நடப்பு
Published:Updated:

கம்பெனி ஸ்கேன் : அரோபிந்தோ பார்மா!

நாணயம் ஸ்கேனர்

இந்த வாரம் நாம் ஸ்கேன் செய்யப்போகும் கம்பெனி அரோபிந்தோ பார்மா லிமிடெட் எனும் ஹைதராபாத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பார்மாசூட்டிக்கல்ஸ் நிறுவனத்தை.
1988-89ம் நிதியாண்டில் செமி-சிந்தடிக் பென்சிலின் தயாரிப்பதற்காக பாண்டிச்சேரியில் ஒரே ஒரு தொழிற்சாலையுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம், 1992-ம் ஆண்டு அரோபிந்தோ பார்மா பப்ளிக் லிமிடெட் நிறுவனமாக மாற்றப்பட்டு, 1995-ம் ஆண்டு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது. இன்று செமி-சிந்தடிக் பென்சிலின் தயாரிப்பில் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.

நியூரோ சயின்ஸஸ், கார்டியோ வாஸ்குலர், ஆன்ட்டி-ரெட்ரோவைரல்ஸ், ஆன்ட்டி- டயாபெடிஸ், காஸ்ட்ரோ  என்டெராலஜி மற்றும் செபாலொஸ்பெரின்ஸ் போன்ற மருந்து வகைகளிலும் முன்னணியில் இருக்கிறது. இந்திய பார்மா கம்பெனிகளில் பத்தாவது இடத்தில் உள்ளது. மிகவும் குறைவான உற்பத்திச் செலவு மற்றும் அதிகத் தரம் வாய்ந்த மருந்துகளை உற்பத்தி செய்து பிரீமியம் விலைக்கு தருவது என்ற இரண்டின் மூலமும் நல்ல லாபத்தைச் சம்பாதித்து வருகிறது இந்த நிறுவனம். ஏறக்குறைய பத்து ஆண்டு காலகட்டத்துக்குள்ளாகவே முன்னணியில் இருக்கும் ஒரு மருந்து தயாரிப்பு நிறுவனமாகவும், பார்முலேஷன் (மருந்து கலவை செய்துதரும் நிறுவனம்) நிறுவனமாகவும் உருவெடுத்துள்ளது இந்த நிறுவனம்.

கம்பெனி ஸ்கேன் : அரோபிந்தோ பார்மா!

தொழில் எப்படி?

இந்திய பார்மாசூட்டிக்கல்ஸ் துறை 2009 - 2013 வரையிலான ஐந்து வருடத்தில் ஏறக்குறைய 13  சதவிகித அளவிலான ஆண்டு வளர்ச்சியை சந்தித்தது.  1970-ம் ஆண்டு வரை இறக்குமதியையே நம்பியிருந்த இந்திய மருத்துவத்துறையில் இன்று ஒட்டுமொத்த உற்பத்தியும் இந்திய அளவிலேயே செய்யப்படுகிறது. சில இறக்குமதிகளும் விலை சகாயம் மற்றும் மிக உயரிய உற்பத்தித் தரத்தேவைகள் இருக்கும்போது மட்டுமே செய்யப்படுகிறது. 

2009-ல் இருந்த 55 மில்லியன் டாலர் அளவிலிருந்து 2020-ம் ஆண்டில் 12.6 பில்லியன் டாலர் அளவுக்கு வளர்ச்சி அடையும் என்று எதிர்பார்க்கலாம். ஏற்றுமதியிலும் இத்துறை வேகமான வளர்ச்சியை கண்டுவருகிறது. உலக பார்மா துறையின் வால்யூமில் ஏறக்குறைய 1.4 சதவிகித அளவையும் மருந்துகளின் விலை மதிப்பீட்டில் ஏறக்குறைய 10 சதவிகித அளவிலும் இருந்துவருகிறது.

கம்பெனி ஸ்கேன் : அரோபிந்தோ பார்மா!

2014-15 வருடத்தில் இ்த்துறையின் வளர்ச்சி ஏறக்குறைய 12 சதவிகித அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கின்றனர். 2000 - 2014 வரை எஃப்டிஐ முதலீடு இந்தத் துறையில் 11,500 மில்லியன் டாலர் அளவில் இருக்கிறது.  மக்களின் வளரும் வருமானம், மத்தியதர மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, அதிகரித்துவரும் மருத்துவ வசதி, வேகமாக வளர்ந்துவரும் மருத்துவ காப்பீட்டு வசதி, தொடர் சிகிச்சை தேவைப்படும் நோய்களின் அதிக அளவிலான தாக்கம் போன்றவை இந்தத் துறையின் வளர்ச்சியை நிர்ணயிக்கும்.

ஏன் முதலீடு செய்யவேண்டும்?

பிராண்ட் இல்லாத ஜெனெரிக் மருந்து வகைகளுக்கு அமெரிக்க சந்தையில் இருக்கும் வாய்ப்பு மிகப் பெரியதாக இருக்கிறது. அரோபிந்தோ பார்மா நிறுவனம் ஜெனெரிக் மற்றும் ஆக்டிவ் பார்மாசூட்டிக்கல் இன்கிரிடியன்ட்ஸ் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் உற்பத்தித் தொழிற்சாலைகள் அமெரிக்கா, பிரிட்டன், உலக சுகாதார நிறுவனம், கனடா, தென்ஆப்பிரிக்கா, பிரேசில் போன்றவற்றின் தரச்சான்றுகளைப் பெற்றுள்ளன. இந்நிறுவனம்  சீனா, பிரேசில், ஜப்பான், நெதர்ேலண்ட், தென் ஆப்பிரிக்கா, தாய்லாந்து, இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட ஏறக்குறைய 125 நாடுகளுக்கு தனது தயாரிப்பை ஏற்றுமதி செய்துவருகிறது. அதன் மொத்த வருமானத்தில் ஏறக்குறைய 70% வரை ஏற்றுமதி மூலம் கிடைக்கிறது. ஏறக்குறைய 1050-க்கும் மேற்பட்ட காப்புரிமைகளை தன்வசத்தே கொண்டுள்ளது அரோபிந்தோ பார்மா.

கம்பெனி ஸ்கேன் : அரோபிந்தோ பார்மா!

ரிஸ்க் ஏதும் உண்டா?

ஏறக்குறைய 15% உள்நாட்டு வளர்ச்சியை கண்டுவரும் இந்தத் துறையில் வேகமான வளர்ச்சி என்பது ஏற்றுமதியின் மூலமும், உள்நாட்டில் சிறு, குறு நகரங்களில் ஊடுருவுவதன் மூலமுமே சாத்தியம். பொருளாதார சுழற்சிக்கேற்ப மாறுபடாத தொழில் என்றாலும், விலை நிர்ணயித்தலில் சில சமயம் அரசாங்கத்தின் பங்கு மிகப் பெரியளவில் வந்துவிடும் வாய்ப்பு உள்ளது.

கம்பெனி ஸ்கேன் : அரோபிந்தோ பார்மா!

ஏற்றுமதி வர்த்தகத்துக்கான வாய்ப்பு பெரிய அளவில் இருந்தாலும், இ்த்துறையில் பிரச்னைகளுக்கும் சிக்கல்களுக்கும் பஞ்சமில்லை. உலக அளவில் விரிவாக்கம் செய்யும்போது விலை நிர்ணயத்தில் போட்டி என்பது ஒரு குறிப்பிடும்படியான ரிஸ்க்கேயாகும். மேலும் அதிக கடன் கம்பெனியின் செயல்பாட்டை பாதிக்கும்.

ஐரோப்பாவில் ஆக்டாவிஸ் நிறுவனத்தை வாங்கியதால் லாபம் பெரிய அளவில் மாறுமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டியிருக்கும். அதி நவீன மருந்துகளான பெனம் மற்றும் பெப்டைட்ஸ் தயாரிப்பில் இறங்கியிருப்பதால் லாபம் அதிகரிக்கும் வாய்ப்புகள் இருக்கிறது. உலகளாவிய மருத்துவத் துறையின் வளர்ச்சி தொய்வு மற்றும் கடுமையான சட்ட ரீதியான பரிசோதனைகள் போன்றவையே திடீர் திருப்பங்களை அரோபிந்தோ பார்மாவின் செயல்பாட்டில் கொண்டுவந்துவிடலாம்.

ரிஸ்க்குகள் பல இருந்தபோதிலும் அரோபிந்தோ பார்மாவின் பங்குகளை முதலீட்டாளர்கள் ட்ராக் செய்து, கடுமையான விலை வீழ்ச்சி வரும்போது நீண்ட கால முதலீட்டுக்காக வாங்கிப் போடலாம்.

- நாணயம் ஸ்கேனர்

(குறிப்பு: இந்தப் பகுதி இன்றைய விலையிலேயே வாங்க வேண்டிய பங்கு பரிந்துரை பகுதி அல்ல. இதில் சொல்லப்பட்டுள்ள பங்குகளை வாங்குவது முதலீட்டாளர்களின்  தனிப்பட்ட  முடிவாகும்)