Published:Updated:

கம்பெனி ஸ்கேன் - கோல்கேட்!

கம்பெனி ஸ்கேன் - கோல்கேட்!

பிரீமியம் ஸ்டோரி

1937-ம் ஆண்டிலிருந்து இந்தியாவில் தொழில் செய்துவரும் நிறுவனமும், தன்னுடைய முதன்மையான தொழிலில் ஏறக்குறைய 55 சதவிகிதம் சந்தைப் பங்களிப்பை யும், ஏறக்குறைய 5.14 மில்லியன் கடைகள் வழியாக விற்பனை செய்யப்படும் பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றைத்தான் நாம் இந்த வாரம் ஸ்கேனிங்குக்கு எடுத்துக்கொண்டுள்ளோம். உங்கள் அனைவருக்கும் மிகவும் பரிச்சயமான தயாரிப்புகளைக் கொண்ட கோல்கேட் பாமோலிவ் (இந்தியா) லிமிடெட்தான் அது.

தொழில் எப்படி?

பற்பசை, டூத்ப்ரஷ், ஷவர் ஜெல், ஷவர் க்ரீம்ஸ், குளியல் சோப்புகள், கைகழுவுவதற்கான சோப் திரவங்கள், ஷேவிங் ப்ரஷ்கள், ஷேவிங் க்ரீம், பாத்திரம் கழுவுவதற்கான சோப்புக் கட்டிகள் எனப் பல்வேறு தனிமனித மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களின் சந்தை என்பது நாளுக்குநாள் வளர்ந்துவரும் ஒன்று எனலாம்.

விளம்பரத்துக்கு அதிகப்படியான செலவுகளும், தரக்கட்டுப்பாடும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கம்பெனிகளின் கடுமையான போட்டியும் இந்தத் துறையின் குணாதிசயமாகும்.

கம்பெனி ஸ்கேன் - கோல்கேட்!

அதேசமயம், விற்பனை அதிகரிப்புக்கான வாய்ப்புகள் மிக அதிகமாக உள்ள தொழில் இது என்றும் சொல்லலாம். பற்களுக்கான பராமரிப்பு அளவில் உலக சராசரியில் வருடத்துக்கு இந்திய மக்கள் உபயோகிக்கும் 146 கிராம் பற்பசை என்பது மிகக் குறைந்த அளவாகும்.

அதிகபட்ச அளவாக பிரேசிலில் 599 கிராமும், இந்தியாவுக்கு அடுத்தபடியாக அளவில் சற்று அதிகமாக உள்ள நாடான சீனாவில் வருடத்துக்கு இது 280 கிராமுமாக இருக்கிறது. எனவே, பற்பசை விற்பனைக்கு நல்லதொரு களம் இந்தியாவில் காத்திருக்கிறது எனலாம்.

நாளுக்கு இரண்டுமுறை பல்துலக்குதல் என்பதை ஏறக்குறைய பத்து சதவிகித இந்தியர்கள், அதிலும் நகர்ப்புறத்தில் வசிப்பவர்கள் மட்டுமே செய்கின்றனர் என்கிறது ஆய்வுகள்.

மேலும், ஏறக்குறைய 325 மில்லியன் மக்கள் பல்துலக்க டூத்பேஸ்ட் பயன்படுத் துவதில்லை என்கிறது ஆய்வுகள். டூத்பேஸ்ட் இந்திய நகரங்களில் 91 சதவிகித மக்களையும், கிராமங்களில் 63 சதவிகித மக்களையும் சென்றடைந்திருக்கிறது என்ற தகவலும் வியாபாரத்துக்கான வாய்ப்பு இன்னமும் நிறையவே இருக்கிறது என்பதையே இது  காட்டுகிறது.

கிராமங்களுக்குப் பற்பசையை எடுத்துச் சென்று அறிமுகப்படுத்த விலை குறைந்த வகைப் பற்பசைகள் தேவைப்படுகிறது. வேகமான பொருளாதார வளர்ச்சியினால் வரும் வசதிவாய்ப்புகள் ஓரல்கேர் துறையில் பிரீமியம் செக்மெண்டில் விற்பனை வளர்ச்சிக்கு உதவுகிறது எனலாம். அதேபோல், ஓரல்கேர் துறையில் சிறப்புத் தேவைகளான பல் கூச்சம் போன்றவற்றுக்கான டூத்பேஸ்ட்களும் பிரீமியம் செக்மெண்டாக இருப்பதால் அதிக லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது.

கம்பெனி ஸ்கேன் - கோல்கேட்!

கம்பெனி எப்படி?

டூத்பேஸ்ட் என்றாலே கோல்கேட் என்ற ஸ்ட்ராங் பிராண்ட் ரீகால் (பொருளைச் சொன்னவுடன் நினைவு கூறும் பிராண்ட்) கொண்ட நிறுவனம் இது. ஏறக்குறைய 75 வருட பாரம்பரியத்தைக் கொண்டிருப்பதால் இந்த அளவு பிராண்ட் ரீகால் கொண்டிருக்கிறது கோல்கேட். விளம்பரம் மற்றும் பிராண்ட் புரமோஷன் என்ற இரண்டுக்கும் பெரும் தொகையைச் செலவு செய்வதால் பெரும்பாலான பிராண்ட் சர்வேக்களில் முதல் மூன்று இடங்களுக்குள்ளே இடம்பெறும் உயரிய நிலையை எட்டியுள்ளது கோல்கேட்.

உலகளாவிய அளவில் கோகோ கோலாவுக்கு அடுத்தபடியாக அதிக அளவில் விநியோகம் செய்யப்படும் தயாரிப்புகளைக்கொண்ட ஒரு நிறுவனமாகத் திகழ்கிறது கோல்கேட். அதேசமயம், மக்களைச் சென்றடையும் அளவீட்டில் ஏறக்குறைய உலக மக்கள்தொகையில் 65 சதவிகித மக்களைச் சென்றடைகிறது கோல்கேட்டின் தயாரிப்பு கள். கோகோ கோலாவின் தயாரிப்புகளோ ஏறக்குறைய 44 சதவிகித மக்களைச் சென்றடை கிறது. கோல்கேட்டின் மொத்த விற்பனையில் ஏறக்குறைய 97 சதவிகித அளவு ஓரல்கேர் தயாரிப்புகளிலிருந்து வருகிறது.

கிராமப்புறங்களில் வேகமான விற்பனை வளர்ச்சி சாத்தியம் என்பதை மனத்தில் கொண்டதால் கடந்த இரண்டு வருடங்களில் தனது கிராமப்புற நெட்வொர்க்கை ஏறக்குறைய 25 சதவிகித அளவுக்கு வளர்த்துக் கொண்டுள்ளது கோல்கேட். அடுத்த மூன்று வருடங்களில் இந்த நெட்வொர்க்கின் அளவை இரட்டிப்பாக்கவும் திட்டங்களைக் கைவசம் வைத்துள்ளது.

இந்திய பல் மருத்துவக் கழகத்தின் அங்கீகரிப்புடன் கூடிய பற்பசைகளைத் தயாரித்து விற்பதால் மக்களிடையே நன்மதிப்பைப் பெற்றுள்ளது கோல்கேட்டின் தயாரிப்புகள். பல் மருத்துவர்களில் ஏறக்குறைய 80 சதவிகிதம் பேர் கோல்கேட் தயாரிப்புகளைப் பயன்படுத்த சொல்லி ஆலோசனை வழங்குவதாகச் சொல்கின்றன ஆய்வுகள். தனது தயாரிப்புகளை அறிமுகப்படுத்தவும் சமூக அக்கறைக்காகவும் பள்ளி மாணவர்களுக்கான பிரைட் ஸ்மைல் - பிரைட் ஃப்யூச்சர் என்ற திட்டத்தைச் செயல்படுத்துகிறது கோல்கேட். கடந்த வருடத்தில் 25,000 பல் வைத்தியர்கள் உதவியுடன் 2.35 லட்சம் பள்ளிகளில் பயிலும் ஏறக்குறைய 107 மில்லியன் குழந்தைகளுக்கும், மற்றுமொரு திட்டமான ஓரல் ஹெல்த் மாதம் என்ற திட்டத்தை ஏறக்குறைய 1,100 ஊர்களில் வசிக்கும் 3.8 மில்லியன் வாடிக்கையாளர்களுக்கும் கொண்டு சேர்த்துள்ளது கோல்கேட்.

கம்பெனி ஸ்கேன் - கோல்கேட்!

மேலும், பற்பசைகளில் ஒவ்வொரு நபரின் சிறப்புத் தேவைகளுக்கும் தேவையான பல்வேறு புராடக்ட்களைக் கொண்டுள்ளது. இதுதவிர, என்ட்ரி லெவலில் கோல்கேட் டூத் பவுடரையும், டூத் பவுடரில் இருந்து பேஸ்ட்டுக்கு மாற நினைப்பவர்கள் பெரிய அளவில் செலவு செய்யாமல் முயற்சி செய்து பார்க்க கோல்கேட்-சிபாகா எனும் விலை குறைந்த பிராண்டில் தன்னுடைய தயாரிப்புகளை விற்றுவருகிறது கோல்கேட்.

ரிஸ்க் எதுவும் உண்டா?

எஃப்.எம்.சி.ஜி கம்பெனிகளில் ரிஸ்க் என்றால் போட்டியும், புதிய புராடக்ட்களை அறிமுகப்படுத்தும்போது செய்யப்படும் விளம்பரச் செலவும் லாபத்தைப் பாதிக்கும் ரிஸ்க் ஆகும். போட்டியைப் பொறுத்தவரை, கோல்கேட் பாமோலிவ் நல்லதொரு தற்காப்பு வளையத்தை தன்னைச் சுற்றிப்போட்டுக்கொண்டுள்ளது எனலாம். டென்டிஸ்ட்கள் மற்றும் டென்டல் அசோசியேஷனின் பரிந்துரை என்பது இந்தத் தற்காப்பு வளையத்தின் முக்கிய அங்கம் எனலாம்.

அதேபோல், மிகப் பெரிய டிஸ்ட்ரிப்யூஷன் நெட்வொர்க்கும், அதிலும் மிகச் சிறப்பாக கிராமப்புறங்களில் செய்துவரும் வேகமான விரிவாக்கமும் இந்தப் போட்டிக்கான தற்காப்பு வளையத்தை இன்னமும் கடினமாக்கிக்கொள்ள உதவுகிறது. விளம்பரச் செலவுகள் தொடர்ந்து செய்யப்பட்டு வந்தபோதிலும், கணிசமான அளவில் லாபம் பார்க்கத் தவறவில்லை இந்த நிறுவனம்.

எனவே, இந்த ரிஸ்க்கும் குறைவு எனலாம். பொருளாதாரச் சுணக்கம் இந்தத் தொழிலில் உள்ள பெரும்பான்மையான பொருட்களைப் பாதிக்காது (பிரீமியம் பொருட்கள் தவிர) என்பதால் அதுகுறித்து பெரிய அளவில் கவலைகொள்ளத் தேவையில்லை.

டிவிடெண்ட் அளவீட்டில் பார்த்தால், கடந்த 35 ஆண்டுகளாகத் தொடர்ந்து டிவிடெண்ட் தந்துவரும் நிறுவனம் இது. டிவிடெண்டின் அளவு அதிகபட்சமாக லாபத்தில் 30% வரை போகிறது.

இந்த நிறுவனத்தின் அமெரிக்கத் தாய் நிறுவனம் கிட்டத்தட்ட 109 வருடங்களாகத் தொடர்ந்து டிவிடெண்ட் தந்துவருவது கூடுதல் தகவல்.

மிகவும் பரிச்சயமானதும், நல்ல டிராக் ரெக்கார்டை கொண்டதுமாகிய இந்த நிறுவனத்தின் பங்குகளைச் சரியான சமயத்தில் வாங்கி முதலீட்டாளர்கள் தங்கள் போர்ட்ஃபோலியோவில் சேர்த்துக்கொள்ளலாம்.

- நாணயம் ஸ்கேனர்.

(குறிப்பு: இந்தப் விலையிலேயே வாங்க வேண்டிய பங்கு பரிந்துரை பகுதி அல்ல. இதில் சொல்லப்பட்டுள்ள  பங்குகளை வாங்குவது முதலீட்டாளர்களின் தனிப்பட்ட முடிவாகும்!)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு