Published:Updated:

ரெடிங்டன் (இந்தியா) லிமிடெட்!

அறிவோம் பங்கு நிறுவனம்...

பிரீமியம் ஸ்டோரி

இந்த வாரம் நாம் பார்க்கப்போகும் நிறுவனம் 1961-ம் ஆண்டில் பதிவு செய்து ஆரம்பிக்கப்பட்டு, சென்னை யைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கிவரும் ரெடிங்டன் (இந்தியா) லிமிடெட் எனும் நிறுவனமாகும்.

ஒரே ஒரு பொருளை உற்பத்தி செய்த நிலையில் இருந்து, இன்றைக்கு அமெரிக்க டாலர் மதிப்பில் 7.7 பில்லியன் அளவிலான 245-க்கும் மேற்பட்ட உலகளாவிய பிராண்டு களின் கணினி மற்றும் ஏனைய மொபைல் எலெக்ட்ரானிக்ஸ் தயாரிப்புகளை 37-க்கும் மேற்பட்ட எமர்ஜிங் மார்க்கெட் சந்தைகளில் விநியோகம் செய்யும் நிறுவனமாக உருவெடுத்துள்ளது இந்த நிறுவனம். ஆர்ட்டிஃபீஷியல் இண்டெலிஜன்ஸ், ரோபோட்டிக்ஸ், பிக் டேட்டா அனலிடிக்ஸ், இன்டெர்நெட் ஆஃப் திங்ஸ், 5ஜி தொலைத் தொடர்பு போன்ற புதிய பல தொழில்நுட்பங்கள் அனைத்துமே எதிர்காலத்துக்கான வியாபார வாய்ப்புகளை உருவாக்குவதாக இருக்கும் என்று நம்பிக்கையுடன் கூறுகிறது இந்த நிறுவனம்.

நிறுவனத்தின் செயல்பாடு...

ஏசெர், அடோப், அமேசான் எக்கோ, அமேசான் கிண்டில், ஏ.பி.சி, ஆப்பிள், ஆசுஸ், பாஸ்ச், கேனான், சிஸ்கோ, டெல், எப்சன், ஐ.பி.எம், கூகுள், இண்டெல், லீனோவோ என இருநூறுக்கும் மேற்பட்ட பல முன்னணி பிராண்டுகளின் விநியோகஸ்தர்களாக (பிராண்ட் பார்ட்னர்கள்) இயங்கிவருகிறது இந்த நிறுவனம். ஒரு நிறுவனம் ஒருமுறை ரெடிங்டனை விநியோகஸ்தராக நியமனம் செய்துவிட்டால், பின்னர் எப்போதுமே அந்த நிறுவனத்தின் விநியோகஸ்தராகத் தொடர்ந்து செயல்பட்டுவருவது இந்த நிறுவனத்தின் தனிச்சிறப்பு.

ரெடிங்டன் (இந்தியா) லிமிடெட்!

விநியோகம் செய்யும் பொருள்களை வாடிக்கையாளர்களிடம் கொண்டுசேர்க்கும் சில்லறை வர்த்தக நிறுவனங்கள் (சேனல் பார்ட்னர்கள்) மத்தியிலும் மிகவும் பிரசித்தி பெற்றதாக இருக்கும் இந்த நிறுவனம், தன்னுடைய சேனல் பார்ட்னர்களுக்கு அவர்களுடைய முந்தையகால செயல் பாட்டுக்கு ஏற்ப கடன் வசதி, அதிக அளவிலான வாடிக்கையாளர்களைப் பெறுவதற்கான மார்க்கெட்டிங் உதவிகள், டெக்னாலஜி மற்றும் புதிய தயாரிப்புகள் குறித்த தகவல் பரிமாற்றத்துக்கான நியூஸ்லெட்டர்கள், டெக்னாலஜி குறித்த ஆன்லைன் மற்றும் நேரடியான பயிற்சி வகுப்புகள், வாடிக்கை யாளர்களின் தேவைகளைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப தீர்வுகளை வழங்குவதற்கான உதவிகள், விற்பனைக்கு ஏற்றாற்போல் ஊக்கத் தொகை (பரிசு கூப்பன்கள் மற்றும் கேஷ்பேக்), இன்பச் சுற்றுலா போன்றவற்றை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு விதமான திட்டங்களை நடைமுறைப்படுத்தி வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது.

பல்வேறு முன்னணி பிராண்டுகளின் தயாரிப்புகளை விநியோகம் செய்வதற்காக ஒட்டுமொத்தமாக ஏழு மில்லியனுக்கும் மேலான சதுர அடிகளைக்கொண்ட இருநூறுக்கும் மேற்பட்ட வேர் ஹவுஸ்களைக் கொண்டிருக்கும் இந்த நிறுவனம், 16-க்கும் மேற்பட்ட சொந்த பழுது நீக்கும் மையங் களையும், 23-க்கும் மேற்பட்ட கூட்டணி மூலம் செயல்படும் பழுது நீக்கும் மையங்களையும் கொண்டு இயங்கிவருகிறது. 245-க்கும் மேற்பட்ட முன்னணி பிராண்டுகளின் விநியோகஸ்தராகச் செயல்பட்டுவரும் இந்த நிறுவனம், 3,900-க்கும் மேலான பணியாளர்களுடன் உலக அளவில் 70-க்கும் மேற்பட்ட விற்பனை அலுவலகங்களைக் கொண்டு இயங்கி வருகிறது.

ரெடிங்டன் (இந்தியா) லிமிடெட்!

நிறுவனத்தின் வளர்ச்சி...

1993-ம் ஆண்டில் ரெடிங்டன் பி.டி.இ லிமிடெட் எனும் சிங்கப்பூர் நிறுவனத்தின் இந்தியத் துணை நிறுவனத்தை வாங்கியதன் மூலம் விநியோகத் துறையில் கால்பதித்த இந்த நிறுவனம், ஹெச்.பி நிறுவனத்தின் கணினிகளை மேற்கு மற்றும் தென் இந்தியாவில் விநியோகம் செய்ய ஆரம்பித்ததன் மூலம் இந்தத் துறையில் ஆரம்ப காலத்தில் கால்பதித்தது. 1994-ம் ஆண்டில் எப்சன், டிரிப் லைட் ஐ.டி புராடக்ட்ஸ் மற்றும் சாம்சங் மானிட்டர்களை விநியோகம் செய்ய ஆரம்பித்த இந்த நிறுவனம், அதே ஆண்டில் வட இந்தியாவில் தன்னுடைய செயல்பாட்டை ஆரம்பித்தது. மேலும், அதே ஆண்டில் பழுதுநீக்குதல் சேவையிலும் கால்பதித்தது. 1995-ம் ஆண்டில் பிலிப்ஸ் மற்றும் காம்பேக் (Compaq) நிறுவனங்களின் தயாரிப்புகளை விநியோகம் செய்ய ஆரம்பித்த இந்த நிறுவனம், அதே ஆண்டில் கிழக்கு இந்தியாவில் தன்னுடைய செயல்பாட்டைத் தொடங்கியது.

2007-ம் ஆண்டில் மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தையில் இந்த நிறுவனத்தின் பங்குகள் பட்டிய லிடப்பட்டது. அதே ஆண்டில் ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகளை விநியோகம் செய்ய ஆரம்பித்த இந்த நிறுவனம், சென்னையில் ஏனைய விநியோகிக்கும் பொருள்களுக்கான ஓர் அதிநவீன பழுது நீக்குதல் மையத்தை நிறுவியது. 2008-ம் ஆண்டில் ப்ளாக்பெரி நிறுவனத்தின் தயாரிப்புகளையும் விநியோகம் செய்ய ஆரம்பித்த இந்த நிறுவனம், 2009-ம் ஆண்டில் சென்னையில் ஒரு தானியங்கி விநியோக மையத்தை நிறுவி செயல்பாட்டுக்குக் கொண்டு வந்தது. 2013-ம் ஆண்டில் துருக்கி நிறுவனமான ஏடியோ ஐ.டி கன்சல்டிங் சர்வீசஸ் எனும் நிறுவனத்தின் 51% பங்குகளைக் கையகப்படுத்தியது இந்த நிறுவனம். 2017-ம் ஆண்டில் மற்றுமொரு துணை நிறுவனமான கேடென்ஸ் வொர்த் (இந்தியா) லிமிடெட் எனும் நிறுவனத்தைத் தன்னுடன் முழுமையாக இணைத்துக்கொண்ட இந்த நிறுவனம், 2018-ம் ஆண்டில் தன் துணை நிறுவனமான புரோகனெக்ட் மூலம் பார்மா துறையின் சப்ளை செயின் செயல்பாட்டில் கால்பதித்தது.

ரெடிங்டன் (இந்தியா) லிமிடெட்!

2019-ம் ஆண்டில் செபியிடம் இருந்து பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட புரொ மோட்டர் எனும் பிரிவினரைக் கொண்டிராத ஒரு நிறுவனமாகச் செயல்படும் அனுமதியைப் பெற்றது. இன்றைக்கு மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்கா பகுதியில் முதல் நிலையில் முன்னணியில் இருக்கும் டெக்னாலஜி பொருள்களின் விநியோகம் செய்யும் நிறுவன மாகவும், அகில இந்திய ரீதியாக இரண்டவாது நிலையில் இருக்கும் நிறுவனமாகவும் திகழ்கிறது ரெடிங்டன் (இந்தியா) நிறுவனம்.

245-க்கும் மேற்பட்ட பிராண்டு களை 34,000-க்கும் மேற்பட்ட பார்ட்னர்கள் மூலம் வாடிக்கையாளர்களுக்குக் கொண்டு சேர்க் கிற இந்த நிறுவனம், இன்றைக்கு அமெரிக்க டாலர் அளவீட்டில் 7.7 பில்லியன் அளவிலான விற்று வரவைக் கொண்டிருக்கிறது. 1993 - 2002 காலகட்டத்தில் பல்வேறு பொருள்களை விநியோகிக்கும் டிஸ்ட்ரிப்யூட் டராக ஐ.டி கன்ஸ்யூமர் துறையில் இயங்கி வந்த இந்த நிறுவனம், 2003 - 2011 காலகட்டத்தில் ஐ.டி கன்ஸ்யூமர், ஐ.டி என்டர்பிரைஸஸ் மற்றும் மொபிலிட்டி என்ற அளவில் அந்தக் காலகட்டத்தின் தேவைக் கேற்ப ஒரு மதிப்புக் கூட்டலைச் செய்துதரும் டிஸ்ட்ரி ப்யூட்டராக தன்னை மாற்றி யமைத்துக் கொண்டது.

2012 - 2021-ம் ஆண்டு கால கட்டத்தில் மேலும் விரிவாக்கங் களைச் செய்து ஐ.டி, மொபிலிட்டி மற்றும் லாஜிஸ்டிக்ஸ் துறையிலும் கால்பதித்து, இன்றைக்கு சேவைகள் மற்றும் தீர்வுகளை வழங்கும் ஒரு நிறுவனமாக வெற்றிகரமாக இயங்கிவருகிறது இந்த நிறுவனம். இந்த நிறுவனத்தின் க்ளவுட் கம்ப்யூட்டிங் சேவையை விநியோகம் செய்தல் பிரிவின் கீழ் 6,000-கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட பார்ட்னர்களும், 2,500-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர் களும் கடந்த நிதியாண்டின் இறுதியில் இருக்கின்றனர்.

ரெடிங்டன் (இந்தியா) லிமிடெட்!

ரிஸ்க்குகள் என்னென்ன?

கணினி மற்றும் மொபைல் தயாரிப்புகள் விநியோகம் மற்றும் பழுதுநீக்கும் சேவைகள், லாஜிஸ்டிக்ஸ் பிரிவில் செயல்படும் நிறுவனங்களுக்கு உண்டான பொருள்கள் விற்பனையாகாமல் தங்கிப்போகும் அல்லது தாமதமாக விற்பனையாகும் இன்வென்ட்டரி ரிஸ்க், வர வேண்டிய பணம் தாமதமாக அல்லது வாராக்கடனாக மாறும் ரிஸ்க் மற்றும் அந்நிய செலாவணி ரிஸ்க் என்பது போன்ற ரிஸ்க்குகள் அனைத்தும் இந்த நிறுவனத்துக்கும் உண்டு. தொழில்நுட்ப மாறுதல், அரசின் கொள்கை முடிவுகள், திடீரென்று உருவாகக்கூடிய புதியவகை பிசினஸ் மாடல்கள் போன்றவையும் இந்த நிறுவனத்துக்கான ரிஸ்க்குகள்.

ரெடிங்டன் (இந்தியா) லிமிடெட்!
ரெடிங்டன் (இந்தியா) லிமிடெட்!

முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

இந்தப் பகுதி பங்குகளைப் பரிந்துரை செய்யும் பகுதி அல்ல. முதலீட்டாளர்களுக்குப் பங்குகளை அறிமுகப் படுத்துதல் மற்றும் கல்வியே இந்தப் பகுதியின் நோக்கம். பங்கு முதலீடுகள் சந்தை அபாயத்துக்கு உட்பட்டது என்பதால், எந்தவொரு பங்கை வாங்கும் முன்னும் செபி பதிவு பெற்ற முதலீட்டு ஆலோசகரைக் கலந்தாலோசித்து, அந்தப் பங்கில் முதலீடு செய்வதில் இருக்கும் ரிஸ்க் உங்களுக்கு உகந்ததுதானா என்பதை முடிவுசெய்த பின்னரே, முதலீட்டு நடவடிக்கைகளை நீங்கள் எடுக்க வேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு