Published:Updated:

மெட்ரோ பிராண்ட்ஸ் லிமிடெட்! (BSE Code: 543426 NSE Symbol: METROBRAND)

மெட்ரோ பிராண்ட்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
மெட்ரோ பிராண்ட்ஸ்

கம்பெனி பயோடேட்டா

மெட்ரோ பிராண்ட்ஸ் லிமிடெட்! (BSE Code: 543426 NSE Symbol: METROBRAND)

கம்பெனி பயோடேட்டா

Published:Updated:
மெட்ரோ பிராண்ட்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
மெட்ரோ பிராண்ட்ஸ்

இந்த வாரம் நாம் பார்க்கப்போகும் பங்கு நிறுவனம், இந்தியாவில் காலணிகள் மற்றும் காலணிகள் சார்ந்த பல தயாரிப்புகளை (Accessories) உற்பத்தி செய்வதில் மிகப் பெரிய நிறுவனமாகத் திகழும் மெட்ரோ பிராண்ட்ஸ் லிமிடெட் என்னும் நிறுவனத்தினுடையது.

நிறுவனத்தின் வளர்ச்சி...

1955-ம் ஆண்டில் மெட்ரோ நிறுவனத்தின் முதல் ஸ்டோர் மும்பையில் ஆரம்பிக்கப்பட்டது.இன்றைக்கு 65 ஆண்டுக்கால அனுபவத்துடன் 30 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 142 நகரங்களில் 624 ஸ்டோர்களுடன் (மார்ச் 31, 2022 நிலவரப்படி 231 மெட்ரோ ஸ்டோர்ஸ், 162 மோச்சி ஸ்டோர்ஸ், 178 க்ராக்ஸ் ஸ்டோர்ஸ், 53 வால்க்வே ஸ்டோர்ஸ் என்கிற அடிப்படையில்) வெற்றிகரமாக இயங்கி வருகிறது. இந்த ஸ்டோர்கள் தென் இந்தியாவில் 32% எண்ணிக்கையும், மேற்கு இந்தியாவில் இந்தியாவில் 30% எண்ணிக்கையும், வட இந்தியாவில் 25% எண்ணிக்கையும், கிழக்கு இந்தியாவில் 13 எண்ணிக்கையும் கொண்டுள்ளன.

1977-ம் ஆண்டில் இந்த நிறுவனம் கம்பெனி சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்டது. 2000-ம் ஆண்டில் மோச்சி என்ற பிராண்டில் மல்ட்டி பிராண்ட் அவுட்லெட்டுகளை நிறுவ ஆரம்பித்த இந்த நிறுவனம், 2009-ம் ஆண்டில் வால்க்வே என்னும் பிராண்டிலும் மல்ட்டி பிராண்ட் அவுட்லெட்டுகளை நிறுவத் தொடங்கியது. 2010-ம் ஆண்டில் இ-காமர்ஸ் வர்த்தகத்தில் ஈடுபட ஆரம்பித்தது இந்த நிறுவனம். அதே ஆண்டில் நூறு ஸ்டோர்கள் என்ற இலக்கை எட்டியது.

2012-ம் ஆண்டில் 200 ஸ்டோர்கள் என்ற இலக்கை எட்டிய இந்த நிறுவனம், 2015-ம் ஆண்டில் க்ரோக்ஸ் (CROCS) என்ற பிராண்டைக் கொண்டிருக்கும் நிறுவனத்துடன் கூட்டணி அமைத்தது. 2021-ம் ஆண்டில் ஃபிட்-ப்ளாப் பிராண்டுடன் பிரத்யேக உரிமைக்கான கூட்டணியை அமைத்த இந்த நிறுவனம், 60 ஸ்டோர்கள் என்ற இலக்கையும் இதே ஆண்டில் எட்டியது. இதே ஆண்டில்தான் மெட்ரோ பிராண்ட்ஸ் நிறுவனம் மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது.

2022-ம் ஆண்டில் ஃபிட்-ப்ளாப் பிராண்டுக்கான முதலாவது எக்ஸ்க்ளுசிவ் பிராண்ட் ஸ்டோர்களைத் தொடங்கியது இந்த நிறுவனம். தற்சமயம், மெட்ரோ பிராண்ட்ஸ் நிறுவனம் மெட்ரோ ஷூஸ், மோச்சி, வால்க்வே, டாவின்சி, க்ராக்ஸ், ஃபிட்-ப்ளாப் மற்றும் சீமோ என்ற பிராண்டுகளில் காலணிகளை உற்பத்தி செய்து விற்பனை செய்துவருகிறது. கம்பெனிக்கு சொந்தமான கம்பெனியே நேரிடையாக நடத்துகிற ஸ்டோர்களைக் கொண்டு செயல்படுவதே இந்த நிறுவனத்தின் நோக்கமாக இருக்கிறது.

மெட்ரோ பிராண்ட்ஸ் லிமிடெட்!
(BSE Code: 543426 NSE Symbol: METROBRAND)

நிறுவனத்தின் பிசினஸ் மாடல்...

அஸெட்-லைட் மாடல் என்று அழைக்கப்படும் குறைந்தபட்ச அளவிலான அஸெட்டுகளை (இயந்திரங்கள், உற்பத்தி வசதிகள் போன்றவை) தன்வசத்தே கொண்டும் பெரும்பான்மையான தயாரிப்புகளை மூன்றாம் நபர் உற்பத்தி மையத்தில் இருந்து பெற்று, திறம்பட தன்னுடைய வியாபாரத்தை நடத்திவருகிறது இந்த நிறுவனம்.

மார்ச் 31, 2022-ல் முடிவடைந்த நிதியாண்டில் இந்த நிறுவனம் நடத்திவரும் மல்ட்டி பிராண்ட் ஸ்டோர்களில் இருந்துவருகிற விற்றுவரவில் 73% அளவிலான விற்றுவரவானது இந்த நிறுவனத் தின் சொந்த பிராண்டில் உற்பத்தி செய்யப்பட்டு, விற்பனை செய்யப்படும் காலணிகள் மற்றும் ஆக்சஸரிகளின் பங்களிப்பு இருந்தன.

இந்த நிறுவனம் ரீடெயில் துறையில் வெற்றிகர மாகச் செயல்படக் காரணம், காலத்துக்கு ஏற்ப மாறுபடும் வாடிக்கையாளர்களின் ரசனையை முன்கூட்டியே கணித்து தன்னுடைய தயாரிப்பு களை அதற்கேற்ப மாற்றி அமைப்பதுதான்.

மெட்ரோ பிராண்ட்ஸ் லிமிடெட்!
(BSE Code: 543426 NSE Symbol: METROBRAND)

வியாபார வாய்ப்புகள் எப்படி?

உலக அளவில் இந்தியா இரண்டாவது பெரிய காலணிகள் உற்பத்தி செய்யும் நாடாக இருக்கிறது. உலகத்தின் ஒட்டுமொத்த காலணி உற்பத்திக்கான நிர்மாணிக்கப்பட்ட உற்பத்தி மையங்களில் (ஜோடி காலணிகள் என்ற அளவீட்டில்) கிட்டத் தட்ட பாதி அளவிலான உற்பத்தி மையத்தை தன்வசத்தே கொண்டிருக்கும் சீனா, இதில் முதலிடத்தை வகிக்கிறது. காலணி துறையில் ஈடுபட்டிருக்கும் நிறுவனங்களின் கூட்டமைப்பின் மதிப்பீட்டின் படி, 2019-ம் ஆண்டு நிலவரப்படி, ஆண்டொன்றுக்கு 24.3 பில்லியன் ஜோடி காலணிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

ரீடெயில் துறையில் ஒரு பிரிவான காலணிகள் பிரிவில் வர்த்தகத்துக்கான வாய்ப்புகள் எதிர்வரும் காலத்தில் அதிகரிக் கும் என்றே எதிர்பார்க்கலாம். 2020 நிதியாண்டில் ஒட்டு மொத்த ரீடெயில் துறையில் காலணி விற்பனையின் பங்களிப் பானது கிட்டத்தட்ட 1.5% அளவி லேயே இருந்தது. அதிகரித்துவரும் தனிநபர் வருமானம், பொருளா தார வளர்ச்சி, பொருள்கள் வாங்கும் அனுபவத்தில் நடந்து வரும் செறிவூட்டுதல் போன்ற வற்றால் இந்தியாவில் காலணி வர்த்தகம் என்பது சீராக வளர்ச்சியை சந்தித்து வருகிறது.

2015-ம் ஆண்டில் ரூபாய் மதிப்பீட்டின் அடிப்படையில் காலணிகளின் விற்பனை ரூ.60,000 கோடி அளவில் இருந்தது. இது படிப்படியாக வளர்ச்சி அடைந்து 2020 நிதியாண்டில் கிட்டத்தட்ட ரூ.96,00,000 என்ற அளவீட்டை எட்டியது. இது 8.8% ஆண்டுக் கூட்டு வளர்ச்சி (CAGR) ஆகும்.

இந்தியக் காலணிகளின் சந்தையில் பாட்டா, காதிம், லிபர்ட்டி, மெட்ரோ, பாரகன், ரிலாக்ஸோ, மிஸ்ரா இண்டர் நேஷனல் போன்ற பிராண்டுகள்/நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. ஆனால், கோவிட்-19 காரணமாக (லாக்டெளன் உள்ளிட்ட பல காரணங்களால்) கிட்டத்தட்ட 31% அளவு 2021 நிதியாண்டில் சரிவை சந்தித்தது. கோவிட் 19-க் குப் பிந்தைய காலகட்டத்தில் படிப்படியாக வளர்ச்சி அடைந்து வருகிறது. 2022-2025 காலகட்டத்தில் கிட்டத்தட்ட 15% முதல் 17% அளவிலான வளர்ச்சியை (CAGR) கொண்டிருக்க வாய்ப்புள்ளது என்று இந்தத் துறை சார்ந்த ஆய்வுகள் சொல்கின்றன.

காலணிகள் குறித்த மக்களின் மனநிலை மாற்றமே இந்த வளர்ச் சிக்குக் காரணம். உதாரணமாக, ஷூ என்பது முன்பு ஒரு வேல்யூ பர்ச்சேஸாக (அதற்கான தேவைகள் இருக்கும்போது மட்டுமே வாங்கப் படும் பொருளாக) இருந்தது. ஆனால், சமீபகாலத்தில் ஷூ என்பது ஒரு லைஃப் ஸ்டைல் பொருளாக மாறிவிட்டது. இதற்கு மக்களின் மனநிலை மாற்றமே காரணம்.

இது தவிர, ஜவுளித் துறையைப் போன்றே பிரைவேட் லேபிள் பிராண்டுகளின் பங்களிப்பும் சற்று அதிகமாகவே இந்தத் துறையில் இருக்கிறது. கோவிட்-19-க்குப் பிந்தைய காலகட்டத்தில் விளை யாட்டு மற்றும் விளையாட்டு சார்ந்த கேளிக்கைக்குத் தேவைப் படும் காலணிகளின் விற்பனை அதிகரிக்க வாய்ப்புள்ளது. உடல்நலம் பேணுவதில் இன்றைய இளைஞர்களுக்கு கோவிட் 19-க்குப் பிந்தைய காலகட்டத்தில் ஆர்வம் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்கிற காரணத்தால் இந்த நிலை உருவாக வாய்ப்பு உள்ளது.

மெட்ரோ பிராண்ட்ஸ் லிமிடெட்!
(BSE Code: 543426 NSE Symbol: METROBRAND)

ரிஸ்க்குகள் என்னென்ன?

காலணி தயாரிப்பு மற்றும் வர்த்தகத்தில் ஈடுபடுகிற நிறுவனங்களுக்கு உரித்தான அனைத்து வகையான ரிஸ்க்குகளும் இந்த நிறுவனத்துக்குப் பொருந்தும். மக்களின் ரசனையில் ஏற்படும் திடீர் மாறுதல்கள், போட்டியாளர்கள் அந்த ரசனை மாறுதலைக் கணிப்பதில் காணும் வெற்றி, மூலப்பொருள்களின் விலை உயர்வு, அந்நியச் செலாவணி மதிப்பு மாறுதல் போன்றவையும் இந்த நிறுவனத்துக்கான ரிஸ்க்குகளே.

பிரீமியம் ரக தயாரிப்புகளின் விற்பனையானது பொருளாதார வளர்ச்சியையொட்டியே அதிகரிக்க வாய்ப்பிருப்பதால், ஏதாவது ஒரு காரணத்தால் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்த அளவில் நடக்காமல் போனாலோ, தேக்கநிலையைச் சந்தித்தாலோ விற்பனையை ஓரளவு பாதிக்கவே செய்யும் என எதிர்பார்க்கலாம்.

முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

இந்தப் பகுதி பங்குகளைப் பரிந்துரை செய்யும் பகுதி அல்ல. முதலீட்டாளர்களுக்குப் பங்குகளை அறிமுகப் படுத்துதல் மற்றும் கல்வியே இந்தப் பகுதியின் நோக்கம்.

பங்கு முதலீடுகள் சந்தை அபாயத்துக்கு உட்பட்டது என்பதால், எந்தவொரு பங்கை வாங்கும் முன்னும் செபி பதிவு பெற்ற முதலீட்டு ஆலோசகரைக் கலந்தாலோசித்து, அந்தப் பங்கில் முதலீடு செய்வதில் இருக்கும் ரிஸ்க் உங்களுக்கு உகந்ததுதானா என்பதை முடிவு செய்த பின்னரே முதலீட்டு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்!