நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

பவர்மெக் புராஜெக்ட்ஸ் லிமிடெட்! (NSE Symbol: POWERMECH, BSE Code: 539302)

பவர்மெக் புராஜெக்ட்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
பவர்மெக் புராஜெக்ட்ஸ்

கம்பெனி பயோடேட்டா

இந்த வாரம் நாம் பார்க்கப்போகும் பங்கு நிறுவனம் பவர்மெக் புராஜெக்ட்ஸ் லிமிடெட் என்னும் மின் உற்பத்தி நிலையங் களைக் கட்டுமானம் செய்தல், இயக்குதல் மற்றும் பராமரிக்கும் பணிகளைச் செய்யும் நிறுவனமாகும்.

நிறுவனத்தின் வளர்ச்சி...

1999-ம் ஆண்டு மின்சார உற்பத்தித் துறையில் அனுபவம் நிறைந்தவராகிய கிஷோர் பாபு என்பவரால் நிறுவப்பட்டது இந்த நிறுவனம். முதன்முதலாக டிராம்பே எனும் இடத்தில் உள்ள டாடாவின் மின்சார உற்பத்தி வசதியை முற்றிலுமாகப் பழுதுபார்த்தல் மற்றும் பராமரித்துத் தருதல் என்ற பணியை மேற் கொள்ள ஆரம்பித்ததன் மூலம் இந்தத் துறையில் கால்பதித்தது. இன்றைக்கு ஐம்பதுக் கும் மேற்பட்ட மகிழ்ச்சியான நிறுவன ரீதியிலான வாடிக்கையாளர்களுடனும் (இந்தியாவில் 15 மாநிலங் களிலும், குவைத், கஸகஸ்தான், பூடான், பங்களாதேஷ், பஹ்ரைன், ஏமன், சூடான், ஓமன், நைஜீரியா உள்ளிட்ட நாடுகளில்), 40,000-க்கும் மேற்பட்ட பணியாளர்களுடன் 208-க்கும் மேற்பட்ட புராஜெக்ட்டுகளை முடித்து வெற்றிகரமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது இந்த நிறுவனம்.

தனித்திறன் நிறுவனமாக...

இந்த நிறுவனம் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டிலிருந்து மூன்று ஆண்டுகளுக்கு உள்ளாகவே இ.டி.சி (ETC- Estimate to Completion: 1 x 63 TPH மற்றும் 2 x 165 TPH) என்ற ரீதியிலான புராஜெக்ட் ஒன்றை மின்சாரத்துறையில் செயல்பட்டு வந்த முன்னணி நிறுவனமான பி.ஹெச்.இ.எல் லிமிடெட் நிறுவனத்துக்கு செய்து கொடுத்தது. அதைத் தொடர்ந்து 2002-ம் ஆண்டில் சத்தீஸ்கரில் உள்ள ரெய்கர்க் எனும் இடத்தில் பி.ஹெச்.இ.எல் நிறுவனத்துக்காக 21 மெகாவாட் மற்றும் 55 மெகாவாட் மின் உற்பத்தி மையங்களை நிறுவிக் கொடுத்தது இந்த நிறுவனம்.

வெற்றிகரமாக இந்த புராஜெக்ட்டுகளை நிறுவிக் கொடுத்து தன்னுடைய திறனை நிரூபித்த காரணத்தால் அடுத்து வந்த இரு தசாப்தங்களில் எந்தவிதமான எரிபொருள்களை உபயோகித்து மின்சார உற்பத்தி செய்யப்படும் மின் உற்பத்தி நிலையங்களையும் அமைத்துத் தருவதில் (ETC) தனித்திறமை கொண்ட ஒரு நிறுவனமாக உருவெடுத்தது இந்த நிறுவனம்.

பவர்மெக் புராஜெக்ட்ஸ் லிமிடெட்!
(NSE Symbol: POWERMECH, BSE Code: 539302)

2004-ம் ஆண்டில் அப்போதைக்கு புழக்கத்தில் இல்லாத நடைமுறையான மின் உற்பத்தி நிலையங்களுக்கான வருடாந்தர பராமரிப்புக்கான ஒப்பந்தம் (Annual Maintenance Contract) என்ற நடைமுறையை அறிமுகப்படுத்தியது இந்த நிறுவனம். இந்த ரீதியிலான முதல் ஒப்பந்தத்தைப் பகுதான் எனும் இடத்தில் அமைந்துள்ள இருவேறு வகை எரிபொருள்களை உபயோகித்து, 655 மெகாவாட் அளவிலான மின்சார உற்பத்தியை செய்யும் நிறுவனத்துடன் செய்துகொண்டது இந்த நிறுவனம். இன்றைக்கு கிட்டத்தட்ட 58,000 மெகாவாட் (ஒட்டுமொத்த உற்பத்தித்திறன்) என்ற அளவுக்கும் மேலான மின்சார உற்பத்தித்திறன் கொண்ட பல்வேறு மின் உற்பத்தி நிலையங்களுக்கு வருடாந்தர பராமரிப்புக்கான ஒப்பந்தத்தை செய்துகொண்டு அதை வெற்றிகரமாக நடை முறைப்படுத்திக் கொண்டும் வருகிறது இந்த நிறுவனம்.

இதே ஆண்டில்தான் இந்த நிறுவனம் ஓமன், பஹ்ரைன் மற்றும் நைஜிரியாவில் அரசாங்கம் நிறுவிய புராஜெக்ட்டுகளில் தன்னுடைய பங்களிப்பைத் தர ஆரம்பித்தது. மேலும், இந்திய ரயில்வேக்கான புராஜெக்ட்டுகளை செய்து தருவதில் கால்பதித்ததும் இதே ஆண்டில்தான் (ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் நிறுவனத்துக்காக 37 கிலோ மீட்டர் அளவிலான ஒருங்கிணைந்த புராஜெக்ட்டை நடைமுறைப்படுத்தியது). அதே போல், ஹோஷங்காபாத்தில் 33/11 கிலோவாட் அளவிலான மின் உற்பத்தி நிலையங்களை அமைத்துத் தந்ததன் மூலம் ரூரல் எலெக்ட்ரிஃபி கேஷன் புராஜெக்ட்டுகளிலும் இதே ஆண்டிலேயே கால்பதித்தது.

2015-ம் ஆண்டில் பொதுப் பங்கு வெளியீட்டைச் செய்ததன் மூலம் மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது இந்த நிறுவனம்.

2018-ம் ஆண்டில் என்.ஹெச்.ஏ.ஐ நிறுவனத்தில் சாலைகளுக்கான ஒப்பந்தங் களைச் செய்து தரும் தகுதியைப் பெற்றது இந்த நிறுவனம். அதே போல, இந்தியன் ஆயில் கார்ப்ப ரேஷன் நிறுவனத்துக்காக நாடு தழுவிய பைப்லைன்கள் நிறுவும் பணியிலும் கால்பதித்தது. இதே ஆண்டில் ஆந்திரப்பிரதேசத்தில் மெட் டெக் ஜோனில் (மெடிக்கல் டெக்னாலஜி பார்க்) இன்ஃப்ரா ஸ்ட்ரக்சர் புராஜெக்ட் ஒன்றை நிறுவும் பணிக்கான ஒப்பந்தத் தைப் பெற்றது.

பவர்மெக் புராஜெக்ட்ஸ் லிமிடெட்!
(NSE Symbol: POWERMECH, BSE Code: 539302)

பல்வேறு தொழில்கள்...

இந்த நிறுவனம் ஈடுபட்டுவரும் தொழில்கள் என்ற அடிப் படையில் பார்த்தால், பல்வேறு வகையான நிர்மாணிக்கப்பட்ட உற்பத்தித் திறன் கொண்ட தெர்மல் (அல்ட்ரா, சூப்பர் மற்றும் சப் கிரிட்டிக்கல் ரகம்) மின் உற்பத்தி நிலையங்கள் அமைத்தல், ஓப்பன் மற்றும் கம்பைன்டு சைக்கிள் மின் உற்பத்தி நிலையங்கள் அமைத் தல், ஸ்ட்ரக்சர் பேப்ரிக்கேஷன் மற்றும் எரெக்‌ஷன், பேலன்ஸ் ஆஃப் பிளான்ட், எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல்கள், நாடு தழுவிய அளவில் பைப் லைன்கள் அமைத்தல், இவற்றுடன் இணைந்து செயல்படும் துறை களான சிமென்ட் மற்றும் ஸ்டீல் உற்பத்தி நிலையங்கள் போன்ற அனைதந்துக்குமான சேவை களை வழங்கி வருகிறது.

மின்சாரம் மற்றும் மின்சாரம் அல்லாத துறைகளில் செயல்படுவது, மின் உற்பத்தி நிலையங்களை இயக்குதல் மற்றும் பராமரித்தல் துறையில் மிகப்பெரிய நிறுவன மாகத் திகழ்வது, தொழிலுக்குத் தேவைப்படும் உபகரணங்களை சொந்தமாக வைத்திருப்பது (300-க்கும் மேற்பட்ட கிரேன்கள் உள்ளிட்ட), அனுபவமிக்க பணி யாளர்களைக் கொண்டிருப்பது, சிறந்த வாடிக்கையாளர்களைக் கொண்டிருப்பது போன்றவை இந்த நிறுவனத்தின் தனிச்சிறப்பு களாகும்.

இந்த நிறுவனத்தின் வாடிக்கை யாளர்கள் என்று பார்த்தால் இந்திய நிறுவனங்களான என்.டி.பி.சி, பி.ஹெச்.இ.எல், டூசன், ரிலையன்ஸ், சிமென்ஸ், எல்&டி, அதானி, சி.இ.எஸ்.சி, தொஷிபா, என்.எம்.டி.சி, இந்தியன் ஆயில், ஓ.என்.ஜி.சி, ரயில் விகாஸ் நிகாம் லிட், ஜிண்டால் ஸ்டீல் & பவர், ஜிஇ அல்ஸ்தாம், டாடா பவர் போன்ற பல நிறுவனங்கள் முன்னணி வாடிக்கையாளர்களாக இருக்கின்றன. உலகளாவிய நிறுவனங்கள் என்ற அடிப்படையில் பார்த்தால், மிட்சுபிஷி, ஹூண்டாய், நோமெக், ஷார்ஜா எலெக்ட்ரிசிட்டி & வாட்டர் அத்தாரிட்டி உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்கள் வாடிக்கை யாளர்களாக உள்ளன.

பவர்மெக் புராஜெக்ட்ஸ் லிமிடெட்!
(NSE Symbol: POWERMECH, BSE Code: 539302)

ரிஸ்க்குகள் என்னென்ன?

இந்த நிறுவனம் ஈடுபட்டு வரும் துறைகளான மின்சார உற்பத்தி, சுரங்கம், சாலை அமைத்தல், குழாய் பதித்தல், இன்ஃப்ராஸ்ட்ரக்சர் உள்ளிட்ட துறைகளில் இயங்கும் நிறுவனங்களுக்கே உரித்தான ரிஸ்க்குகள் அனைத்தும் இந்த நிறுவனத்துக்கும் உண்டு. சமீப காலத்தில் இந்தப் பங்கு அதிக அளவிலான விலை ஏற்றத்தைச் சந்தித்துள்ளது என்பதையும் வாசகர்கள் அவசியம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்த நிறுவனம் ஈடுபடும் துறைகள் (இயக்கம் மற்றும் பராமரிப்பு தவிர) அனைத்துமே பொருளாதார வளர்ச்சியை சார்ந்தவையாக இருக்கின்றன. எனவே, ஏதாவது ஒரு காரணத்தால் பொருளாதாரம் தேக்கநிலையைச் சந்தித்தாலோ, எதிர்பார்த்த அளவிலான வளர்ச்சியை சந்தித்தாலோ அது இந்த நிறுவனத்தின் செயல்பாட்டை பாதிக்கவே செய்யும். மூலப்பொருள்கள் விலை உயர்வு, சுற்றுச்சூழல் சார்ந்த அரசாங்கத்தின் கொள்கை முடிவுகள், அந்நிய செலாவணி மதிப்பு மாறுதல், தொழில் ரீதியான போட்டி, வேகமாக மாறுகிற தொழில்நுட்பம் போன்றவையும் இந்த நிறுவனத்துக்கான ரிஸ்க்குகளாகவே பார்க்கப்பட வேண்டும்.

முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

இந்தப் பகுதி பங்குகளைப் பரிந்துரை செய்யும் பகுதி அல்ல. முதலீட்டாளர்களுக்குப் பங்குகளை அறிமுகப் படுத்துதல் மற்றும் கல்வியே இந்தப் பகுதியின் நோக்கம். பங்கு முதலீடுகள் சந்தை அபாயத்துக்கு உட்பட்டது என்பதால், எந்தவொரு பங்கை வாங்கும் முன்னும் செபி பதிவு பெற்ற முதலீட்டு ஆலோசகரைக் கலந்தாலோசித்து, அந்தப் பங்கில் முதலீடு செய்வதில் இருக்கும் ரிஸ்க் உங்களுக்கு உகந்ததுதானா என்பதை முடிவுசெய்த பின்னரே முதலீட்டு முடிவை எடுக்கவேண்டும்!