Published:Updated:

பேயர் கிராப் சயின்ஸ்!

பேயர் கிராப் சயின்ஸ்!

பிரீமியம் ஸ்டோரி

கம்பெனி ஸ்கேன்

இந்த வாரம் நாம் ஸ்கேன் செய்யப்போகும் கம்பெனி, பேயர் கிராப் சயின்ஸ் லிமிடெட். ஜெர்மனியில் இருக்கும் பேயர் கிராப் சயின்ஸின் தாய் நிறுவனமான பேயர் உலக அளவில் 40 பில்லியன் யூரோ அளவிலான விற்பனையைச் செய்யும் ஒரு நிறுவனம். உலக அளவில் 289 துணை நிறுவனங்களைக் கொண்டுள்ள இந்த நிறுவனம், ஏறக்குறைய 1.13 லட்சம் பணியாளர்களைக் கொண்டு செயல்பட்டு வருகிறது.
 

1863-ம் ஆண்டு சாய விற்பனை பிரதிநிதியான பெர்ட்ரிக் பேயர், தன் நண்பருடன் சேர்ந்து ஆரம்பித்தது இந்த நிறுவனம். இந்தக் குழுமம் மனிதர்கள் உடல்நலம் பேணல், பயிர்கள் பாதுகாப்பு அறிவியல் மற்றும் மூலக்கூறு அறிவியல் (மெட்டீரியல் சயின்ஸ்) என்ற மூன்று துறைகளில் செயல்பட்டு வருகிறது. உலகளவில் தற்சமயம் மூன்று பில்லியன் யூரோவை (சுமார் விற்பனை அளவில் 7 - 8% வரையிலான தொகை) தனது ஆராய்ச்சி மற்றும் விரிவாக்கத்துக்காக செலவிடுகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை, 1896-ல் இருந்தே இந்த நிறுவனம் ஜெர்மனி நிறுவனத்தின் துணை நிறுவனமாகச் செயல்பட்டு வருகிறது.

பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட பேயர் கிராப் சயின்ஸ் நிறுவனம் பேயர் குழுமம் இந்தியாவில் செய்துவரும் அக்ரோ கெமிக்கல் (விவசாயம் சம்பந்தப் பட்ட ரசாயனங்கள்) வியாபாரத்தையும், பூச்சிக்கொல்லி மருந்து வியாபாரத்தை யும், வயல்களில் விதைக்கப்படும் ஹைபிரீட் (ஒட்டு/கலப்பு) விதைகள் வியாபாரத்தையும் செய்துவருகிறது.

பேயர் கிராப் சயின்ஸ்!

தொழில் எப்படி?

இந்திய அக்ரோ கெமிக்கல் சந்தையின் அளவு சுமார் 15,000 கோடி ரூபாயாகும். இந்தத் துறை ஆண்டொன்றுக்கு சுமார் 7 - 9 சதவிகித அளவிலான வளர்ச்சியைக் கண்டு வருகிறது. பருவ மழை பொழிதலின் அளவை அடிப்படையாகக் கொண்டே இந்தத் துறையின் வளர்ச்சி இருப்பதால், அதற்கேற்றாற்போல் விகிதாசார மாறுதல்களைக் கொண்டிருக்கிறது. உதாரணத்துக்கு, 2014 நிதியாண்டில் இந்தச் சந்தையின் வியாபார அளவு சுமார் 20% வளர்ச்சியைக் கொண்டிருந்தது. ஆனால், 2015 நிதி ஆண்டில் பருவமழை பொய்த்துப் போனால், ஒற்றை இலக்க வளர்ச்சியைத் தாண்ட வாய்ப்பில்லை என்கின்றனர் வல்லுநர்கள்.

கம்பெனி எப்படி?

இந்த நிறுவனம் சுமார் 15%  பங்களிப்பை கொண்டு மார்க்கெட் லீடராகத் திகழ்கிறது. பூச்சிக்கொல்லி மருந்துகள் மற்றும் காளான் கொல்லி மருந்துகள் என்ற இரண்டு பிரிவிலும் வியாபாரத்தினை அதிகமாகச் செய்து வரும் இந்த நிறுவனம், களைக்கொல்லி மருந்து வகைகளில் இதுவரை சற்று பின்தங்கியுள்ளது. இந்தத் துறையிலும் சிறப்பாகச் செயல்படுவதற்கான எல்லா முயற்சிகளையும் எடுத்து வருகிறது.
 

பேயர் கிராப் சயின்ஸ்!

இந்நிறுவனம் அதன் தாய் நிறுவனமும் துணை நிறுவனங்களும் தயாரிக்கும் பொருட்களையே பெரும்பாலும் மார்க்கெட்டிங் மற்றும் டிஸ்ட்ரிப்யூஷன் செய்து வருகிறது. அக்ரோ கெமிக்கல்களைப் பொறுத்தவரை, அந்நிய நாட்டில் இருக்கும் தனது தாய் நிறுவனத்திடம் இருந்து இறக்குமதி செய்து டிஸ்ட்ரிப்யூட்டர்களுக்கு விற்கிறது. அல்லது இறக்குமதி செய்த அந்த கெமிக்கல்களை ஃபார்முலேஷன் களாக மாற்றி ஏனைய மருந்து தயாரிப்பாளர்களுக்கு சப்ளை செய்கிறது. காலப்போக்கில் ஆய்வு மற்றும் விரிவாக்கத்துக்கான முயற்சி களை மட்டுமே தன்வசம் வைத்துக் கொண்டு உற்பத்தியை கான்ட்ராக்ட் தயாரிப்பாளர்களிடம் விட்டுவிடவே இந்த நிறுவனம் உத்தேசித்து வருவதைப் போன்ற சூழல் நிலவுகிறது.

இதேபோல் விதைகள் வியாபாரத்தி லும் இந்த நிறுவனம் அதன் குரூப் நிறுவனமான பேயர் பயோ சயின்ஸ் நிறுவனத்தின் தயாரிப்புகளை விநியோகித்து  வருகிறது. விதைகள் கண்டுபிடிப்பில் பேயர் பயோ சயின்ஸ் நிறுவனம் முழுமுச்சாக ஆராய்ச்சிகளைச் செய்துவருகிறது. பயிர்களுக்கான மருந்துகள் மற்றும் மனிதர்களுக்கான மருந்துகள் தயாரிப்புத் துறையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு என்பதுதான் பெரிய அளவிலான செலவினத்தை உண்டாக்கும் விஷயமாகும். அதேபோல் கெமிக்கல்களை உற்பத்தி செய்வதற்கான தொழிற்சாலைகளை நிறுவுவதும் பெறுமளவில் பணம் முடங்கும் விஷயமாகும்.

இந்திய பங்குச் சந்தையில் பட்டியலாகி இருக்கும் இந்த நிறுவனத்துக்கு இந்த இரண்டு இடைஞ்சல்களுமே கிடையாது. இந்த நிறுவனத்தின் லாபமானது, விநியோகம் மற்றும் விற்பனைக்கான லாபத்தை மட்டுமே காட்டுவதாக இருக்கிறது. பெரும் முதலீடுகள் தேவையில்லாத தொழிலில் இருப்பதால், லாபம் மற்றும் ரிட்டர்ன் ரேஷியோக்கள் மிகவும் நன்றாகவே இருக்கின்றன எனலாம்.

பேயர் கிராப் சயின்ஸ்!

இந்த நிறுவனத்தின் தாய் நிறுவனம் உலகளாவிய பிசினஸில் இருப்பதால், அதைக் கருத்தில் கொண்டு ஆர் அண்ட் டி முதலீடுகளைச் செய்கிறது. உலகளாவிய வியாபாரத்துக்காகச் செய்யப்படும் ஆர் அண்ட் டி  நல்லதொரு புதுமைகளை அனைத்து தயாரிப்புகளிலும் செய்வதற்கு உதவுவதாக இருக்கிறது. அக்ரோ கெமிக்கல் சந்தையில் மிகவும் சிறந்ததொரு பிராண்ட் ரீகால் கம்பெனியாகத் திகழ்கிறது இந்த நிறுவனம். அக்ரோகெமிக்கல் டீலர்கள் மத்தியில் நடத்தப்படும் மார்க்கெட்டிங் ஆய்வுகள் இதன் தயாரிப்புகளின்  பிராண்டையும் தங்களுடைய முதல் விருப்பமாகச்் சொல்வது இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளின் தரத்தையும் உன்னதத்தையும் சொல்வதாக அமைகிறது.

விதை விற்பனையை மேம்படுத்த இந்த நிறுவனம் ஆயிரக்கணக்கான விளக்கக் கூட்டங்களை நடத்தி, அது மார்க்கெட்டிங் செய்யும் விதைகளை விற்பனை செய்து வருகிறது. இதுவும் தவிர, விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்க ‘ஃபுட் செயின் பார்ட்னர்ஷிப்’ என்ற முறையை அறிமுகப்படுத்தி, அதன்மூலம் ஒரு வருடத்தில் 31 பார்ட்னர்ஷிப் நிலைகளை 140 ஊர்களில் செயல்படுத்தியதன் மூலம் 62,000 ஹெக்டேர் பரப்பளவையும் ஏறக்குறைய 79,000 விவசாயிகளையும் பலனடையச் செய்துள்ளது. 

பேயர் கிராப் சயின்ஸ்!

‘பேயர் குரோப்ரோ’ என்ற திட்டத்தின் கீழ் நெல் நாற்றுக்களை விவசாயிகளுக்குக் கொடுத்து நடவு செய்வதற்கு மெஷின்களையும் அறிமுகப் படுத்தியதன் மூலம் வேலைக்கு ஆள் கிடைப்பதில் இருக்கும் தட்டுப்பாட்டை யும் களைய முயல்கிறது. இந்தத் திட்டத்தின் மூலம் நல்லதொரு விற்பனை வளர்ச்சியை அடைய முடியும் என்பதைக் கண்டறிந்த இந்த நிறுவனத்தின் நிர்வாகம் இதை எல்லா நாடுகளிலும் அறிமுகப்படுத்துவதில் முனைப்புடன் இருக்கிறது. உதாரணத்துக்கு, தென் கொரியாவில் நெல் சாகுபடி முழுக்க முழுக்க இயந்திரங்களைக் கொண்டு நாற்று நடுவதன் மூலமே நடைபெற்று வருகிறது.

அதேபோல், விவசாயிகள் குறித்த தீவிரமான புள்ளிவிவரங்களை தயார் செய்து வைத்துள்ளது. இந்த நிறுவனம், சுமார் 30 லட்சம் விவசாயிகளுடைய தகவல்களைத் தற்சமயம் கைவசம் வைத்துள்ளது. அகில இந்திய ரீதியாக 3,000 டிஸ்ட்ரிப்யூட்டர்கள், 60,000 டீலர்கள் எனப் பெரியதொரு நெட்வொர்க் கட்டுமானத்தை வைத்துள்ளது இந்த நிறுவனம்.

ஏன் முதலீடு செய்யலாம்?

கடந்த ஐந்து ஆண்டுகளில் சுமார் 18 சதவிகித வளர்ச்சியைக் கண்டு வருகிறது இந்த நிறுவனத்தின்  விற்பனை. இதே போன்ற வளர்ச்சியை எதிர்வரும் காலத்திலும் இந்த நிறுவனம் பெறும் என்றே எதிர்பார்க்கும் அளவுக்கு அதன் திட்டமிடலும் செயல்பாடுகளும் இருக்கின்றன. இதற்கு இரண்டு காரணங்களைச் சொல்லலாம். ஒன்று, தொடர்ந்து நாட்டில் இருந்துவரும் விவசாயப் பொருட்களின் உற்பத்தி அதிகரிப்பு மற்றும் விலை ஏற்றம். உலகளாவிய அளவில் ஓர் ஒப்பீட்டைச் செய்தால், இந்தியாவில் அக்ரோ கெமிக்கல்கள் உபயோகம் என்பது உலக சராசரி அளவில் மூன்றில் ஒரு பங்காக மட்டுமே இருக்கிறது. எனவே, வேகமான வளர்ச்சி காணும் வாய்ப்பு உண்டு. இந்த நிறுவனம்  ஏற்கெனவே மார்க்கெட்டிங் மற்றும் டிஷ்ட்ரிப்யூஷன் நெட்வொர்க்கை நல்லதொரு நிலையில் வைத்திருப்பதால், விற்பனையை அதிகரிப்பது சுலபத்தில் நடந்துவிடும் வாய்ப்புள்ளது.

பேயர் கிராப் சயின்ஸ்!

ரிஸ்க்குகள் ஏதும் உண்டா?

உற்பத்தி எதையும் செய்யாமல் டிஸ்ட்ரிப்யூஷன் மற்றும் மார்க்கெட்டிங் வருமானத்தையே கொண்டிருப்பதால், லாபத்தின் அளவு உற்பத்தி செய்யும் நிறுவனங்களைவிட சற்றே குறைவாக இருக்கிறது. பருவமழையைச் சார்ந்தே இந்த நிறுவனத்தின் வியாபாரத்தின் அளவு இருக்கும். பருவநிலை பெருமளவில் விவசாயத்துக்கு உதவாத வகையில் இருந்தால், லாபத்தின் அளவு குறையலாம். பெரிய அளவிலான முதலீட்டாளருடன் தொடர்புகள் இல்லாத நிறுவனமாக இருப்பதால், பிசினஸ் ஸ்ட்ராடஜிகள் வெளியே தெரியும் வாய்ப்புகள் குறைவாகவே இருக்கிறது. விவசாயத் துறையில் ஏற்படும் பெரிய அளவிலான மாறுதல் கள், அக்ரோகெமிக்கல் துறைக்கு அரசாங்க ரீதியான கட்டுப்பாடுகளைக் கொண்டுவரக்கூடும்.

ரிஸ்க்குகள் இருந்தபோதிலும் நல்ல பல பிசினஸ் ஸ்ட்ராடஜிகளை வகுத்து வைத்துக்கொண்டு செயல்படும் இந்த நிறுவனத்தின் பங்குகள் விலை இறங்கும் போது நீண்ட நாள் முதலீட்டுக்காக முதலீட்டாளர்கள் வாங்கிப்போடலாம்.

- நாணயம் ஸ்கேனர்.

 (குறிப்பு: இந்தப் பகுதி இன்றைய விலையிலேயே வாங்க வேண்டிய பங்கு பரிந்துரை பகுதி அல்ல. இதில் சொல்லப்பட்டுள்ள பங்குகளை வாங்குவது முதலீட்டாளர்களின் தனிப்பட்ட முடிவாகும்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு