நடப்பு
Published:Updated:

கம்பெனி ஸ்கேன்: கேன்ஃபின் ஹோம்ஸ்!

கம்பெனி ஸ்கேன்: கேன்ஃபின் ஹோம்ஸ்!

இந்த வாரம் நாம் இந்தப் பகுதியில் அலசப்போகிற நிறுவனம் கனரா வங்கி நிர்மாணித்த வீட்டுவசதி கடன் நிறுவனமான கேன்ஃபின் ஹோம்ஸ் என்ற கம்பெனியைத்தான்.

1987-ம் வருடத்தை உலக வீடில்லாத வர்கள் வருடமாக அறிவித்ததைத் தொடர்ந்து கனரா வங்கி தானும் சாமானிய னுக்கு வீட்டுவசதி செய்து கொடுப்பதில் பெரிய அளவில் பங்கெடுக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் ஹெச்டிஎஃப்சி மற்றும் யுடிஐ (தற்சமயம் இந்த நிறுவனம் செயல்பாட்டில் இல்லை) நிறுவனங் களுடன் சேர்ந்து இந்த நிறுவனத்தை ஆரம்பித்தது. இந்தியாவில் வங்கியால் நிறுவப்பட்ட முதல் வீட்டுவசதிக் கடன் நிறுவனம் இது என்ற பெருமையையும் கொண்டது. 26 வருட அனுபவத்துடன்   தற்சமயம் 15 மாநிலங்களில் ஏறக்குறைய 107 கிளைகளுடன் செயல்படுகிறது.

 தொழில் எப்படி?

வீடு என்பது ஒவ்வொரு மனிதனுடைய அத்தியாவசிய தேவையாக இருக்கிறது. வாங்கும் திறன் அதிகரிக்கும்போது அத்தியாவசியத் தேவையில் நிறையப் புதுமைகளையும் நூதனங்களையும் செய்துகொள்ள மனிதன் ஆசைப்படுவது இயல்பே.

கம்பெனி ஸ்கேன்: கேன்ஃபின் ஹோம்ஸ்!

 கடந்த சில வருடங்களில் பொருளாதாரம் சந்தித்துவரும் மந்தநிலை யினால் வீடு மற்றும் வீட்டுமனைகளின் விலை புதிய அளவில் பெரிய ஏற்றத்தைச் சந்திக்காமலும், அதேசமயம் பெரிய அளவில் இறங்காமலும் இருக்கிறது.

இந்த போக்கு வீடு வாங்க முயற்சிப்பவர்களைக் கொஞ்சம் சிந்திக்க வைக்கும் என்றாலும் புதிய அரசாங்கம் பதவியேற்றபின் எடுத்து வரும் நடவடிக்கைகளினால் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு இந்தத் துறையில் வளர்ச்சிக்கு வழி வகுப்பதாக இருக்கும்.  உள்கட்டமைப்பு மற்றும் உற்பத்தித் துறையில் அரசாங்கம் தனது கவனத்தை அதிகப்படுத்தியிருப்பதால் இந்தத் துறை யில் அதிகரிக்கும் வேலைவாய்ப்புகளும் வீட்டுக் கடன் துறைக்கு நல்லதொரு வளர்ச்சியைத் தரும் வகையில் இருக்கும்.  அகில இந்திய ரீதியாக, ஏறக்குறைய ஏழு லட்சத்துக்கும் மேற்பட்ட கட்டிமுடிக்கப் பட்ட ஃப்ளாட்கள் விற்பனையாகாமல் இருக்கிறது என்பது கவனிக்க வேண்டிய விஷயம்.

நிலுவையில் இருக்கும் முடிக்கப் பட்ட கட்டடங்கள், விற்று முடிக்கப்பட ஏறக்குறைய 30 மாதங்களுக்கும் மேலாக லாம் என்கின்றனர்.

வீட்டுவசதிக் கடன் நிறுவனங்கள் 2012-13ம் நிதியாண்டில் ஏறக்குறைய 24 சதவிகித வளர்ச்சியைக் கண்டது. அதே சமயம், 2013-14ம் நிதியாண்டில் வளர்ச்சி குறைந்து ஏறக்குறைய 19 சதவிகித அளவே வளர்ச்சியைச் சந்தித்து இருந்தது.

வீட்டுவசதிக் கடன் நிறுவனங்களைப் பெரிய அளவில் பாதிக்கும் மற்றொரு விஷயம், வட்டி விகிதம். கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்துவந்த பணவீக்கத் தினால் ஏற்றம் கண்டுவந்த வட்டி விகிதம், இந்தத் தொழிலில் வளர்ச்சி குறைந்ததற்கு மற்றுமொரு காரணியாக இருந்தது. ரிசர்வ் வங்கி தனது தொடர் முயற்சியினால் பண வீக்கத்தை 6 சதவிகிதத்துக்குக் கீழ்  வைத்திருக்க முயன்று வருகிறது. எனவே, வட்டி விகிதங்களும் அடுத்த சில ஆண்டு களுக்குப் பெரிய அளவிலான ஏற்றத்தைக் காணாது என்று நம்பலாம்.

புதிய வீடுகளுக்கான கடன் வழங்குவது தவிர, அசையாதச் சொத்துகளுக்கு எதிரான கடன் (Loan against property) என்ற வியாபாரத்திலும் வாய்ப்புகள் இந்தியாவில் இருக்கவே செய்கிறது. இந்தவகை கடன் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருக்கும் வீடுகளின் மதிப்பில் ஏறக்குறைய 70 சதவிகித அளவில் இருக்கிறது. இந்தியாவிலோ இந்தவகை கடன்களின் மதிப்பு வீடுகளின் மதிப்பில் 10  சதவிகித அளவிலேயே இருக்கிறது. எனவே, இந்தவகை கடன்களிலும் வியாபாரத்துக்கான வாய்ப்புகள் இருக்கவே செய்கிறது எனலாம்.

 கம்பெனி எப்படி?

நீண்ட காலத்துக்கான டெபாசிட் பெறுகிற வீட்டுவசதிக் கடன் நிறுவனம் என்ற பிரிவின் கீழ் செயல்பட்டு வருகிறது இந்த நிறுவனம். அகில இந்திய ரீதியில் வியாபாரத்தை எதிர்நோக்குகிறோம் என்று சொல்லி 107 கிளைகளை 15 மாநிலங் களில் கொண்டிருக்கும்போதும் இது தென் இந்தியாவை நம்பி பெரும்பான்மையான அளவில் தொழில் செய்யும் நிறுவனம் எனலாம்.

கம்பெனி ஸ்கேன்: கேன்ஃபின் ஹோம்ஸ்!

30 சதவிகித அளவே தென் இந்திய மாநிலங்களைத் தவிர்த்து ஏனையை இடங் களில் இருந்து கிடைக்கும் வியாபாரம் ஆகும். இந்த நிறுவனத்திடம் ஏற்கெனவே கடன் வாங்கியிருப்பவர்களில் ஏறக்குறைய 85 சதவிகிதத்துக்கு மேல் மாதாந்திர சம்பளக்காரர்கள். இந்த அளவில் ஏறக்குறைய 50 சதவிகிதக் கடனாளிகள் அரசு அலுவலர்கள். மேலும், இந்த நிறுவனம் கடன் கொடுத்த அளவு, வீடுகளின் சந்தை மதிப்பில் சராசரியாக 75 சதவிகிதமாகும்.

இந்தவகையிலான கன்சர்வேட்டிவ் அப்ரோச்சுடன் செயல்பட்டுவரும் இந்த நிறுவனம் வாராக்கடனை மிகவும் குறைவான அளவிலேயே கொண்டி ருப்பதில் ஆச்சர்யம் ஏதுமில்லை இல்லையா? தொடர்ந்து வாராக்கடன் சதவிகிதத்தைக் குறைத்துக்கொண்டே வந்துள்ள இந்த நிறுவனம் மார்ச் 2014-ல் முடிந்த நிதியாண்டில் என்பிஏ ஏறக்குறைய 0.2 சதவிகித அளவே வைத்துள்ளது. கடந்த ஐந்து வருடங் களாகவே என்பிஏ-வின் அளவு ஏறக்குறைய பூஜ்ஜியத்துக்கு அருகிலேயே இருந்து வருகிறது என்பது ஒரு தனிச் சிறப்பாகும்.

கம்பெனி ஸ்கேன்: கேன்ஃபின் ஹோம்ஸ்!

2011 நிதியாண்டு இறுதியில் ஏறக்குறைய 41 கிளைகளைக் கொண்டி ருந்த இந்த நிறுவனம் தற்போது 107 கிளைகளைக் கொண்டு செயல்பட்டு வருகிறது. புதியதாக ஆரம்பிக்கப்படும் கிளைகள் மிகவும் குறுகிய காலத்திலேயே லாபம் ஈட்ட ஆரம்பித்துவிடுவது இந்த நிறுவனத்தின் தனிச் சிறப்பாகும்.

ஆறு மாதத்திலிருந்து ஒரு வருடத்துக்குள் புதிய கிளைகள் லாபம் பார்க்கத் தொடங்குவதன் ரகசியம் எது என்று பார்த்தால், கடன் கேட்டுவரும் மனுவை இறுதியாக்க இந்த நிறுவனம் எடுத்துக்கொள்ளும் அதிகபட்ச நேரம் 7 நாட்கள்தான். நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டு நான்கு ஆண்டு களிலிருந்தே டிவிடெண்ட்டை தொடர்ந்து தந்து வருகிறது என்பதையும் முதலீட்டாளர்கள் கருத்தில்கொள்ள வேண்டும்.


 
ரிஸ்க் மற்றும் போட்டி ஏதும் உண்டா?

தற்போதுள்ள சூழ்நிலையில் வங்கிகளே  போட்டி போட்டுக்கொண்டு வீட்டுக் கடனை வழங்கி வருகின்றன. மிகவும் கன்சர்வேட்டிவ்வான தொழில் குணம் கொண்ட இந்த நிறுவனத்தின் கடன் வழங்கும் நடைமுறைகள் ஏறக்குறைய வங்கிகள் அனுசரிக்கும் கடன் வழங்குமுறையை (டாக்குமென்டேஷன்) போலவே இருக்கிறது. இதனாலேயே வங்கிகள் இந்த நிறுவனத்துக்குக் கடும் போட்டியாக இருந்து வருகின்றன.

கம்பெனி ஸ்கேன்: கேன்ஃபின் ஹோம்ஸ்!

இந்த நிறுவனம் போன்ற சிறிய வீட்டுவசதிக் கடன் நிறுவனங்கள் சிறிய ஊர்களில் வசிக்கும் வாடிக்கைதாரர்களையே பெருமளவில் வியாபாரத்தை விரிவுபடுத்துவதற்காக எதிர்நோக்கு கிறது. கடந்த பல ஆண்டுகளாகவே பெருநகரங்களில் வசிப்பவர்களின் வருமானத்துக்கும் சிறு நகரங் களில் இருப்பவர்களின் வருமானத்துக்கும் இடையே இருக்கும் இடைவெளி பெரிதாகிக் கொண்டே வருகிறது. பொருளாதாரம் மீண்டும் சுணங்கத் தொடங்கினால், போனால் சிறு நகரங்களில் இருப்பவர்களின் வருமானம் இன்னமும் குறைய  வாய்ப்புள்ளது. அந்தச் சூழ்நிலையில் வியாபாரத்தை விருத்தி செய்வது என்பது மிகவும் கடினமாகி விடலாம்.

 இந்த நிறுவனம் வேகமான வளர்ச்சியை விரும்பி விரிவாக்கத்தைச் செய்ய ஆரம்பித்தால், என்பிஏயின் அளவு அதிகரிக்கும் வாய்ப்புகளும் உண்டு என்பதை முதலீட்டாளர்கள் நினைவில் கொள்ளவேண்டும். இதுவும்தவிர, எதிர்பாராத காரணங்களால் பொருளாதாரம் சுணங்கினால் அதுவும் இந்த நிறுவனத்தின் வியாபாரத்துக்குப்  பாதிப்பை கொண்டு வந்துவிடக்கூடும்.

கம்பெனி ஸ்கேன்: கேன்ஃபின் ஹோம்ஸ்!

ரிஸ்க்குகள் இருந்தபோதிலும் பழைய ட்ராக் ரெக்கார்டை வைத்துப்பார்த்தால், முதலீடு செய்வதற்கு நல்ல நிறுவனமாகவே கேன்ஃபின் ஹோம்ஸ் இருக்கிறது. இருப்பினும் கடந்த சில மாதங்களில் இதன் பங்குகள் கணிசமான விலை உயர்வைச் சந்தித்திருக்கின்றன என்பதையும் முதலீட்டாளர்கள் நினைவில் கொள்ளவேண்டும். இதனால் இந்த நிறுவனத்தின் பங்குகளை ட்ராக் செய்து சந்தையில் நல்லதொரு இறக்கம் வந்து இந்தப் பங்குகளின் விலையும் இறங்கும்போது மிகவும் குறைந்த எண்ணிக்கையில் நீண்ட கால முதலீட்டுக்காக வாங்கிப் போடலாம்.

- நாணயம் ஸ்கேனர்

(குறிப்பு: இந்தப் பகுதி இன்றைய விலையிலேயே வாங்க வேண்டிய பங்கு பரிந்துரை பகுதி அல்ல. இதில் சொல்லப்பட்டுள்ள  பங்குகளை வாங்குவது முதலீட்டாளர்களின் தனிப்பட்ட முடிவாகும்)