Published:Updated:

ஃபெர்மென்டா பயோடெக் லிமிடெட்! (BSE CODE: 506414)

அறிவோம் பங்கு நிறுவனம்...

பிரீமியம் ஸ்டோரி

இந்த வாரம் நாம் அறிமுகப்படுத்தும் நிறுவனம் 1951-ம் ஆண்டில் ஆரம்பிக்கப் பட்டு, இன்றைக்கு வைட்டமின் டி3 உற்பத்தியில் மிகப் பெரிய நிறுவனமாகவும் இந்தத் துறையில் உலக அளவில் சிறந்த இடத்தையும் கொண்டிருக்கும் நிறுவனமான ஃபெர்மென்டா பயோடெக் லிமிடெட்.

நிறுவனத்தின் தொழில் பிரிவுகள்...

இந்த நிறுவனத்தின் தொழில் பிரிவுகள் என்று பார்த்தால், வைட்டமின் டி3 மற்றும் ஏ.பி.ஐ-கள் உற்பத்தி, உணவுப்பொருள்களில் ஊட்டச்சத்துகளை வலுவாக நிலைநிறுத்த உதவும் ப்ரீமிக்ஸ்கள், பயோடெக்னாலஜி, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான தீர்வுகள் மற்றும் ரியல் எஸ்டேட் போன்ற பிரிவுகளில் செயல்பட்டு வருகிறது.

வைட்டமின் டி3 உற்பத்திப் பிரிவில் கிரிஸ்டலைன், ஆயில், ரெசின் இன் ஆயில், குளிர்ந்த நீரில் கரையக்கூடிய வகை, உணவாக எடுத்துக்கொள்ளக்கூடிய வகை, ஊசி மூலம் செலுத்தக்கூடிய வகை, மென்மையான ஜெல்லினால் ஆன மாத்திரைகள், ப்ரீமிக்ஸ்கள், உணவு மற்றும் பானங்களில் செறிவூட்டுதலுக் கான வகைகள் போன்றவற்றைக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

இது தவிர, இந்தப் பிரிவில் பினைராமிடால் மற்றும் சிலிக்கான் டை ஆக்ஸைடு போன்ற ஏ.பி.ஐ-களையும் (ஆக்டிவ் பார்மெச்சூட்டிக்கல் இன்க்ரிடியன்ட்ஸ்) உற்பத்தி செய்துவருகிறது. நியூட்ரிஷனல் ப்ரீமிக்ஸ் பிரிவில் உணவுப் பொருள்களை செறிவூட்டுவதற்கான தயாரிப்பு களை வழங்கிவருகிறது. இந்தப் பிரிவில் உலக அளவிலான ஒழுங்குமுறை ஆணையங்களின் அங்கீகாரத்தைப் பெற்று தன்னுடைய தயாரிப்புகளை வழங்கி வருகிறது.

பயோடெக்னாலஜி பிரிவில் பயோ பார்மெச்சூட்டிக்கல் வாழ்க்கை சுழற்சியில் உள்ள பல்வேறு வகையான என்சைம்களை உற்பத்தி செய்துதருகிறது; சுற்றுச்சூழலுக்கு இசைவான வகையிலான உற்பத்தி வசதிகளை பார்மெச்சூட்டிக்கல் துறை, ஃபைன் கெமிக்கல்கள் துறை, பயோ பிளாஸ்டிக் மற்றும் காஸ்மெட்டிக்ஸ் துறை போன்ற துறைகளுக்கு வழங்கிவருகிறது இந்த நிறுவனம்.

சுற்றுச்சூழலுக்கு இசைவான தீர்வுகளை வழங்கும் பிரிவில் பயோடெக்னாலஜி தயாரிப்புகளைத் தாண்டி, தண்ணீர் மற்றும் வடிகால்களுக்கான சுத்திகரிப்புக்கான தீர்வுகளை வழங்கும் இந்த நிறுவனம் வடிகால் களில் வரும் தண்ணீரைச் சுத்திகரிப்பு செய்வதற்கான வசதிகளை வடிவமைத்தல், தொழில்நுட்பம், கொள்முதல் மற்றும் கட்டுமானம் மற்றும் அந்தவகை வசதிகளுக் கான அனைத்து வகை பராமரிப்புப் பணிகள் போன்றவற்றை வழங்கிவருகிறது. 2012-ம் ஆண்டில் ரியல் எஸ்டேட் துறையில் கால்பதித்த இந்த நிறுவனம், தானே நகரில் உள்ள முக்கியமான பகுதி ஒன்றில் இரண்டு லட்சம் சதுர அடியிலான ஐ.டி பார்க் கட்டுமானம் ஒன்றை செய்துள்ளது. இதில் டாடா டெக்னாலஜிஸ் லிமிடெட், அசோக் லேலாண்ட், சாம்சங் உள்ளிட்ட பல பெருநிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

ஃபெர்மென்டா பயோடெக் லிமிடெட்! (BSE CODE: 506414)

நிறுவனத்தின் வளர்ச்சி...

1951-ம் ஆண்டில் இன்டர்நேஷனல் பிரான்சைஸ் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம், ஆரம்பக்காலத்தில் பார்மெச்சூட்டிக்கல் தயாரிப்புக்கான டூல்களில் சிறப்பு செயல்பாடு களைச் செய்வதற்கான முயற்சிகளைச் செய்தது. 1959-ம் ஆண்டில் மகாராஷ்டிராவில் உள்ள தானேயில் பார்மெச்சூட்டிக்கல் தயாரிப்புகளை உற்பத்தி செய்வதற்கான உற்பத்தி வசதியை நிறுவியது இந்த நிறுவனம். 1963-ம் ஆண்டில் யு.கே நிறுவனமான பிலிப்ஸ் டூபார் மற்றும் க்ரூக்ஸ் லேபரட்டரிஸ் எனும் நிறுவனத்துடன் கூட்டணி அமைத்த இந்த நிறுவனம் தன்னுடைய பெயரை க்ரூக்ஸ் இன்டர்ப்ரான் லிமிடெட் என்று மாற்றியமைத்தது. 1967-ம் ஆண்டில் வைட்டமின்-டி3 உற்பத்தியில் கால்பதித்த இந்த நிறுவனம், க்ரோசின் மற்றும் லேக்டோ கேலமைன் எனும் பிரசித்திபெற்ற தயாரிப்புகளை அறிமுகப்படுத்தியது.

1971-ம் ஆண்டில் பிலிப்ஸ் டூபார் நிறுவனம் க்ரூக்ஸ் இன்டர்ப்ரான் லிமிடெட் நிறுவனத்தை க்ரூக்ஸ் லேபரட்டரிஸ் நிறுவனத்திடம் இருந்து வாங்கியதோடு இல்லாமல் நிறுவனத்தின் பெயரை டூபார் இன்டர்ப்ரான் லிமிடெட் என்று பெயர்மாற்றம் செய்தது. 1977-ம் ஆண்டில் இந்த நிறுவனத்தின் பங்குகள் மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது. தற்போதும் இந்தப் பங்கு மும்பை பங்குச் சந்தையில் மட்டுமே பட்டியலிடப்பட்டுள்ளது.

1980-ம் ஆண்டில் பிலிப்ஸ் டூபார் எஸ்வி நிறுவனம் சோல்வே அண்ட் சோல்வே நிறுவனத்தால் கையகப் படுத்தப்பட்டு, அதனுடன் கூட்டணியை அமைத்தது. 1986-ம் ஆண்டில் பெர்மென்டா பயோடெக் லிமிடெட் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டு, இமாசலப்பிரதேசத்தில் உள்ள குலு எனும் இடத்தில் உற்பத்தி வசதி ஒன்று நிறுவப்பட்டது. 1996-ம் ஆண்டில் குரோசின் மற்றும் லேக்டோ கேலமைன் பிராண்டுகளை விற்று வெளியேறியது இந்த நிறுவனம். 2002-ம் ஆண்டில் சோல்வே நிறுவனத்துக்கு விற்கப்பட்ட பார்மா பிரிவை டீ-மெர்ஜ் செய்த இந்த நிறுவனம், 2003-ம் ஆண்டில் வைட்டமின்-டி3 மற்றும் பினைராமிடால் உற்பத்திக்கான மையங்களைக் குலுவில் நிறுவியது. மேலும், அதே ஆண்டில் நிறுவனத்தின் பெயர் டி.ஐ.எல் லிமிடெட் என மாற்றப்பட்டது.

2007-ம் ஆண்டில் ஏற்றுமதி செய்வதற்காக உற்பத்திவசதியின் நிர்மாணிக்கப்பட்ட உற்பத்தித் திறனை அதிகரித்த இந்த நிறுவனம், டைமெத்திக் கோன் பவுடரையும் அறிமுகப் படுத்தியது. 2009-ம் ஆண்டில் வைட்டமின்-டி3-யை ஏற்றுமதி செய்ய ஆரம்பித்த இந்த நிறுவனம், அதே ஆண்டில் பினைராமிடோலை இந்தியா வில் அறிமுகப்படுத்தியது.

2011-ம் ஆண்டில் குஜராத்தில் உள்ள தஹீஜ் எனும் இடத்தில் உள்ள சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் வைட்டமின்-டி3 உற்பத்திக்கான இரண்டாவது மையத்தை நிறுவியது. 2012-ம் ஆண்டில் அமெரிக்க எஃப்.டி.ஏ ஒழுங்குமுறை ஆணையத்தின் ஆய்வைத் தன்னுடைய குலுவில் உள்ள துணை உணவு (Dietary supplement) உற்பத்தி மையத்தில் நிறைவேற்றியது இந்த நிறுவனம். அதே ஆண்டில் மேம்படுத்தப் பட்ட பென்சிலின் ஜி அசிலேஸை அறிமுகப்படுத்திய இந்த நிறுவனம், ரியல் எஸ்டேட் துறையில் கால்பதித்தது.

2016-ம் ஆண்டில் தஹீஜில் உள்ள உற்பத்தி வசதியில் வைட்டமின்-டி3 உற்பத்தியின் நிர்மாணிக்கப்பட்ட அளவை அதிகரித்த இந்த நிறுவனம், புதிய வகை வைட்டமின் டி3 500ஐ அறிமுகப்படுத்தியது. 2019-ம் ஆண்டில் டி.ஐ.எல் லிமிடெட் நிறுவனம், பெர்மான்டா பயோ டெக் லிமிடெட் நிறுவனத்துடன் இணைக்கப்பட்டது. இந்த இணைப்பால் நிறுவனத்தின் பெயர், ஃபெர்மான்டா பயோடெக் லிமிடெட் என மாற்றம் செய்யப் பட்டது. அதே ஆண்டில் ஜெர்மனியில் உள்ள ஹாம்பர்க் எனும் இடத்தில் 100% துணை நிறுவனத்தை பெர்மான்டா பயோடெக் ஜி.எம்.பி.ஹெச் என்ற பெயரில் தொடங்கியது இந்த நிறுவனம்.

இன்றைக்கு உலகளாவிய அளவில் வைட்டமின்-டி3 உற்பத்தியில் முன்னணியில் உள்ள முதல் மூன்று நிறுவனங்களில் ஒன்றாகத் திகழும் இந்த நிறுவனம் முழுக்க முழுக்க தானே கண்டறிந்த தொழில்நுட்பத்தின் மூலம் வைட்டமின் டி3-ஐ உற்பத்தி செய்கிறது. வைட்டமின் டி3 உற்பத்தியில் 55 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்டிருக்கும் இந்த நிறுவனம், 12 காப்புரிமைகளைக் கொண்டிருக் கிறது.

ஃபெர்மென்டா பயோடெக் லிமிடெட்! (BSE CODE: 506414)

ரிஸ்க்குகள் என்னென்ன?

மருந்து உற்பத்தித் துறையில் செயல்படும் நிறுவனங்களுக்கு உரித்தான ரிஸ்க்குகள் அனைத்தும் இந்த நிறுவனத்துக்கு உண்டு. மூலப்பொருள்கள் விலை உயர்வு, எதிர்காலத்தில் போட்டியாளர்கள் அறிமுகப்படுத்தும் நவீன தொழில் நுட்பம், ஆராய்ச்சிகளில் வெற்றி அடைய வேண்டியதன் கட்டாயம், அரசாங்கத்தின் சுற்றுச்சூழல் மற்றும் மருந்துகள் உற்பத்தி/விற்பனைக்கான கொள்கைகள், பல்வேறு நாடுகளின் ஒழுங்குமுறை ஆணையங்களின் கொள்கை முடிவுகள், அந்நியச் செலாவணி மதிப்பு மாறுதல் போன்ற பல்வேறு விஷயங்களையும் இந்த நிறுவனத்துக்கான ரிஸ்க்குகள் ஆகும். பங்குச் சந்தையில் அன்றாடம் கைமாறும்/வியாபாரம் நடைபெறும் எண்ணிக்கையும் சராசரிக்கும் குறைவாகவே இருந்துவருவது கவனிக்கப்பட வேண்டிய விஷயமாகும். பொதுவாக, எந்த ஒரு நிறுவனத்திலும் அந்த நிறுவனத்தின் ஒரே ஒரு தயாரிப்பு அதிக அளவில் விற்றுவரவில் பங்களிப்பைக் கொண்டிருப் பதையும் ஒரு ரிஸ்க்காகவே கருத வேண்டும்.

ஃபெர்மென்டா பயோடெக் லிமிடெட்! (BSE CODE: 506414)

முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

இந்தப் பகுதி பங்குகளைப் பரிந்துரை செய்யும் பகுதி அல்ல. முதலீட்டாளர்களுக்குப் பங்குகளை அறிமுகப் படுத்துதல் மற்றும் கல்வியே இந்தப் பகுதியின் நோக்கம். பங்கு முதலீடுகள் சந்தை அபாயத்துக்கு உட்பட்டது என்பதால், எந்தவொரு பங்கை வாங்கும் முன்னும் செபி பதிவு பெற்ற முதலீட்டு ஆலோசகரைக் கலந்தாலோசித்து, அந்தப் பங்கில் முதலீடு செய்வதில் இருக்கும் ரிஸ்க் உங்களுக்கு உகந்ததுதானா என்பதை முடிவுசெய்த பின்னரே முதலீட்டு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு