பங்குச் சந்தை
நடப்பு
தொடர்கள்
Published:Updated:

ஜே.எம்.சி புராஜெக்ட்ஸ் (இந்தியா) லிமிடெட்! (BSE CODE: 522263, NSE SYMBOL: JMCPROJECT)

ஜே.எம்.சி புராஜெக்ட்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜே.எம்.சி புராஜெக்ட்ஸ்

கம்பெனி பயோடேட்டா

இந்த வாரம் நாம் பார்க்கப்போகும் நிறுவனம் இந்தியாவின் முன்னணி சிவில் கட்டுமானம் மற்றும் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் இ.பி.சி (Engineering, Procurement and Construction) துறையில் செயல்பட்டுவரும் நிறுவனமான ஜே.எம்.சி புராஜெக்ட்ஸ் (இந்தியா) லிமிடெட்.

நிறுவனத்தின் பணிகள்...

கடந்த 30 ஆண்டுக் காலத்தில் ஜே.எம்.சி புராஜெக்ட்ஸ் நிறுவனம் கட்டடங்கள், தொழிற்சாலைகள், குடிநீர் கொண்டு செல் வதற்கான கட்டுமானங்கள், மெட்ரோ வழித் தடங்கள் மற்றும் சாலைகளைக் கட்டுமானம் செய்வதில் தேர்ந்த அனுபவத்தைப் பெற்று சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் கட்டடங்கள் மற்றும் தொழிற் சாலைகள், இன்ஃப்ராஸ்ட்ரக்சர் மற்றும் தண்ணீர் மேலாண்மை செய்வதற்கான கட்டுமானங்கள் என்ற மூன்று பெரும் பிரிவுகளில் செயல்பட்டு வருகிறது.

கட்டடங்கள் மற்றும் தொழிற்சாலைகள் பிரிவில் குடியிருப்புகள், நிறுவனங்கள் / அலுவலகங்கள், வர்த்தக நிறுவனங்களுக்கான கட்டடங்கள், கல்வி மற்றும் ஏனைய நிறுவனங்களுக்கான கட்டடங்கள், வணிகப் பயன்பாட்டுக்கான கட்டுமானங்கள், தொழிற்சாலைகள் மற்றும் உற்பத்தி ஆலைகள் போன்றவற்றைக் கட்டுமானம் செய்து தருகிறது இந்த நிறுவனம்.

இன்ஃப்ராஸ்ட்ரக்சர் பிரிவில் சாலைகள், நெடுஞ்சாலைகள் மற்றும் எக்ஸ்பிரஸ் ஹைவேக்கள், மேம்பாலங்கள் மற்றும் பாலங்கள், மெட்ரோ ரயிலுக்கான தடங்கள், அதிவேக ரயில்கள் ஓடுவதற்கான இருப்புப்பாதைக் கட்டுமானங்கள், விமான நிலையங்கள் போன்ற வற்றை கட்டுமானம் செய்துதருகிறது.

ஜே.எம்.சி புராஜெக்ட்ஸ் (இந்தியா) லிமிடெட்! (BSE CODE: 522263, NSE SYMBOL: JMCPROJECT)

நிறுவனத்தின் சிறப்புகள்...

இந்த நிறுவனம் கட்டுமானம் மற்றும் தொழிற்சாலைகளை ஒப்பந்த ரீதியில் கட்டித் தருவதில் ஒரு முன்னணி நிறுவனமாகத் திகழ்கிறது. பல தசாப்தங்களாக இந்தத் தொழில் பிரிவில் செயல் பட்டு வருவதால், தரமான கட்டுமானங்களை நிர்ணயிக்கப்பட்ட காலகட்டத்துக்குள் தவறாமல் கட்டி முடித்துக் கொடுக்கும் திறனைத் தன்வசம் கொண்டிருக்கிறது. இந்தக் குணாதிசயமே தன் வாடிக்கை யாளர்களுடன் நீண்டநாள் அடிப்படையிலான தொழில் ரீதியிலான தொடர்பில் இருக்கவும் மீண்டும் மீண்டும் அவர்களிடம் இருந்து கட்டுமானத்துக்கான ஆர்டர்களைப் பெறவும் உதவியாக இருக்கிறது.

இன்ஃப்ராஸ்ட்ரக்சர் பிரிவில் இந்தியாவின் முக்கியமான பல புராஜெக்ட்டுகளைக் கையாண்டுள்ளது இந்த நிறுவனம். ஹைவேக்கள், எக்ஸ்பிரஸ் ஹைவேக்களில் ஆரம்பித்து குகைப் பாதைகள் (Tunnels) மற்றும் பாலங்கள் வரையிலுமான பல்வேறு கட்டுமானப் பணிகளை இந்த நிறுவனம் கடந்த காலத்தில் வெற்றிகரமாகச் செய்து முடித்துள்ளது. இது தவிர, மக்கள் அதிக அளவில் பயன்படுத்தும் பொதுப் போக்குவரத்துகளான ரயில்வே மற்றும் மெட்ரோக்களுக்கான வழித்தடங்களை அமைத்துத் தருகிற பணியையும் செய்து தருகிறது இந்த நிறுவனம்.

தரத்தில் சிறந்த கட்டுமானங்களைக் குறைந்த பொருள் செலவில் செய்துதரும் நோக்கத்துடன் செயல்பட்டு வருவதாகக் கூறும் இந்த நிறுவனம் பி.பி.பி (PPP) எனும் பப்ளிக் பிரைவேட் பார்ட்னர் ஷிப் முறையிலான கட்டுமானங்களைச் செய்து தருவதில் சீரிய அனுபவத்தைக் கொண்டு செயல் பட்டு வருகிறது. கடந்த நிதியாண்டில் மாலத்தீவுகள் மற்றும் மங்கோலியா போன்ற நாடுகளிலும் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் டெவலப்மென்ட் புராஜெக்ட்டுகளை செய்ய ஆரம்பித்துள்ளது.

2021-22 நிதியாண்டில் மட்டும் கிட்டத்தட்ட ரூ.3,200 கோடி அளவிலான தண்ணீர் மேலாண் மைக்கான கட்டுமானங்களைச் செய்வதற்கான ஒப்பந்தங்களை இந்த நிறுவனம் வெற்றிகரமாகக் கைப்பற்றியுள்ளது. கடந்த நிதியாண்டின் இறுதி நிலவரப்படி, இந்த நிறுவனமானது 51 தண்ணீர் மேலாண்மைக்கான பல்வேறு விதமான புராஜெக்ட்டுகளைக் கட்டுமானம் செய்து முடித்துத் தந்துள்ளது. மேலும், இந்த நிறுவனம் 31 கட்டுமானங்களை தற்சமயம் (பல்வேறு படி நிலைகளில்) செய்துகொண்டிருப்பதும் குறிப்பிடத் தக்கதொரு விஷயமாகும்.

ஜே.எம்.சி புராஜெக்ட்ஸ் (இந்தியா) லிமிடெட்! (BSE CODE: 522263, NSE SYMBOL: JMCPROJECT)

வளர்ச்சி நடவடிக்கைகள்...

இந்த நிறுவனம் கல்பதரு பவர் டிரான்ஸ்மிஷன் லிமிடெட் நிறுவனத்துடன் இணைவதற் கான (அமால்கமேஷன்) நடவடிக் கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பிப்ரவரி 22, 2022 அன்று கல்பதரு பவர் டிரான்ஸ் மிஷன் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர்கள் இந்த இணைப்புக்கு ஒப்புதல் அளித்தனர். இந்த இணைப்பின்படி, இந்த நிறுவனத் தில் பங்குகளை வைத்திருக்கும் ஷேர் ஹோல்டர்களுக்கு 4:1 என்ற அளவீட்டில் கல்பதரு பவர் டிரான்ஸ்மிஷன் பங்குகள் வழங்கப்படும். இந்த இணைப்பு நடவடிக்கையில் செய்யப்பட வேண்டிய விஷயங்கள் பலவும் பல்வேறு படிநிலைகளில் இருக் கின்றன. இந்த இணைப்பானது இந்த நிதியாண்டின் இறுதிக்குள் (Q4FY23) நடந்து முடியும் என்று எதிர்பார்ப்பதாக இந்த நிறுவனம் சமீபத்தில் கூறியுள்ளது.

இந்த நிறுவனத்தின் வாடிக்கை யாளர்களாக வர்த்தக ரீதியான கட்டுமானங்கள் பிரிவில் பிரஸ்டீஜ் குழுமம், பவர் கிரிட் கார்ப்பரேஷன், ரைட்ஸ் (RITES), சலர்பூரியா, ஜாகுவார் உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்களும், இன்ஸ்ட்டி டியூஷனல் பிரிவில் சி.பி.டபிள்யூ.டி, இன்ஜினீயர்ஸ் இந்தியா, ஐ.ஐ.எம் கோழிக்கோடு, டெல்லி ஜிடீஷயல் அகாடமி உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்களும், குடியிருப்புகள் கட்டுமானப் பிரிவில் கல்பதரு, மந்த்ரி, டாடா ஹவுஸிங் உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்களும் இருந்து வருகின்றன.

தொழிற்சாலைகள் கட்டுமானப் பிரிவில் மாருதி சுஸூகி, நிர்மா, அம்புஜா சிமென்ட், சீமென்ஸ், சைடஸ் கெடில்லா, கோகோ-கோலா, அரவிந்த், வர்தமான் உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்கள் வாடிக்கையாளர் களாக இருந்து வருகின்றன. இன்ஃப்ராஸ்ட்ரக்சர் பிரிவில் பெங்களூரு டெவலப்மென்ட் அத்தாரிட்டி, எம்.எஸ்.ஆர்.டி.சி, இந்தூர் முனிசிபல் கார்ப்பரேஷன், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம், என்.ஹெச்.ஏ.ஐ உள்ளிட பல நிறுவனங்கள் வாடிக்கையாளர் களாக இருந்துள்ளன.

மனிதவள வளர்ச்சிக்கு முக்கியத் துவம் தருகிற இந்த நிறுவனத்தில் கடந்த நிதியாண்டின் இறுதி நிலவரப்படி, 4223 பேர் பணிபுரிந்து வந்தனர். இந்த நிறுவனத்தின் டிசைன் பிரிவில் 75 பணியாளர் கள் பணிபுரிந்து வருகின்றனர். மேலும், நம் நாட்டிலுள்ள முன்னணி கல்வி நிறுவனங்களுடன் அறிவுசார் விஷயங்களுக்காக இணைந்து செயல்பட்டு வருகிறது.

ஜே.எம்.சி புராஜெக்ட்ஸ் (இந்தியா) லிமிடெட்! (BSE CODE: 522263, NSE SYMBOL: JMCPROJECT)

ரிஸ்க்குகள் என்னென்ன?

கட்டுமானத்துறை மற்றும் ஒப்பந்த ரீதியிலான இ.பி.சி பணிகளைச் செய்யும் நிறுவனங்களுக்கு உரித்தான ரிஸ்க்குகள் அனைத்தும் இந்த நிறுவனத்துக்கும் உண்டு. கட்டுமானத்துறை என்பது பொருளாதார வளர்ச்சியை முழுக்க முழுக்க சார்ந்தே வளர்ச்சி அடைகிற ஒரு துறை ஆகும். எனவே, ஏதாவது ஒரு காரணத்தால் பொருளாதாரம் எதிர்பார்த்த அளவிலான வளர்ச்சியை எட்டாது போனாலோ, தேக்க நிலையைச் சந்தித்தாலோ அது இந்த நிறுவனத்தின் செயல்பாட்டைக் கணிசமான அளவில் பாதிப்படையச் செய்யும்.

விலைவாசி ஏற்றம், அந்நிய செலாவணி மதிப்பு மாறுதல், தொழிலில் அறிமுகப்படுத்தப்படும் அதி நவீனத் தொழில்நுட்பம் போன்றவையும் இந்த நிறுவனத்துக்கான ரிஸ்க்குகளே ஆகும். மேலும், இந்த நிறுவனம் கல்பதரு பவர் டிரான்ஸ்மிஷன் லிமிடெட் நிறுவனத்துடன் இணைவதற்கான முயற்சிகளும் நடைமுறையில் இருக்கிறது என்பதையும் முதலீட்டாளர்கள் நினைவில் கொள்ள வேண்டும். இந்த இணைப்பு வெற்றிகரமாக நிறைவேறிய பின் வரக்கூடிய மாற்றங்களையும் முதலீட்டாளர்கள் கருத்தில் கொண்டே செயல்பட வேண்டும்.

முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

இந்தப் பகுதி பங்குகளைப் பரிந்துரை செய்யும் பகுதி அல்ல. முதலீட்டாளர்களுக்குப் பங்குகளை அறிமுகப் படுத்துதல் மற்றும் கல்வியே இந்தப் பகுதியின் நோக்கம். பங்கு முதலீடுகள் சந்தை அபாயத்துக்கு உட்பட்டது என்பதால், எந்தவொரு பங்கை வாங்கும் முன்னும் செபி பதிவு பெற்ற முதலீட்டு ஆலோசகரைக் கலந்தாலோசித்து, அந்தப் பங்கில் முதலீடு செய்வதில் இருக்கும் ரிஸ்க் உங்களுக்கு உகந்ததுதானா என்பதை முடிவுசெய்த பின்னரே முதலீட்டு நடவடிக்கைகளை நீங்கள் எடுக்க வேண்டும்!