நடப்பு
புத்தக விமர்சனம்
Published:Updated:

கம்பெனி ஸ்கேன் : கோல் இந்தியா லிமிடெட்!

கம்பெனி ஸ்கேன் : கோல் இந்தியா லிமிடெட்!

இந்த வாரம் நாம் ஸ்கேனிங் செய்யப்போகிற நிறுவனம் பொதுத்துறையில் உள்ள மஹாரத்னா நிறுவனமான கோல் இந்தியா லிமிடெட். தற்போது சற்று மந்தநிலையைக் கடந்துவந்தபோதிலும், உலகத்தில் வேகமாக வளர்ந்து வருகிறது இந்தியப் பொருளாதாரம். இப்படி வேகமாக வளர்ந்து வரும்போது மின்சாரம் மற்றும் எரிசக்தியின் தேவையும் தாறுமாறாக அதிகரித்துக்கொண்டே போகும் வாய்ப்புள்ளது. நகரமயமாகுதலும், தொழில்மயமாகுதலும் மின்சாரத்தின் தேவையை அதிவேகத்தில் அதிகரிக்கவே செய்யும். இந்தியாவைப் பொறுத்தவரை, நிலக்கரிதான் மின்சார உற்பத்திக்கு உதவும் காரணிகளில் முக்கியமானதாக இருக்கிறது.

உலகளாவிய அளவில் இருக்கும் எரிசக்தி தேவையில் நிலக்கரியின் பங்களிப்பு 29%-ஆக இருக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை, எரிசக்தி தேவையில் நிலக்கரியின் பங்களிப்பு ஏறக்குறைய 52%-ஆக இருக்கிறது. இந்திய மின் உற்பத்தியில் ஏறக்குறைய 66% அளவிலான உற்பத்தி நிலக்கரியை உபயோகித்தே செய்யப்படுகிறது. அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு அடுத்தபடியாக மூன்றாவது பெரிய நிலக்கரி உற்பத்தி நாடாக இந்தியா திகழ்கிறது.

கம்பெனி ஸ்கேன் : கோல் இந்தியா லிமிடெட்!

கம்பெனி எப்படி?

1975-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கோல் இந்தியா லிமிடெட், இந்தியாவின் பெரியதொரு பொதுத்துறை நிறுவன மாகும். உலக அளவில் மிக அதிக அளவில் நிலக்கரி தயாரிப்புக்கான  முதல் இடத்தைப் பிடித்துள்ள நிறுவனம் இது. இந்தியாவில் எட்டு மாநிலங்களில் 81 சுரங்கங்கள், ஏழு நிலக்கரி தயாரிக்கும் துணை நிறுவனங்களை கொண்டு இயங்கிவருகிறது இந்த நிறுவனம்.

இந்தியாவில் எடுக்கப்படும் நிலக்கரியில் 81% நிலக்கரி கோல் இந்தியா நிறுவனம் தருகிறது. இந்தியாவில் இருக்கும் 86 நிலக்கரி உபயோகிக்கும் தெர்மல் பவர் பிளான்ட்டுகளில் 82 பிளான்ட்டுகளுக்கு நிலக்கரியை சப்ளை செய்கிறது இந்த நிறுவனம்.

சுற்றுச்சூழல் பிரச்னை!

சென்ற அரசாங்கத்தில் சுற்றுச்சூழல்  பாதுகாப்பு குறித்த இழுபறி மிக அதிகமாக இருந்ததால், பிரச்னைகளும் அதிகமாக இருந்து வந்தது. புதிய அரசாங்கம் இந்த சுற்றுச்சூழல் பிரச்னைகளுக்கு ஒரு தீர்வை காண தேவையான முயற்சிகளை எடுக்கும் என எதிர்பார்க்கலாம்.

மேலும், சுரங்கத் துறைக்குத் தேவையான நிலத்தைக் கையகப்படுத்துதலிலும் துரிதமான செயல்பாடுகள் நடைமுறைப் படுத்தப்பட வேண்டும். மைனிங், டெவலப்மென்ட் மற்றும் ஆபரேஷன் ஒப்பந்தங்களை உருவாக்கி நடைமுறைப் படுத்துவதிலும் புதிய அரசாங்கம் முனைப்புடன் செயல்படும் என்று எதிர்பார்க்கலாம்.

கம்பெனி ஸ்கேன் : கோல் இந்தியா லிமிடெட்!

  விரிவாக்க வாய்ப்புகள்!

2014-ம் நிதியாண்டில் கோல் இந்தியா எட்டிய உற்பத்தியான 462 மில்லியன் டன்களிலிருந்து 2018-ம் நிதியாண்டில் 615 மில்லியன் டன்களாக உயர்த்த திட்டமிட்டு வருகிறது. இந்த உற்பத்தி அதிகரிப்பை எட்ட புதிய சுரங்கங்கள் வேண்டுமே; அதற்கான சுற்றுச்சூழல் அனுமதிகளும் பெற வேண்டுமே என்று பார்த்தால், புதியதாகத் திட்டமிடப்பட்ட சுரங்கங் களில் ஏறக்குறைய 60% ஏற்கெனவே இந்த நடவடிக்கைகளில் இருப்பதாலும்; அதிலும் ஏறக்குறைய 40-45% இடம் வெட்டவெளிக் காடுகளாக இருப்ப தாலும், அதிக அளவில் பிரச்னைகள் எதையும் சந்திக்காமல், இந்த உற்பத்தி அதிகரிப்பை கோல் இந்தியாவால் நடைமுறைப்படுத்த வாய்ப்புள்ளது.

மேலும், நிலக்கரியின் தேவையும் வேகமாக அதிகரிக்கவே வாய்ப்புகள் அதிகம் உள்ளது. 12-வது ஐந்தாண்டுத் திட்டத்தில் திட்டமிடப்பட்டுள்ள மின்சார உற்பத்தியில் ஏறக்குறைய 58% அளவு நிலக்கரியை உபயோகித்து உற்பத்தி செய்யப்படுவதாகவே திட்டமிடப்பட்டுள்ளது. மின்சார உற்பத்தி அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பாக இருப்பதால், மின் உற்பத்தி நிலையங்கள் நிலக்கரியை சப்ளை செய்யச் சொல்லி கோல் இந்தியாவை வலியுறுத்தவே செய்யும். அதனால், கோல் இந்தியாவால் அதனுடைய உற்பத்தித்திறன் திட்டமிடலின் அளவை சுலபத்தில் எட்டிப்பிடிக்க முடியும் எனலாம்.

கம்பெனி ஸ்கேன் : கோல் இந்தியா லிமிடெட்!

  இறக்குமதி வாய்ப்பு!

நிலக்கரி இறக்குமதி என்பது அடிக்கடி செய்திகளில் வரும் விஷய மாகும். இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி இந்திய நிலக்கரியைவிட ஏறக்குறைய 200 ரூபாய் விலை குறைவாக உள்ளது. மின் உற்பத்தி நிலையங்களும், நிலக்கரியை உபயோகிக்கும் சிமென்ட் தயாரிப்பு நிறுவனங்களும் இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியைப் பயன் படுத்தி பயனடைய வாய்ப்புள்ளதே என்று பார்த்தால், வேறுவகையான சிக்கல்கள் இறக்குமதியில் உள்ளன.

எடை அதிகமாக உள்ள பொருள் என்பதால், துறைமுகங்களுக்கு அருகே உள்ள மின் உற்பத்தி மற்றும் சிமென்ட் ஆலைகள் மட்டுமே இறக்குமதி நிலக்கரியை உபயோகிக்க முடியும். துறைமுகத்துக்கு அருகே இல்லாத மின் உற்பத்தி நிலையங்களும், சிமென்ட் ஆலைகளும் இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியை உபயோகிக்க நினைத்தால், போக்குவரத்துக்காக அதிக அளவிலான தொகையைச் செலவிட வேண்டியிருக்கும் என்பதால் கோல் இந்தியாவின் விற்பனையில் இறக்குமதி நிலக்கரி பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்திவிடாது எனலாம். அப்படி இறக்குமதி செய்யப்படுவதும் கோல் இந்தியா எப்போதாவது சப்ளை செய்யாவிட்டால் ஒரு தற்காலிக ஏற்பாடாக இருந்துவிட மட்டுமே

கம்பெனி ஸ்கேன் : கோல் இந்தியா லிமிடெட்!

வாய்ப்பு இருக்கிறது எனலாம்.

மேலும், அமெரிக்காவின் நிலக்கரித் தேவை தொடர்ந்து கணிசமான அளவு உயர்ந்துகொண்டே வருவதால், உலகச் சந்தையில் நிலக்கரி விலை இப்போதிருக்கும் அளவீட்டைவிட பெரிய அளவில் சரிந்துவிடும் வாய்ப்பும் இல்லை என்றே சொல்லலாம். அடுத்த ஐந்து வருடங்களில் இந்திய அளவில் அதிகரிக்கும் தேவைக்கு ஏற்றவாறு தன்னுடைய விரிவாக்கத் திட்டங்களைத் தீட்டியும் அதற்கான நிதிவசதிகளுக்குத் திட்டமிட்டும் வருகிறது கோல் இந்தியா.

ரிஸ்க் ஏதும் உண்டா?

நிலக்கரி சுரங்கத்துக்குத் தலையாய தேவை, நிலம். அதைக் கையகப் படுத்துதல் என்பது அரசாங்கம் மற்றும் சட்டம் சம்பந்தப்பட்ட விஷயம். தோண்டியெடுக்கப்பட்ட நிலக்கரியை வாடிக்கையாளரிடம் கொண்டு சேர்ப்பதற்குத் தேவைப்படுவது ரயில்வே கூட்ஸ் கேரஜ்கள். இதுவும் அரசாங்கத் துறையேயாகும். ஏறக்குறைய கடந்த இரண்டு வருடங்களாகவே கோல் இந்தியாவுக்கும் இந்திய அரசின் மற்றொரு நிறுவனமான நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷனுக்கும் (என்டிபிசி) இடையே நிலக்கரி சப்ளையில் கலோரிபிக் வேல்யூ (நிலக்கரியின் சூட்டை உருவாக்கும் திறன்) கொஞ்சம் தகராறுகள் இருந்தே வருகின்றன.

என்டிபிசி குறைவான சூட்டை உருவாக்கும் திறன்கொண்ட நிலக்கரியை சப்ளை செய்ததாக கோல் இந்தியாவைக் குற்றஞ்சாட்டியும், என்டிபிசி பணம் தரவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து கோல் இந்தியா சப்ளையை நிறுத்தியும் சண்டையிட்டு வருகின்றன. இந்தப் பிரச்னை தற்சமயம் நீதிமன்றத்தில் இருக்கிறது. இந்தப் பிரச்னையில் இருக்கும் தொகைக்கு ஈடான அளவில் தன்னுடைய பேலன்ஷீட்டில் கோல் இந்தியா ஒதுக்கீடுதனையும் (புரொவிஷன்) செய்துவைத்துள்ளதால், பிரச்னை பூதாகாரமாக வாய்ப்பில்லை எனலாம். எல்லா தொழில்களிலும் இருப்பதைப்போல், பொருளாதார மந்தநிலை தொடருமென்றால் கோல் இந்தியாவின் வளர்ச்சியும் சற்று பாதிக்கப்படும் வாய்ப்பு இருக்கவே செய்கிறது.

கம்பெனி ஸ்கேன் : கோல் இந்தியா லிமிடெட்!

2013-ம் ஆண்டில் கடுமையான விலை வீழ்ச்சியையும், 2014-ல் தற்போதுவரை அதிவேகமான விலை ஏற்றத்தையும் கண்டது கோல் இந்தியாவின் பங்குகள். சாதாரணப் பார்வைக்கு கடந்த ஐந்து மாதத்தில் கோல் இந்தியாவின் பங்குகள் கண்ட விலை ஏற்றம் மட்டுமே தெரியும். சென்ற ஆண்டு வீழ்ச்சியடைந்த விலையின் அளவு தென்படாதுபோகலாம்.

இவை இரண்டையும் சேர்த்துப் பார்க்கும்போதும் பொதுவான பொருளாதார எதிர்பார்ப்புகளை வைத்துப்பார்க்கும்போதும் கோல் இந்தியாவின் பங்குகளை முதலீட்டாளர்கள் குறித்துவைத்துக் கொண்டு ட்ராக் செய்து கணிசமான இறக்கம் வரும்போது சிறிய அளவில் வாங்கி நீண்டகால முதலீட்டுக்காக தங்களுடைய போர்ட்ஃபோலியோவில் சேர்த்துக் கொள்ளலாம்.

- நாணயம் ஸ்கேனர்.

(குறிப்பு: இந்தப் பகுதி இன்றைய விலையிலேயே வாங்க வேண்டிய பங்கு பரிந்துரை பகுதி அல்ல. இதில் சொல்லப்பட்டுள்ள பங்குகளை வாங்குவது முதலீட்டாளர்களின்  தனிப்பட்ட முடிவாகும்.)