நடப்பு
Published:Updated:

ஃபண்ட் பரிந்துரை!

ஹெச்டிஎஃப்சி பேலன்ஸ்டு ஃபண்ட்: முதலீடு செய்கசொக்கலிங்கம் பழனியப்பன், டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட்

சென்ற வாரம் ஒரு மிட் அண்ட் ஸ்மால் கேப் ஃபண்டைப் பற்றிப் பார்த்தோம். இந்த வாரம் கலப்பினத் திட்டமான ஹெச்டிஎஃப்சி பேலன்ஸ்டு ஃபண்ட் பற்றிப் பார்ப்போம்.

கலப்பினத் திட்டங்களில் பல வகைகள் உள்ளன. அவற்றில் பேலன்ஸ்டு ஃபண்டுகள் ஒருவகை ஆகும். இந்த வகை ஃபண்டுகள் தங்களின் முதலீட்டில் மூன்றில் இரண்டு பகுதியை பங்கு சார்ந்த முதலீட்டிலும், மீதியைக் கடன் பத்திரங்களிலும் முதலீடு செய்கின்றன. இதனால் பங்குகளில் உள்ள வளர்ச்சியும், கடன் பத்திரங்களில் உள்ள ஸ்திரத்தன்மையும் ஒன்றாகச் சேர்ந்து முதலீட்டாளர்களுக்குக் கிடைக்கிறது. மேலும், முழுக்க முழுக்கப் பங்குகளில் முதலீடு செய்யும் திட்டங்களை ஒப்பிடும் போது, இந்தவகை ஃபண்டுகளில் ஏற்ற இறக்கம் குறைவாக இருக்கும்.

வருமான வரிச் சட்டத்தின்படி, 65%க்குமேல் போர்ட்ஃபோலியோவில் பங்குகள் இருக்கும்போது, அந்தத் திட்டங்கள் ஈக்விட்டி திட்டங்களுக்கு உண்டான வருமான வரி வரம்பின் கீழ் வரும்.

ஃபண்ட் பரிந்துரை!

ஆகவே, இந்தவகை பேலன்ஸ்டு ஃபண்ட் திட்ட முதலீடுகளை ஓராண்டுக்குமேல் வைத்திருக்கும் பட்சத்தில் எந்தவிதமான வருமான வரியும் கிடையாது. அதேபோல், இந்தத் திட்டங்களிலிருந்து தரப்படும் டிவிடெண்டுகளுக்கும் எந்தவிதமான வருமான வரியும் கிடையாது. ஒருவர் தனியாகக் கடன் பத்திரங்களில் அல்லது ஃபிக்ஸட் டெப்பாசிட்களில் முதலீடு செய்யும்போது வருமான வரி உண்டு. அதே முதலீட்டை இந்தவகையான ஃபண்டுகளின் மூலம் செய்யும்போது வரி கிடையாது.

உதாரணத்துக்கு, நீங்கள் ரூ.1 லட்சத்தை முதலீடு செய்ய வைத்துள்ளீர் கள். அந்தப் பணத்தை நேரடியாக இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம். அல்லது அதிலிருந்து ரூ.35,000-த்தை லிக்விட் ஃபண்டுகள் அல்லது ஃபிக்ஸட் டெபாசிட்களில் முதலீடு செய்துவிட்டு, மீதியை 100% பங்குகளில் முதலீடு செய்யக்கூடிய திட்டங்களில் முதலீடு செய்யலாம். அவ்வாறு செய்யும்போது நீங்கள் செய்த ரூ.35,000 முதலீட்டிலிருந்து கிடைக்கும் வருமானத்துக்கு வரி கட்ட வேண்டி இருக்கும்.

ஃபண்ட் பரிந்துரை!

இந்த ஃபண்டின் போர்ட்ஃபோலியோ மேனேஜர் சிராக் சேத்தல்வத் ஆவார். இவர் ஹெச்டிஎஃப்சி மிட் கேப் ஆப்பர்சூனிட்டீஸ், ஹெச்டிஎஃப்சி சில்ட்ரன்ஸ் கிஃப்ட் ஃபண்ட் போன்ற சிறப்பாகச் செயல்படும் திட்டங்களையும் நிர்வகித்து வருகிறார். இதே ஃபண்ட் நிறுவனம், ஹெச்டிஎஃப்சி புரூடென்ஸ் என்ற மற்றுமொரு பேலன்ஸ்டு திட்டத்தை நடத்தி வருகிறது.
 
அதன் ஃபண்ட் மேனேஜர் பிரஷாந்த் ஜெயின் ஆவார். புரூடென்ஸ் திட்டம் சந்தை காளையின் பிடியில் இருக்கும் போது மிகவும் நன்றாகச் செயல்படும். நாம் பார்க்கும் இந்தத் திட்டம் குறிப்பாகச் சந்தை கரடியின் பிடியில் இருக்கும்போது நன்றாகச் செயல்படும். ஆகவே, சற்று கன்ஸர்வேட்டிவ்வாக இருக்க விரும்புபவர்களுக்கு இந்தத் திட்டம் கனகச்சிதமாகப் பொருந்தும்.

