நடப்பு
Published:Updated:

ஜே.பி கெமிக்கல்ஸ் & பார்மசூட்டிகல்ஸ் லிமிடெட்! அறிவோம் பங்கு நிறுவனம்..!

ஜே.பி கெமிக்கல்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜே.பி கெமிக்கல்ஸ்

K N O W Y O U R C O M P A N Y - (NSE SYMBOL: JBCHEPHARM, BSE CODE: 506943)

வெற்றிகரமாகச் செயல்பட்டு வரும் ஜே.பி கெமிக்கல்ஸ் & பார்மசூட்டிகல்ஸ் நிறுவனம், 1976-ம் ஆண்டில் ஆரம்பமானது. தரமான மற்றும் எல்லோராலும் வாங்கக்கூடிய விலையுடன்கூடிய தயாரிப்புகளை இந்தியாவில் மட்டுமல்லாது, உலக அளவில் முப்பதுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துவருகிறது. மும்பையைத் தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டுவரும் இந்த நிறுவனம் உலக அளவில் உள்ள பல நாடுகளின் மருந்துத் தயாரிப்பு கண்காணித்தல் மற்றும் ஒழுங்கு செய்தலுக்கான 17 அமைப்புகளின் அங்கீகாரம் பெற்ற உற்பத்தி மையங்களைக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

நிறுவனத்தின் உருவாக்கம்...

1950-களில் ஜே.பி மோடி என்பவரால் யுனிக் பார்மசூட்டிகல் லேபரட்டரீஸ் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட கூட்டு நிறுவனமே இன்றைய ஜே.பி கெமிக்கல்ஸ் நிறுவனத்துக்கு அடித்தளமாகும். பின்னர் 1976-ம் ஆண்டில் ஜே.பி மோடி கெமிக்கல்ஸ் & பார்ம சூட்டிகல்ஸ் லிமிடெட் என கம்பெனிச் சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்டது. 1983-ம் ஆண்டில் ஜே.பி கெமிக்கல்ஸ் நிறுவனம் ஜே.பி மோடி & பிரதர்ஸ் எனும் பார்ட்னர் ஷிப் நிறுவனத்தின் பார்மா பிசினஸைக் கையகப் படுத்தியது. 1984-ம் ஆண்டில் ஜே.பி கெமிக்கல்ஸ் நிறுவனம், யுனிக் பார்மசூட்டிகல் லேபரட்டரீஸ் எனும் பார்ட்னர்ஷிப் நிறுவனத்தில் பங்குதாரராக ஆனது.

1985-ம் ஆண்டில் யுனிக் பார்ம சூட்டிகல் லேபரட்டரி நிறுவனத்தை பார்ட்னர்ஷிப்பைக் கலைத்து, அதன் சொத்துகளைக் கையகப்படுத்தியது. அதே ஆண்டில் யுனிக் கெமிக்கல்ஸ் எனும் பார்ட்னர்ஷிப் நிறுவனத் தையும் ஜே.பி மோடி கெமிக்கல்ஸ் & பார்மசூட்டிகல்ஸ் லிமிடெட் நிறுவனம் தன்னுடன் இணைத்துக் கொண்டது. மேலும், ஜே.பி மோடி கெமிக்கல்ஸ் & பார்மசூட்டிகல்ஸ் லிமிடெட் என்ற பெயர் ஜே.பி கெமிக்கல்ஸ் & பார்மசூட்டிகல்ஸ் லிமிடெட் எனp பெயர் மாற்றம் செய்யப்பட்டதும் இதே ஆண்டில்தான்.

ஜே.பி கெமிக்கல்ஸ்
ஜே.பி கெமிக்கல்ஸ்

நிறுவனத்தின் வளர்ச்சி...

1985-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ஜே.பி கெமிக்கல்ஸ் & பார்ம சூட்டிகல்ஸ் லிமிடெட் நிறுவனம் முதன்முதலாகp பொதுப் பங்குகளை வெளியிட்டது. 2000-ம் ஆண்டில் ஐஃபுட்னிக் பார்மசூட்டிகல்ஸ் லிமிடெட் மற்றும் யுனிக் பார்ம சூட்டிகல் லேபரட்டரீஸ் லிமிடெட் எனும் நிறுவனமும் ஜே.பி கெமிக்கல்ஸ் & பார்மசூட்டிகல்ஸ் லிமிடெட் நிறுவனத்துடன் இணைக்கப்பட்டன.

ஜே.பி கெமிக்கல்ஸ் நிறுவனம் ஆறு வகை ஸ்ட்ராட்டஜிக் பிசினஸ் பிரிவுகளைக் கொண்டு இயங்கி வருகிறது. ரஷ்யா மற்றும் சி.ஐ.எஸ் நாடுகளில் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது 1984-ம் ஆண்டில் ரஷ்யாவில் கால்பதித்த இந்த நிறுவனம், 1998-ம் ஆண்டில் உக்ரைனில் செயல்பட ஆரம்பித்தது. 2006-ம் ஆண்டுவாக்கில் ரஷ்யாவில் இந்த நிறுவனம் கொண்டிருந்த விநியோகத்துக்கான கட்டமைப்பு ரஷ்யாவில் இந்த நிறுவனம் சிறப்பாகச் செயல்பட உதவியது. இந்த வித வளர்ச்சியே ரஷ்யா மற்றும் சி.ஐ.எஸ் நாடுகளில் இந்த நிறுவனத்தின் மருந்து பிராண்டுகள் பிரபலமடைய காரணமாக இருந்தது.

கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக ஓ.டி.சி (OTC) வகை மருந்துகள் மற்றும் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகள் பிரிவில் ரஷ்யா மற்றும் சி.ஐ.எஸ் நாடுகளில் முக்கியமான பிராண்டாக இந்த நிறுவனம் இருந்து வந்த நிலையில், தன்னுடைய ஓ.டி.சி வியாபாரப் பிரிவை ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்துக்கு விற்பனை செய்துவிட்ட ஜே.பி கெமிக்கல்ஸ் நிறுவனம், மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகள் பிரிவை இன்று வரை தன்வசத்தே கொண்டு இயங்கி வருகிறது. ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் ஓ.டி.சி மருந்து வகைகளை ஒப்பந்த அடிப் படையில் உற்பத்தி செய்து தந்தும் வருகிறது இந்த நிறுவனம்.

சார்ட்
சார்ட்

மருந்துச் சந்தையில்...

உலக மருந்துகள் சந்தையில் கடும் சட்டதிட்டங்களால் வரையறுக்கப் பட்ட சந்தைகளுக்கு ஜெனரிக் வகை மருந்துகளையும், வளர்ந்துவரும் சந்தைகளுக்கு பிராண்டட் பார்மு லேஷன்களையும் உற்பத்தி செய்து விற்பனை செய்துவருகிறது. கேப்சூல்கள், டேப்லெட்கள், க்ரீம் மற்றும் ஆயின்மென்ட்டுகள், ஊசி மூலம் உடலினுள் செலுத்தப்படும் மருந்துகள், ஹெர்பல் மருந்துவகைகள், சர்க்கரை சேர்க்கப்பட்ட மிட்டாய் போன்ற மருந்துகள் போன்றவற்றை உற்பத்தி செய்து ஏற்றுமதி மற்றும் விற்பனை செய்துவருகிறது இந்த நிறுவனம்.

அமெரிக்கா, யு.கே, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் கனடா போன்ற நாடுகளுக்கு ஜெனரிக் மருந்து தயாரிப்புகளையும், ஆப்பிரிக்கா, தென் கிழக்கு ஆசியா, மத்திய தரைக்கடல், மத்திய மற்றும் தென் அமெரிக்க நாடுகளுக்கு பிராண்டட் ஜெனரிக் ரக மருந்து களையும் ஏற்றுமதி செய்துவரும் இந்த நிறுவனத்தின் மொத்த விற்று வரவில் கிட்டத்தட்ட 30% ஏற்றுமதி வர்த்தகத்தில் இருந்து கிடைக்கிறது. இந்தியாவில் இருக்கும் பார்மச் சூட்டிக்கல்ஸ் பார்முலேஷன் ஏற்றுமதியாளர் மற்றும் விநியோகஸ் தர்களில் முதல் 20 இடங்களுக்குள் இந்த நிறுவனம் இருந்துவருகிறது.

மருத்துவத் துறையில் சி.டி (CT) மற்றும் எம்.ஆர்.ஐ (MRI) ஸ்கேனிங் செய்யப்படும்போது உடலின் உள் உறுப்புகள் தெளிவாகத் தெரிவதற் காகப் பயன்படுத்தப்படும் கான்ட் ராஸ்ட் மீடியா எனும் மருந்துப் பொருள்களையும்/வேதிப்பொருள் களையும் உற்பத்தி செய்துவருகிறது இந்த நிறுவனம். இந்தியா மற்றும் உலக நாடுகள் பலவற்றிலும் தன்னுடைய சொந்த பிராண்டுகளில் இந்த நிறுவனம் இந்தவித வேதிப் பொருள்களை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறது.

ஆக்டிவ் பார்மசூட்டிகல் இன்க்ரிடியன்ஸை (செயல்பாடுடைய மருந்து மூலப்பொருள்கள்) உற்பத்தி செய்வதில் 36 ஆண்டுகால அனுபவம் கொண்டுள்ளது. அமெரிக்க மருந்து உற்பத்தித் தரச்சான்று நிறுவனமான எஃப்.டி.ஏ மற்றும் ஐரோப்பிய ஜி.எம்.பி போன்றவற்றின் வழிகாட்டு தல்களுக்கு உட்பட்ட உற்பத்தி மையங்களை இந்த நிறுவனம் கொண்டிருக்கிறது.

40 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து பல்வேறு வகையான மருந்துகளை உற்பத்தி செய்வதில் வெற்றியையும் முன்னணி நிலையையும் கொண்டிருத்தல், பார்முலேஷன் பிரிவில் இருக்கும் முக்கிய 300 பிராண்டுகளில் ஐந்து பிராண்டுகளைக் கொண்டிருத்தல், தொடர்ந்து சிகிச்சை அளிக்க வேண்டிய நோய்களுக்கான மருந்துகள் பிரிவில் கடந்த நிதி ஆண்டில் கிட்டத்தட்ட 29% அளவிலான விற்பனை வளர்ச்சியைக் கொண்டிருத்தல்,

நாற்பதுக்கும் மேற்பட்ட முழுமையான சட்ட வரையரைகள் கொண்ட மற்றும் குறைந்த அளவிலான சட்ட வரை யரைகள் மற்றும் ஒழுங்குபடுத்து தல்கள் கொண்ட சந்தைகளில் தன் தயாரிப்புகளை விற்பனை செய்தல், அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய எட்டு உற்பத்தி மையங்களைக் கொண்டிருத்தல், இந்தியாவில் தெரபி பிரிவில் 2,100-க்கும் மேற்பட்ட விற்பனைப் பிரதிநிதிகளுடன் செயல் பட்டுவருதல் போன்றவை இந்த நிறுவனம் குறித்த சிறப்புகள்.

ரிஸ்க்குகள் என்னென்ன?

பார்மசூட்டிகல் துறையில் செயல்படும் நிறுவனங்களுக்கே உரித்தான ரிஸ்க்குகள் அனைத்தும் இந்த நிறுவனத்துக்கும் உண்டு. அரசாங்கங்களின் மருந்து சார்ந்த கொள்கை முடிவுகள், அரசுத் தர நிர்ணய/உறுதி செய்யும் தேவை தொடர்ந்து இருப்பதும், தொழில் ரீதியான போட்டி, தொழில்நுட்ப மாறுதல், போட்டியாளர்களுக்குக் கிடைக்கக்கூடிய ஆராய்ச்சி ரீதியான அனுகூலங்கள், மூலப்பொருள்கள் விலை மாறுதல், கெமிக்கல்கள் உற்பத்தி சார்ந்திருப்பதால் சுற்றுச் சூழல் சார்ந்த கட்டுப்பாடுகள், அந்நியச் செலாவணி மதிப்பு மாறுதல் போன்றவையும் இந்த நிறுவனத்துக்கான ரிஸ்க்குகளே.

புள்ளிவிவரங்கள்
புள்ளிவிவரங்கள்

முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

இந்தப் பகுதி பங்குகளைப் பரிந்துரை செய்யும் பகுதி அல்ல. முதலீட்டாளர்களுக்குப் பங்குகளை அறிமுகப்படுத்துதல் மற்றும் கல்வியே இந்தப் பகுதியின் நோக்கம்.

பங்கு முதலீடுகள் சந்தை அபாயத்துக்கு உட்பட்டது என்பதால், எந்தவொரு பங்கை வாங்கும் முன்னும் செபி பதிவு பெற்ற முதலீட்டு ஆலோசகரைக் கலந்தாலோசித்து, அந்தப் பங்கில் முதலீடு செய்வதில் இருக்கும் ரிஸ்க் உங்களுக்கு உகந்ததுதானா என்பதை முடிவுசெய்த பின்னரே முதலீட்டு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்!