Published:Updated:

கம்பெனி ஸ்கேன் : மேக்ஸ் இந்தியா!

கம்பெனி ஸ்கேன் : மேக்ஸ் இந்தியா!

கம்பெனி ஸ்கேன் : மேக்ஸ் இந்தியா!

கம்பெனி ஸ்கேன் : மேக்ஸ் இந்தியா!

Published:Updated:

இந்த வாரம் நாம் இந்தப் பகுதியில் ஸ்கேன் செய்ய எடுத்துக்கொண்டிருக்கும் கம்பெனி 'மேக்ஸ் இந்தியா லிமிடெட்’ என்னும் நிறுவனத்தைத்தான். 1985-ம் ஆண்டு பென்சிலினை மூலாதாரமாகக் கொண்ட மருந்துகள் தயாரிப்பு, ஏனைய மருந்துகள் மொத்த தயாரிப்பு மற்றும் பேக்கேஜிங் ஃபிலிம்கள் தயாரிப்பு என்ற மூன்று தொழில்களை மனத்தில்கொண்டு நிறுவப்பட்ட நிறுவனம் இது. பதினைந்து வருட வெற்றிகரமான செயல்பாட்டுக்குப்பின், இந்த நிறுவனம் பி2பி என்ற செயல்பாட்டில் இருந்து பி2சி செயல்பாட்டுக்குத் தன்னை மாற்றிக்கொண்டு ஆயுள் காப்பீடு, மருத்துவக் காப்பீடு, உடல்நலம் பேணல் மற்றும் கிளினிக்கல் ரிசர்ச் போன்ற புதிய தொழில்களில் தன் வியாபாரத்தை விரித்துக்கொண்டிருக்கிறது. இந்த நிறுவனம் ஒரு குழுமமாக ஏழு மில்லியன் வாடிக்கையாளர்களையும் 216 ஊர்களில் 310 அலுவலகங்களையும் ஏறக்குறைய 70,000 பணியாளர்களையும் கொண்டு செயல்படுகிறது.

விரியும் வியாபாரப் பிரிவுகள்!

தற்சமயம் மேக்ஸ் குழுமங்களும் அது செயல்பட்டுவரும் தொழில்களும் பின்வரும் வகையில் அமைந்துள்ளன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கம்பெனி ஸ்கேன் :  மேக்ஸ் இந்தியா!

மேக்ஸ் லைஃப் இன்ஷூரன்ஸ்: ஜப்பானிய நிறுவனமான மிட்சுய் சுமிட்டோமோ இன்ஷூரன்ஸ் கம்பெனி லிமிடெட் என்ற நிறுவனத்துடன் மேக்ஸ் நிறுவனம் கூட்டாகச் சேர்ந்து நடத்தும் ஆயுள் காப்பீட்டு நிறுவனம் இது. மேக்ஸ் 76 % பங்குகளையும் மிட்சுய் சுமிட்டோமோ 24% பங்குகளையும் இந்த நிறுவனத்தில் வைத்துள்ளது. மார்ச் 31, 2014 அன்று முடிவடைந்த நிதியாண்டில் 3.6 மில்லியன் பாலிசிகளை மக்களுக்கு வழங்கி 24,716 கோடி ரூபாய் நிதியை மேலாண்மை செய்துவருகிறது இந்த நிறுவனம்.

மேக்ஸ் பூபா: மேக்ஸ் நிறுவனம் பூபா ஃபைனான்ஸ் பிஎல்சி என்ற யூகே நிறுவனத்துடன் சேர்ந்து மருத்துவக் காப்பீடுகள் வழங்கும் பிசினஸில் செயல்பட்டு வருகிறது. மார்ச் 31, 2014 அன்று முடிவடைந்த நிதியாண்டில் ஏறக்குறைய 1.7 மில்லியன் பாலிசிகளை வழங்கியுள்ளது இந்த நிறுவனம்.

மேக்ஸ் ஹெல்த்கேர்: மேக்ஸ் நிறுவனம் தென் ஆப்பிரிக்க நிறுவனமான லைஃப் ஹெல்த்கேர் நிறுவனத்துடன் சேர்ந்து மேக்ஸ் நிறுவனம் 76% பங்குகளையும், லைஃப் ஹெல்த்கேர் நிறுவனம் 24% பங்குகளையும் கொண்டு கூட்டாகச் செயல்படும் தொழில் இது. உலகத்தரம் வாய்ந்த மருத்துவ வசதியை அளித்துவரும் நிறுவனம் இது.  மார்ச் 31, 2014-ல் முடிவடைந்த நிதியாண்டின் இறுதியில் ஏறக்குறைய 2 மில்லியன் நோயாளிகளைப் பதிவு செய்து செயல்பட்டு வருகிறது இந்த நிறுவனம்.

மேக்ஸ் அன்த்தாரா: மேக்ஸ் இந்தியாவின் 100 சதவிகித துணை நிறுவனம் இது. இந்த நிறுவனம் 60 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு நல்ல வாழ்க்கைத்தரம் வழங்குவதில் முன்னணி வகிக்கிறது.

மேக்ஸ் ஸ்பெஷாலிட்டி பர்ம்ஸ்: இந்த நிறுவனமும் முழுக்க முழுக்க மேக்ஸ் இந்தியாவின் துணை நிறுவனமாகும். இந்த நிறுவனம் ஸ்பெஷாலிட்டி பாலிப்ரொப்லீன் பேக்கேஜிங் ஃபிலிம்களைத் தயாரிக்கிறது.

மேக்ஸ் நீமன்: இந்த நிறுவனமும் முழுக்க முழுக்க மேக்ஸ் இந்தியாவின் துணை நிறுவனமாகும். இந்த நிறுவனம் கிளினிக்கல் ரிசர்ச்களைத் தற்சமயம் செய்துவருகிறது. மார்ச் 31, 2014-ல் முடிந்த நிதியாண்டின் இறுதியில் ஏறக்குறைய 118 மருந்து தயாரிக்கும் நிறுவனங்களை வாடிக்கையாளர்களாகத் தன்வசத்தே கொண்டுள்ளது இந்த நிறுவனம்.

கம்பெனி ஸ்கேன் :  மேக்ஸ் இந்தியா!

இன்ஷூரன்ஸ் தொழில் எப்படி?

கடந்த நான்கைந்து ஆண்டுகளாக இன்ஷூரன்ஸ் துறை கடுமையான சிக்கல்களைச் சந்தித்து வந்தது.   தற்சமயம் சூழல் மாறியுள்ளது. பொருளாதாரம் வளரப்போகும் அறிகுறிகள், பங்குச் சந்தையில் தெரியும் முன்னேற்றம், ரெகுலேட்டரின் தெளிவான செயல்பாடு, வாடிக்கையாளர்களுக்கு உகந்த வகையில் உருவாக்கப்படும் பாலிசிகள் என பல்வேறு பாசிட்டிவ்வான விஷயங்களும் இந்தத் துறையில் நடக்க ஆரம்பித்துள்ளது எனலாம்.

நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருக்கும் இன்ஷூரன்ஸ் சீர்திருத்த மசோதா  இந்த அரசாங்கத்தில் சட்டமாக மாற்றப்படும் வாய்ப்பும் இருக்கிறது. கடந்த ஐந்து வருடங்களாக ஐஆர்டிஏ எடுத்த நடவடிக்கைகளால் தனிநபருக்கு ஏற்பில்லாத பாலிசிகள் விற்பனை குறைக்கப்பட்டுள்ளதும்  பாசிட்டிவ்வான விஷயமே. ஆனால்,   டைரக்ட் டாக்ஸ் கோடு நடைமுறைக்கு வந்தால், அது இன்ஷூரன்ஸ் துறைக்குக் கொஞ்சம் இடைஞ்சலைத் தரவே செய்யும்.

மேக்ஸின் செயல்பாடு எப்படி?

மேக்ஸ் லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்கு ஏப்ரல் 30, 2014 முடிவில் அகில இந்திய ரீதியாக 216 ஊர்களில் 287 கிளைகளும் 8,397 பணியாளர்களும் 42,939 முகவர்களும் இருக்கிறார்கள். மேக்ஸ் லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் வருடாந்திர பிரீமியம் அதிகரிப்புச்

சதவிகிதம் ஏறக்குறைய 21.4 சதவிகிதமாக இருந்துவருகிறது. ஏனைய தனியார் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் பிரீமியம் 3%  குறைந்துள்ளபோது மேக்ஸ் அடைந்துள்ள இந்த வளர்ச்சி குறிப்பிடத்தக்கது எனலாம். இந்த 21.4 சதவிகித வளர்ச்சி மேக்ஸின் மார்க்கெட் ஷேரை ஏறக்குறைய 10% அதிகரித்துக்கொள்ள உதவியுள்ளது எனலாம். சமீபத்தில் மேக்ஸின் நிர்வாகத்தால் அமல்படுத்தப்பட்ட நியூ வொர்க் சிஸ்டம் என்ற முறை பணியாளர்களின் உற்பத்தித்திறனை அதிகப்படுத்தியதாலேயே, இந்த வளர்ச்சியை எட்ட முடிந்தது எனலாம். இந்தப் புதிய சிஸ்டம் மீதமிருக்கும் 125 கிளைகளிலும் வெகுவிரைவில் அறிமுகப்படுத்தப்படும். அப்போது வியாபாரத்தின் அளவு இன்னும் அதிகரிக்கவே செய்யும் எனலாம். மற்றும் ஆயுள் காப்பீட்டுத் தொழிலிலேயே குறைந்த செலவினத்தைக் கொண்டதாக இருக்கிறது மேக்ஸின் செலவினங்கள்.

கம்பெனி ஸ்கேன் :  மேக்ஸ் இந்தியா!

மேக்ஸ் ஹெல்த்கேர் நிறுவனத்தின் வருமானம் 19.7% அதிகரித்துள்ளது. அடுத்த 3 -5 வருடங்களில் இன்னும் 1,500 - 2,000 வரையிலான படுக்கை வசதிகளை அதிகப்படுத்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது இந்த நிறுவனம்.

மேக்ஸ் பூபா ஹெல்த் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் பிரீமியம் வருகை வருடாந்திர அளவில் 38%  அதிகரித்துள்ளது. சென்ற காலாண்டில் மட்டுமே மேக்ஸ் பூபா மேலும் நான்கு வங்கிகளுடன் பேங்க் அஸ்யூரன்ஸுக்கான ஒப்பந்தத்தைச் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது..

மேக்ஸ் ஸ்பெஷாலிட்டி ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் வருமானம் 10.8 (ஆண்டுக்கு ஆண்டு) சதவிகித அளவில் வளர்ந்துள்ளது.

ஏன் பரிசீலிக்கலாம்?

இன்ஷூரன்ஸ் துறையில் எஃப்டிஐ அதிகரிப்பு என்பது அரசாங்கத்தால் அனுமதிக்கப்பட்டால், இந்த நிறுவனம் நல்ல பலனைப் பெற வாய்ப்புள்ளது. 26 - 49% வரையிலும் இது அதிகரிக்கப்படலாம் என்பதே சந்தையின் எதிர்பார்ப்பு. மேக்ஸின் வியாபார அளவு மற்றும் நெட்வொர்க்கை பார்க்கும்போது இந்த மாறுதல் மேக்ஸுக்கு அதிக அளவிலான லாபத்தைத் தரவாய்ப்புள்ளது.  பொருளாதாரம் வளர்ச்சிப்பாதையில் செல்லும்போது, இந்த நிறுவனம் இருக்கும் ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீட்டுத் துறை வேகமாக வளரும் என்று எதிர்பார்க்கலாம். அதிலும் பொருளாதாரச் சுணக்கம் இருந்த கடந்த ஆண்டுகளில்கூட இந்த நிறுவனம் நல்ல வளர்ச்சியைக் கண்டுள்ளது. எனவே, பொருளாதாரம் விரிவடையும்போது அதிவேகத்தில் மேக்ஸின் வளர்ச்சியும் அதிகரிக்கலாம்.

ஏனைய தனியார் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், இந்த நிறுவனம் நல்ல நிலையில் இருக்கிறது. பொருளாதாரம் மேல்நோக்கிப் போகும்போது அதிலிருந்து கிடைக்கும் லாபங்களை முழுமையாகத் தன்வசப்படுத்திக்கொள்ளத் தயாராக இருக்கும் நிறுவனமாகவும் இருக்கிறது எனலாம்.

ரிஸ்க் எதுவும் உண்டா?

இன்ஷூரன்ஸ் மற்றும் இந்த நிறுவனத்தின் ஏனைய பிசினஸ்களிலும்  ரெகுலேட்டரி ரிஸ்க் என்பது அதிகமாகவே இருக்கிறது. நஷ்டம் வந்துகொண்டிருக்கும் துணை நிறுவனங்களான மேக்ஸ் பூபா மற்றும் மேக்ஸ் ஹெல்த்கேர் என்ற இரண்டு கம்பெனிகளும் அடுத்த இரண்டு வருடங்களில் நஷ்டத்திலிருந்து வெளிவரும் என்று எதிர்பார்க்கலாம். இந்த எதிர்பார்ப்பு நிஜமாவதற்கு இப்போதிருப்பதைப் போன்ற இசைவான சூழ்நிலையே தொடரவேண்டும். இதில் ஏதும் மாறுதல்கள் வந்தால் எதிர்பார்ப்புகள் நிறைவேற அதிக நாட்கள் பிடிக்கலாம்.

பொருளாதாரம் சூடுபிடிக்கும்போது பல்வேறு தொழில்களிலும் பிரித்து முதலீடுகள் செய்வதே சிறந்த ஸ்ட்ராடஜியாக இருக்கும். அந்தவகையில் சரியான விலை இறக்கம் வரும்போது முதலீட்டுக்காகப் பரிசீலனை செய்யக்கூடிய கம்பெனிகளில் இதுவும் ஒன்று எனலாம்.

- நாணயம் ஸ்கேனர்

(குறிப்பு: இந்தப் பகுதி இன்றைய  விலையிலேயே வாங்க வேண்டிய பங்கு பரிந்துரை பகுதி அல்ல. இதில் சொல்லப்பட்டுள்ள பங்குகளை வாங்குவது முதலீட்டாளர்களின்  தனிப்பட்ட முடிவாகும்!)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism