ஸ்பெஷல்
Published:Updated:

பங்குச் சந்தை இந்த ஆண்டு எப்படி இருக்கும்?

ஃபண்டு மேனேஜர்கள் பார்வையில்..சி.சரவணன்

ந்திய பங்குச் சந்தை ஏற்ற இறக்கத்தைச் சந்தித்தாலும் புதிய உச்சத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. மத்தியில் நிலையான ஆட்சி அமையும்; அது தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கம் அளிக்கும்விதமாக இருக்கும் என்கிற எதிர்பார்ப்பு பரவலாகக் கிளம்பியிருக்கிறது. இந்த நிலையில், இந்திய பங்குச் சந்தையின் செயல்பாடு 2014-ம் ஆண்டில் எப்படி இருக்கும் என முன்னணி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் ஃபண்ட் மேனேஜர்களிடம் கேட்டோம்.  நாணயம் விகடன் 300-வது சிறப்பு இதழுக்காக அவர்கள் அளித்த ஸ்பெஷல் பேட்டிகள் இதோ:

பங்குச் சந்தை இந்த ஆண்டு எப்படி இருக்கும்?

ஈக்விட்டி முதலீட்டுக்கு சரியான நேரம்..!

பங்குச் சந்தை இந்த ஆண்டு எப்படி இருக்கும்?

வளர்ச்சிக்கு சாதகமான புதிய அரசு அமையும் என்கிற நம்பிக்கையில் தேர்தல் முடிவுகளுக்கு முன்பே சந்தை ஏறத் தொடங்கியிருக்கிறது. இதுதவிர, சந்தை ஏற்றத்துக்கு சில முக்கியக் காரணிகளும் இருக்கின்றன. வர்த்தகப் பற்றாக்குறை, நடப்பு கணக்குப் பற்றாக்குறை போன்றவை படிப்படியாகக் குறைந்துவருவது, நீண்டகால முதலீட்டில் இந்திய பங்குச் சந்தை நல்ல லாபம் தரும் என்கிற நம்பிக்கையில் எஃப்.ஐ.ஐ-களின் முதலீடு தொடர்வது போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

2014-ம் ஆண்டில் பொதுத்துறையைச் சேர்ந்த குறிப்பிட்ட வங்கிகள், உள்கட்டமைப்பு, பொறியியல் துறையைச் சேர்ந்த நிறுவனங்கள் வளர்ச்சி காணும் என எதிர்பார்க்கிறோம். புதிய அரசு, சீர்திருத்தங்களில் கவனம் செலுத்தினால் உள்கட்டமைப்புத் துறைகள் வேகமான வளர்ச்சி பெறும். அப்படி நடக்கும்போது புதிய வேலைவாய்ப்புகள் அதிகமாக உருவாகும். புதிய அரசு சரியான நடவடிக்கைகளை எடுக்கும்பட்சத்தில், பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டு அருமையான முதலீட்டு சூழ்நிலை உருவாகும். மேலும், வட்டி விகிதமும் குறையும்.

அதிக வேல்யூவேஷனுடன் இருப்பதால் தற்போது எஃப்.எம்.சி.ஜி துறை மீது நாங்கள் ஆர்வம்காட்டவில்லை. அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்தியாவின் தொழில் உற்பத்தி வளர்ச்சி 6 - 8 சதவிகிதமாக இருக்கும். அந்தவகையில், இனிவரும் ஆண்டுகளில் மிட் கேப் மற்றும் ஸ்மால் கேப் பங்குகள் நல்ல வருமானம் தரக்கூடும்.

தற்போது ஈக்விட்டி வேல்யூவேஷன் நியாயமானதாக இருக்கிறது. அந்தவகையில், முதலீட்டாளர்கள் பங்குகள் மற்றும் பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீட்டை அதிகரித்துக்கொள்ள இதுவே சரியான தருணம்.

பங்குச் சந்தை மூன்று ஆண்டுகளில் நல்ல வளர்ச்சி காணும்!

அதிக பணவீக்க விகிதம், அதிக வட்டி போன்றவற்றால் கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்திய

பங்குச் சந்தை இந்த ஆண்டு எப்படி இருக்கும்?

பொருளாதாரம் மந்தநிலையில் காணப்பட்டது. கடந்த பத்து ஆண்டுகளில் இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களின் லாப வளர்ச்சி 14 சதவிகிதமாக இருந்தது. ஆனால் இதே காலகட்டத்தின் கடைசி ஐந்து ஆண்டுகளில் 6-7 சதவிகிதமாகக் குறைந்தது. இதனால் பங்குச் சந்தை பெரிய அளவில் வருமானம் தரவில்லை. விரைவில் நிலைமை சீராகக்கூடிய சூழ்நிலை இருக்கிறது.

மேலும், மத்தியில் அமையும் புதிய அரசு விவசாயப் பொருட்களின் விலையை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆர்.பி.ஐ புதிய கவர்னர் ரகுராம் ராஜன், பணவீக்க விகிதத்தை 6-7 சதவிகிதத்துக்குக் கொண்டுவருவார்; ரூபாய் மதிப்பில் அதிக மாற்றமில்லாமல் பார்த்துக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பாலான மக்களின் எதிர்பார்ப்பின்படி, வலிமையான புதிய ஆட்சி அமையும்பட்சத்தில் பொருளாதாரம் 12-14% வளர்ச்சி காணும். அப்போது நிறுவனங்களின் வளர்ச்சி 3-4 மடங்காக இருக்கும். அந்தவகையில், 3-4 ஆண்டுகளில் பங்குச் சந்தை நன்றாக இருக்க வாய்ப்புள்ளது.

பொருளாதார மந்தநிலையால் அவதிப்பட்ட வங்கி, நிதிச் சேவை, உள்கட்டமைப்பு (சிமென்ட், கட்டுமானம், ரியல் எஸ்டேட்), மூலதனப் பொருட்கள் உள்ளிட்ட துறைகள் 2014-ம் ஆண்டில் மேம்படும். அதேநேரத்தில், ஹெல்த்கேர் (பார்மா), எஃப்.எம்.சி.ஜி, ஐ.டி துறைகளில், 2013-ம் ஆண்டைபோல அதிக வளர்ச்சியை எதிர்பார்க்க முடியாது.

தற்போதைய நிலையில், இந்திய பங்குச் சந்தையில் சிறு முதலீட்டாளர்களின் பங்களிப்பு, அவர்களின் மொத்த முதலீட்டில் 1%-க்கும் குறைவாக உள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பங்கேற்கக்கூடிய நிறுவன பங்குகளில் முதலீடு செய்தால் நல்ல லாபம் பார்க்க முடியும். எஸ்.ஐ.பி முறையில் நிறுவன பங்குகள் மற்றும் ஈக்விட்டி ஃபண்டுகளில் முதலீடு செய்துவந்தால் நீண்டகாலத்தில் கணிசமான லாபம் கிடைக்கும்.

நீண்டகால முதலீட்டுக்கு ஏற்ற நேரம்!

பங்குச் சந்தை இந்த ஆண்டு எப்படி இருக்கும்?

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுக்குப்பின் இந்திய பங்குச் சந்தை பாசிட்டிவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாட்டம்-அப் முறையில், அடிப்படையில் வலுவான லார்ஜ் கேப் மற்றும் மிட் கேப் பங்குகளைத் தேர்ந்தெடுத்து முதலீடு செய்துவருகிறோம். பாட்டம்-அப் முறை என்கிறபோது குறிப்பிட்ட நிறுவனத்தை முழுமையாக அலசி, குறிப்பாக அதன் வணிக வலிமை, நிர்வாகத் திறமை போன்றவற்றை ஆராய்ந்துதான் முடிவெடுப்போம். வளர்ச்சித் துறை என்றாலும், அந்தக் குறிப்பிட்ட நிறுவனத்தின் வளர்ச்சி என்ன என்பதைப் பார்த்துதான் முதலீட்டுக்கு பங்குகளைத் தேர்ந்தெடுப்போம்.

2014-ம் ஆண்டில் சிறப்பாகச் செயல்படும் துறைகள் என்கிறபோது ஃபைனான்ஷியல், உற்பத்தித் துறை, சிமென்ட் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

அடுத்து யார் ஆட்சிக்கு வருவார்கள் என்பதைப் பொறுத்து பொருளாதாரச் சீர்திருத்தங்கள் இருக்கும். பாரதிய ஜனதா தலைமையிலான என்.டி.ஏ ஆட்சிக்கு வந்தால், இன்ஃப்ராஸ்ட்ரக்சர் (குறிப்பாக, ரயில்வே), உற்பத்தித் துறை, சுற்றுலாத் துறை போன்றவை வேகமான வளர்ச்சி காணும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி நடக்கும்பட்சத்தில் புதிதாக வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும். இது நாட்டில் தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும்.

இந்தியாவில் தற்போது அதிக எண்ணிக்கையில் மின் உற்பத்தி திட்டங்கள் தயாராகி வருகின்றன. ஆனால், அவை போதிய அளவு நிலக்கரி இல்லாமல் இயங்காமல் இருக்கின்றன. அதற்கான ஏற்பாடுகளை புதிய ஆட்சி செய்தாலே நாட்டில் தொழில் வளர்ச்சி வேகமெடுத்துவிடும்.

தேர்தல் முடிவுகள் தனியரு கட்சி ஆட்சி அமைக்கும்விதமாக வந்தால், நீண்டகால பங்கு முதலீட்டுக்கு ஏற்ற நேரமாக இருக்கும்.

இன்ஃப்ரா, கேப்பிட்டல் கூட்ஸ் சிறப்பாகச் செயல்படும்!

கடந்த சில ஆண்டுகளாக கார்ப்பரேட் நிறுவனங்களின் வருமான வளர்ச்சி பெரிதாக இல்லை. மத்தியில் நிலையான மற்றும் வளர்ச்சிக்கு ஊக்கம் அளிக்கும் அரசு அமையும்பட்சத்தில் நிறுவனங்களின் வளர்ச்சி என்பது 13-14 சதவிகிதமாக இருக்கும். இதையட்டியே பங்குச் சந்தையின் செயல்பாடும் இருக்கும் என எதிர்பார்க்கிறோம்.

பங்குச் சந்தை இந்த ஆண்டு எப்படி இருக்கும்?

உள்கட்டமைப்பு, மூலதனப் பொருட்கள் பிரிவில் உள்ள இந்திய நிறுவனங்கள் நன்றாகச் செயல்படும். இனிவரும் ஆண்டுகளில் இருசக்கர வாகனங்கள், வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பில் ஈடுபட்டிருக்கும் நிறுவனங்கள் நன்கு செயல்படும் என எதிர்பார்க்கிறோம்.

கடந்த 6-12 மாதங்களில் எதிர்பாராமல் சிறப்பாகச் செயல்பட்ட நுகர்வோர் மற்றும் ரியல் எஸ்டேட் துறை நிறுவனப் பங்குகளைத் தவிர்ப்பது நல்லது. தற்போதைய அரசு, கடந்த ஓராண்டு காலத்தில் பல பொருளாதார சீர்த்திருத்தங்களைக் கொண்டுவந்தது. இவை எந்த அளவுக்கு புதிய அரசால் நிறைவேற்றப்பட இருக்கிறது என்பதைப் பொறுத்தும், புதிய அரசு எவ்வளவு வலிமையாக அமைகிறது என்பதைப் பொறுத்தும் இந்திய தொழில், பொருளாதாரம், பங்குச் சந்தை வளர்ச்சி இருக்கும்.

பங்குச் சந்தை இதுவரை இல்லாத உச்சத்தைத் தொட்டிருக்கும் நிலை யில் எச்சரிக்கையாகத்தான் அதில் முதலீட்டை தொடர வேண்டும். அந்தவகையில், சிறு முதலீட்டாளர்களின் போர்ட்ஃபோலியோ ரிஸ்க்கை குறைக்கும்விதமாக டைவர்சிஃபைடாக இருக்கவேண்டும். ஈக்விட்டி ஃபண்டுகளில் முதலீட்டை ஐந்து ஆண்டுகளுக்கு மேற்பட்ட நீண்டகால முதலீடாக மேற்கொள்ள வேண்டும். அடுத்து எஸ்.ஐ.பி முறையில் முதலீட்டை மேற்கொள்வதன் மூலம் லாபத்தை அதிகரித்துக்கொள்ளலாம்.

                                          படம்: எம்.உசேன்.