பங்குச் சந்தை
நடப்பு
தொடர்கள்
Published:Updated:

பாரத் பிஜ்லி லிமிடெட்! (BSE CODE: 503960, NSE SYMBOL: BBL)

பாரத் பிஜ்லி லிமிடெட்
பிரீமியம் ஸ்டோரி
News
பாரத் பிஜ்லி லிமிடெட்

கம்பெனி பயோடேட்டா

மின் உற்பத்தியில் ஈடுபட்டிருக்கும் நிறுவனமான பாரத் பிஜ்லி நிறுவனத்தைதான் இந்த வாரம் நாம் பார்க்கப்போகிறோம்.

தொழில் பிரிவுகள்...

1946-ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம், பவர் சிஸ்டம்ஸ் மற்றும் இண்டஸ்ட்ரீயல் சிஸ்டம்ஸ் என்ற இரண்டு பெரும் தொழில் பிரிவுகளின் கீழ் உள்ள ஐந்து விதமான வணிகப் பிரிவுகளில் செயல்பட்டு வருகிறது. இதில் பவர் சிஸ்டம்ஸ்பிரிவின்கீழ் டிரான்ஸ்ஃபார்மர் மற்றும் எலெக்ட்ரிக்கல் புராஜெக்ட்டுகளும், இண்டஸ்ட்ரீயல் சிஸ்டம்ஸ் பிரிவின் கீழ் எலெக்ட்ரிக் மோட் டார்கள் மற்றும் டிரைவ்கள் & இண்டஸ்ட்ரீயல் ஆட்டோமேஷன் போன்றவையும் அடங்கும்.

மின்சார உற்பத்தி, எண்ணெய் சுத்திகரிப்பு, இரும்பு, சிமென்ட், ரயில்வே, கட்டுமானம் மற்றும் ஜவுளி போன்ற பல்வேறு துறையில் இயங்கும் நிறுவனங் களுக்குத் தேவையான மின்சாரம் உபயோகித்தல் சம்பந்தப்பட்ட உபகரணங்களை உற்பத்தி செய்துதருகிறது இந்த நிறுவனம்.

மேலும், மின் உற்பத்தி நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரமானது உபயோகிப்பாளர்களை சென்றடையத் தேவையான ஸ்விட்ச்யார்டுகளை வடிவமைத்தல் முதல் நிறுவுதல் வரையிலான வேலைகள் அனைத்தையும் சிறப்பாகச் செய்துதருகிறது. மும்பையில் 1,70,321 சதுர மீட்டர் அளவிலான இடத்தில் கிட்டத்தட்ட 50,000 சதுர மீட்டர் அளவிலான உற்பத்தி வசதியைக் கொண்டு இயங்கி வருகிறது இந்த நிறுவனம். மின் மாற்றிகள் மற்றும் மோட்டார்களை உற்பத்தி செய்வதற்காக அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட உற்பத்தி வசதியையும் நிறுவியுள்ளது இந்த நிறுவனம்.

இந்தியா மற்றும் வெளிநாடுகளில் தன்னுடைய வர்த்தகத்தை விரிவாக்கும் நோக்கத்துடன் செயல்பட்டுவருகிற இந்த நிறுவனம், தன்னுடைய உற்பத்தி வசதியைத் தொடர்ந்து மேம்படுத்துதல் மற்றும் விரிவாக்கம் செய்தல், டைவர்சிஃபை செய்தல், புதிய சந்தை களில் ஸ்ட்ராட்டஜிக் கூட்டணிகளை அமைப்பதன் மூலம் கால் பதித்தல் போன்ற நடவடிக்கைகளின் மூலம் கடந்த காலத்தில் வெற்றிகரமாகச் செயல்பட்டுள்ளது.

டிரான்ஸ்ஃபார்மர்கள் உற்பத்திப் பிரிவில் 15,000 MVA (மெகா வோல்ட் ஆம்பியர்ஸ்) வரையிலான திறன்கொண்ட டிரான்ஸ் ஃபார்மர்களை உற்பத்தி செய்யும் வசதியைக் கொண்டுள்ளது இந்த நிறுவனம். உற்பத்தி செய்த டிரான்ஸ்ஃபார்மர்களைச் சோதனை செய்துபார்ப்பதற்கு என்.ஏ.பி.எல் (National Accreditation Board for Testing and Calibration Laboratories) அங்கீகாரம் பெற்ற சோதனை ஆய்வகத்தை தன்வசம் கொண்டுள்ளது இந்த நிறுவனம்.

2014-ம் ஆண்டில் இந்த அங்கீகாரமானது பெறப்பட்டது. மேலும், மாநிலங்களின் மின் வாரியங்கள், யுட்டிலிட்டி நிறுவனங்கள், அரசாங்கங்கள் நடத்தும் பொதுத்துறை நிறுவனங்கள், தொழிற் சாலைகள், அயல்நாட்டு வாடிக்கையாளர்கள் போன்றவர்களுக்குத் தேவைப்படுகிற 200 எம்.வி.ஏ முதல் 200 கே.வி வரையிலான மின்மாற்றிகளை உற்பத்தி செய்து விற்பனை செய்துவருகிறது இந்த நிறுவனம். பவர் டிரான்ஸ்ஃபார்மர்கள், ஜெனரேட்டர் டிரான்ஸ்ஃபார்மர்கள், யூனிட் ஆக்சிலரி டிரான்ஸ் ஃபார்மர்கள் மற்றும் சிறப்பு உபயோகத்துக்கான டிரான்ஸ்ஃபார்மர்கள் போன்றவற்றை இந்தப் பிரிவின்கீழ் உற்பத்திசெய்து விற்பனை செய்து வருகிறது இந்த நிறுவனம்.

பாரத் பிஜ்லி லிமிடெட்! (BSE CODE: 503960, NSE SYMBOL: BBL)

நிறுவனத்தின் செயல்பாடுகள்...

புராஜெக்ட்டுகள் பிரிவின்கீழ் இந்த நிறுவனம் எக்ஸ்ட்ரா ஹைவோல்ட்டேஜ் ஸ்விட்ச் யார்டுகள், ஹைவோல்ட்டேஜ் மற்றும் மீடியம் வோல்ட்டேஜ் சப்-ஸ்டேஷன்கள், எலெக்ட்ரிக்கல் பேலன்ஸ் ஆஃப் பிளான்டுகள், தொழிற்சாலைகளுக்கான மின்சார விநியோகம் மற்றும் இலுமினேஷன் சிஸ்டம்ஸ் போன்றவற்றுக்கான டர்ன்-கி தீர்வு களை வழங்கி வருகிறது.

டிசைன் மற்றும் இன்ஜினீயரிங், தேவையான உபகரணங்கள் மற்றும் மெட்டீரியல்களை சப்ளை செய்தல், நிறுவுதல், சோதனை செய்தல் மற்றும் இயக்குதல், அரசாங்க அமைப்புகளுடன் மின்சாரம் சார்ந்த நடைமுறைகளை ஒருங்கிணைத் தலுக்கான பணிகளைச் செய்தல், விற்பனைக்குப் பிந்தைய சேவை போன்றவற்றை புராஜெக்ட் பிரிவின்கீழ் வழங்குகிறது இந்த நிறுவனம்.

எலெக்ட்ரிக் மோட்டார் பிரிவில் 1958-ம் ஆண்டு முதலே மோட்டார்களை உற்பத்தி செய்துவரும் இந்த நிறுவனம், சீமென்ஸ் நிறுவனத்துடன் தொழில்நுட்பக் கூட்டணி அமைத்து அந்தக் காலகட்டத்தில் மோட்டார்களை உற்பத்தி செய்ய ஆரம்பித்தது. டி.சி டிரைவ்ஸ், சர்வோ சிஸ்டம்ஸ் சொல்யூஷன்கள் மற்றும் பல்வேறு வகையான ஆட்டோ மேஷன் சொல்யூஷன்களையும் வழங்கி வருகிறது இந்த நிறுவனம்.

டிரைவ்கள் மற்றும் ஆட்டோ மேஷன் பிரிவில் ஜெர்மனியைச் சார்ந்த கே.இ.பி நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து அந்த நிறுவனத்தின் வேரியபிள் ப்ரிக்குவன்சி டிரைவ்களை விநியோகம் செய்கிறது. கே.இ.பி நிறுவனத்தின் 900 கிலோவாட் ஏ.சி வேரியபிள் டிரைவ்களை இந்த நிறுவனம் உற்பத்தி செய்கிறது. தவிர, டி.சி டிரைவ்ஸ் மற்றும் சர்வோ சிஸ்டம் சொல் யூஷன்ஸ் போன்றவற்றையும் இந்த நிறுவனம் வழங்கி வருகிறது.

பாரத் பிஜ்லி லிமிடெட்! (BSE CODE: 503960, NSE SYMBOL: BBL)

நிறுவனத்தின் வளர்ச்சி...

1946-ம் ஆண்டில் மிகவும் சிறிய அளவிலான முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறு வனம், 1954-ம் ஆண்டில் பவர் டிரான்ஸ் ஃபார்மர்களை உற்பத்தி செய்ய ஆரம்பித்தது. 1958-ம் ஆண்டில் சீமென்ஸ் ஏ.ஜி நிறுவனத்துடன் தொழில்நுட்ப கூட்டணி அமைத்து மோட்டார்கள் மற்றும் டிரான்ஸ்ஃபார்மர்களை உற்பத்தி செய்ய ஆரம்பித்து. 1965-ம் ஆண்டில் சீமென்ஸ் நிறுவனத்தின் தொழில்நுட்ப உதவியுடன் நவி மும்பையில் இருக்கும் ஐரோலி எனும் இடத்தில் டிரான்ஸ்ஃபார்மர் மற்றும் மோட்டார்களை உற்பத்தி செய்யும் உற்பத்தி மையம் ஒன்றை நிறுவியது.

1985-ம் ஆண்டில் ஹைடென்ஷன் எலெக்ட்ரிக்கல் ஸ்விட்ச் யார்டுகள் மற்றும் டிஸ்ட்ரிப்யூஷன் சிஸ்டம் களை டர்ன்-கி அடிப்படையில் செய்துதரும் பொருட்டு ப்ராஜெக்ட் டிவிஷனை நிறுவியது. 2006-ம் ஆண்டில் உலகத்தரம் வாய்ந்த டிரான்ஸ்ஃபார்மர் உற்பத்தி மையம் ஒன்றை நிறுவியது. 2007-ம் ஆண்டில் ஜெர்மனியைச் சார்ந்த கே.இ.பி நிறுவனத்தின் ஏசி வேரியபிள் ஸ்பீட் டிரைவ் களை இந்தியாவில் விநியோகம் செய்வதற் கான ஒப்பந்தம் ஒன்றைச் செய்தது.

2008-ம் ஆண்டு எலிவேட்டர் களுக்கான கியர்லெஸ் மெஷின் களை உற்பத்தி செய்தது. 2012-ம் ஆண்டில் கே.இ.பி நிறுவனத்தின் டிரைவ்களை இந்தியாவிலேயே உற்பத்தி செய்ய ஆரம்பித்தது. 2013-ம் ஆண்டில் மீடியம் வோல்ட்டேஜ் மோட்டார்களை உற்பத்தி செய்வதற்கென்று புதிய உற்பத்தி மையத்தை நிறுவியது.

பாரத் பிஜ்லி லிமிடெட்! (BSE CODE: 503960, NSE SYMBOL: BBL)

ரிஸ்க்குகள் என்னென்ன?

மின்மாற்றிகள், மோட்டார்கள் மற்றும் ஏனையை டிரைவ்கள் உற்பத்தியில் செயல்பட்டுவரும் நிறுவனங்களுக்கு உரித்தான ரிஸ்க்குகள் அனைத்தும் இந்த நிறுவனத்துக்கும் உண்டு. இந்த நிறுவனம் ஈடுபட்டுவரும் தொழிலானது அதில் உற்பத்தி செய்யப்படும் தயாரிப்புகளை வாங்கி உபயோகிக்கும் நிறுவனங்கள் செய்துவரும் வியாபாரத்தின் அளவானது நாட்டின் பொருளாதார வளர்ச்சியைச் சார்ந்தே வளர்ச்சி அடையும் என்ற நிலையில் செயல் படுபவை. எனவே, ஏதாவது ஒரு காரணத்தால் நாட்டின் பொருளாதார வளர்ச்சியானது எதிர்பார்த்த அளவில் இல்லாதுபோனாலோ, தேக்கநிலையைச் சந்தித்தாலோ அது மறைமுகமாக இந்த நிறுவனத்தின் வியாபாரத்தையும் பாதிக்கவே செய்யும்.

தொழில்நுட்பத்தில் வரும் பெரிய அளவிலான மாறுதல்கள், போட்டி நிறுவனங்கள் ஏற்படுத்தக்கூடிய கடுமையான சவால்கள், மூலப்பொருள்களின் விலை உயர்வு, அந்நிய செலாவணி மதிப்பு மாறுதல் போன்றையும் இந்த நிறுவனத்துக்கான ரிஸ்க்குகளே. அரசின் கொள்கை முடிவுகளும் இந்த நிறுவனத்தை ஓரளவு பாதிப்பதற்கான வாய்ப்புகள் இருக்கவே செய்கின்றன.

முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

இந்தப் பகுதி பங்குகளைப் பரிந்துரை செய்யும் பகுதி அல்ல. முதலீட்டாளர்களுக்குப் பங்குகளை அறிமுகப் படுத்துதல் மற்றும் கல்வியே இந்தப் பகுதியின் நோக்கம். பங்கு முதலீடுகள் சந்தை அபாயத்துக்கு உட்பட்டது என்பதால், எந்தவொரு பங்கை வாங்கும்முன் செபி பதிவு பெற்ற முதலீட்டு ஆலோசகரைக் கலந்தாலோசித்து, அந்தப் பங்கில் முதலீடு செய்வதில் இருக்கும் ரிஸ்க் உங்களுக்கு உகந்ததா என்பதை முடிவு செய்த பின்னரே, முதலீட்டு நடவடிக்கைகளை நீங்கள் எடுக்க வேண்டும்.