Published:Updated:

`கவனத்துடன் செயல்படுகிறோம்!'- பங்குதாரர்களுக்கு விப்ரோ தலைவர் அசிம் பிரேம்ஜியின் இறுதிக்கடிதம்!

தெ.சு.கவுதமன்

விப்ரோ நிறுவனத் தலைவர் அசிம் பிரேம்ஜி தன் பொறுப்பிலிருந்து விலகும் முன், இறுதியாக நிறுவனப் பங்குதாரர்களுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

அசிம் பிரேம்ஜி
அசிம் பிரேம்ஜி

இந்தியாவின் முன்னணி ஐ.டி. நிறுவனமான விப்ரோ நிறுவனத்தின் தலைவரான அசிம் பிரேம்ஜி ஜூலை 31-ம் தேதியிலிருந்து தனது தலைமைப் பொறுப்பிலிருந்து ஓய்வுபெறப் போகிறார். வெஜிடபிள் ஆயில் தயாரிப்பு நிறுவனமாகத் தொழில்துறையில் கால்பதித்தவர், தற்போது பல லட்சம் கோடி மதிப்புள்ள மிகப்பெரிய மென்பொருள் நிறுவனத்தை உருவாக்கியுள்ளார். தன் பொறுப்பிலிருந்து விலகும் முன் இறுதியாக தனது நிறுவனப் பங்குதாரர்களுக்கு விரிவான ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அதில் விப்ரோவின் தோற்றம், வளர்ச்சி, எதிர்காலம் குறித்து மனம்திறந்து பேசியிருக்கிறார்.

விப்ரோ
விப்ரோ

``50 ஆண்டுகளுக்கு முன் வெஜிடபிள் ஆயில் நிறுவனமாகத் தொடங்கிய விப்ரோ, ஐ.டி. நிறுவனமான பின் அந்தத் துறையில் மிகப்பெரிய மாற்றங்களை முன்னெடுக்கும் நிறுவனமாக உருவெடுத்துள்ளது. விப்ரோ நிறுவனம் வெற்றிகரமாகவும், நெறிமுறையோடும், சமூகப்பொறுப்புணர்வோடும் செயல்பட்டு வருகிறது. நம்மை நாமே புதுப்பித்துக்கொள்வதோடு புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்குவதிலும் முனைப்போடு தொடர்ந்து ஈடுபடுகிறோம். விப்ரோ ஊழியர்களின் கடும் உழைப்பு மற்றும் மதிப்புமிக்க செயல்பாடுகளால் இது சாத்தியமாகியிருக்கிறது.

இந்தப் பயணத்தில் தொடர்ச்சியாக வெற்றிபெறுவதற்கான சாத்தியக்கூறுகள்மீது கவனம் செலுத்துகிறோம். இந்த ஆண்டில் எங்களுடைய செயல்திட்டமானது டிஜிட்டல், கிளவுட், பொறியியல் சேவைகள் மற்றும் சைபர் செக்யூரிட்டி ஆகிய தொழில்நுட்பங்களை மையப்படுத்தியுள்ளது. நிறுவனத்தின் இயக்குநர் குழுவின் ஒப்புதலுக்குப்பின் இந்த நான்கு முக்கியத்துவம்வாய்ந்த தொழில்நுட்பங்களிலும் தீவிரமாகச் செயல்படவுள்ளோம். மேலும், டேட்டா சென்டர் வணிகத்திலிருந்து நாங்கள் விலகியுள்ளதால் எங்களது மூலதன வருவாய் அதிகரித்துள்ளது.

அசிம் பிரேம்ஜி
அசிம் பிரேம்ஜி

எங்கள் பங்குதாரர்களின் மதிப்பை உயர்த்துவதில் உறுதியாக உள்ளோம். எங்கள் நிறுவனத்தின் இபிஎஸ் மதிப்பு 18.6% அதிகரித்துள்ளது. கடந்த ஐந்தாண்டுகளில் இதுவே அதிகமான மதிப்பு. பங்குதாரர்களுக்கு டிவிடெண்டு, போனஸ் அளிப்பதிலும் கவனத்துடன் செயல்படுகிறோம். கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக வெற்றிகரமாக நிர்வகித்துவருகிறோம். என் ஓய்வுக்குப் பின்பும் இந்த வளர்ச்சிநிலை தொடரும். அதற்கான கட்டமைப்பு மிக வலுவாக உள்ளது'' எனக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.