Published:Updated:

300 நாட்களில் லாபம் தரும் பங்குகள்!

சி.சரவணன்

பிரீமியம் ஸ்டோரி

இந்திய பங்குச் சந்தை, புதிய உச்சத்தைத் தொட்டிருக்கிறது. இந்த நிலையில் நாணயம் விகடன் 300-வது சிறப்பிதழுக்காக 300 நாட்களில் நல்ல லாபம் தரக்கூடிய பங்குகளைப் பரிந்துரை செய்ய முடியுமா என்று முன்னணி பங்குச் சந்தை நிபுணர்களிடம் கேட்டோம். சந்தை நிபுணர்கள் பலதரப்பட்ட பங்குகளை அலசி ஆராய்ந்து அடிப்படையில் வலுவான 10 பங்குகளைத் தேர்வு செய்து தந்தார்கள். அவர்கள் அலசி ஆராய்ந்து தந்த பரிந்துரைகள் இதோ... 

300 நாட்களில் லாபம் தரும் பங்குகள்!
300 நாட்களில் லாபம் தரும் பங்குகள்!

 நாட்டுக்கும் அதன் பொருளாதார/தொழில் வளர்ச்சிக்கும் அத்தியாவசியத் தேவையான மின் துறையைச் சேர்ந்த நிறுவனம். புத்தக மதிப்பு (ரூ.98), பி.இ விகிதம் (8-க்குக்கீழ்), ரிட்டர்ன் ஆன் கேப்பிட்டல் எம்ப்ளாய்டு (10 ஆண்டு சராசரி 10%), ரிட்டர்ன் ஆன் ஈக்விட்டி (10 ஆண்டு சராசரி 14%), விற்பனை வளர்ச்சி (10 ஆண்டு சராசரி 10%க்குமேல்) உள்ளிட்டவை பங்கு முதலீடு குறித்த கவர்ச்சிகரமான அம்சங்களாக உள்ளன.

வரும் 2017-ம் ஆண்டுக்குள் தனது உற்பத்தித் திறனை 51,000 மெகாவாட் ஆக உயர்த்தத் திட்டம் வைத்திருக்கிறது.  

300 நாள் இலக்கு விலை: ரூ.150

 இந்த நிறுவனத்தின் மொத்த விற்பனை, பங்குகளின் புத்தக மதிப்பு, இபிஎஸ் தொடர்ந்து நல்ல வளர்ச்சியைக் கண்டு வருகிறது. 10 ஆண்டுகளுக்கு முன்னர் ரூ.600 கோடிக்கும் கீழே இருந்த இதன் விற்பனை, சென்ற ஆண்டு, ரூ.4,000 கோடிக்கு அருகில் இருக்கிறது.

இரண்டு மாதங்களுக்கு முன்னர் ரூ.585-க்குக் கீழே வர்த்தகமான இந்தப் பங்கு ஒரேமாதத்தில் ரூ.285-க்குமேல் அதிகரித்து மார்ச் மாத கடைசியில் ரூ.865-ஐ தாண்டி வர்த்தகமானது. பின்னர் அங்கிருந்து சுமார் ரூ.90 கீழ் இறங்கி, இப்போது ரூ.778-ல் வர்த்தக மாகிறது.  விலை இறங்கும்போது பங்குகளை வாங்கி சேர்க்கலாம்.

300 நாள் இலக்கு விலை: ரூ.850 - 900

300 நாட்களில் லாபம் தரும் பங்குகள்!

முன்னணி டெலிகாம் நிறுவனமான பார்தி ஏர்டெல் குழுமத்தைச் சேர்த்தது. இது டெலிகாம் சேவை வழங்கும் நிறுவனங்களுக்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளைச் செய்து கொடுக்கிறது. 2013-14-ம் நிதி ஆண்டில் நிகர லாபம் 51% அதிகரித்துள்ளது.

தற்போதைய சூழல் டெலிகாம் துறைக்கு சாதகமாகி உள்ளது. 3ஜி சேவைக்கான கட்டண குறைப்பு, 'டேட்டா’வுக்கான தேவை போன்றவற்றால் இந்த நிறுவனத்தின் லாபம் உயரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. ரூ.215-ஐ தாண்டும்பட்சத்தில் முதல் இலக்கான ரூ.230-க்கும் இரண்டாவது இலக்கான ரூ.270-க்கும் செல்வதற்கான வாய்புகள் உள்ளன.

300 நாள் இலக்கு விலை: ரூ.270

 உர தயாரிப்பு நிறுவனமான இதற்கு சுமார் 125 நாடுகளில் வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். இதன் துணை நிறுவனங்கள் 29 நாடுகளில் செயல்படுகின்றன. பயிர் பாதுகாப்பு வேதிப்பொருட்கள், விதைகள் தயாரிப்பிலும் ஈடுபட்டுள்ளது.

கடந்த 5 ஆண்டுகளாக இதன் நிதிநிலை செயல்பாடு நன்றாக உள்ளது. இபிஎஸ் கூட்டு வளர்ச்சி 17.5% ஆக உள்ளது. 1.4 கோடி பங்குகளை பைபேக் மூலம் வாங்கியுள்ளது. இதனால், இபிஎஸ் அதிகரிப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. கடனை கணிசமாகக் குறைத்துள்ளதால் வட்டிச் செலவு குறையும்.

300 நாள் இலக்கு விலை: ரூ.330

300 நாட்களில் லாபம் தரும் பங்குகள்!

இந்தியாவின் மிகப் பெரிய மதுபான நிறுவனங்களில் ஒன்று. அடிப்படையில் மிகவும் வலிமையான இந்த நிறுவனத்தின் நிகர லாபம் கடந்த ஐந்தாண்டுகளில் ஏறக்குறைய 8.5 மடங்கு அதிகரித்துள்ளது.

இந்த நிறுவனத்தின் தயாரிப்புகள், கனடா, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் விற்பனையாகி வருகிறது.

அதன் ஒரு பிரிவை வெளிநாட்டு நிறுவனத்துக்கு விற்க திட்டமிட்டிருந்தது. இந்த முடிவை கைவிட்டதால் பங்கின் விலை 170 ரூபாயிலிருந்து 111 ரூபாய்க்கு  வீழ்ச்சி கண்டது.

300 நாள் இலக்கு விலை: ரூ. 160

வாகன உதிரிபாகங்கள் துறையைச் சேர்ந்த கவர்ச்சிகரமான பங்கு இது. இதன் உள்நாட்டு வாடிக்கை நிறுவனங்களாக மாருதி, எம் அண்ட் எம், பஜாஜ் ஆட்டோ மற்றும் பன்னாட்டு வாடிக்கை நிறுவனங்களாக பிஎஸ்ஏ பேஜாட், பிஎம்டபிள்யூ, ரெனால்டு போன்றவை உள்ளன. கடந்த 11 ஆண்டு களில் இந்த நிறுவனத்தின் வருமானம் 23 மடங்கு உயர்ந்துள்ளது. இதேகாலத்தில் மூலதன செலவுகள் 11 மடங்கு உயர்ந்துள்ளது.

பொதுவாக, வாகனத்துறை மந்தநிலையில் காணப்பட்டாலும் இந்த நிறுவனம் வளர்ச்சிப் பாதையில் சென்றுகொண்டிருக்கிறது.

300 நாள் இலக்கு விலை: ரூ.205

300 நாட்களில் லாபம் தரும் பங்குகள்!

உலக அளவில் மிகப் பெரிய ஒருங்கிணைந்த காபி தோட்ட நிறுவனமாக இந்த நிறுவனம் இருக்கிறது. இதற்கு 19 காபி எஸ்டேட்கள் இருக்கின்றன. பிரேசில் நாட்டில் ஏற்பட்ட வறட்சியால், காபி கொட்டை விலை அதிகரித்துள்ளது. இதனால் அதிகம் பயனடைந்த நிறுவனமாக டாடா காபி உள்ளது. சர்வதேச காபி அமைப்பின் மதிப்பீட்டின்படி உலக அளவில் காபி பயன்பாடு தொடர்ந்து அதிகரிக்கும்.

2014-15-ம் ஆண்டில் இந்த நிறுவனப் பங்கின் இ.பி.எஸ் சுமார் ரூ.100-ஆக இருக்கும். அந்தவகையில் பங்கின் விலை இன்னும் 300 நாட்களில் 1,500 ரூபாய்க்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது.

300 நாள் இலக்கு விலை: ரூ. 1,500

கடந்த 5 ஆண்டுகளில் ஆர்இசி (Rural Electrification Corporation) லாப வளர்ச்சி சராசரியாக 34% ஆக உள்ளது. இந்தக் காலகட்டத்தில் ஆண்டுக்கு ஏறக்குறைய 25% டிவிடெண்டை முதலீட்டாளர்களுக்கு வழங்கியிருக்கிறது. உள்கட்டமைப்புத் துறைகளுக்கு நிதி உதவி வழங்குவதில் முன்னணி நிறுவனமாக இது உள்ளது. இதன் 85 சதவிகித கடன்கள் அரசாங்கத்தால் செக்யூர் செய்யப்பட்டிருக்கிறது.

30,000 கோடி ரூபாய்க்கு என்சிடி வெளியிட இந்த நிறுவனத்துக்கு அதன் இயக்குநர் குழு ஒப்புதல் அளித்திருக்கிறது.  இது 2014-15 - ஆம் ஆண்டில் இ.பி.எஸ்.- ரூ.61 - ஆக அதிகரிக்கக்கூடும்.

300 நாள் இலக்கு விலை ரூ. 375

300 நாட்களில் லாபம் தரும் பங்குகள்!

மின்துறையில் முக்கிய இடத்தை இந்த நிறுவனம் பிடித்திருக்கிறது. மின் உற்பத்தி திட்டங்கள், ஆயில் அண்ட் காஸ் உள்ளிட்ட 5 முக்கியப் பிரிவுகளைக் கொண்டிருக்கிறது. மொத்த வருமானத்தில் பவர் புராஜெக்ட்களின் பங்களிப்பு சுமார் 90 சதவிகிதமாக இருக்கிறது. மின்சாரத் தேவை தொடர்ந்து அதிகரித்து வருவது, இந்த நிறுவனத்துக்கு சாதகமான அம்சமாக இருக்கிறது.

இந்த நிறுவனம் வசம் ரூ.12,078 கோடிக்கு ஆர்டர் உள்ளது. இதனால், அடுத்த 23 ஆண்டுகளுக்கு இதன் லாபம் தொடர்ந்து அதிகரிக்கும் என மதிப்பிடப் பட்டுள்ளது.

300 நாள் இலக்கு விலை: ரூ. 178.

இந்த நிறுவனம், சாஃப்ட்வேர் டெஸ்டிங் துறையில் இருக்கிறது. குறிப்பாக வங்கி மற்றும் நிதிச் சேவை அளிக்கும் நிறுவனங்களுக்கு சேவை அளித்து வருகிறது. ஆசிய பசிபிக், அமெரிக்கா, ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள், இந்திய நாடுகளில் உள்ள நிறுவனங்களுக்கு இந்த நிறுவனம் சேவை அளித்து வருகிறது. இந்த நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சியைக் கருத்தில்கொண்டு, உலகின் முன்னணி சாஃப்ட்வேர் நிறுவனமான எஸ்கியூஎஸ், திங்க் சாஃப்ட் குளோபல் சர்வீசஸின் பெரும்பான்மை பங்குகளில் முதலீடு செய்துள்ளது. இந்த வளர்ச்சியைவைத்துப் பார்க்கும்போது, இந்த நிறுவனப் பங்கின் விலை கணிசமாக அதிகரிக்கும்.

300 நாள் இலக்கு விலை: ரூ. 494.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு