பங்குச் சந்தை
நடப்பு
Published:Updated:

அனுபம் ரசாயன் இந்தியா லிமிடெட்!

அனுபம் ரசாயன் இந்தியா லிமிடெட்!
பிரீமியம் ஸ்டோரி
News
அனுபம் ரசாயன் இந்தியா லிமிடெட்!

கம்பெனி பயோடேட்டா

இந்த வாரம் நாம் பார்க்கப்போகும் பயோடேட்டா அனுபம் ரசாயன் இந்தியா லிமிடெட். சிறப்புப் பண்புகள் கொண்ட வேதிப்பொருள்களை (ஸ்பெஷா லிட்டி கெமிக்கல்கள்) வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ற நடைமுறையில் (கஸ்டம் சிந்தசிஸ்) உற்பத்தி செய்து தருகிற நிறுவனம் இது.

அனுபம் ரசாயன் இந்தியா லிமிடெட்!

வேதிப்பொருள் உற்பத்தியில்...

விவசாயம் செய்வதற்குப் பயன்படுத்தப் படும் வேதிப்பொருள்கள், தனிநபர் அழகு பராமரிப்பு (பர்சனல் கேர்) மற்றும் மருந்துகள் தயாரிப்பு மற்றும் ஏனைய சிறப்புப் பண்பியல்பு கள் கொண்ட வேதிப்பொருள்களான சாயத் துக்கான நிறமிகள் (பிக்மென்ட் டைஸ்), பாலிமர் அடிட்டிவ்ஸ் போன்ற இரண்டு பெரிய வகையிலான வேதிப்பொருள்களை உற்பத்தி செய்கிற தொழில் பிரிவுகளில் செயல்பட்டு வருகிறது இந்த நிறுவனம்.

அகில இந்திய அளவிலான வேதிப்பொருள் களுக்கான சந்தை அமெரிக்க டாலர் அளவீட்டில் சுமார் 200 பில்லியன் என்ற (2019-ம் ஆண்டு கணக்கீட்டின்படி) அளவில் இருக்கிறது. இந்த சந்தை மதிப்பில் அடிப்படை வேதிப்பொருள்கள் 56% பங்களிப்பைக் கொண்டுள்ளது. இந்தியாவில் உள்நாட்டு உபயோகத்துக்காகவும் ஏற்றுமதிக்காகவும் ஸ்பெஷாலிட்டி கெமிக்கல்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

கோவிட்-19 மற்றும் சீனாவை மட்டுமே நம்பியிருப்பதைத் தவிர்த்தல் என்ற உலகளாவிய தொழில் நிறுவனங்களின் எண்ண ஓட்டம் உள்ளிட்ட காரணங்களால் இந்தியாவில் செயல்பட்டுவரும் ஸ்பெஷாலிட்டி கெமிக்கல் நிறுவனங்களின் மீது அயல்நாட்டு நிறுவனங்கள் கவனம் செலுத்தி வருகின்றன.

கடந்த நிதியாண்டின் நிலவரப்படி, சீனா உலக அளவிலான ஸ்பெஷாலிட்டி கெமிக் கல்கள் ஏற்றுமதியில் சுமார் 18% அளவிலான பங்களிப்பைத் தந்து வருகிறது. இதே கால கட்டத்தில் இந்தியாவின் பங்களிப்பு சுமார் 2% என்ற அளவில் இருந்து வந்தது.

உலகளாவிய அளவில் மாறிவரும் சூழ்நிலைகளைக் கணக்கில் கொண்டு பார்த்தால், ஸ்பெஷாலிட்டி கெமிக்கல்கள் ஏற்றுமதியில் இந்தியாவின் பங்களிப்பு அதிகரிக்கும் வாய்ப்பு உண்டு. மேலும், மத்திய அரசின் ‘மேக் இன் இந்தியா’ போன்ற திட்டங்களும் இந்த வித நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வண்ணமே இருக்கிறது.

அனுபம் ரசாயன் இந்தியா லிமிடெட்!

வளர்ச்சி சதவிகிதம்...

அகில இந்த ரீதியாக ஸ்பெஷாலிட்டி கெமிக்கல்களின் சந்தையானது 2019 - 2024 என்ற ஐந்து ஆண்டுக் காலகட்டத்தில் அக்ரோகெமிக்கல் பிரிவில் 9.2% (சி.ஏ.ஜி.ஆர்) அளவிலான வளர்ச்சியையும், உரங்கள் பிரிவில் 7% (சி.ஏ.ஜி.ஆர்) அளவிலான வளர்ச்சியையும், கட்டுமானத்தில் பயன் படுத்தப்படும் கெமிக்கல்கள் பிரிவில் 11.4% (சி.ஏ.ஜி.ஆர்) அளவிலான வளர்ச்சியையும், பெயின்ட் மற்றும் கோட்டிங் அடிட்டிவ்ஸ் பிரிவில் 11.4% அளவிலான வளர்ச்சியையும், தண்ணீர் சுத்திகரிப்புக்குத் தேவைப்படும் கெமிக்கல்கள் பிரிவில் 10.5% (சி.ஏ.ஜி.ஆர்) வளர்ச்சியையும், டெக்ஸ்டைல் கெமிக்கல்கள் பிரிவில் 12.2% (சி.ஏ.ஜி.ஆர்) வளர்ச்சியையும், வாசனை மற்றும் சுவையூட்டும் கெமிக்கல்கள் பிரிவில் 12.2% (சி.ஏ.ஜி.ஆர்) வளர்ச்சியையும், வீடுகள் பராமரிப்புகளுக்காகப் பயன்படுத்தப்படும் கெமிக்கல்கள் பிரிவில் 10.6% (சி.ஏ.ஜி.ஆர்) வளர்ச்சியையும், பர்சனல்கேருக்கான கெமிக்கல்கள் பிரிவில் 12.4% (சி.ஏ.ஜி.ஆர்) வளர்ச்சியையும், சாயம் மற்றும் நிறமிகள் பிரிவில் 11.5% (சி.ஏ.ஜி.ஆர்) வளர்ச்சியையும் காண்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன என சந்தை வளர்ச்சி விகிதம் குறித்த கணிப்புகள் கூறுகின்றன.

அனுபம் ரசாயன் இந்தியா லிமிடெட்!

குறைந்த அளவிலான போட்டி...

இந்த நிறுவனம் இன்றைக்கு கஸ்டம் சிந்தசிஸ் மற்றும் ஸ்பெஷாலிட்டி கெமிக்கல்கள் உற்பத்திப் பிரிவில் இந்தியாவில் செயல்பட்டுவரும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாகும். ஒரு பார்ட்னர்ஷிப் நிறுவனமாக 1984-ம் ஆண்டில் சாதாரண வகை கெமிக்கல்களை உற்பத்தி செய்வதற்காக ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம், காலப்போக்கில் கஸ்டம் சிந்தசிஸ், லைஃப் சயின்ஸ் சம்பந்தப்பட்ட ஸ்பெஷாலிட்டி கெமிக்கல்கள் உற்பத்தி மற்றும் ஏனைய ரக ஸ்பெஷா லிட்டி கெமிக்கல்கள் உற்பத்தி எனத் தன்னுடைய திறனை விரிவாக்கம் செய்துகொண்டு வெற்றிகரமான நிறுவனமாகச் செயல்பட்டு வருகிறது.

தற்சமயம், இந்த நிறுவனம் 68 (ஆரம்பத்தில் இருந்து தொகுப்பு ரீதியாக) நிறுவன ரீதியான (இந்தியா மற்றும் பல உலக நாடுகள் சார்ந்த) வாடிக்கையாளர் களுக்குத் தேவைப்படும் கெமிக்கல்களை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறது. இதில் 20-க்கும் மேற்பட்ட நிறுவ னங்கள் பன்னாட்டு நிறுவனங் களாகும். வேதிப்பொருள்கள் உற்பத்தி செய்யும் தொழில் என்பதால், கடிமான உற்பத்தி யின் படிநிலைகளைக்கொண்ட கெமிக்கல்களை உற்பத்தி செய்வதில் இந்த நிறுவனம் கொண்டுள்ள நீண்ட அனுபவம், தானியங்கி முறையில் உற்பத்தி நடைமுறைகள் செயல்படும்படி வடிவமைத்திருத்தல், இதற் கெல்லாம் தேவையான ஆராய்ச்சி வசதிகளைக் கொண் டிருத்தல் போன்றவை இந்த நிறுவனத்தின் தனிச் சிறப்புகளாக இருக்கின்றன.

இந்த நிறுவனம் ஒரு சில வேதிப் பொருள்கள் உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருள் களைப் பின்னோக்கிய ஒருங்கிணைப்பின் மூலம் (backward integration)தானே உற்பத்தி செய்துகொள்வதால், இறக்குமதியைச் சார்ந்திருத்தல் மற்றும் வேதிபொருள்களுக்கான மூலப்பொருள்களை ஓரிடத்தில் இருந்து தேவைப்படும் இடத்துக்குக் கொண்டு செல்வதில் இருக்கும் இடையூறுகள் போன்றவற்றில் இருந்து உருவாகும் ரிஸ்க்குகளை முழுமையாக இந்த நிறுவனம் தவிர்த்துவிடுகிறது.

37 ஆண்டுகள் அளவிலான நீண்ட அனுபவம், மல்ட்டி-ஸ்டெப் சிந்தசிஸ் எனும் நடை முறையில் கொண்டிருக்கும் சிறப்பான அனுபவம், நடப்பு நிதியாண்டு நிலவரப்படி இருபத்தி ஐந்து பன்னாட்டு நிறுவனங்களை உள்ளடக்கிய 68 நிறுவன ரீதியிலான வாடிக்கையாளர்கள், 27,200 மெட்ரிக்டன் அளவிலான நிர்மாணிக்கப்பட்ட உற்பத்தி வசதியைக் கொண்ட ஆறு உற்பத்தி மையங்கள், 1,437-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் என வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது இந்த நிறுவனம்.

அனுபம் ரசாயன் இந்தியா லிமிடெட்!
அனுபம் ரசாயன் இந்தியா லிமிடெட்!

ரிஸ்க்குகள் என்னென்ன?

கெமிக்கல்கள் துறையில் செயல்படும் நிறுவனங்களுக்கு உரித்தான அனைத்து ரிஸ்க்குகளும் இந்த நிறுவனத்துக்கும் உண்டு. நூதன மற்றும் அதி நவீன உற்பத்தி முறைகளைப் பின்பற்றும் உற்பத்தி வசதிகள் என்பதால், இவற்றில் ஏதேனும் பிரச்னைகள் ஏற்பட்டு அது சரிசெய்ய அதிக நாள்கள் ஆகும்பட்சத்தில், அது வாடிக்கையாளர்களிடம் இருக்கும் உறவை பாதிப்படையச் செய்யக்கூடும்.

மேலும், வாடிக்கையாளர்கள் பலரும் பன்னாட்டு நிறுவனங்களாக இருப்பதால், இந்தவகை சிக்கல்கள் உறவின் பலத்தைக் கணிசமாகக் குறைத்து விடக்கூடும். அதே போல், விற்றுவரவில் கணிசமான பங்கைக் கொண்டுள்ள வாடிக்கையாளர்களின் மனமாற்றம் என்பதும் இந்த நிறுவனத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தி விடக்கூடும்.

ஆராய்ச்சிகளில் கணிசமான முன்னேற்றம்/ வெற்றி கிடைக்காமல் போகுதல், மூலப்பொருள்களின் விலை உயர்வு, விற்பனை செய்யும் நாடுகளில் நிலவும் அரசியல் சூழல், அதீத தரக்கட்டுப்பாட்டுக்கான தேவைகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான அரசின் கொள்கை முடிவுகள், ஒரு சில அபாயகரமான கெமிக்கல்களைக் கையாள்வதால் வரக்கூடிய ஆபத்துகள், அந்நியச் செலாவணி மதிப்பு மாறுதல் போன்ற அனைத்துமே இந்த நிறுவனத்துக்கு உரித்தான ரிஸ்க்குகளே ஆகும்.

முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

இந்தப் பகுதி பங்குகளைப் பரிந்துரை செய்யும் பகுதி அல்ல. முதலீட்டாளர்களுக்குப் பங்குகளை அறிமுகப்படுத்துதல் மற்றும் கல்வியே இந்தப் பகுதியின் நோக்கம். பங்கு முதலீடுகள் சந்தை அபாயத்துக்கு உட்பட்டது என்பதால், எந்தவொரு பங்கை வாங்கும் முன்னும் செபி பதிவு பெற்ற முதலீட்டு ஆலோசகரைக் கலந்தாலோசித்து, அந்தப் பங்கில் முதலீடு செய்வதில் இருக்கும் ரிஸ்க் உங்களுக்கு உகந்ததுதானா என்பதை முடிவு செய்த பின்னரே முதலீட்டு நடவடிக்கைகளை நீங்கள் எடுக்க வேண்டும்!