Election bannerElection banner
Published:Updated:

ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவின் போர்ட்ஃபோலியோ... என்னென்ன மாற்றங்கள் நடந்திருக்கின்றன?

ராகேஷ் ஜுன்ஜுன்வாலா
ராகேஷ் ஜுன்ஜுன்வாலா

ராகேஷ் ஜுன்ஜுன்வாலா கடந்த காலாண்டில் எடுத்துள்ள முக்கிய முதலீடு முடிவுகளை விரிவாகப் பார்க்கலாம்...

இந்தியாவின் முன்னணி பங்குச் சந்தை முதலீட்டாளரான ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவின் முதலீட்டு கலவை (Portfolio) ஒவ்வொரு காலாண்டிலும் எப்படி உள்ளது என்பது பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களால் எப்போதும் உற்று பார்க்கப்படும் விஷயமாகும். அதற்கு காரணம் ராகேஷ் முதலீட்டுக் கலவை கடந்த 30 வருடங்களாக பல மடங்கு உயர்ந்து வருவதே ஆகும். 1985-ம் ஆண்டு 5,000 ரூபாய் என்கின்ற அளவில் பங்குச் சந்தை முதலீட்டைத் தொடங்கிய ராகேஷின் இப்போதைய பங்குச் சந்தை மதிப்பு 16,000 கோடி ரூபாய்க்கு மேல். அதனால்தான் ராகேஷ் `இந்தியாவின் வாரன் பஃபட்' என்று அழைக்கப்படுகிறார்.

Bombay Stock Exchange (BSE)
Bombay Stock Exchange (BSE)
AP Photo

பங்குச் சந்தைக் கட்டுப்பாடு அமைப்பான செபி எந்த நிறுவனத்திலும் 1% அளவுக்கு மேல் தனி நபரோ, நிறுவனங்களோ முதலீடு செய்து இருந்தால் அதை ஒவ்வொரு காலாண்டிலும் தெரியப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. இதன் காரணமாக ராகேஷ் தனது முதலீட்டுக் கலவையை சென்ற வாரம் தெரியப்படுத்தியுள்ளார். ராகேஷ் தனது பெயரிலும், தன் மனைவி ரேகா பெயரிலும் சேர்ந்து முதலீடுகளைச் செய்து வருகிறார்.

இரண்டு பெயர்களின் முதல் எழுத்துகளைச் சேர்த்து Rare Enterprises என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தின் வாயிலாக ராகேஷ் மற்றும் ரேகா பல நிறுவனங்களில் முதலீடு செய்து வருகின்றனர்

அவர் கடந்த காலாண்டில் எடுத்துள்ள முக்கிய முதலீடு முடிவுகளை விரிவாகப் பார்க்கலாம்...

டைட்டன் கம்பெனி

இந்தப் பங்கு ராகேஷின் போர்ட்ஃபோலியோவில் பல ஆண்டுகளாக இருக்கும் ஒரு பங்காகும். டாடா குழுமத்தைச் சேர்ந்த இந்நிறுவனம் கைக்கடிகாரம், மூக்குக்கண்ணாடி மற்றும் பல அழகு சாதனப் பொருள்களைத் தயாரிக்கும் முன்னணி நிறுவனம் ஆகும். இந்த நிறுவனப் பங்குகளில் 22.5 லட்சம் பங்குகளை ராகேஷ் சென்ற காலாண்டில் விற்றுள்ளார். இதன் மூலம் டைட்டன் நிறுவனத்தில் அவரது பங்கு மூலதனம் 4.23 சதவிகிதத்தில் இருந்து 3.97% ஆக குறைந்துள்ளது. அவரிடம் இன்னும் 3.52 கோடி டைட்டன் பங்குகள் கையிருப்பில் உள்ளன. அவர் மனைவி ரேகா சென்ற காலாண்டில் எந்தப் பங்குகளையும் விற்காமல் டைட்டன் நிறுவனத்தின் 96.40 லட்சம் பங்குகளை வைத்து இருக்கிறார். இது டைட்டன் நிறுவனத்தில் 1.09% பங்கு மூலதனம் ஆகும். டைட்டன் நிறுவனப் பங்கு விலையில் கடந்த காலாண்டில் பெரிய மாறுதல் ஏற்படவில்லை.

Titan Company
Titan Company

வி.ஐ.பி இண்டஸ்ட்ரீஸ்

கொரோனா ஊரடங்கு காரணமாக சுற்றுலா மற்றும் பயணம் சார்ந்த நிறுவனங்கள் கடும் பாதிப்பை அடைந்துள்ளன. வி.ஐ.பி நிறுவனம் சூட்கேஸ் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாகும். இந்த நிறுவனம் பெரிதும் சுற்றுலா மற்றும் பயணங்களைச் சார்ந்து இருப்பதால் இந்த நிறுவனம் தொடர் சரிவில் உள்ளது.

ரேகா இந்த நிறுவனத்தின் 42.27 லட்சம் பங்குகளைச் சென்ற காலாண்டில் விற்றுள்ளார். இப்போது ரேகாவிடம் வி.ஐ.பி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 32,73,400 பங்குகள் மட்டுமே உள்ளன. செபி அமைப்பின் விதிமுறைகளின்படி ஒரு நிறுவனத்தின் 1 சதவிகித பங்குகளுக்கு மேல் வைத்து இருந்தால் மட்டும்தான் அதைத் தெரியப்படுத்த வேண்டும். அதனால், இந்த நிறுவனத்தில் ராகேஷ் பங்கு வைத்து இருக்கிறாரா என்று தெரியாத நிலை தற்போது உள்ளது. இந்த நிறுவனத்தின் பங்கு கடந்த காலாண்டின் தொடக்கத்திலிருந்து 8% குறைந்து தற்போதய நிலையில் 330 ரூபாய் என்கிற அளவில் வர்த்தகமாகி வருகிறது.

VIP Industries
VIP Industries

டாடா கம்யூனிகேஷன்ஸ்

இந்த நிறுவனப் பங்குகளில் 2.5 லட்சம் பங்குகளை ரேகா சென்ற காலாண்டில் விற்றுள்ளார். இதன் மூலம் டாடா கம்யூனிகேஷன் நிறுவனத்தில் அவரது பங்கு மூலதனம் 1.12 சதவிகிதத்தில் இருந்து 1.04% ஆக குறைந்துள்ளது.

கொரோனா கால கட்டம் மருத்துவத் துறைக்கான தேவைகளை அதிகரித்துள்ளது. ராகேஷ் மற்றும் ரேகா இருவருமே பன்னோக்கு மருத்துவமனையான ஃபோர்டிஸ் ஹெல்த் கேர் நிறுவனத்தில் அதிக முதலீடு செய்துள்ளனர். ராகேஷிடம் தற்போது போர்டிஸ் நிறுவனத்தில் 3.25 கோடி பங்குகள் உள்ளன. இது மொத்த பங்கு மூலதனத்தில் 4.31% ஆகும். ஃபோர்டிஸ் நிறுவனப் பங்குகள் சென்ற காலாண்டில் 30% வரை உயர்ந்துள்ளன.

மேலும் தான் இனி ஸ்டீல் மற்றும் கமாடிட்டி துறை சார்ந்த பங்குகளில் அதிக முதலீடு செய்ய இருப்பதாக ராகேஷ் கூறியுள்ளார். மேலும் இந்தியாவில் பொதுத்துறை வங்கிப் பங்குகள் கடந்த பல வருடங்களாகத் தொடர் சரிவை சந்தித்து வருகின்றன. அத்தகைய பொதுத்துறை வங்கி பங்குகள் மிக மலிவான விலையில் தற்போது கிடைப்பதாகக் கூறியுள்ளார். பொதுத்துறை வங்கிகள் இன்னும் சில ஆண்டுகளில் 5 முதல் 10 மடங்கு வரை விலை உயர அதிக வாய்ப்பு இருப்பதாகத் தெரிவித்துள்ளார். பேங்க் ஆஃப் பரோடா, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, கனரா வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி ஆகிய பெரும்பாலான பொதுத்துறை வங்கிகள் அதன் 2018 விலையோடு ஒப்பிட்டால் தற்போது 70% வரை விலை குறைந்து வர்த்தகமாகி வருகின்றன.

Investment
Investment
Image by Nattanan Kanchanaprat from Pixabay

பெரிய முதலீட்டாளர்களின் பங்குகளை அப்படியே பின்பற்றுவது சில நேரங்களில் தவறாக முடியலாம். அதற்குக் காரணம் பெரு முதலீட்டாளர்கள் என்ன விலைக்கு வாங்கினார்கள் என்றோ எப்போது அதை விற்று வெளியேறுவார்கள் என்றோ சிறு முதலீட்டாளர்களால் கணிக்க முடியாது. என்றாலும் அவர்களின் முதலீட்டுக் கலவை சிறு முதலீட்டாளர்களுக்கு பல பாடங்களை உணர்த்தும். அதனால், பங்குச் சந்தையில் முதலீடு செய்பவர்கள் பல காரணிகளை ஆராய்ந்து முதலீட்டு முடிவுகளை எடுப்பதே சரியாக இருக்கும்

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு