Published:Updated:

ஜே.கே பேப்பர் லிமிடெட்! (NSE SYMBOL: JKPAPER BSE CODE: 532162)

அறிவோம் பங்கு நிறுவனம்...

பிரீமியம் ஸ்டோரி

அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் காகிதங்கள், பல்வேறுவகை பூச்சுகள் கொண்ட காகிதங்கள் மற்றும் பொருள் களைப் பொட்டலமாகக் கட்ட பயன்படும் பேக்கேஜிங் பேப்பர்கள் / போர்டுகள் போன்ற வற்றை உற்பத்தி செய்யும் நிறுவனம் ஜே.கே பேப்பர் லிமிடெட். 1962-ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனத்தை இந்த வாரம் அறிமுகம் செய்கிறோம்.

இந்த நிறுவனம் ஜே.கே குழுமத்தின் ஒரு அங்கமாகும். ஜே.கே குழுமம் சிமென்ட், டயர், அக்ரி ஜெனடிக்ஸ், பால் பொருள்கள் உற்பத்தி, விபெல்ட்கள், ஆயில் சீல்கள் மற்றும் பவர் டிரான்ஸ்மிஷன் சிஸ்டம்ஸ், மருத்துவமனை, கிளினிக்கல் ரிசர்ச், டிஃபென்ஸ் எலெக்ட் ரானிக்ஸ் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகிற குழுமமாகும்.

ஜே.கே பேப்பர் லிமிடெட்! (NSE SYMBOL: JKPAPER BSE CODE: 532162)

நிறுவனத்தின் வளர்ச்சி...

1962-ம் ஆண்டு காகித உற்பத்தியை ஆரம்பித்தபோதிலும் இந்த நிறுவனத்தின் ஆரம்பப்புள்ளி, 1938-ம் வருடத்தில் போபாலில் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டொன்றுக்கு 3,600 டன் அளவிலான உற்பத்தித்திறன் கொண்ட ஸ்ட்ரா போர்டு உற்பத்தி நிலையம்தான். 1962-ம் ஆண்டில் ஆண்டொன்றுக்கு 18,000 டன் என்ற அளவில் காகிதக்கூழ் மற்றும் காகித உற்பத்திக்கான ஒருங்கிணைந்த நிர்மாணிக்கப் பட்ட உற்பத்தி மையத்துடன் ஆரம்பிக்கப் பட்டது இந்த நிறுவனம்.

1992-ம் ஆண்டில் இந்த நிறுவனம் குஜராத்தில் செயல்பட்டுவந்த சென்ட்ரல் பல்ப் மில்ஸ் எனும் காகிதக்கூழ் நிறுவனத்தைக் கையகப் படுத்தியது. 2005-ம் ஆண்டில் பேப்பர்களில் பூச்சுகளைச் செய்யும் மையத்தை நிறுவிய இந்த நிறுவனம், 2007-ம் ஆண்டில் குஜராத்தில் பிரீமியம் பேக்கேஜிங் போர்டை உற்பத்தி செய்யும் மையத்தை நிறுவியது. 2013-ம் ஆண்டில் அதிநவீன தொழில்நுட்பமான ஃபைபர் லைன் மற்றும் அதிவேக காகித உற்பத்தி மையத்தை (ஆண்டொன்றுக்கு 1,65,000 மெட்ரிக் டன் என்ற உற்பத்திக்கான அளவில்) நிறுவியது. நாளடைவில் பல்வேறு விரிவாக்கங்கள் செய்யப்பட்டு, 50 ஜி.எஸ்.எம் முதல் 300 ஜி.எஸ்.எம் வரையிலான தன்மை கொண்ட காகிதம் மற்றும் அட்டைகளை உற்பத்தி செய்யும் மையத்தைக் கொண்டுள்ள இந்த நிறுவனம், இன்றைக்கு ஒடிசாவில் ராயகடா எனும் இடத்திலும், குஜாரத்தில் சோன்கந்த் எனும் இடத்திலுமாக இரண்டு காகிதக்கூழ் உற்பத்தி மற்றும் காகித உற்பத்திக்கான ஒருங்கிணைந்த உற்பத்தி மையங்களைக் கொண்டு இயங்குகிறது. இந்த நிறுவனத்தின் உற்பத்தி மையங்கள் மூலப்பொருள்கள் கிடைக்கும் இடங்களுக்கு அருகே செயல்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.

2018-ம் ஆண்டில் தெலங்கானா மாநிலத்தில் சிர்ப்பூர் பேப்பர் மில்ஸ் லிமிடெட் எனும் நிறுவனத்தைக் கையகப்படுத்திய இந்த நிறுவனம், ஏற்கெனவே செயல் பட்டுவரும் இந்த நிறுவனத்தின் இரண்டு உற்பத்தி மையங்களையும் சேர்த்து ஆண்டொன்றுக்கு கிட்டத்தட்ட 5,91,000 மெட்ரிக் டன் அளவில் விற்பனை செய்யும் காகித உற்பத்திக்கான நிர்மாணிக்கப்பட்ட உற்பத்தித்திறனைக் கொண்டு இயங்கிவருகிறது.

காகிதக்கூழ் உற்பத்தியில் இந்த நிறுவனத்தின் நிர்மாணிக்கப் பட்ட உற்பத்தி மையம் ஆண்டொன்றுக்கு 3,86,000 டன் என்ற அளவில் இருக்கிறது.

நிறுவனத்தின் சிறப்பு...

காகிதத்தை ஒரு பிராண்டாக மாற்றியதில் முன்னோடி நிறுவனமாகத் திகழும் இந்த நிறுவனம், இன்றைக்கு நகல் எடுப்பதற்கு உதவும் (Photocopy) காகிதம் மற்றும் பேக்கேஜிங் செய்வதற்கான அட்டைகளை அமெரிக்கா, மத்திய கிழக்கு, தென் கிழக்கு ஆசியா, சார்க் மற்றும் ஆப்பிரிக்க கண்டங்களில் உள்ள அறுபதுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துவருவது குறிப்பிடத்தக்கது.

அகில இந்திய ரீதியாக இந்த நிறுவனம் கொண்டிருக்கும் நான்கு மண்டல அலுவலகங்கள், 15 டெப்போக்கள், 357 பார்ட்னர்கள் (மொத்த விற்பனையாளர்கள், சில்லறை விநியோகஸ்தர்கள், நேரடி மொத்த வாடிக்கையாளர்கள் என), 4,000 டீலர்கள் ஒருங்கிணைந்து இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளை வாடிக்கையாளர்களிடம் சேர்க்கப்படுகிறது.

பிராண்டுகள் ரீதியாகப் பார்த்தால், அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் காகிதங் களை ஜே.கே.செடார், ஜே.கே காப்பியர், ஜே.கே ஈசி காப்பியர், ஜே.கே ஸ்பார்க்கிள் என 11 பிராண்டுகளில் சந்தைப் படுத்தி வருகிறது இந்த நிறுவனம். பேக்கேஜிங் போர்டுகளில் ஜே.கே டஃப் கோட், ஜே.கே அல்ட்டிமா, ஜே.கே டஃப் பேக், ஜே.கே ஐவி ஃபோர்டு, ஜே.கே என்டியூரா, ஜே.கே டஃப்கப் போன்ற பிராண்டுகளில் தன்னுடைய தயாரிப்புகளை சந்தைப்படுத்தி வருகிறது.

அச்சடித்தல் மற்றும் எழுது வதற்கான காகிதங்களை ஜே.கே கோட், ஜே.கே லெட்ஜர், ஜே.கே எகோசிப் எனப் பல பிராண்டு களில் சந்தைப்படுத்தி வருகிறது.

கடந்த நிதியாண்டின் இறுதி நிலவரப்படி, காப்பியர் பேப்பர் களில் கிட்டத்தட்ட 25% சந்தைப் பங்களிப்பையும், பூச்சுகள் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும் கோட்டட் பேப்பர்களில் (coated paper) கிட்டத்தட்ட 12% சந்தைப் பங்களிப்பையும், பேக்கேஜிங் போர்டுகளில் சுமார் 13% சந்தைப் பங்களிப்பையும் கொண்டிருந்தது ஜே.கே பேப்பர் நிறுவனம். கடந்த நிதியாண்டில் இந்த நிறுவனம் 2,655 பணியாளர்களைக்கொண்டு இயங்கி ரூ.2,969 கோடி அளவிலான விற்றுவரவைப் பெற்றிருந்தது.

ஜே.கே பேப்பர் லிமிடெட்! (NSE SYMBOL: JKPAPER BSE CODE: 532162)

நிறுவனத்தின் ரிஸ்க்குகள்...

கோவிட் 19-க்கு முன்னால் உலக அளவிலான பேப்பர் மற்றும் பேக்கேஜிங் போர்டுகளின் சந்தை அளவு ஆண்டொன்றுக்கு 1% (சி.ஏ.ஜி.ஆர்) என்ற ரீதியில் வளர்ந்து வந்தது. இந்தச் சந்தையின் தேவையானது உலக அளவில் ஆண்டொன்றுக்கு 419 மில்லியன் டன் என்ற அளவில் இருந்து வந்தது. இந்தத் தேவையில் ஆசிய சந்தைகளின் பங்களிப்பு கிட்டத் தட்ட 40% அளவாக இருந்து வருகிறது. 2020-ம் ஆண்டில் உலக அளவில் கிட்டத்தட்ட 6% அளவு சுருங்கிய இந்த பேப்பர் மற்றும் பேப்பர் போர்டுகளின் சந்தை (தேவை) மீண்டும் மெள்ள வளர்வதற்கான வாய்ப்புகள் எதிர் காலத்தில் கோவிட் 19 பாதிப்பு எந்த அளவுக்கு குறைகிறது என்பதைப் பொறுத்தே இருக்கிறது.

இந்தியா உலக அளவில் பேப்பர் தேவையில் 4% மட்டுமே கொண்டிருக்கிறது. கோவிட் 19-க்கு முன்னால் இந்திய பேப்பர் மற்றும் பேக்கேஜிங் சந்தை ஆண்டொன்றுக்கு சுமார் 6.2% (சி.ஏ.ஜி.ஆர்) வளர்ச்சியைக் கொண்டிருந்தது. 2020-21-ல் இந்த சந்தையின் அளவு சுமார் 15% சுருங்கியுள்ளதாக மதிப்பீடுகள் கூறுகின்றன. இருப்பினும் நீண்ட கால அடிப்படையில் இந்திய பேப்பர் மற்றும் பேக்கேஜிங் போர்டு சந்தை வளர்ச்சியடைவதற்கான வாய்ப்புகள் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

ஜே.கே பேப்பர் லிமிடெட்! (NSE SYMBOL: JKPAPER BSE CODE: 532162)

ரிஸ்க்குகள் என்னென்ன?

காகிதக்கூழ் மற்றும் காகித உற்பத்தியில் ஈடுபட்டுவரும் நிறுவனங்களுக்கே உரித்தான அனைத்து வகை ரிஸ்க்குகளும் இந்த நிறுவனத்துக்கும் உண்டு எனலாம். நவீன தொழில் நுட்பம், தயாரிக்கும் பொருள்களின் உபயோகம் குறைதல்/மாறுதல், மூலப்பொருள்களின் விலை ஏற்றம், உற்பத்தி செய்ய உபயோகப்படுத்தப்படும் ஏனைய இடுபொருள்களின் விலை ஏற்றம், அரசின் சுற்றுச்சூழல் சார்ந்த கொள்கை முடிவுகள், அந்நியச் செலாவணி மதிப்பு மாறுதல் போன்ற வையும் இந்த நிறுவனத்துக்கான ரிஸ்க்குகளே.

முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

இந்தப் பகுதி பங்குகளைப் பரிந்துரை செய்யும் பகுதி அல்ல. முதலீட்டாளர்களுக்குப் பங்குகளை அறிமுகப் படுத்துதல் மற்றும் கல்வியே இந்தப் பகுதியின் நோக்கம். பங்கு முதலீடுகள் சந்தை அபாயத்துக்கு உட்பட்டது என்பதால், எந்தவொரு பங்கை வாங்கும் முன்னும் செபி பதிவு பெற்ற முதலீட்டு ஆலோசகரைக் கலந்தாலோசித்து, அந்தப் பங்கில் முதலீடு செய்வதில் இருக்கும் ரிஸ்க் உங்களுக்கு உகந்ததுதானா என்பதை முடிவுசெய்த பின்னரே முதலீட்டு நடவடிக்கைகளை நீங்கள் எடுக்க வேண்டும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு