Published:Updated:

அக்ரி கமாடிட்டி!

செ.கார்த்திகேயன்

ஜீரகம் (Jeera)

கடந்த வாரத்தில் ஜீரகத்தின் விலை அதிகரித்து வர்த்தகமானது. இதற்கு முக்கியக் காரணம், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தேவை அதிகரித்ததே. ஏற்றுமதி தேவை அதிகரித்ததும் ஜீரகத்தின் விலை உயர்வுக்கு இன்னொரு காரணமாகும்.

எப்போதும்போலவே ஜீரக ஏற்றுமதி நாடுகளான துருக்கி மற்றும் சிரியாவில் நிலவிவரும் அரசியல் பதற்றம் காரணமாக உலகச் சந்தைகளில் சப்ளை பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் இந்திய ஜீரகத்துக்கான ஏற்றுமதி ஆர்டர்கள் அதிகரித்து வருகின்றன.

அக்ரி கமாடிட்டி!

என்சிடிஎக்ஸ் சந்தையில் ஜீரகம் ஜூலை கான்ட்ராக்ட் ஒரு குவிண்டாலுக்கு ரூ.55 அதிகரித்து ரூ.11,510-க்கும், ஆகஸ்ட் மாத கான்ட்ராக்ட் ரூ.45 அதிகரித்து ரூ.11,715க்கும் வர்த்தகமானது. உஞ்ஹா சந்தையில் சென்ற வார வரத்து 9,000-10,000 பைகளாக (ஒரு பை என்பது 55 கிலோ) இருந்தது.

ஜீரக உற்பத்திக்கு சாதகமாக பருவநிலை இருப்பதால், 2014-ம் ஆண்டின் ஜீரக உற்பத்தி 6.5-7 மில்லியன் பைகளாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது இதற்கு முந்தைய ஆண்டில் 4.5 - 5 மில்லியன் பைகளாக இருந்தது.

தேவை அதிகரித்துக் காணப்படுவதால் வரும் வாரத்தில்் ஜீரகத்தின் விலை அதிகரித்தே வர்த்தகமாகலாம்.

மஞ்சள் (Turmeric)

கடந்த வாரத்தில் மஞ்சள் விலை குறைந்தே வர்த்தகமானது. தேவை குறைந்ததே இதற்கு முக்கியக் காரணம். தவிர, பருவநிலையும் மஞ்சள் உற்பத்திக்கு சாதகமாக அமையவில்லை. அதனால் புதிய பயிர்கள் பாதிப்படைந்துள்ளன. தெலுங்கானா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் மழை வரத்தும் குறைவாக உள்ளதால் மஞ்சள் விளைச்சல் பாதிப்படைந்துள்ளது. தெலுங்கானாவைப் பொறுத்தவரை, மஞ்சள் உற்பத்தி கடந்த ஆண்டைவிட மிகவும் குறைந்து ஜூலை9, 2014 நிலவரப்படி 13,931 ஹெக்டேர் அளவிலேயே உள்ளது என அந்த மாநிலத்தின் வேளாண்மைத் துறை தெரிவித்துள்ளது.

அக்ரி கமாடிட்டி!

மஞ்சள் விலை உயர்வுக்கு இன்னொரு முக்கியமான காரணம், ராஜஸ்தான் அரசு மஞ்சள் மீதான மதிப்புக்கூட்டு வரியை (5%) மீண்டும் கொண்டு வந்திருக்கிறது. ராஜஸ்தான் அரசு தனது 2013-14 பட்ஜெட்டில் மஞ்சளுக்கு இருந்த மதிப்புக்கூட்டு வரியை நீக்கியது. அதே அரசாங்கம் தற்போது அந்த வரியைக் கொண்டு வந்திருப்பதால், மஞ்சள் விலை குறைந்திருக்கிறது.

புதிய பயிர் வரத்தில் பாதிப்பு, தரம் குறைந்த மஞ்சள் கையிருப்பு போன்ற காரணிகளே மஞ்சள் விலையை அதிகரிக்கச் செய்யாமல் தடுத்து வருகிறது. அதனால் வரும் வாரத்திலும் மஞ்சள் விலையானது குறைந்தே வர்த்தகமாகலாம்.

சென்னா (Chana)

  தேவை கூடியதால் கடந்த வாரத்தில் சென்னா விலை அதிகரித்து வர்த்தகமானது. வேளாண்மை அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்டிருக்கும் அறிக்கையின்படி, காரீஃப் பருவத்தில் விளையும் பருப்பு வகைகள் ஜூலை 11, 2014 நிலவரப்படி, 13.49 லட்சம் ஹெக்டேர் அளவு பயிரிடப்பட்டுள்ளது. இது அதற்கு முந்தைய ஆண்டைவிட மிக மிகக் குறைவு.

அக்ரி கமாடிட்டி!

துவரை, உளுந்து, பாசிப்பருப்பு வகைகளின் உற்பத்தி, முறையே 4.15 லட்சம், 2.07 லட்சம் மற்றும் 4.32 லட்சம் ஹெக்டேர்கள் ஆகும். துவரம்பருப்பு மற்றும் உளுத்தம்பருப்பு ஒரு குவிண்டாலுக்கு ரூ.50 அதிகரித்து, ரூ.4,350 ரூபாய்க்கு வர்த்தகமானது. பாசிப்பருப்பு ரூ.100 அதிகரித்து, ரூ.4,600 ரூபாய்க்கு வர்த்தகமானது.

மூன்றாவது அட்வான்ஸ் கணக்கீட்டின்படி, 2013-14-ம் ஆண்டுக்கான உற்பத்தி 19.6 மில்லியன் டன்கள். இதற்கு முந்தைய உற்பத்தி அளவைவிட இது குறைவு. சென்னா உற்பத்தியின் அளவு 9.51 மில்லியன் ஹெக்டேரிலிருந்து 10.21 மில்லியன் ஹெக்டேர் அளவுக்கு அதிகரித்திருப்பது கவனிக்கத்தக்கது. இந்தியாவின் பருப்பு உற்பத்தியில் 48-50% வரை சென்னா உற்பத்தி என்பது குறிப்பிடத்தக்கது.

வரும் நாட்களில் தேவை அதிகரிப்பு, காரீஃப் பருவத்தில் விளையும் பருப்பு வகைகளின் உற்பத்தி குறைவு போன்ற காரணங்களால் வரும் வாரத்தில் சென்னாவின் விலை மேலும் குறையாமல் தடுக்கப்படும்.

அக்ரி கமாடிட்டி!


 

அக்ரி கமாடிட்டி!