Published:Updated:

குஜராத் ஃபுளூரோ கெமிக்கல்ஸ் லிமிடெட்! (NSE SYMBOL: FLUOROCHEM, BSE CODE: 542812)

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
குஜராத் ஃபுளூரோ கெமிக்கல்ஸ்
குஜராத் ஃபுளூரோ கெமிக்கல்ஸ்

அறிவோம் பங்கு நிறுவனம்...

பிரீமியம் ஸ்டோரி

இந்த வாரம் நாம் அறிமுகப்படுத்தும் நிறுவனம் ஐநாக்ஸ் குழுமத்தின் அங்கமான குஜராத் ஃபுளூரோ கெமிக்கல்ஸ் லிமிடெட் என்னும் நிறுவனம் ஆகும். குஜராத் ஃபுளூரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் தொழிற்சாலைகளில் பயன்படுத்தும் ஃபுளூரோ பாலிமர்கள், ஃபுளூரோ ஸ்பெஷாலிட்டி கெமிக்கல்கள், குளிர்விக்க ஏர்கண்டிஷனர்களில் உபயோகிக்கப்படும் குளிர்விப்பதற்கான வாயுக்கள் மற்றும் பல்வேறு வகையான வேதிப்பொருள்களை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறது.

வேதிப்பொருள் உற்பத்தியில்...

ஃபுளோரின் எனும் வேதிப்பொருள் சார்ந்த அத்தனை வேதியியல் படிநிலைகளிலும் சிறந்த அனுபவத்தை இந்த நிறுவனம் பெற்றிருப்ப தாலும் அனைத்துத் தயாரிப்பு படிநிலைகளையும் பின்நோக்கி ஒருங்கிணைப்பு செய்திருப்ப தாலும், தலைசிறந்த ஆராய்ச்சி வசதிகளைக் கொண்டிருப்பதாலும் இந்த நிறுவனத்தால் உலக அளவிலான வாடிக்கை யாளார்களுக்குத் தேவையான வேதிப் பொருள்களைநல்ல தரத்துடன் சரியான நேரத்தில், சரியான விலைக்கு உற்பத்தி செய்து வழங்க முடிகிறது.

இந்த நிறுவனத்தின் ஆராய்ச்சி மையத்தில் கடந்த நிதியாண்டின் இறுதி நிலவரப்படி, 94 தொழில்நுட்ப அனுபவத்துடன்கூடிய பணியாளர்கள் பணிபுரிகின்றனர். ஆராய்ச்சி மையம் தவிர்த்து, இந்த நிறுவனம் ஒரு அப்ளி கேஷன் டெவலப்மென்ட் மையத்தையும் நிறுவி செயல்படுத்தி வருகிறது.

இந்த நிறுவனத்தின் உற்பத்தி வசதிகள் ஆராய்ச்சி செய்வதன்மூலம் வேதிப்பொருள்களைக் கண்டறிதல் மற்றும் உற்பத்தி செய்வதற்கான படிநிலைகளை அமைத்தல் போன்ற வேதிப் பொருள்கள் உற்பத்தியில் உள்ள ஆரம்ப விஷயங்களில் ஆரம்பித்து, சோதனை முறை உற்பத்தி மற்றும் வர்த்தக ரீதியிலான உற்பத்தி என அத்தனை படிநிலைகளிலும் சிறப்பாகச் செய்யும் அளவுக்கு பல்வேறு வசதிகளுடன் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிறுவனம் தன்னுடைய தயாரிப்புகளை உலக அளவில் 75 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது.

குஜராத் ஃபுளூரோ கெமிக்கல்ஸ் லிமிடெட்! (NSE SYMBOL: FLUOROCHEM, BSE CODE: 542812)

வளர்ச்சிப் பாதையில்...

1987-ம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்த நிறுவனம், 1988-ம் ஆண்டில் பொதுப்பங்குகளை வெளியிட்டு பங்குச் சந்தையில் பட்டியலிடப் பட்டது. 1989-ம் ஆண்டில் ஸ்டாபெர் கெமிக்கல்ஸ் பென்வால்ட் கார்ப்பரேஷன் மற்றும் ஸ்டெர்ன்ஸ் கேட்டாலிட்டிக் கார்ப்ப ரேஷன் எனும் அமெரிக்க நிறுவனங்களுடன் கூட்டணியை அமைத்து, வதேதராவில் ஒரு உற்பத்தி மையத்தை நிறுவியது.

1999-ம் ஆண்டில் ஐ நாக்ஸ் லீஷர் லிமிடெட் என்ற நிறுவனத்தை ஆரம்பித்து, நாடெங்கிலும் மல்ட்டி ப்ளேக்ஸ்களை நிறுவ ஆரம்பித்தது. 2006-ம் ஆண்டில் க்ளீன் டெவலப்மென்ட் புராஜெக்ட் மூலம் ஹெச்.எஃப்.சி-23 உற்பத்தியில் கணிசமான அளவிலான கார்பன் கிரெடிட்டைப் பெற்றது இந்த நிறுவனம். 2007-ம் ஆண்டில் குஜராத்தில் உள்ள தஹிஜ் எனும் இடத்தில் ஒரு கெமிக்கல் காம்ப்ளெக்ஸை நிறுவியது. இதில் காஸ்ட்டிக் சோடா உற்பத்தி வசதி, குளோரின் உற்பத்தி வசதி, க்ளோரோ மீத்தேன் உற்பத்தி வசதி மற்றும் பாலி டெட்ராஃப்ளூரோ எத்திலீன் உற்பத்தி வசதி போன்றவை ஒருங்கே அமைக்கப்பட்டது.

2009-ம் ஆண்டில் ஐநாக்ஸ் விண்ட் லிமிடெட் என்ற நிறுவனத்தைத் தொடங்கியதன் மூலம் காற்றாலைத் தொழிலில் கால்பதித்தது. 2011-ம் ஆண்டில் ஆசிட் கிரேட் ஃபுளூரோ ஸ்பார் மற்றும் மெட்டலர்ஜிக்கல் கிரேட் ஃபுளூரோஸ்பார் உற்பத்திக்காக ஒரு கூட்டணியை அமைத்தது இந்த நிறுவனம்.

1989-ம் ஆண்டில் குஜராத்தில் உள்ள ரஞ்சித்நகர் எனும் இடத்தில் குளிர்விக்க உதவும் வாயுவை இந்தியாவிலேயே உற்பத்தி செய்ய ஆரம்பித்த இந்த நிறுவனம், நாளடைவில் உலக அளவில் விவசாயம் மற்றும் பார்மா துறையில் அதிகரித்து வந்த ஃபுளூரோ ஸ்பெஷாலிட்டி கெமிக்கல்களை உற்பத்தி செய்ய ஆரம்பித்தது.

2007-ம் ஆண்டில் ஃபுளூரோ பாலிமர்கள் உற்பத்திக்கான ஒருங்கிணைந்த உற்பத்தி மையத்தைக் குஜராத்தில் உள்ள தஹிஜ் எனும் இடத்தில் நிறுவியது. இன்றைக்கு மொராக்கோவில் ஃபுளூரோஸ்பார் தாதுப்பொருள் சுரங்கத்தைத் தன்னுடைய தேவைக்காகக் கொண்டுள்ள இந்த நிறுவனம், மூன்று உற்பத்தி மையங்களை ஐரோப்பா (யுகே, பெல்ஜியம், இத்தாலி, ஜெர்மனி), வட மற்றும் தென் அமெரிக்கா (மிச்சிகன், பிலடெல்பியா, அட்லாண்டா, நியூஜெர்ஸி, மெக்ஸிகோ, பிரேசில், அர்ஜெண்டினா), தென் ஆப்பிரிக்கா, தாய்லாந்து, சீனா, கொரியா, தாய்வான், ஜப்பான் போன்ற நாடுகளில் அலுவலகங்களையும், அமெரிக்காவில் டெக்சாஸ், நியூஜெர்ஸி, அரிசோனியா, இன்டியானா, ஜெர்மனியில் ஹேம்பர்க், இந்தியாவில் குஜராத் போன்ற இடங்களில் வேர்ஹவுஸ் வசதிகளையும் கொண்டு செயல்பட்டு வருகிறது.

இருபதுக்கும் மேற்பட்ட தொழில்துறைகளுக்கு...

இந்த நிறுவனத்தின் துணை நிறுவனங்கள் ஜெர்மனியில் ஹேம்பர்க், அமெரிக்காவில் டெக்சாஸ், மொராக்கோவில் காசாப்ளாங்கா எனும் இடத் திலும் மற்றும் சிங்கப்பூரிலும் நிறுவப்பட்டு செயல்பட்டு வருகின்றன. கடந்த நிதியாண்டின் இறுதியில் 2,220-க்கும் மேற்பட பணியாளர்களைக் கொண்டு செயல்பட்டுவரும் இந்த நிறுவனத்தின் விற்றுவரவில் 51% இந்தியாவில் இருந்தும், 49% ஏற்றுமதி வர்த்தகத்தில் இருந்தும் கிடைத்திருந்தது.

குஜராத் ஃபுளூரோ கெமிக்கல்ஸ் லிமிடெட்! (NSE SYMBOL: FLUOROCHEM, BSE CODE: 542812)

இருபதுக்கும் மேற்பட்ட தொழில்துறைகளுக்கு இந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் விற்கப்பட்டு வருகிறது. கடந்த நிதியாண்டின் இறுதியில் 15 காப்புரிமைகளைப் பதிவு செய்திருக்கும் இந்த நிறுவனம், இதே ஆண்டில் 25 புதிய தயாரிப்புகளை வெளியிட்டு உள்ளது முக்கியமான விஷய மாகும். கடந்த நிதியாண்டின் இறுதியில் இந்த நிறுவனம் 44 டிரேட் மார்க் பதிவுகளைக் கொண்டிருந்தது.

இந்த நிறுவனம் தயாரிக்கும் பொருள்கள் எனப் பார்த்தால், ஃபுளூரோ பாலிமர்கள் பிரிவில் பாலிடெட்ரா ஃபுளூரோ எத்திலின் (PTFE resin), பாலி ஃபுளூரோ அல்காக்ஸி பாலிமர் (PFA), ஃபுளூரினேட்டட் எத்திலீன் ப்ரொப்பிலீன் (FEP), ஃபுளூரோ எலோஸ்டோமர் (FPM), பாலிவினையிலிடின் புளூரைட் (PVDF) மற்றும் அடிட்டிவ்களை உற்பத்தி செய்கிறது. ஃபுளூரோ ஸ்பெஷாலிட்டி கெமிக்கல்கள் பிரிவில் ஹைட்ரஜன் ஃபுளூ ரைட்டை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படும் வேதிப் பொருள்கள், டெட்ரா ஃபுளூரோ எத்திலீனை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படும் வேதிப் பொருள்கள், பொட்டாசியம் ஃபுளூரைட்டை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படும் வேதிப்பொருள்கள் போன்ற வற்றை உற்பத்தி செய்து விற்பனை செய்துவருகிறது.

குளிரூட்ட பயன்படும் வாயுக்கள் பிரிவில் ஆர் 22, ஆர் 32, ஆர் 125, ஆர் 407 சி மற்றும் ஆர் 410 ஏ என்ற வகை வாயுக்களை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறது. கெமிக்கல்கள் பிரிவில் காஸ்ட்டிக் சோடா, கார்பன் டெட்ரா குளோரைடு, குளோரின், மெத்திலீன் டை குளோரைடு, ஹைட்ரோ குளோரிக் அமிலம், சோடியம் ஹைட்ரஜன் சல்பேட், போன்ற வேதிப் பொருள்களை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறது.

ஃபுளூரோ பாலிமர்களில் உலகத்தின் முன்னணி உற்பத்தி யாளராகத் திகழும் இந்த நிறுவனம், ஃபுளூரோ ஸ்பெஷாலிட்டி பிரிவில் சுற்றுச்சூழலுக்கு உகந்த வகை யிலான தயாரிப்புகள் பலவற்றை உற்பத்தி செய்துவருகிறது. ரெப்ரெஜிரென்ட் பிரிவில் ஹெச்எஃப்சி 22 வகை குளிரூட்டும் வாயுவை உற்பத்தி செய்வதில் இந்தியாவின் மிகப் பெரிய நிறுவனமாகத் திகழும் இந்த நிறுவனம், உலகின் முன்னணி குளிரூட்டும் இயந்திரங்கள், உற்பத்தியாளர்களைத் வாடிக்கையாளர்களாகக் கொண்டுள்ளது.

குஜராத் ஃபுளூரோ கெமிக்கல்ஸ் லிமிடெட்! (NSE SYMBOL: FLUOROCHEM, BSE CODE: 542812)

ரிஸ்க்குகள் என்னென்ன?

கெமிக்கல்கள் துறையில் செயல்படும் நிறுவனங்களுக்கே உரித்தான அத்தனை வகை ரிஸ்க்குகளும் இந்த நிறுவனத்துக்கும் உண்டு. சுற்றுச்சுழல் சார்ந்த விஷயங்கள், அரசாங்கத்தின் கொள்கை முடிவுகள், புதிய தொழில் நுட்பம், வாடிக்கையாளர்களின் மாறுபடும் தேவைகள். ஆராய்ச்சிகளில் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறமுடியாது போதல், மூலப்பொருள்களின் விலை உயர்வு, அந்நியச் செலாவணி மதிப்பு மாறுதல் போன்றவை அனைத்தும் இந்த நிறுவனத்துக்கான ரிஸ்க்குகளேயாகும்.

முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

இந்தப் பகுதி பங்குகளைப் பரிந்துரை செய்யும் பகுதி அல்ல. பங்கு முதலீடுகள் சந்தை அபாயத்துக்கு உட்பட்டது என்பதால், எந்தவொரு பங்கை வாங்கும் முன்னும் செபி பதிவு பெற்ற முதலீட்டு ஆலோசகரைக் கலந்தாலோசித்து, அந்தப் பங்கில் முதலீடு செய்வதில் இருக்கும் ரிஸ்க் உங்களுக்கு உகந்ததுதானா என்பதை முடிவுசெய்த பின் முதலீட்டு நடவடிக்கைகளை நீங்கள் எடுக்க வேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு