நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

ஸ்டார் சிமென்ட்ஸ் லிமிடெட்! அறிவோம் பங்கு நிறுவனம்...

ஸ்டார் சிமென்ட்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்டார் சிமென்ட்ஸ்

(NSE SYMBOL: STARCEMENT, BSE CODE: 540575) - K N O W Y O U R C O M P A N Y

ஸ்டார் சிமென்ட்ஸ் லிமிடெட் வடகிழக்கு இந்தியாவில் செயல்பட்டுவரும் மிகப் பெரியதொரு சிமென்ட் உற்பத்தி நிறுவனமாகும்.

நிறுவனத்தின் வளர்ச்சி...

2001-ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம், 2005-ம் ஆண்டில் சிமென்ட் உற்பத்தியைத் தொடங் கியது. இன்றைக்கு வடகிழக்கு பிராந்தியத்தில் மிகப்பெரிய சிமென்ட் உற்பத்தி நிறுவனமாக உருவெடுத்துள்ளது இந்த நிறுவனம். மேகாலயாவில் உள்ள லம்ஷ்னாங் எனும் இடத்தில் இந்த நிறுவனத்தின் முதலாவது உற்பத்தி மையம் 200 ஹெக்டேர் பரப்பளவில் நிறுவப் பட்டது. இந்த உற்பத்தி மையத்துக்கு அருகிலேயே சிமென்ட் உற்பத்திக்கு தேவையான லைம்ஸ்டோன் அதிக அளவில் கிடைப்பது சிறப்பு.

இந்த நிறுவனத்தைப் பொறுத்த வரை, அதன் உற்பத்தி மையம் இயங்கிவருகிற இடமான வடகிழக்கு இந்தியா, உற்பத்தி வசதிக்கு அருகிலேயே மூலப்பொருள்கள் கிடைக்கிற வசதி, எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய தேவை அதிகரிப்பை யூகித்து தொடர்ந்து விரிவாக்கங் களைச் செய்துவருதல், நல்லதொரு பிராண்ட் மதிப்பை வாடிக்கை யாளர்கள் மத்தியில் கொண்டிருத்தல் என்ற நான்கு விஷயங்களே அதனுடைய சிறப்பு என்று சொல்கிறது.

ஸ்டார் சிமென்ட்ஸ் லிமிடெட்! அறிவோம் பங்கு நிறுவனம்...

நிறுவனத்தின் தயாரிப்புகள்...

இந்த நிறுவனத்தின் முக்கியமான தயாரிப்புகள் என்று பார்த்தால், வாடிக்கையாளர்களின் தேவைகளை மனதில் கொண்டு ஓ.பி.சி-43 மற்றும் ஓ.பி.சி-53 கிரேடு எனும் சாதாரண ரக போர்ட்லேண்ட் சிமென்ட், போர்ட்லேண்ட் போஸலோனா சிமென்ட், போர்ட்லேண்ட் ஸ்லாக் சிமென்ட் மற்றும் ஆன்ட்டி-ரஸ்ட் சிமென்ட் போன்றவற்றை உற்பத்தி செய்து விற்பனை செய்துவருகிறது.

மேகாலயாவில் உள்ள லம்ஷ்னாங் எனும் இடத்தில் உள்ள இந்த நிறுவனத்தின் உற்பத்தி மையத்தில் ஆண்டொன்றுக்கு ஒரு மில்லியன் டன் என்ற அளவில் நிர்மாணிக்கப் பட்ட உற்பத்தி வசதி இருக்கிறது. மேகாலயாவில் மேலும் 0.67 மில்லியன் டன் அளவிலான விரிவாக்கத்தையும் இந்த நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

கெளகாத்தியில் உள்ள சோனாபூர் எனும் இடத்தில் ஆண்டொன்றுக்கு இரண்டு மில்லியன் டன் அளவிலான உற்பத்தி வசதியையும், மேற்கு வங்கத்தில் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஆண்டொன்றுக்கு 0.67 மில்லியன் டன் அளவிலான நிர்மாணிக்கப்பட்ட அளவு கொண்ட இரண்டு அரவை மையங்களையும் கொண்டு இயங்கி வருகிறது.

சிமென்ட் உற்பத்தியில் மிக முக்கிய மூலப்பொருளாகத் திகழும் லைம்ஸ்டோன் எனும் மூலப்பொருள் இந்த நிறுவனத்தின் உற்பத்தி மையங்களிலிருந்து இரண்டு அல்லது மூன்று கிலோ மீட்டர் தொலைவி லேயே கிடைக்கும்படி வண்ணம் உற்பத்தி வசதிகள் நிறுவப்பட்டிருக் கிறது என்பது ஒரு தனிச்சிறப்பான விஷயமாகும். இதுபோன்ற நிலை மூலப்பொருள்கள் தங்குதடை யின்றியும், குறைவான போக்குவரத்து செலவுடனும் இந்த நிறுவனத்துக்கு கிடைப்பதற்கு உதவிகரமாக இருக்கிறது.

மேலும், இது போட்டியாளர் களுடன் ஒப்பிடுகையில் கணிசமான அளவுக்கான உற்பத்தி ரீதியான செலவைக் குறைக்கும் வழிவகை செய்கிறது. மேகாலயாவில் நான்கு உற்பத்தி மையங்களையும், அஸ்ஸாமில் உள்ள கெளகாத்தியில் ஓர் உற்பத்தி மையத்தையும், மேற்கு வங்கத்தில் ஓர் உற்பத்தி மையத்தையும் கொண்டு இயங்கிவரும் இந்த நிறுவனம், ஆண்டொன்றுக்கு 5.7 மில்லியன் டன் அளவிலான நிர்மாணிக்கப்பட்ட உற்பத்தி மையத்தையும், 2.8 மில்லியன் டன் அளவிலான க்ளிங்கர்கள் உற்பத்தி மையத்தையையும், 51 மெகாவாட் மின்சார உற்பத்தி மையத்தையும் நிர்மாணிக்கப்பட்ட அளவிலான உற்பத்தி வசதிகளாகக் கொண்டு இயங்கிவருகிறது. மேலும், அரசாங்கத்தின் ஒரு சில வரிச் சலுகைகளையும் பெற்றுள்ளது இந்த நிறுவனம்.

ஸ்டார் சிமென்ட்ஸ் லிமிடெட்! அறிவோம் பங்கு நிறுவனம்...

வடகிழக்கு மாநிலங்களில்...

வடகிழக்கு மாநிலங்களில் ‘ஸ்டார் சிமென்ட்’ ஒரு தலைசிறந்த பிராண்டாக அறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்க விஷயமாகும். வடகிழக்கு மாநிலங்களில் மட்டும் கிட்டத்தட்ட 2,500-க்கும் மேற்பட்ட டீலர்களைக் கொண்டு செயல்பட்டு வரும் இந்த நிறுவனம், தன்னுடைய தயாரிப்புகள் வாடிக்கையாளர்களைச் சென்றடைய 12,000-க்கும் மேற்பட்ட சில்லறை வர்த்தக நிறுவனங்களையும் தன்னுடைய தயாரிப்புகளை விற்பனை செய்ய ஏற்பாடு செய்துகொண்டுள்ளது.

அதேபோல், தன் தயாரிப்புகளை பீகார் மற்றும் மேற்கு வங்கத்தில் உள்ள வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்க்கவும் கிட்டத்தட்ட பல விநியோகஸ்தர்களையும் நியமித்துள்ளது.இந்தவித விநியோகஸ்தர்கள் பீகார் மற்றும் மேற்கு வங்கத்தில் நடைபெறும் வியாபாரத்துக்கு உறுதுணையாக இருக்கின்றனர்.

அஸ்ஸாம், மேகாலயா, அருணாசலப் பிரதேசம், மணிப்பூர், திரிபுரா, நாகாலாந்து, சிக்கீம், மிசோரம், மேற்கு வங்கம் மற்றும் பீஹார் போன்ற மாநிலங்களில் உள்ள வாடிக்கையாளர் களை மனதில் கொண்டே இந்த நிறுவனம் தன்னுடைய தயாரிப்புகளை சந்தைப் படுத்துகிறது. மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகம், ரயில்வே, பொதுப்பணித் துறை, கட்டுமான நிறுவனமான லார்சன் அண்ட் டியூப்ரோ, நேஷனல் ஹைட்ரோ பவர் கார்ப்பரேஷன் போன்ற பெரு நிறுவனங்களும் இந்த நிறுவனத் தின் நிறுவன அமைப்பிலான செயல்பாட்டில் இருக்கும் வாடிக்கையாளர்களாக இருக் கின்றனர்.

மேலும், இந்த நிறுவனம் இந்தியா, நேபாளம் மற்றும் பூட்டானில் உள்ள கிரைண்டிங் யூனிட்டுகளுக்கு தன்னுடைய தயாரிப்பான க்ளிங்கர்களை விற்பனை செய்துவருகிறது. வடகிழக்கு இந்தியாவில் சிமென்ட்டை ஒரு கமாடிட்டி என்ற நிலையில் இருந்து ஒரு பிராண்டாக மாற்றும் முயற்சியில் தன்னுடைய பிராண்டை வளர்ப்பதற்கான முதலீடுகளை செய்துவருவதாக கூறும் இந்த நிறுவனம், கடந்த ஆண்டு இறுதி வரை கிட்டத்தட்ட ரூ.300 கோடி செலவை பிராண்டை வளர்ப் பதற்காகச் செய்துள்ளது.

வடகிழக்கு மாநிலங்களில் சிமென்டுக்கான தேவை என்று பார்க்கும்போது, அது அதிகரிப் பதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று தோன்றும் அளவுக்கே புள்ளிவிவரங்கள் இருக்கின்றன. சிமென்ட் உபயோகம் என்ற அளவீட்டைச் செய்ய தனிமனித பயன்பாடு (Percapita consumption) என்பது ஒரு அளவீடாகவே பயன்படுத்தப்படுகிறது. அகில இந்திய ரீதியாக சராசரி அளவாக இது 225 கிலோ கிராம் என்ற அளவீட்டில் உள்ளது. பிராந்திய ரீதியாகப் பார்த்தால், இந்தியா வைப் பொறுத்தவரை வடக்கில் இது 269 கிலோ கிராம் எனும் அளவிலும், தெற்கில் 218 கிலோ கிராம் என்ற அளவிலும், மேற்கில் 293 கிலோ கிராம் என்ற அளவிலும் மத்தியில் 134 கிலோ கிராம் என்ற அளவிலும், கிழக்கில் 131 கிலோ கிராம் என்ற இருப்பதிலேயே குறைவான அளவிலும் இருக்கிறது. எனவே, கிழக்கு பிராந்தியத்தில் சிமென்டுக்கான தேவை அதிகரிப்பதற்கான வாய்ப்புகளே இருக்கின்றன. எனவே, இந்த நிறுவனத்துக்கான வியாபாரம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் இருக்கவே செய்கின்றன.

ரிஸ்க்குகள் ஏதும் உண்டா?

சிமென்ட் உற்பத்தித்துறை பெரும்பலான அளவில் பொருளாதார வளர்ச்சியைச் சார்ந்து இயங்கும் துறையாகும். பொருளாதார வளர்ச்சி, அரசாங்கத்தின் கொள்கை முடிவுகள் போன்றவை இந்தத் துறையின் செயல்பாட்டில் பெரும்பங்கு வகிக்கின்றன.

சிமென்ட் துறையில் செயல் படும் நிறுவனங்களுக்கு உரித்தான அனைத்து ரிஸ்க்கு களும் இந்த நிறுவனந்துக்கும் உண்டு எனலாம். பொருளாதாரம் எதிர்பார்த்த அளவு வளர்ச்சியடையாது போனாலோ தேக்கநிலையைச் சந்தித்தாலோ இந்த நிறுவனத்தின் செயல் பாட்டையும் பாதிக்கவே செய்யும் என்று எதிர்பார்க்கலாம்.

தொழில் ரீதியான போட்டி, உற்பத்திச் செலவு அதிகரிப்பு, அரசாங்கத்தின் கொள்கை முடிவுகள் மற்றும் திட்ட மாறுதல்கள், சுற்றுச்சூழல் சார்ந்த கொள்கை மாறுதல்கள் போன்றவையும் இந்த நிறுவனத்துக்கு உரித்தேயான ரிஸ்க்குகளேயாகும்.

ஸ்டார் சிமென்ட்ஸ் லிமிடெட்! அறிவோம் பங்கு நிறுவனம்...

முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

இந்தப் பகுதி பங்குகளைப் பரிந்துரை செய்யும் பகுதி அல்ல. முதலீட்டாளர் களுக்குப் பங்குகளை அறிமுகப்படுத்துதல் மற்றும் கல்வியே இந்தப் பகுதியின் நோக்கம்.

பங்கு முதலீடுகள் சந்தை அபாயத்துக்கு உட்பட்டது என்பதால், எந்தவொரு பங்கை வாங்கும் முன்னும் செபி பதிவு பெற்ற முதலீட்டு ஆலோசகரைக் கலந்தாலோசித்து, அந்தப் பங்கில் முதலீடு செய்வதில் இருக்கும் ரிஸ்க் உங்களுக்கு உகந்ததுதானா என்பதை முடிவுசெய்த பின்னரே முதலீட்டு நடவடிக்கைகளை நீங்கள் எடுக்க வேண்டும்!