Published:Updated:

கம்பெனி ஸ்கேன் : அபார் இண்டஸ்ட்ரீஸ்!

கம்பெனி ஸ்கேன் : அபார் இண்டஸ்ட்ரீஸ்!

இந்த வாரம் நாம் ஸ்கேன் செய்யப்போகும் கம்பெனி அபார் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் எனும் மின்கடத்திகள் (பவர் கண்டக்டர்), வாகனங்களுக்கான ஸ்பெஷல் லூப்ரிகன்ட்ஸ் மற்றும் டிரான்ஸ்ஃபார்மர் களுக்கான ஸ்பெஷல் ஆயிலைத் தயாரிக்கும் நிறுவனத்தை. இன்ஜினீயரிங் துறைவாரியாக இந்த நிறுவனத்தின் தொழிலைப் பற்றி சொல்லவேண்டும் என்றால் எலெக்ட்ரிக்கல், மெட்டலர்ஜிக்கல் மற்றும் கெமிக்கல் இன்ஜினீியரிங் துறையில் செயல்பட்டு வருகிறது.

  நிறுவனத்தின் வரலாறு...

பவர் கண்டக்டர் தயாரிப்பதற்காக 1958-ம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த நிறுவனம் 1969-ம் ஆண்டிலிருந்து டிரான்ஸ்ஃபார்மர்களுக்கான ஸ்பெஷல் ஆயில் தயாரிப்பில் ஈடுபட ஆரம்பித்தது. 1989-ம் ஆண்டு குஜராத் அபார் பாலிமர்ஸ் லிமிடெட் என்ற பெயரில் பப்ளிக் லிமிடெட் நிறுவனமாக மாற்றிப் பதிவு செய்யப்பட்டு பின்னர் 1997-ல் அபார் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது இந்த நிறுவனம். இன்றைக்கு உலக அளவில் அலுமினியம் கண்டக்டர் மற்றும் டிரான்ஸ்ஃபார்மர் ஆயில் தயாரிப்பில் முதல் ஐந்து இடத்துக்குள் இருக்கிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
கம்பெனி ஸ்கேன் : அபார் இண்டஸ்ட்ரீஸ்!

இந்திய அளவில் டிரான்ஸ்ஃபார்மர் ஆயில்களின் சந்தையில் ஏறக்குறைய 50 சதவிகித பங்களிப்பையும், அலுமினியம் கண்டக்டர் (மின்கடத்தி) சந்தையில் ஏறக்குறைய 22 சதவிகித பங்களிப்பையும் தன்வசத்தே வைத்துள்ளது இந்த நிறுவனம். அபார் நிறுவனத்தின் ஓர் அங்கமான யுனிஃப்ளெக்ஸ் கேபிள்ஸ் இந்திய அளவில் 1981-ம் ஆண்டிலிருந்து பல்வேறு வகையான எலெக்ட்ரிக்கல் மற்றும் டெலிகம்யூனிகேஷன் கேபிள்களைத் தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனமாகும். இந்த நிறுவனத்தினை 2008-ம் ஆண்டு முழுமையாக வாங்கிய இந்த நிறுவனம்,   2010-ம் ஆண்டு இந்த கேபிள் தயாரிப்பு நிறுவனத்தைத் தன்னுடன் முழுமையாக இணைத்துக் கொண்டது (அமால்கமேஷன்).

தொழில்நுட்பத்தைப் பெறுவதற்காக உலகளாவிய அளவில் தலைசிறந்த நிறுவனங்களுடன் கூட்டணி அமைத்துச் செயல்படுகிறது இந்த நிறுவனம்.  அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, மத்திய கிழக்கு போன்ற நாடுகளையும் சேர்த்து ஏறக்குறைய 80 நாடுகளில் வியாபாரத்தைச் செய்துவருகிறது  இந்த  நிறுவனம்.

  தொழில்கள் என்னென்ன?

ஸ்பெஷாலிட்டி ஆயில் வகையறாவில் டிரான்ஸ்ஃபார்மர் ஆயில், இண்டஸ்ட்ரியல் ஆயில் மற்றும் லூப்ரிகன்ட்ஸ், லிக்விட் பாரஃபின்ஸ், ரப்பர் பிராசஸிங் ஆயில், இங்க் ஆயில், ஆட்டோமொபைல் லூப்ரிகன்ட்ஸ் போன்ற எண்ணெய் வகைகளைத் தயாரிக்கிறது இந்த நிறுவனம். அலுமினியம் கண்டக்டர்கள் வகையில் வயர் ராடுகள், நீண்டதூரம் மின்சாரம் எடுத்துச்செல்லும் ஓவர்ஹெட் பவர் டிரான்ஸ்மிஷன் மற்றும் டிஸ்ட்ரி பூஷனுக்குத் தேவையான அலுமினியம், அலாய் மற்றும் தெர்மல் ரெசிஸ்டன்ஸ் கண்டக்டர் வகையறாக்களைத் தயாரிக்கிறது இந்த நிறுவனம்.

கேபிள் தயாரிப்பில் மின்சாரம், பெட்ரோகெமிக்கல், ஸ்டீல், சிமென்ட், நியூக்ளியர் பவர், ராணுவம், தொலைத்தொடர்பு, மெட்ரோ ரயில்கள் மற்றும் கப்பல் கட்டுமானத் துறைக்குத் தேவையான கேபிள்களைத் தயாரிக்கிறது. மசகன் டாக்ஸ், டிஆர்டிஓ, இந்திய கப்பல் படை, இந்தியன் ஆயில், பிபிசிஎல் போன்ற பல நிறுவனங்கள் இதன் வாடிக்கையாளர்களாக இருந்து வருகின்றன. மேலும், கேபிள் டிவிஷன் இந்திய அரசாங்கத்தால் ஓர் அங்கீக ரிக்கப்பட்ட ஏற்றுமதி நிறுவனமாகவும் உள்ளது குறிப்பிடத்தக்க விஷயமாகும்.

  ஏன் முதலீடு செய்யலாம்?

அபார் இண்டஸ்ட்ரீஸின் முதன்மை பிசினஸான மின்சாரத் துறையில் பெருமளவு சீர்திருத்தங்கள் முடிந் திருக்கும் நிலையில் டிரான்ஸ்மிஷன் மற்றும் டிஸ்ட்ரிப்யூஷன் துறையில் கணிசமான வளர்ச்சியை வரும் ஆண்டுகளில் எதிர்பார்க்கலாம். டிரான்ஸ்மிஷன் மற்றும் டிஸ்ட்ரிப்யூஷன் துறையில் 100 ரூபாய் விரிவாக்கத்துக்குச் செலவிடப்பட்டால், அதில் 25 ரூபாய் கண்டக்டர்கள், டிரான்ஸ்பார்மர் ஆயில் மற்றும் கேபிள் துறையில் கொள்முதலுக்குச் செலவாகும். 

கம்பெனி ஸ்கேன் : அபார் இண்டஸ்ட்ரீஸ்!

டிரான்ஸ்ஃபார்மர் ஆயில் துறையில் இந்திய சந்தையில் ஏறக்குறைய 50 சதவிகித சந்தைப் பங்களிப்பையும், மின் கடத்திகள் (கண்டக்டர்ஸ்) துறையில் இந்திய சந்தையில் ஏறக்குறைய 22 சதவிகித சந்தைப் பங்களிப்பையும் தன்வசத்தே கொண்டிருக்கும் இந்த நிறுவனம், இந்தத் துறையில் விரிவாக்கத்துக்குச் செலவிடப்படும் தொகையால் பலனடையும் என்று எதிர்பார்க்கலாம். அதிலும் இந்த நிறுவனத்தின் குறைந்த உற்பத்தி செலவில் உற்பத்தி செய்யும் திறன், தொடர்ந்து வெற்றிகரமாகப் பல நிறுவனங்களின் கான்ட்ராக்ட்களைப் பெற்றுவரும் திறமை, ஏற்றுமதியில் தொடர்ந்து வளர்ச்சிகண்டு வருவது, நல்ல நிலையில் இருக்கும் ஆர்டர் புக், சப்ளை செய்யும் அனைத்து நிறுவனங் களுமே இந்த நிறுவனத்தை உற்றதொரு தோழனாகக் கருதுவது, அதிக லாபம் தரும் பொருட்களாகிய அதிக திறன் கண்டக்டர்ஸ் மற்றும் 400 கிலோவாட்டுக்கு மேலான சக்தி கொண்ட டிரான்ஸ்ஃபார்மர்களுக்கான ஆயில்களைத் தயாரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது போன்ற நிறுவனத்தின் முன்னேற்றத்துக்கு உதவும் செயல்கள் என்றே சொல்லலாம்.

டிரான்ஸ்மிஷன் மற்றும் டிஸ்ட்ரிப்யூஷன் துறையில் மிகப் பெரிய அரசு நிறுவனமான பவர்கிரீட் கார்ப்பரேஷன் 12-வது ஐந்தாண்டுத் திட்டத்தில் ஏறக்குறைய ஒரு டிரில்லியன் ரூபாயை முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது. சென்ற ஐந்தாண்டுத் திட்டத்தைவிட இது இரண்டு மடங்காகும். இந்தத் தொகையுடன் இதே திட்ட காலத்தில் தனியார் முதலீட்டையும் கணக்கில் எடுத்துக் கொண்டால், ஏறக்குறைய இரண்டு டிரில்லியன் இந்திய ரூபாய் அளவுக்கு உற்பத்தித்திறனை அதிகரிப்பதற்கான முதலீடுகள் இந்தத் துறையில் செய்யப்பட உள்ளது.

கம்பெனி ஸ்கேன் : அபார் இண்டஸ்ட்ரீஸ்!

சாதாரண மற்றும் 1,200 கிலோவாட் வரையிலான அதிகத் திறன்கொண்ட கண்டக்டர்கள் தயாரிப்பில் முன்னணி யில் உள்ளது இந்த நிறுவனம். மிக நீண்ட அனுபவத்தை இந்த நிறுவனம் கொண்டிருப்பதால், இது வியாபார ரீதியாக மிகவும் உதவும். வெளிநாட்டின் மிகச் சிறந்த நிறுவனங்களுடன் தொழில்நுட்பத்துக்கான கூட்டணியை அமைத்துள்ளது. புதிதாக, அமெரிக்க நிறுவனமான சிடிசி என்ற நிறுவ னத்துடன் டெக்னாலஜி கூட்டணி அமைத்து மிக உயரிய தரம் வாய்ந்த மின்கடத்திகளை உற்பத்தி செய்ய ஆரம்பித்துள்ளது. இந்தப் புதிய தயாரிப்புகள் ஏற்கெனவே பவர்கிரீட் கார்ப்பரேஷனால் அங்கீகரிக்கப்பட்டு விட்டது. இந்தத் துறையில் ஏறக்குறைய 40 நாடுகளில் தொழில் செய்துவருவதால் அபார் இண்டஸ்ட்ரீஸ் உலகளாவிய போட்டியை எதிர்கொள்ளவும் தெரிந்து வைத்துள்ளது.

டிரான்ஸ்ஃபார்மர் ஆயில் பிசினஸில், இந்த நிறுவனம் 132 கிலோவாட்டில் இருந்து 800 கிலோவாட் வரையிலான டிரான்ஸ்ஃபார்மர்களுக்கு ஆயில் சப்ளை செய்கிறது. மொத்த ஆயில் விற்பனையில் பவர் டிரான்ஸ்ஃபார்மர் களுக்கானது 60 சதவிகித அளவிலும், டிஸ்ட்ரிப்யூட்டர் டிரான்ஸ்ஃபார்மர் களுக்கான ஆயில் 40 சதவிகிதமும் ஆகும். டிரான்ஸ்ஃபார்மர் ஆயில்களில் ஏறக்குறைய 300 வகை உள்ளது. இந்த அத்தனைவகை ஆயிலை சப்ளை செய்வதில் தன்னிகரற்று திகழ்வதால், இந்த நிறுவனம் அதனிடமிருந்து ஆயிலை வாங்கும் நிறுவனங்களுக்கு உற்றதொரு தோழனாய்த் திகழ்கிறது.

  ரிஸ்க் ஏதாவது உண்டா?

இந்தத் துறை நாட்டின் பொருளாதார வளர்ச்சியை முழுவதுமாக நம்பி செயல்படும் துறையாகும். எனவே, அந்த ரிஸ்க் பெரியதாக இருக்கிறது. மேலும், பெரும்பான்மையான வியாபாரம் அரசாங்க கான்ட்ராக்ட்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கான கான்ட்ராக்ட்கள் மூலம் வருவது. இந்தவகை கான்ட்ராக்ட்கள் டெண்டரின் மூலம் வியாபாரத்தைக் கொண்டுவருவதால், விலையை நிர்ணயம் செய்வது கடினமான விஷயம். போட்டி அதிகரித்தால் சிலசமயம் லாபத்தைக் குறைக்கவோ அல்லது இழக்கவோ நேரிடும். லாபத்தை நிலைநிறுத்த நினைத்தால் ஆர்டர் வரத்து குறைந்து உற்பத்தித்திறனில் குறைவாகச் செயல்பட்டு அதற்குண்டான செலவினங்களைச் சந்திக்க நேரிடும்.

கம்பெனி ஸ்கேன் : அபார் இண்டஸ்ட்ரீஸ்!

ரிஸ்க்குகள் குறிப்பிடும்படி இருந்தாலும் நிறுவனத்தின் நீண்ட காலத் தொழில் அனுபவத்தையும் தனியார் மற்றும் அரசு நிறுவனங்களின் மத்தியில் பெற்றிருக்கும் நன்மதிப்பை வைத்தும் இந்த நிறுவனம் வியாபார ரீதியாகப் பெரிய சரிவுகளைச் சந்திக்கும் வாய்ப்புகள் குறைவு என்றே சொல்லலாம். இதனாலேயே, இந்த நிறுவனத்தின் பங்குகளை முதலீட்டுக்காக டிராக் செய்து நல்லதொரு கரெக்‌ஷன் வரும்போது நீண்ட கால முதலீட்டுக்காக சிறிய அளவில் முதலீடு செய்யலாம்.

- நாணயம் டீம்.

(குறிப்பு: இந்தப் பகுதி இன்றைய விலையிலேயே வாங்க வேண்டிய பங்கு பரிந்துரை பகுதி அல்ல. இதில் சொல்லப்பட்டுள்ள பங்குகளை வாங்குவது முதலீட்டாளர்களின்  தனிப்பட்ட  முடிவாகும்)