ஃபண்ட் பரிந்துரை!

இந்தத் திட்டம் தற்போது 68.50 சதவிகிதம் பங்குகளிலும், எஞ்சியதைக் கடன் பத்திரங்களிலும் முதலீடு செய்துள்ளது. இந்த ஃபண்ட் தனது பங்கு சார்ந்த போர்ட்ஃபோலியோவில் லார்ஜ், மிட், மற்றும் ஸ்மால் கேப் என அனைத்துவகை நிறுவனங்களிலும் முதலீடு செய்கிறது.

பங்குகளைத் தேர்வு செய்யும்போது தரமான நிறுவனங்களாக இருக்குமாறு பார்த்துக் கொள்கிறது. மேலும், தத்தமது துறைகளில் முன்னணி நிறுவனமாக இருக்குமாறு பார்த்துக்கொள்வதோடு, நல்ல வளர்ச்சியுள்ள நிறுவனமா என்றும் பார்த்துக்கொள்கிறது. இதன் போர்ட்ஃபோலியோவில் அனைத்துப் பங்குகளும் 4 சதவிகிதத்துக்கும் குறைவாகவே உள்ளது. துறை சார்ந்த முதலீடுகளில் நிதித் துறை (17.76%) முன்னணி வகிக்கிறது. அதற்குப்பிறகு ஹெல்த்கேர் (7.75%), டெக்னாலஜி (7.37%), மற்றும் ஆட்டோமொபைல் (7.06%) துறைகள் இடம்பிடித்துள்ளன.

இந்த ஃபண்ட் ஆரம்பித்தபோது (11/09/2000) ஒருவர் செய்த முதலீடான ரூ.1 லட்சம் இன்றைய தேதியில் (14/08/2014) ரூ.9,11,190-ஆக உள்ளது. இது கூட்டு வட்டியில் ஆண்டுக்கு 17.19% வருமானத்துக்கு சமம்.

ஃபண்ட் பரிந்துரை!

குறிப்பாக, சிராக் சேத்தல்வத்தின் நிர்வாகப் பொறுப்பில் இந்த ஃபண்ட் வந்ததிலிருந்து (ஏப்ரல் 2007), மிகவும் நன்றாகச் செயல்பட்டு வருகிறது. இந்தக் காலகட்டத்தில் புரூடென்ஸ் ஃபண்டைவிடவும்  சற்று அதிக வருமானத்தைக் கொடுத்துள்ளது.

மேலும், இந்த ஏழுக்கும் மேற்பட்ட வருடங்களில் (ஏப்ரல் 2007 – ஆகஸ்ட் 2014) இதே ஃபண்ட் நிறுவனத்தில் உள்ள ஹெச்டிஎஃப்சி டாப் 200 (16.05%) மற்றும் ஹெச்டிஎஃப்சி ஈக்விட்டி (15.90%) ஃபண்டுகளைவிடவும், இன்னும் பல லார்ஜ் கேப் திட்டங்களைவிடவும் அதிகமான வருமானத்தை இந்தத் திட்டம் (16.69%) கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் செயல்பாடு இந்த ஃபண்ட் மேனேஜரின் நிர்வாகத் திறனை எடுத்துக் காண்பிக்கிறது.

ஃபண்ட் பரிந்துரை!

இந்தவகை ஃபண்டுகளின் மற்றொரு சிறப்புச் சொத்து ஒதுக்கீடு (asset allocation) ஆகும். சந்தை உச்சத்தில் இருக்கும்போது, ஃபண்ட் மேனேஜர் அதிகமாகக் கடன் பத்திரங்களுக்கு மாறிக்கொள்ளலாம்.

ஃபண்ட் பரிந்துரை!

அதேபோல் சந்தை பாதாளத்தில் இருக்கும்போது, பங்கு சார்ந்த ஒதுக்கீட்டை அதிகரித்துக் கொள்ளலாம். இந்த ஒதுக்கீடு சாதாரண நபர்களால், அடிக்கடி செய்ய முடிவதில்லை.

மியூச்சுவல் ஃபண்டுகளுக்கு முதன்முறையாக வருபவர்களுக்கு, இந்த ஃபண்ட் ஒரு சிறந்த நுழைவாயிலாக இருக்கும்.

மேலும், 100 சதவிகித பங்கு சார்ந்த ஃபண்டுகளைவிட சற்று குறைவான ரிஸ்க் எடுக்க விரும்புபவர்கள், ரிட்டையர்மென்ட்டுக்கு அருகாமையில் உள்ளவர்கள், குழந்தைகளின் கல்விக்காகச் சேமிப்பவர்கள் என அனைவரும் இந்த ஃபண்டில் தாராளமாக முதலீடு செய்யலாம்.

ரெகுலராக மாத வருவாய் உள்ளவர்கள் எஸ்ஐபி முறையிலும், மொத்தமாகப் பணம் வைத்துள்ளவர்கள் சந்தை சரிவுகளைப் பயன்படுத்தியும் முதலீடு செய்யலாம்.