Published:Updated:

ஒரே நாளில் ஓஹோ வருமானம்... பர்கர் கிங் ஐ.பி.ஓ கொடுத்த ஷாக்கிங் சர்ப்ரைஸ்! #BurgerKingIPO

பர்கர் கிங்
பர்கர் கிங்

ஐ.பி.ஒ.வில் பங்கு விற்பனை விலையைவிட 92% அதிகமான பிரீமியம் தொகைக்குப் பட்டியலிடப்பட்டதால், பர்கர் கிங் பங்கு வாங்கிய முதலீட்டாளர்கள் அனைவரும் சந்தோஷத்தில் இருக்கிறார்கள்!

உலகளவில் வர்த்தகம் செய்யும் பர்கர் கிங் நிறுவனத்தின் ஐ.பி.ஓ-வுக்கு இந்திய முதலீட்டாளர்கள் ஏகபோக வரவேற்பைக் கொடுத்திருக்கிறார்கள். கடந்த டிசம்பர் 2-ம் தேதி பர்கர் கிங் ஐ.பி.ஓ தொடங்கிய நிலையில், இன்று (14.12.2020) பங்குச் சந்தையில் பட்டியலிடப்படும் என்கிற எதிர்பார்ப்பு இருந்தது. எதிர்பார்த்ததைப் போலவே, மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தையில் பர்கர் கிங் ஐ.பி.ஓ பட்டியலிடப்பட்டது. ஆனால், ஐ.பி.ஓ-வில் பங்கு விற்பனை விலையைவிட 92% அதிகமான பிரீமியம் தொகைக்குப் பட்டியலிடப்பட்டதால், முதலீட்டாளர்கள் அனைவரும் சந்தோஷத்தில் இருக்கிறார்கள்.

பங்குச் சந்தை
பங்குச் சந்தை

ஐ.பி.ஓ வெளியீட்டின்போது இதன் ஒரு பங்கு விலை வெறும் ரூ.59 முதல் 60 ரூபாய் விலைக்கு விற்பனை செய்த நிலையில், இன்று 115.35 ரூபாய் விலைக்குப் பட்டியலிடப்பட்டு, சுமார் 92% லாபத்தை முதலீட்டாளர்களுக்குக் கொடுத்துள்ளது. இன்று மதியம் 2.10 மணி அளவில், ஒரு பங்கின் விலை 125% அதிகரித்து 135 ரூபாய்க்கு வர்த்தகமானது. இது பங்கு வெளியீட்டில் விற்பனை விலையைவிட 75 ரூபாய் அதிகமாகும்.

Vikatan

தனது வர்த்தக விரிவாக்கத்துக்காகவும், நடப்பு நிதி ஆண்டுக்குள் இந்தியாவில் பல கிளைகளைத் திறக்க வேண்டும் என்கிற நோக்கத்துடனும் பர்கர் கிங் இந்தியா நிறுவனம் தயாரானது. இந்த ஐ.பி.ஓ வெளியீட்டின் மூலம் 810 கோடி நிதியைத் திரட்ட வேண்டும் என்பதுதான் இந்த நிறுவனத்தின் இலக்கு. அந்த வகையில் பர்கர் கிங் நிறுவனம் சுமார் 13.5 கோடி பங்குகளை இந்த ஐ.பி.ஓ மூலம் விற்பனை செய்யத் திட்டமிட்டிருந்தது.

இதில் 7.5 கோடி பங்குகள் புதிய பங்கு வெளியீட்டின் மூலமும், பர்கர் கிங் பிராண்டின் புரொமோட்டர் நிறுவனமான க்யூ.எஸ்.ஆர் ஆசியா பி.டி.இ நிறுவனம் ஆறு கோடி பங்குகளைச் சலுகை விலையிலும் (ஆஃபர் ஃபார் சேல்) விற்பனை செய்ய திட்டமிட்டிருந்தது.

பர்கர் கிங் பங்கு விலை நிலவரம் - 2.10 மணி
பர்கர் கிங் பங்கு விலை நிலவரம் - 2.10 மணி

பர்கர் கிங் பங்குகள் இப்போது உச்சத்தில் வர்த்தகமாகி வருவதால், இந்த நிறுவனத்தின் திட்டம் முதல் நாளிலேயே வெற்றி அடைந்திருக்கிறது எனலாம்.

இன்றைய இளைய தலைமுறையினரின் பிடித்த பிரத்யேக உணவாக பர்கர் மாறியிருப்பதாலும், நுகர்வோர் பொருள்களுக்கு முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் ஆதரவு இருப்பதாலும் இந்த நிறுவனத்தின் பங்கு விற்பனை எதிர்வரும் காலங்களில் சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு