Published:Updated:

ஆல்கோ டிரேடிங்... பங்குச் சந்தை பகாசுரன்!

algo trading
பிரீமியம் ஸ்டோரி
News
algo trading

பங்குச் சந்தை

நீல் ஆம்ஸ்ட்ராங் எனும் தனிமனிதன் நிலவில் எடுத்துவைத்த ஒரு அடி, ஒட்டுமொத்த மனிதக்குலத்தின் அசுரப் பாய்ச்சல் என்று கூறுவார்கள். அப்படி மனிதக்குலம் எடுத்த இன்னொரு பாய்ச்சல் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence, சுருக்கமாக, AI). இன்று இதன் தாக்கம் நம் வாழ்வின் ஒவ்வோர் அங்கத்திலும் பிரதிபலிக் கிறது. எல்லாவிதமான உபகரணங்களிலும் இது நீக்கமற நிறைந்திருந்தாலும், அலெக்ஸா போன்ற அறிவுஜீவிகளில் பளிச்சென வெளிப்பட்டு நம்மைப் பிரமிப்பில் ஆழ்த்துகிறது.

ஆல்கோ டிரேடிங்

இவ்வளவும் செய்யும் ஏ.ஐ, பங்குச் சந்தையை மட்டும் விட்டு வைக்குமா என்ன? கற்கால மனிதனுக்குக் கிடைத்த வரம் நெருப்பு என்பது போல, ஸ்டாக் டிரேடிங்கிற்குக் கிடைத்த வரம் செயற்கை நுண்ணறிவு என்று சொல்லும் அளவுக்கு, அல்கோரித்மிக் டிரேடிங்மூலம் பங்குச் சந்தையை ஆளுகிறது ஏ.ஐ.

சுந்தரி ஜகதீசன்
சுந்தரி ஜகதீசன்

அது என்ன அல்கோரித்மிக் டிரேட்டிங் என்று கேட்கிறீர்களா? ஒரு சிறிய ஆனால், கடினமான கம்ப்யூட்டர் புரோகிராம்தான் அது. மனித உதவியின்றி, வெறும் கணக்குகளின் அடிப்படையில் பங்குகளை வாங்குகிறது, விற்கிறது – அதுவும் லட்சங்களில், கோடிகளில்! இதுதான் பங்குச் சந்தையின் ஆல்கோ டிரேடிங் எனப்படுகிறது.

தானாக வாங்கி, விற்பது

இதன் முழுவீச்சும் வெளிவந்தது 23.04.2013 அன்றுதான். ஒயிட் ஹவுஸில் பாம் வெடித்ததாகவும் ஒபாமா கவலைக்கிடம் என்றும் வெளியான பொய்ச் செய்தியால் சந்தைச் சரிந்தது. ஆனால், இந்தச் செய்தி பொய் என்று தெரியவந்ததுமே, நான்கே நிமிடங்களில் சந்தை நிமிர்ந்து மேலேறியது. அப்போதுதான் பங்குச் சந்தையை ஆளுவது தாங்களல்ல; இயந்திரங்கள் என்பது முதலீட்டாளர்களுக்கு உறைத்தது. அதன் அசுரவீச்சைக் கண்டு மிரண்டுபோன முதலீட்டாளர்களின்முன் ஓங்கி உலகளந்தது ஏ.ஐ தொழில்நுட்பம். அதன்பின் வந்ததெல்லாம் நாற்பது கால் பாய்ச்சல்தான். இன்று உலக அரங்கில் நடக்கும் பங்குச் சந்தை வியாபாரங்களில் 70% அளவு ஏ.ஐ-யால் நடத்தப்படுவதாகக் கூறப்படுகிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

யாருக்கு நன்மை?

நாம் உருவாக்கிய ஏ.ஐ-யைக் கண்டு நமக்கு ஏன் பயம்? அது நம் பாக்கெட்டையே பதம் பார்ப்பதால்தான். தனிமனித மூளையின் ஆற்றலுக்கு எல்லை உண்டு. ஆனால், ஏ.ஐ என்பது உலகத்தில் உள்ள தலைசிறந்த மூளைகளின் சாராம்சம். அதைத் தினமும் துடைத்து மெருகேற்றி, மேலும் வலுவேற்றும் வேலை நடந்துகொண்டே இருக்கிறது. மனித மூளையைப் போலவே, ஏ.ஐ-யும் கடந்த கால நிகழ்வுகளிலிருந்து பாடம் கற்கிறது; ரிஸ்க்கைக் குறைத்து லாபத்தை அதிகரிக்கிறது; முக்கியமாக, செய்திகளை அறிந்து நாம் செயலாற்றுவதற்குள், அது விரைந்து செயல்பட்டு, நம் லாபத்தைக் காலி செய்கிறது.

ஆல்கோ டிரேடிங்... பங்குச் சந்தை பகாசுரன்!

மேலும் குடும்பம், குழந்தை, வேலை, படிப்பு என்று எந்தப் பிரச்னையும் அதன் நேரத்தை விழுங்குவதில்லை. ஆகவே, அது களைப்படைவ தில்லை; ஆசை, பயம் போன்ற அதீத உணர்வு களுக்கு இடம் தருவதில்லை; தோல்வியைக் கண்டு துவளுவதும் இல்லை; வெற்றியை எண்ணி எக்காளமிடுவதும் இல்லை.

மனித மூளையைவிட இப்படிப் பல மடங்கு சக்தி வாய்ந்த இந்தச் செயற்கை நுண்ணறிவு, பங்குச் சந்தையிலும் லாபத்தை அதிக அளவில் அள்ளுகிறது. ஆனால், இதற்காகும் செலவும் அதிகம் என்பதால், கோல்ட்மேன் சாக்ஸ் போன்ற பெரும் நிறுவனங்கள், ஸ்டாக் டிரேடிங் கம்பனிகள், மியூச்சுவல் ஃபண்டுகள், ஹெட்ஜ் ஃபண்டுகள், சாவரின் ஃபண்டுகள், உயர் முதலீட்டாளர்கள் (HNIs) போன்றவர்களே இதன் பலனைப் பெற முடிகிறது.

நான்கு விதமான செயல்பாடு

பங்கு வியாபாரத்தில் ஏ.ஐ-யானது கீழ்க்காணும் முக்கியமான நான்கு செயல்பாடுகளை மேற்கொள்கிறது.

பேட்டர்னைக் கண்டறிதல்

நம்பமுடியாத அளவு சக்தி வாய்ந்த கம்ப்யூட்டர் கள் வாயிலாகச் செயல்படும் ஏ.ஐ, பேரருவியாகக் கொட்டும் தகவல்களைக் கண்ணிமைக்கும் நேரத்தில் படித்துப் புரிந்துகொள்கிறது. உதாரணமாக நியூயார்க் ஸ்டாக் எக்ஸ்சேஞ்சின் முதல் ஒரு மணி நேரத்தில் இது 30 கோடித் தகவல்களை ஆராய்கிறது. மனித மூளையைவிட முன்னதாகவே செயல்பட்டு, சந்தையில் உருவாகும் பேட்டர்ன்களைக் கண்டறிகிறது.

மனித உணர்வுகளை எடைபோட்டு வரப்போகும் டிரேடிங்கைக் கணித்தல்

ஏ.ஐ-யானது தினசரி தலைப்புச் செய்திகள் / ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சோஷியல் மீடியாக்களில் வரும் கமென்ட்டுகள் / பிளாக், வீடியோக்கள் போன்றவற்றில் வெளியாகும் உணர்வுகள் இவற்றைக் கண்காணிக்கிறது. அதன் உதவியால் இன்ன பங்கு, இப்படி ஏறும் அல்லது இறங்கும் என்றும் மற்ற டிரேடர்களின் நகர்வுகள் இப்படி இருக்கும் என்றும் துல்லியமாகக் கணிக்கிறது.

டிரேடிங்கில் அசுர வேகம்

இன்றைய தேதியில் பங்குச் சந்தையில் ஒரு மில்லி செகண்ட்கூட முக்கியத்துவம் வாய்ந்தது; ‘டைம் இஸ் மணி’ என்பது பங்குச் சந்தையில் நூற்றுக்கு நூறு நிஜம். இங்கு புரோக்கர்களை அழைத்து ஆர்டர் தருவதும் ஆப்கள் மூலம் ஆர்டர் தருவதும்தான் வழக்கம். இவை அனைத்தும் நேரம் பிடிக்கும் விஷயங்கள். ஆனால், ஏ.ஐ வழிநடத்தும் கம்ப்யூட்டர்கள் தானியங்கியாகச் செயல்படுவதால், மற்ற ஆர்டர் களை எளிதில் முந்திச் சென்று வெல்கின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தன்னைத்தானே மேம்படுத்திக்கொள்வது

மார்கன் ஸ்டான்லி போன்ற கம்பெனிகள் உபயோகப்படுத்தும் கம்ப்யூட்டர்கள் தாம் செய்த பிழைகளைக் கண்டறிந்து, மறுபடி அந்தப் பிழைகள் நேராதபடிக்கு திருத்திக்கொள்ள வல்லவை. ஃபைனான்ஷியல் அட்வைசர்கள் செய்யும் பிழைகளையும் சுட்டிக்காட்ட வல்லவை.

இப்படியான ஜீபூம்பாக்களைப் பணியில் ஈடுபடுத்தும் அமெரிக்க கம்பெனிகள், 2018-ன் முதல் காலாண்டில் (எஸ் அண்டு பி-யின் சந்தை லாபம் 1% சரிந்தபோதும்), 16% லாபத்தை அள்ளின. கலிஃபோர்னியாவைச் சேர்ந்த ஒரு கம்பெனியில் ஏ.ஐ வழிநடத்தும் கம்ப்யூட்டர்கள், இரவில் ஆயிரக்கணக்கான கம்பெனிகள் பற்றி பகுப்பாய்வு களை நடத்தி ஃபண்டமென்டல், டெக்னிக்கல், மொமெண்டம் என்று எல்லா வகையான டிரேடர்களுக்கும் உகந்த சார்ட்டுகளைத் தயாரிக்கின்றன. மறுநாள் அதிகாலையில் தன்னைச் சார்ந்த முதலீட்டாளர்களுக்குச் சந்தையில் ஜெயிக்கும் உத்திகளையும் சொல்லி விடுகின்றன.

அள்ளித் தந்த ஆல்கோ

மெடால்லியன் ஃபண்ட் என்ற கம்பெனி, இத்தகைய கம்ப்யூட்டர்களைக் கையாளக்கூடிய 100 டேட்டா சயின்டிஸ்ட்டுகளை மாத்திரமே பணியில் அமர்த்தி, கடந்த 30 வருடங்களில் 30% வருட வருமானத்தை (CAGR) தன் வாடிக்கையாளர் களுக்கு ஈட்டியுள்ளது. (மன்னிக்கவும், 2005 முதல் இது புது வாடிக்கையாளர்களை ஏற்றுக் கொள்வதில்லை. எனவே, இதில் சேரும் ஆசை இருந்தால் மறந்துவிடுங்கள்.) ஆனால், கம்ப்யூட்டர் செய்த சிறிய தவற்றை அறிந்தும் தடுக்க முடியாது போனதால், மொத்த முதலும் முழுகிப்போன நைட் கேபிட்டல் போன்ற கம்பெனிகளும் உண்டு. எனவே, உஷாராக இருக்க வேண்டியது மிக அவசியம்.

இந்தியாவில் ஆல்கோ

இந்தியாவைப் பொறுத்தவரை, 37% ஃபைனான்ஷியல் கம்பெனிகள் ஏ.ஐ-யை உபயோகிக்கின்றன. பொதுவாக, பி.எம்.எஸ் எனப்படும் போர்ட்ஃபோலியோ சர்வீஸ் தரும் நிறுவனங்களுக்கு ஏ.ஐ இன்றியமையாதது. ஐ.டி.எஃப்.சி ஏ.எம்.சி நிறுவனம் ஏ.ஐ-யின் செயல்பாடு களை உபயோகிப்பதால், போர்ட்ஃபோலியோ வருமானம் அதிகரிப்பதாகத் தெரிவித்துள்ளது. ஆனாலும், இன்னும்கூட அதன் லகான் இருப்பது ஃபண்ட் மேனேஜர்களின் கையில்தான். ஏ.ஐ ஆராய்ந்து அளித்த யோசனைகளைக் கூர்மைப் படுத்தி, செயல்படுத்துவது அவர்கள்தான்.

பங்குச் சந்தையில் ஏ.ஐ-யின் செயல்பாடுகள் விரிவடைந்துகொண்டே போகின்றன. தனிமனிதர்களாக நாம் ஏ.ஐ.யின் பயன்களைப் பெறுவது கடினம். காரணம் அதற்காகும் அதீத செலவு. ஆனால், ஏ.ஐ.யைப் பயன்படுத்தும் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதன்மூலம் நாமும் இந்தப் பகாசுரன் பகிர்ந்தளிக்கும் லாபத்தில் பங்குபெற இயலும்.

ஆல்கோ டிரேடிங் பற்றிச் சாதாரண முதலீட்டாளர்கள் இப்போதைக்குக் கவலைப்பட வேண்டியதில்லை. அது நம்முடைய பங்குச் சந்தையில் வருவதில்லை இன்னும் சிலபல ஆண்டுகள் ஆகலாம். அதற்குப்பிறகு, பங்குச் சந்தையின் செயல்பாடுகளைப் பெரிய அளவில் நிர்ணயம் செய்யும் வேலையை இந்த பகாசுரன் செய்வான் என்பதே நிஜம்!