விதையில் 13 சத விகிதமும், நெல்லில் 9 சதவிகிதமும் சந்தைப் பங்களிப்பை தன்வசம் வைத்துள்ளது இந்த நிறுவனம். 2008-ல் இந்த நிறுவனம் அறிமுகப்படுத்திய 'ஜாடோ’ மற்றும் 'ஜாக்பாட்’ என்ற இரண்டு பருத்தி விதைகளும் மிகப் பெரிய அளவிலான வெற்றியைத் தந்து வருடாந்திர அளவில் கிட்டத்தட்ட 90 சதவிகித விற்பனை (சிஏஜிஆர்)அளவு வளர்ச்சியை எட்டியுள்ளது.

கம்பெனி ஸ்கேன் : காவேரி சீட்ஸ்!

பருத்தி செடியைப் பொறுத்தவரை யில் போல்வார்ம் எனும் பூச்சிதாக்கி னால் பாதியளவு சாகுபடி குறைந்துவிடும். மான்சான்டோ ஒரு ஹைப்ரிட் பருத்தியை அறிமுகப் படுத்தியது. இதை போல்வார்ம் பூச்சி தாக்காது என்பதால் மிகுந்த அளவிலான வரவேற்பை விவசாயிகள் நடுவே இந்த விதை பெற்றது. இந்த விதைத் தயாரிப்பு மற்றும் விநியோகத்துக்கு இந்தியாவில் ஏறக்குறைய 30 நிறுவனங்கள் மான்சான்டோவிலிருந்து உரிமம் பெற்றுள்ளன. அதில் காவேரி சீட்ஸ் கம்பெனியும் ஒன்று. இந்த நிறுவனம் ஒரு வெற்றிகரமான விதை நிறுவனத்துக்கான எல்லா விஷயங் களையும் உள்ளடக்கியதாக இருக்கிறது.

விதை நிறுவனத்துக்கு மிக முக்கிய மானது, ஆர் அண்ட் டி (ஆராய்ச்சி). அடுத்தபடியாக கண்டுபிடித்த விதைகளை விற்பனை செய்து விவசாயிகளுக்குக் கொண்டு சேர்ப்பது. அடுத்து, சந்தைச் சூழல்களை அறிந்து செயல்படுவது. தவிர, விதைகளின் எதிர்கால விலை குறித்து முழுமையாக அறிந்துவைத்திருப்பது. விதைகளைத் தயாரிக்க / பரிசோதித்துப் பார்க்க ஜெர்ம்பளாசம் பூல் எனப்படும் விளைநிலம் மிக அவசியமான ஒன்று. அதுவும் வெவ்வேறுவிதமான தட்பவெப்ப நிலையைக்கொண்ட இடங்களில் இந்த விளைநிலங்கள் தேவைப்படும். இன்றைய அளவில் ஏறக்குறைய 600 ஏக்கருக்கும் மேலான பல்வேறு தட்பவெப்பநிலைகளுடன் கூடிய பரிசோதனை விளைநிலங்கள் இந்த நிறுவனம் வசம் இருப்பது ஒரு தனிச்சிறப்பு எனலாம்.

விதைகளைத் தயாரித்தால் போதுமா? பாதுகாத்து வைக்கவேண்டும். விவசாயிகள் இருக்கும் இடத்துக்கு அருகே பாதுகாப்பு வசதியும், டிஸ்ட்ரிப்யூட்டர்களும் இருக்க வேண்டும் எனப் பல தேவைகள் இருக்கிறது இந்தத் தொழிலில்.

கம்பெனி ஸ்கேன் : காவேரி சீட்ஸ்!

அதேபோல், விதை வாங்கும் விவசாயிகள் அவர்கள் வாழ்வாதாரம் என்பதால் புதிதுபுதிதாக வருடாவருடம் வெவ்வேறு விதைகளை வாங்க மாட்டார்கள். ஒருமுறை வாங்கிப் பலனடைந்தால் தொடர்ந்து வாங்கிக் கொண்டே இருப்பார்கள். இப்படி பல நெட்வொர்க்குகள் இந்தத் தொழிலில் தேவைப்படுகிறது.

அகில இந்திய ரீதியாக ஏறக்குறைய 5 லட்சம் சதுர அடிகளைக்கொண்ட 26 வேர்ஹவுஸ்களும், 8 பிளான்ட்களும், விதை தயாரிப்புக்காக 60,000 ஏக்கர் நிலம் ஒப்பந்தத்திலும், 90,000-க்கும் மேற்பட்ட விவசாயிகளும் இந்த நிறுவனத்தின் நெட்வொர்க்கில் இருக்கிறார்கள்.

பருத்தியில் முக்கிய இடத்தைப் பிடிக்க முயன்று வருகிறது காவேரி சீட்ஸ். அதற்குண்டான கட்டுமானங்களை வெகுசிரத்தையுடன் செய்துவருகிறது. அதேபோல், உலகத்தில் முதல் பெரிய பயிரான சோளத்திலும் (இரண்டாம் இடத்தைக் கோதுமையும், மூன்றாம் இடத்தை நெல்லும் பிடித்துள்ளது) கால் பதித்துள்ளது இந்த நிறுவனம்.

உலக அளவில் இந்தியா ஆறாவது பெரிய சோள உற்பத்தியாளராகவும், ஐந்தாவது பெரிய உபயோகிப் பாளராகவும் இருப்பதால் சோளத்தின் விதையிலும் நல்ல வாய்ப்புகள் காவேரி சீட்ஸ் லிமிடெட்டுக்குக் காத்திருக்கிறது எனலாம்.

கிட்டத்தட்ட 8 மில்லியன் சோள விவசாயிகள் 22 மில்லியன் டன்கள் சோளத்தை 8.5 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்கிறார்கள். கடந்த 11 வருடத்தில் சோள உற்பத்தி கிட்டத்தட்ட 93 சதவிகித அளவு அதிகரித்துள்ளது. இதற்குக் காரணம் விவசாயிகள் வீரிய விதைகளுக்கு மாறிவருவதுதான்.

  ரிஸ்க் ஏதும் உண்டா?

விதை வியாபாரம் என்பது மழை, டெக்னாலஜி, பயிர் சாகுபடி சுழற்சி, விலை, போட்டிப் பயிர்கள் போன்ற பல விஷயங்களை உள்ளடக்கியது. எனவே, இவற்றில் ஏதாவது ஒன்று காலைவாரினாலும் பெரிய அளவில் லாபம் பார்க்க முடியாது போகலாம்.

கம்பெனி ஸ்கேன் : காவேரி சீட்ஸ்!

இதுவரையிலும் விதை விற்பனை செய்யும் நிறுவனங்கள் தங்களுடைய வியாபாரத்திலிருந்து வரும் லாபத்தை விவசாய வருமானமாகக் காட்டி வரி எதுவும் செலுத்துவதில்லை. இனிவரும் காலங்களில் லாபம் மிகவும் அதிகரிக்கும்போது தேவையான சட்டதிருத்தங்கள் கொண்டுவரப்பட்டு வரி செலுத்த நேரலாம்.

பெரும்பான்மையான விதை நிறுவனங்கள் தற்போது பருத்தி விதையிலேயே மொத்த கவனத்தையும் செலுத்துகின்றன. காவேரி சீட்ஸும் இதற்கு விதிவிலக்கல்ல. இப்படி ஒரு பயிரையே நம்புவதும் கொஞ்சம் ரிஸ்க்கான விஷயமாகத்தான் இருக்கிறது.

ரிஸ்க்குகள் கொஞ்சம் அதிகமாகவே தெரிந்தபோதிலும் வியாபாரம் வளர்வதற்கான தேவை இருக்கும் தொழில், போட்டி கம்பெனிகள் சுலபத்தில் வரமுடியாத தொழில், நீண்ட அனுபவத்தைக் கொண்ட நிறுவனம் என்ற பல பாசிட்டிவ் விஷயங்களைக் கருத்தில்கொள்ளும்போது காவேரி சீட்ஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தை முதலீட்டாளர்கள் முதலீட்டுக்காகச் சற்றே பரிசீலனை செய்யலாம்.

சமீபத்தில் இந்த நிறுவனத்தின் பங்குகள் பெரிய அளவில் ஏற்றம் கண்டிருப்பதால் தற்போதைக்கு இதை வாங்குவதைத் தவிர்த்து, வெறுமனே குறித்துவைத்துக்கொண்டு ஒரு அசாதாரண விலை இறக்கம் வரும்போது நீண்டகால முதலீட்டுக்காக வாங்கிப்பார்க்கலாம்.

- நாணயம் ஸ்கேனர்.

(குறிப்பு: இந்தப் பகுதி இன்றைய விலையிலேயே வாங்கவேண்டிய பங்கு பரிந்துரை பகுதி அல்ல. இதில் சொல்லப்பட்டுள்ள பங்குகளை வாங்குவது முதலீட்டாளர்களின் தனிப்பட்ட முடிவாகும்!)