Published:Updated:

நோசில் லிமிடெட்! (NSE SYMBOL: NOCIL, BSE CODE: 500730)

நோசில்
பிரீமியம் ஸ்டோரி
News
நோசில்

கம்பெனி பயோடேட்டா

நாற்பது ஆண்டுக் காலத்துக்கும் மேலாக ரப்பர் கெமிக்கல் தொழிலில் இயங்கி வருகிற நிறுவனமான நோசில் லிமிடெட் எனும் நிறுவனத்தின் பயோடேட்டாவைத்தான் இந்த வாரம் நாம் பார்க்கப்போகிறோம். இந்த நிறுவனம் அரவிந்த் மபத்லால் குழுமத்தின் ஓர் அங்கமாகும்.

ரப்பர் கெமிக்கல்கள் உற்பத்தி...

இன்றைக்கு இந்திய அளவில் ரப்பர் கெமிக்கல்களை அதிநவீன தொழில்நுட்பத்தின் மூலம் உற்பத்தி செய்யும் முதலாவது பெரிய நிறுவனமாக இந்த நிறுவனம் திகழ்கிறது. இந்த நிறுவனம் தன் தயாரிப்புகளை பில்பெக்ஸ் ஆன்ட்டி - டிக்ரேடன்ட்ஸ், பில்நாக்ஸ் – ஆன்ட்டி ஆக்சிடென்ட்ஸ், பில்க்யூர் ஆக்சில ரேட்டர்ஸ், போஸ்ட் வல்கனைசேஷன் ஸ்டெபிலைசர் மற்றும் பில்கார்ட் ப்ரீ வல்கனைசேஷன் இன்ஹி பிட்டர் உள்ளிட்ட பல பிராண்டுகளில் சந்தைப்படுத்திவருகிறது.

ஆன்ட்டி-டிக்ரேடன்ட்ஸ் மற்றும் ஆன்ட்டி ஆக்சிடென்ட்ஸ் என்ற வகை வேதிப்பொருள்கள் ரப்பர் சார்ந்த தயாரிப்புகளின் மீது ஆக்சிஜன் படுவதால் வரும் வேகமான தேய்மானத்தைத் தடுக்க பயன்படுத்துவதாகும். ஆக்சில ரேட்டர்கள் எனும் வேதிப் பொருள்கள் ரப்பருடன் கந்தகம் சேர்க்கப்பட்டு சூடேற்றி வலுவேற்றப்படும் படிநிலையானது விரைவாகச் செய்து முடிக்கப்படுவதற்காகப் பயன்படுத்தப்படும் வேதிப்பொருளாகும்.

ரப்பர் கெமிக்கல்கள் என்பது தனிச் சிறப்பான பண்புகளைக் கொண்ட ஆர்கானிக் கெமிக்கல்கள் ஆகும். இந்த வகை வேதிப் பொருள்களை உற்பத்தி செய்யும் பணியானது பல்வேறு சிக்கலான நடைமுறைகளைக் கொண்டதாகும். இந்த வகை வேதிப்பொருள் களின் வாடிக்கையாளர்கள் இந்திய மற்றும் உலக அளவிலான டயர் உற்பத்தி நிறுவனங்கள் என்பதால், தரமான தயாரிப்பை உற்பத்தி செய்தல், தொடர்ந்து தரத்தைக் காத்தல் மற்றும் வாடிக்கையாளர்களின் தேவைக்கு இணங்க தயாரிப்புகளை வடிவமைத்தல் என்ற மூன்று விஷயங்களும் முக்கியத்துவம் பெறுகின்றன.

செயல்திறன் அளிக்கும் ரசாயனப் பொருள்கள் (Performance Chemical) என்கிற காரணத்தால் உற்பத்தி செய்யும் பொருள்கள் அனைத்துமே வாடிக்கையாளர்களால் முழுமையாக நடைமுறையில் சோதிக்கப் பட்டு அதற்கான பின்னூட்டங்கள் மற்றும் ஒப்புதல்கள் பெறப்பட்ட பின்னரே, உற்பத்தி செய்யப்படும். மேலும், வாடிக்கையாளர்கள் தொடர்ந்து வழங்கும் பின்னூட்டங்களைக் கருத்தில் கொண்டு உற்பத்தி படிநிலைகளில் முன்னேற்றங்களையும் தொடர்ந்து செய்ய வேண்டியிருக்கும்.

நோசில் லிமிடெட்! (NSE SYMBOL: NOCIL, BSE CODE: 500730)

நிறுவனத்தின் வளர்ச்சி...

1976-ம் ஆண்டில் மும்பைக்கு அருகே உள்ள தானே-பேலாப்பூர் (நவி மும்பை) இண்டஸ்ட்ரீயல் பகுதியில் உள்ள வேதிப்பொருள்கள் உற்பத்திக்காகத் தனியாக ஒதுக்கப்பட்ட இடத்தில் இந்த நிறுவனத்தின் முதல் உற்பத்தி வசதி நிறுவப் பட்டது. இந்த உற்பத்தி வசதியில் அதிநவீன தொழில்நுட்பம் மூலமாக டயர் மற்றும் டயர் சம்பந்தப்பட்ட ரப்பர் பொருள் களைத் தயாரிக்கும் முறைகளில் பயன்படுத்தப்படும் கெமிக்கல்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

2013-ம் ஆண்டில் குஜராத்தில் உள்ள பரூச் எனும் இடத்துக்கு 40 கி.மீட்டர் தொலைவில் உள்ள தஹிஜ் எனும் இடத்தில் ஓர் உற்பத்தி மையம் நிறுவப்பட்டது. இந்த உற்பத்தி மையத்தின் தனிச்சிறப்பு என்று பார்த்தால், ஏனைய முக்கிய பெட்ரோகெமிக்கல் நிறுவனங்கள் அருகிலேயே அமைந்திருப்பதும் தஹிஜிக்கும் ஹசிரா துறைமுகத்துக்கும் இடையேயான சிறப்பான போக்குவரத்து வசதியும்தான். இந்த உற்பத்தி வசதியானது இந்த நிறுவனம் சொந்தமாகவே வடிவமைத்த முழுக்க முழுக்க தானியங்கும் ரீதியிலான உற்பத்தி படிநிலைகளைக்கொண்டு இயங்குவது குறிப்பிடத் தக்க விஷயமாகும்.

இந்த நிறுவனம் வேதிப்பொருள்கள் உற்பத்தியில் ஈடுபட்டு வருவதால், தனக்குத் தேவைப்படும் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள மும்பையில் ஓர் ஆய்வு மையத்தை நிறுவி உள்ளது. இந்த ஆய்வு மையம் மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. இதில் பல்வேறு வகையான உற்பத்திப் படி நிலைகள் குறித்த ஆய்வுகள், கண்டறியப்பட்ட உற்பத்திப் படி நிலைகளை வர்த்தக ரீதியிலான உற்பத்தியில் நடைமுறைப் படுத்துதல், சுற்றுச்சூழல் சார்ந்து தொடர்ந்து செயல்படுவதற்கான நடைமுறைகளைக் கண்டறிதல், வாடிக்கையாளர்களுக்கு எதிர் காலத்தில் தேவைப்படும் வேதிப் பொருள்களைக் கண்டறிதல் போன்ற நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது.

நிறுவனத்தின் சிறப்பு...

இந்த நிறுவனம் செயல்பட்டு வருவது சிறப்புப் பண்புகள் கொண்ட வேதிப்பொருள்கள் தயாரிப்பு என்பதால், தொடர்ந்து தொழில்நுட்ப ரீதியிலான முன்னேற்றங்களைத் தயாரிப்பு கள் மற்றும் தயாரிப்பு நடைமுறை களில் செய்துவரும் பணியை செவ்வனே ஆற்றுகிறது இந்த நிறுவனம். மேலும், இதன் ஆய்வு மையங்களின் ஓர் அங்கமாக உற்பத்திச் செலவைக் கட்டுக்குள் வைத்தல் என்ற ஒரு விஷயமும் தொடர்ந்து முன்னெடுக்கப் பட்டு வருவதும் குறிப்பிடத்தக்க விஷயமாகும்.

நீண்ட தொழில் அனுபவம் மற்றும் டயர் உற்பத்தியாளர் களுக்கும் இந்த நிறுவனத்துக்கும் இடையே இருக்கும் நீண்ட கால அளவிலான நட்பு மற்றும் அவர்கள் இந்த நிறுவனத்தின் மீது வைத்திருக்கும் நம்பிக்கை என்பதும் இந்த நிறுவனத்தை போட்டியாளர்களிடமிருந்து வேறுபடுத்திக்காட்டும் விஷயங் களாகும்.

ரப்பர் கெமிக்கல்கள் உற்பத்தி யில் உலக அளவில் பெரிய நாடாக சீனா இருந்துவருகிறது. உலகச் சந்தையில் கிட்டத்தட்ட 75% அளவிலான சந்தைப் பங்களிப்பை அந்த நாட்டு நிறுவனங்கள் கொண்டிருக்கின்றன. உலக அளவில் நிலவும் சமீபத்திய சூழ்நிலையில் உற்பத்திக்கான பொருள்கள் கொள்முதலை செய்யும் நிறுவனங்கள் தங்களு டைய கொள்முதலைப் பல்வேறு நாடுகளிலும் பரவலாக்கும் முயற்சியை மேற்கொண்டு வருகின்றன. இதன் காரணமாக ஏனைய நாடுகளில் இருக்கும் உற்பத்தியாளர்கள் பலனடைவதற் கான வாய்ப்புகள் எதிர்காலத்தில் உருவாகக்கூடும். இப்படியான சூழ்நிலை உருவாகும் நிலையில் இந்திய ரப்பர் கெமிக்கல் உற்பத்தி யாளர்களும் பலனடைவார்கள்.

நோசில் லிமிடெட்! (NSE SYMBOL: NOCIL, BSE CODE: 500730)

ரிஸ்க்குகள் என்னென்ன?

வேதிப்பொருள்கள் உற்பத்தி யில் ஈடுபட்டுவரும் நிறுவனங் களுக்கே உரித்தான அனைத்து வகையிலான ரிஸ்க்குகளும் இந்த நிறுவனத்துக்கும் உண்டு. ஆராய்ச்சிகளில் தொடர் வெற்றி பெற வேண்டியதும் இது போன்ற நிறுவனங்களுக்கான ஒரு தொடர்ச்சியாக நிலவி வருகிற செயல்பாடு சார்ந்த அழுத்தமே ஆகும். இதையும் ஒரு ரிஸ்க்காகவே பார்க்க வேண்டும்.

கெமிக்கல் துறை என்பதால், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, அரசாங்கத்தின் கொள்கை முடிவுகள், அந்நியச் செலாவணி மதிப்பு மாறுதல், மூலப்பொருள்களின் விலை ஏற்றம் போன்றவையும் இந்த நிறுவனத்துக்கான ரிஸ்க்குகள் ஆகும். இது தவிர, இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளை உபயோகித்து தயாரிக்கப்படும் பொருள்களின் விற்பனையானது பொருளாதார வளர்ச்சியைச் சார்ந்திருக்கும் ஒரு துறை ஆகும். எனவே, ஏதாவது ஒரு காரணத்தால் பொருளாதார வளர்ச்சி என்பது தேக்கநிலையைச் சந்தித்தாலோ, எதிர்பார்த்த அளவில் இல்லாதுபோனாலோ இந்த நிறுவனத்தின் செயல்பாட்டை பாதிக்கவே செய்யும்.

நோசில் லிமிடெட்! (NSE SYMBOL: NOCIL, BSE CODE: 500730)

முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

இந்தப் பகுதியானது பங்குகளைப் பரிந்துரை செய்யும் பகுதி அல்ல. முதலீட்டாளர்களுக்குப் பங்குகளை அறிமுகப்படுத்துதல் மற்றும் கல்வியே இந்தப் பகுதியின் நோக்கம். பங்கு முதலீடுகள் சந்தை அபாயத்துக்கு உட்பட்டது என்பதால், எந்தவொரு பங்கை வாங்கும் முன்னும் செபி பதிவு பெற்ற முதலீட்டு ஆலோசகரைக் கலந்தாலோசித்து, அந்தப் பங்கில் முதலீடு செய்வதில் இருக்கும் ரிஸ்க் உங்களுக்கு உகந்ததுதானா என்பதை முடிவு செய்த பின்னரே, முதலீட்டு நடவடிக்கைகளை நீங்கள் எடுக்க வேண்டும்!