Published:Updated:

பங்குச் சந்தை: அடுத்த வருஷம் சூப்பரா இருக்கும்!

ஷேருச்சாமி ஆரூடம்!

பங்குச் சந்தை: அடுத்த வருஷம் சூப்பரா இருக்கும்!

ஷேருச்சாமி ஆரூடம்!

Published:Updated:

தேர்தல் முடிந்து முடிவுகள் வெளிவந்து சந்தையும் மேலேபோயி... எல்லாமே கண்ணிமைப்பதற்குள் நடந்ததைப்போல் முடிந்துவிட்டது. இருபது நாளாக ஏறிய சந்தையில் என் நண்பன் செல்வம் (செல்) நாலு காசு பார்த்துட்டான். அவனைக் கையில பிடிக்க முடியலை. பொருளாதாரத்தைக் கரைச்சுக் குடிச்சவனாட்டம் பேசுறான். வாடா, போய் ஷேருச்சாமியைப் பார்த்துட்டு வரலாமுன்னு கூப்பிட்டா, நான் ரொம்ப பிசிங்கிறான்.

ஆனா, கடந்த வியாழக்கிழமை மார்க்கெட் லேஸா சரிஞ்சவுடனே கொஞ்சம் ஆடிப்போய்ட் டான். ''வா வா, போயி சாமியைப் பார்த்துட்டு வந்துடுவோம்''னு கூப்பிட்டான். நாங்க ரெண்டுபேரும் உடனே கிளம்பி, சாமி வீட்டுக்குப் போனோம்.

''சாமி, வெளியில போயிருக்காரு. வர்ற நேரம்தான்''னு சொல்லி உட்காரச் சொன்னாரு நடுத்தர வயசுல ஒருத்தரு. யாரு புதுசா இருக்காரேன்னு நினைச்சுட்டு இருக்கும்போதே, ''யாரு நீங்க, உங்களை இதுவரை நாங்க பார்த்தது இல்லியே?’ன்னு கேட்டுப்புட்டான் செல்லு. 'சாமியோட பிஏவா சேர்ந்திருக்கேன்’னாரு அவரு. அதோடவாவது விட்டானா, 'இதுக்கு முன்னாடி எங்கேயிருந்தீங்க?ன்னு வேற கேட்டுட்டான். அதுக்கு அவரு லேஸா சிரிச்சுகிட்டே, 'நியூயார்க்கில ஒரு இன்வெஸ்ட்மென்ட் பேங்கிலே இருந்தேன்’னாரு. செல்லு வாயை மூடிக்கிட்டான்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பங்குச் சந்தை: அடுத்த வருஷம் சூப்பரா இருக்கும்!

சாமி ரொம்பத்தான் மாறிட்டாரேன்னு நினைச்சுக்கிட்டிருக்கப்பவே, அவரது ஆடி கார் போர்டிகோவுக்குள்ள நுழைந்தது. விசுக்கென்று காரிலிருந்து இறங்கிய சாமி எங்களைப் பார்த்து, 'உங்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே?’ன்னு கிண்டலடித்தார். 'என்ன பசங்களா, திடீருன்னு ரெண்டுபேரும் கௌம்பி வந்திருக்கீங்க, என்ன விஷயம்?’ என்று கேட்டார் உற்சாகமாய்.

எப்படித்தான் சாமியால எப்பவும் உற்சாகமா இருக்க முடியுதோன்னு நினைச்சுகிட்டே, 'இல்லை சாமி, ஆட்சிமாறிடுச்சு. சந்தையும் மேலேபோயிடுச்சு. இனி என்னவாகுமுன்னு உங்ககிட்ட கேட்டு தெரிஞ்சுக்கலாமுன்னு வந்தோம். எங்களுக்கு நீங்கதானே முதலீட்டு வழிகாட்டி, குரு எல்லாம்’ என்றான் செல்.

''அடேய் அடேய் நிறுத்துடா, டிரேடிங் கத்துகிட்டியோ இல்லையோ, நல்லா பேசக் கத்துகிட்டே'' என்று கலாய்த்தார் சாமி. 'சரி, சந்தை நல்லா ஏறியிருக்கு. இதுலயாவது நாலு காசு பார்த்தீங்களா?’ என்று சாமி கேட்டார். ''சாமி, கண்ணு மூடித்திறக்குற துக்குள்ளார எல்லாம் நடந்து

பங்குச் சந்தை: அடுத்த வருஷம் சூப்பரா இருக்கும்!

முடிஞ்சுபோச்சு. செல்லு மாதிரி டிரேடர்கள் ஏதோ கொஞ்சம் சுதாரிப்பா காசு பார்த்துட்டாங்க. என்னைய மாதிரி பயந்தவங்கெல்லாம் ஒண்ணு கையில இருந்த ஷேரை நல்ல விலை வந்துடுச்சுன்னு வித்துப்புட்டோம். இல்லை வேகமா ஏறுதேன்னு நினைச்சு பயந்துட்டு ஒதுங்கி நின்னுபுட்டோம்'' என்றேன் நான்.

''அடேய், அதுதான் சந்தையோட குணாதிசயம். இந்தமாதிரி அஞ்சு வருஷத்துக்கு இம்பாக்ட் இருக்கிற நிகழ்வுகள் வர்றப்ப பயம் வர்றதும் சகஜம்தான். சந்தை எதிர்பார்த்தது நடக்குறப்ப வேகமா ஏறுறதும் சகஜம் தான். ரிசல்ட்டுக்கு முன்னாடி ரிஸ்க் எடுத்திருந்தேன்னா, ரிசல்ட்டுக்கு அப்புறம் ரிவார்டுதான். ஆனா, ரிஸ்க் எடுக்கத் தயங்கினா ரிட்டர்ன் வர்றதுக்கும் தயக்கம்காட்டத்தானே செய்யும்?'' என்றார் ஸ்டைலாக.

''போனதுபோகட்டும் விடுங்க சாமி. இப்ப முதலீட்டாளர்கள் என்ன பண்ணலாமுன்னு சொல்லுங்க'' என்றான் செல். ''இப்ப சொல்றதுக்கான விஷயங்களுக்குப் பஞ்சமேயில்லை. நாம சில முக்கியமான விஷயங்களைப் பார்ப்போம்'' என்றார் சாமி.

''பஞ்சமுன்னதும் ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வருது சாமி. இப்போதைக்குப் பெரிய பிரச்னையா இருக்கிறது உணவுப் பொருட்களுக்கான விலை உயர்வுதான். இதுல எல்நினோ வேற வரும்னு பயமுறுத்துறாங்க. இது வந்தா உணவுப் பொருட்களோட விலை அதிகமாகுமே! அது சந்தைக்கு ஆகாத மேட்டராச்சே'' என்றான் செல்.

''அடேய், 1880-ல இருந்து 2005 வரைக்கும் வந்த எல்நினோக்களைப் பார்த்தா, இந்தியாவுல சராசரியா 43% மழை குறைவாதான் இருந்திருக்கு. ஆனாலும், பெரிய அளவிலான உணவுப்பொருள் விலையேற்றம் வந்ததில்லை. கடைசியா வந்த எல்நினோவுல இந்த விலைபாதிப்புக் கொஞ்சம் அதிகமா இருந்துச்சு. அதுக்கு அரிசி ஏற்றுமதி செய்கிற நாடுகளில் போடப்பட்ட தடை, உலக அளவிலான சமையல் எண்ணெய் விலையேற்றம் போன்ற வேற டெக்னிக்கல் காரணமும் இருந்துச்சு'' என்றார் சாமி.

''சாமி, உணவுப்பொருள் விலை உயர்ந்தா, சம்பளம் மற்றும் மத்த விஷயங்களும் ஏறி பணவீக்கத்துக்கு வழிவகுக்குமே?'' என்றேன். ''ரிசர்வ் பேங்க் அதைப் பார்த்துக்கும். பணப்புழக்கத்தை ரொம்பக் கட்டுப் படுத்துறதால, பொருளாதார வளர்ச்சி வராம போகுதுன்னு புதுசா வந்த அரசாங்கம் கோபப்படாதா?'' என்றான் செல். ''ஆரம்பத்துல இந்தச் சிக்கல் ஆர்பிஐ-க்கும் அரசாங்கத்துக்கும் வரத்தான் செய்யும். ஆனா, பண வீக்கத்தைக் குறைக்கிறது என்கிற கசப்பு மருந்து நாளடைவில் பொருளாதாரத்தை ஆரோக்கியமா வைச்சுக்க ரொம்பவே உதவும்னு புது அரசாங்கத்துக்கு நல்லாவே தெரியும். அதனாலே பெரிய பிரச்னை எதையும் இந்த ஏரியாவுல நீ எதிர்பார்க்காதே'' என்று செல்லிடம் சொன்னார் சாமி.

''பட்ஜெட் எப்படி இருக்கும் சாமி. ஏன்னா அதுதானே சந்தையோட அடுத்த லெவல் மூவ்மென்டை நிர்ணயிக்கப் போகுது'' என்றேன் நான். ''போன அரசாங்கத்திடம் இருந்து பொறுப்பை எடுத்துக்கிட்ட உடனே குறைந்த காலத்துல போடப்போற பட்ஜெட். எல்லா விஷயங்களையும் பிளாக் அண்ட் வொயிட்டா பண்ணிடுவாங்க. எங்கேயிருந்து ஆரம்பிக்கப் போறோமுங்கிறத ஜனங்களுக்குத் தெளிவாச் சொல்லிட ணுமுங்கிறதுல புதிய அரசு தெளிவா இருக்குமுன்னு எதிர்பார்க்கலாம்'' என்றார் சாமி.

பங்குச் சந்தை: அடுத்த வருஷம் சூப்பரா இருக்கும்!

''அப்ப பட்ஜெட் கொஞ்சம் கடுமையாத்தான் இருக்குமுங் கிறீங்களா?'' என்றான் செல். ''இல்லை, செலவுல கடுமை காட்டுறதுக்குப் பதிலா, உடனடியா வருமானம் வர்ற மாதிரி ஏதாவது விஷயங்களைச் செய்ய லாமுன்னு எதிர்பார்க்கலாம். வரிக்கான பொதுமன்னிப்புத் திட்டம், கொஞ்சம் அசெட்/முதலீடு விற்பனைன்னு ஏதாவது செய்யப்படலாம். அதாவது, பழைய அரசாங்கத்துகிட்ட இருந்து பொறுப்பை எடுக்கிறப்ப முடிந்த அளவுக்குக் கணக்குவழக்கை நேர் பண்ணி உள்ளது உள்ளபடி சொல்ற பட்ஜெட்டா இருக்குமுன்னு எதிர்பார்க்கலாம்'' என்றார் சாமி.

''நீங்க சொல்ற மாதிரி பட்ஜெட் பிளாக் அண்ட் வொயிட்டா இருந்துச்சுன்னா, முதலீட்டாளர்கள் பதறிடுவாங்களே'' என்றேன்.

''பதறத்தான் செய்வாங்க. ஏன்னா எதிர்பார்ப்பு எகிறிகிட்டு இருக்குது. நீங்க எதிர்பார்க்கிறீங்கறதுக்காக அரசாங்கம் மாயாஜால வேலையெல்லாம் செய்ய முயற்சிக்காதுன்னு சொல்லலாம். முதல்ல என்ன நிலைமைங்கிறத வெளிப்படையாச் சொல்லிட்டு, அப்புறமாதான் முன்னேற்ற நடவடிக்கையெல்லாம் இருக்குமுன்னு எதிர்பார்க்கலாம்'' என்றார் சாமி.

''முதலீட்டாளர்களுக்கு இதுக்கெல்லாம் பொறுமை இருக்குமா சாமி?'' என்றான் செல். ''பொறுமையாத்தான் இருந்தாகணும். பொறுமை இல்லாட்டி சம்பாதிக்க முடியாது. கசப்பு மருந்துகளெல்லாம் உடம்பை உறுதிப்படுத்தத்தான் அப்படிங்கிறதைப் புரிஞ்சிக்கணும்.அதனால சந்தை தற்காலிகமா பல பலவீனங்களைச் சந்திக்க வாய்ப்பிருக்கு. சந்தை இறங்குறப்ப நமக்கென்ன, விக்கிறவங்க விக்கட்டு முன்னு சொல்லி, நீ வாங்கிப் போட்டுக்கிட்டே இருக்கணும்'' என்றார் சாமி.

''எப்பதான் நிலைமை முழுமையாச் சரியாகும் சாமி. அது தெரிஞ்சுகிட்டா அப்ப நல்லா முதலீடு பண்ணலாமே?'' புத்திசாலித்தனமாகப் பேசுகிற தோரணையில் கேட்டேன் நான். ''2015-16 கடைசியில சரியாகிடும். அதுக்காக அந்தநாள் வரைக்கும் காத்திருக்கக் கூடாது. நிலைமை சரியாகுதான்னு முன்னாடியே அனுமானம் பண்ணி ஷேரை வாங்கிப் போடறதுலேதான் இருக்கு ஒரு ஸ்மார்ட்டான முதலீட்டாளரோட திறமை'' என்றார் சாமி.

''ஒருவேளை எதிர்பார்க்குற மாதிரி சரியாகலேன்னா?'' என்றான் செல். ''உனக்கு ஏன் இப்படி  அவநம்பிக்கை. இப்ப வந்திருக்கிற புது அரசாங்கம் நிலைமையை சரி பண்ணிக் காட்டுவோம்னு சொல்றாங்க. நிச்சயமா சரிபண்ண முயற்சிக்குமுன்னு நீ நம்பித்தான் ஆகணும். அங்கேதான் ரிஸ்க்-ரிட்டர்ன் டிரேட் ஆஃபே இருக்குது. சரியாகாதுன்னு நினைச்சா, அப்புறம் பேங்க் டெபாசிட்தான் சிறந்த மருந்து'' என்றார், கொஞ்சம் கடுப்போடு.

''அப்ப பட்ஜெட்டின்போது நீண்டகால முதலீட்டாளர்களுக்கு இன்னமும் கொஞ்சம் குறைந்த விலையில் வாங்கிப்போடும் வாய்ப்பு கிடைக்குமுன்னு சொல்றீங்களா சாமி?'' என்றேன் நான். ''நிச்சயமா ஏற்ற இறக்கங்கள் தொடர்ந்து வரவே செய்யும். நல்ல இறக்கங்களில் பொறுமையா முதலீடு பண்ணினா, நல்ல லாபம் பார்க்க முடியும். 2015-16 இறுதியில ஜிடிபியும் 7%, பணவீக்கம் 6% அளவுக்கு வந்துடறதுக்கான வாய்ப்பு அதிகமா இருக்கு. அடுத்த வருஷம் சூப்பரா இருக்கும்ங்கிறதால, அதை எதிர்பார்த்து முதலீட்டாளர்கள் இப்பவே முதலீடு செய்யணும்'' என்றார்.

''அப்ப இனி சிறுமுதலீட்டாளர் களுக்கெல்லாம் நல்ல காலமுன்னு சொல்லுங்க?'' என்றோம், நானும் செல்லும் கோரஸாக. ''மீடியம் டேர்ம் அவுட்லுக் நல்லா இருக்கு. ஷார்ட் டேர்ம் அவுட்லுக் கொஞ்சம் சரி யில்லாம இருக்கு. இந்தச் சூழ்நிலை முதலீட்டாளர்களுக்கு லட்டு சாப்பிடற மாதிரி. ஷார்ட் டேர்மில இறங்கும் போது வாங்கிப்போட்டு மீடியம் டேர்மில லாபம் பார்க்கலாம்'' என்றார் சாமி.

''சாமி ஒரு சிறு விண்ணப்பம். உங்க வழிகாட்டுதலையே நம்பியிருக்கிற எங்கள மாதிரி லட்சோப லட்சம் முதலீட்டாளர்கள் வாங்கவேண்டிய பங்குகளைக் கோடிட்டுக் காட்டுனீங்கன்னா புண்ணியமாப் போகும்'' என்கிற கோரிக்கையை வைத்தோம்.

பங்குச் சந்தை: அடுத்த வருஷம் சூப்பரா இருக்கும்!

''சொல்றேன். மாருதி, ஐ.சி.ஐ.சி.ஐ., ஹெச்.டி.எஃப்.சி., எல் அண்ட் டி, ரிலையன்ஸ், கோல் இந்தியா, சேச - ஸ்டெர்லைட், ஜே.கே. சிமென்ட், ஆர்.இ.சி., பி.எஃப்.சி., ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் ஃபைனான்ஸ், ஜே.எஸ்.டபிள்யூ. எனர்ஜி, பஜாஜ் ஃபைனான்ஸ், இன்ஃபோஎட்ஜ், சோழ மண்டலம், எய்ஷர் மோட்டார், கன்டெய்னர்கார்ப், எல்.ஐ.சி. ஹவுஸிங், மாதர்சன்சுமி, தெர்மேக்ஸ், அதானி போர்ட்ஸ், யூ.பி.எல்., பாட்டா இந்தியா, அப்போலோ ஹாஸ்பிட்டல், பெர்சிஸ்டன்ட், கோத்ரெஜ் இண்டஸ்ட்ரீஸ், ஜோதிலேப், ஜெயின் இர்ரிக்கேஷன், அசோக் லேலாண்ட், பினோலெக்ஸ்'' என நீண்ட பட்டியலை கடகடவெனச் சொன்னார் சாமி. நாங்கள் ஆச்சர்யத்தில் வாயடைத்துப்போய் நின்றோம்.

''சாமி, அமெரிக்காவிலிருந்து போன்?'' என்று சாமியின் பிஏ செல்போனைக் கொண்டுவந்து நீட்ட, '' பசங்களா, அஞ்சு நிமிஷத்துல திரும்ப வர்றேன். டிபன் ரெடியா இருக்கு. சாப்பிட்டுட்டுத்தான் போகணும்'' என்று ஆர்டர் போட்டார். ''ஏற்கெனவே நிறைய பங்குகளைச் சொல்லி மனசை நெரப்பிட்டாரு. இப்ப விருந்து வேறயா?'' என்று எங்கள் இருவரின் மனசுமே மகிழ்ச்சியில் குதித்தது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism