Published:Updated:

டி.சி.பி.எல் பேக்கேஜிங் லிமிடெட்! (NSE SYMBOL: TCPLPACK, BSE CODE: 523301)

அறிவோம் பங்கு நிறுவனம்...

பிரீமியம் ஸ்டோரி

இந்த வாரம் நாம் அறிமுகப்படுத்தும் நிறுவனம் அட்டைப்பெட்டிகள், அச்சடிக்கப்பட்ட மற்றும் அச்சடிக்கப் படாத வெளிப்புற அட்டைகள், லித்தோ-லேமினேஷன்கள், பிளாஸ்டிக் பெட்டிகள், ப்ளிஸ்டர் பேக்குகள் (blister pack) மற்றும் விற்பனைக்குத் தயாரான பெட்டிகளை பாதியாகவோ, கால்வாசியாகவோ பிரித்து கடையில் உள்ள ஷெல்ப்களில் வைக்க ஏதுவான வகையிலான பேக்கேஜிங் (shelf ready packaging) மெட்டீரியல்களை உற்பத்தி செய்யும் டி.சி.பி.எல் பேக்கேஜிங் லிமிடெட்.

வளையும் தன்மை கொண்ட பேக்கேஜிங் மெட்டீரியல்கள் உற்பத்தியில் பிரின்டட் கார்க்-டிப்பிங் (printed cork-tipping), பேப்பர்கள், லேமினேட்கள், பொருள்களைப் பொட்டல மாகக் கட்டத் தேவையான ராப் அரெளண்ட் லேபிள்கள் (wrap around label) உள்ளிட்ட பல்வேறு நூதனமான தயாரிப்புகளையும் உற்பத்தி செய்து விற்பனை செய்துவருகிறது இந்த நிறுவனம். 2020-21 நிதியாண்டில் சுமார் ரூ.900 கோடி அளவிலான விற்றுவரவையும், 1,900 பணியாளர்களையும் கொண்டிருந்தது இந்த நிறுவனம். 1990-களில் கர்ட்டன் பாக்ஸ்கள் (carton box) உற்பத்தி வசதியை சில்வாசாவில் நிறுவியதன் மூலம் பேக்கேஜிங் துறையில் இந்தக் குழுமம் கால்பதித்தது.

நிறுவனத்தின் வளர்ச்சி...

படங்களை க்ராவ்யூர் (photogravure எனும் gravure முறையில் அச்சடிக்கும் வசதி) முறையில் லேபிள்களை அச்சடிப்பதில் இந்தியாவில் முன்னோடி நிறுவனமாகச் செயல்பட ஆரம்பித்த டி.சி.பி.எல் நிறுவனம், இன்றைக்கும் தனிப்பட்ட பேக்கேஜிங் உற்பத்தி வசதியைக் கொண்டிருக்கும் பேக்கேஜிங் பொருள்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் மத்தியில் இந்த டெக்னாலஜியைக் கொண்டிருக்கும் ஒரேயொரு நிறுவனமாகத் திகழ்கிறது. ஆஃப்செட் பேக்கேஜிங் பிரிவில் தாங்கும் சக்தியை அதிகம் கொண்ட அட்டைப் பெட்டிகள் தயாரிப்பதிலும் முன்னணி நிலையில் இருக்கிறது. ஃப்ளெக்சிபிள் பேக்கேஜிங் பிரிவில் கார்க் டிப்பிங் பேப்பர்கள், லேமினேட்கள், ஸ்லீவ்கள் உள்ளிட்ட பல பொருள்களைத் தயாரிக்கும் இந்த நிறுவனத்தின் உற்பத்தி வசதி சில்வாசாவில் ஏற்கெனவே நிறுவப்பட்டுள்ள உற்பத்தி வசதிக்கு மிக அருகிலேயே செயல்பட்டு வருகிறது.

டி.சி.பி.எல் பேக்கேஜிங் லிமிடெட்! (NSE SYMBOL: TCPLPACK, BSE CODE: 523301)

மூன்று பெரும் பிரிவுகளில்...

இந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் எனப் பார்த்தால் ஃபோல்டிங் கர்ட்டன்கள் (Folding carton), ஸ்பெஷாலிட்டி ரக பரிசளிக்கும் வகை யிலான தயாரிப்புகளுக்கான பேக்கேஜ்கள், ஃப்ளெக்சிபிள் பேக்கேஜிங் என்ற மூன்று பெரும் பிரிவுகளில் செயல்பட்டு வருகிறது.

ஃபோல்டிங் கர்ட்டன்கள் என்பது எஃப்.எம்.சி.ஜி துறையில் பற்பசை, பால் மற்றும் சத்து மாவுகள், சாக்லேட்டுகள், மது, மருந்துவகைகள் மற்றும் ஏனைய தொழில்துறையில் பயன்படுத்தப்படும் அட்டைப் பெட்டிகளாகும். உதாரணமாக, நெஸ்லேயில் நான்-ப்ரோ (பவுடர்), கேட்பரிஸ் நட்டீஸ் சாக்லேட்கள், ஜான்சன் அண்ட் ஜான்சனின் பேண்ட் எய்ட், வாஸ்மால் கேஷ் காலா, லீவிஸ் ஜட்டிகள் பனியன்கள், ராயல் ஸ்டேக் விஸ்கி, நிவியா மென் க்ரீம் உள்ளிட்ட பல்வேறு எஃப்.எம்.சி.ஜி பொருள்கள் பேக் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும் அட்டைப் பெட்டிகள் இந்த ரகத்தில் அடங்கும். ஷெல்ஃப் ரெடி பேக்கேஜிங் எனும் முறையில் நெஸ்லே மில்கி பார், கிண்டர் ஜாய் உள்ளிட்ட பல பொருள்களுக்கு பேக்கேஜிங் பொருள்களை உற்பத்தி செய்து தருகிறது.

ஸ்பெஷாலிட்டி மற்றும் கிஃப்ட் பேக்கேஜிங் பிரிவில் கேட்பரிஸ் டைரிமில்க் சில்க், ஜான்சன்ஸ் குழந்தைகளுக்கான கிஃப்ட் பேக், பார்க் அவென்யூ கிஃப்ட் பேக் உள்ளிட்ட பல நிறுவனங்களுக்கான பரிசளிக்கும் வகையிலான பேக்கேஜிங் பொருள்களை உற்பத்தி செய்துதருகிறது. உணவுப் பொருள்களுக்கான பேக்கேஜிங் பிரிவில் குளுக்கான்-டி, தாஜ்மஹால் டீ, பதஞ்சலி நெய் உள்ளிட்ட பல நிறுவனங்களுக்கான பேக்கேஜிங் பொருள்களை உற்பத்தி செய்து தருகின்றது. பார்மா பேக்கேஜிங் பிரிவில் அக்வா சாஃப்ட் சோப், சைடஸ் கெடில்லா நிறுவனத்தின் மருந்துகள், ஷலினா ஹெல்த் கேர் போன்றவற்றின் தயாரிப்புகளுக்கான பேக்கேஜிங்கை உற்பத்தி செய்து தருகிறது. பேக்கேஜிங் பொருள்கள் உற்பத்தியில் 31 வருடங்களுக்கும் மேலான அனுபவத்துடன் திகழும் இந்த நிறுவனம், கடந்த 17 ஆண்டு களில் (2007 - 2021 வரை) 17.7 சதவிகித சிஏஜிஆர் அளவிலான விற்பனை வளர்ச்சியைக் கண்டுள்ளது.

இந்திய அளவில் உள்ள வாடிக்கையாளர்கள், கன்ஸ்யூமர் குட்ஸ், உணவு மற்றும் பானங்கள், புகையிலை சார்ந்த தயாரிப்புகள், மது, அக்ரோ கெமிக்கல், பார்மா உள்ளிட்ட தொழில்களுக்கான பேக்கேஜிங் பொருள்களை உற்பத்தி செய்து தரும் இந்த நிறுவனம், கடந்த நிதியாண்டில் தன்னுடைய போல்டிங் கர்ட்டன் பிரிவில் இருந்து 85% ிகித விற்று வரவையும், ஃப்ளெக்சிபிள் பேக்கேஜிங் பிரிவில் இருந்து 15 சதவிகித விற்று வரவையும் கொண்டிருந்தது.

டி.சி.பி.எல் பேக்கேஜிங் லிமிடெட்! (NSE SYMBOL: TCPLPACK, BSE CODE: 523301)

வாடிக்கையாளர் தொடர்பு...

தன் நிறுவன ரீதியான வாடிக்கையாளர்களுடன் 31 ஆண்டுகளாக சிறந்த வர்த்தக ரீதியான தொடர்புடன் இருப்பது, போல்டிங் கர்ட்டன் பேக்கேஜிங் பிரிவில் நூற்றுக்கும் மேற்பட்ட நிறுவன ரீதியிலான வாடிக்கையாளர்களையும், ஃப்ளெக்சிபிள் பேக்கேஜிங் பிரிவில் 50-க்கும் மேற்பட்ட நிறுவன ரீதியிலான வாடிக்கை யாளர்களையும் கொண்டிருப்பது இந்த நிறுவனத்தின் தனிச்சிறப்பு.

எஃப்.எம்.சி.ஜி பிரிவில் யூனிலீவர், கோல்கேட் பாமோலிவ், ஜான்சன் & ஜான்சன், டாபர், ரேமண்ட், ஜோதிலேப், ஜியோ, சோலையில், நீவியா, மாரிக்கோ, கோத்ரெஜ், ஐ.டி.சி, கவின்கேர், இமாமி, ரெக்கிட் உள்ளிட்ட பல முக்கிய நிறுவனங்களையும், ஃபுட் மற்றும் பெவரேஜ் பிரிவில் அமுல், ஹெய்ன்ஸ், பிரிட்டனியா, டான்ஒன், அபாட், மாரிக்கோ, நெஸ்லே, டாடா கன்ஸ்யூமர், மதர் டைரி, ஹால்திராம்ஸ், பார்லே, மான்டலீஸ் உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங் களையும், புகையிலை சார்ந்த பொருள்கள் தயாரிப்பில் ஐ.டி.சி, பிலிப் மோரிஸ் இன்டர்நேஷனல், காட்பெரி பிலிப்ஸ், வி.எஸ்.டி உள்ளிட்ட பல முக்கிய நிறுவனங் களையும், அக்ரோகெமிக்கல் துறையில் ஜான்சன் & ஜான்சன், சிப்லா, பாஸ்ச், ட்யூபான்ட், பிடிலைட், சைடஸ் கெடில்லா, பாயர், அல்கெம், யுபில் உள்ளிட்ட பல முக்கிய நிறுவனங்களையும், மது பானங்கள் பிரிவில் யுனை டெட் ஸ்பிரிட்ஸ், டியாஜியோ, பெர்னார்ட் ரிக்கர்ட், அல்லைடு ப்ளென்டர்ஸ், ராடிகோ, ஜான் டிஸ்டிலரிஸ் உள்ளிட்ட பல நிறுவனங்களையும் வாடிக்கை யாளராகக் கொண்டுள்ளது இந்த நிறுவனம்.

இந்தியாவைப் பொறுத்தவரை, நுகர்வோர்களின் தேவை மற்றும் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், நுகர் பொருள்களுக்கான பேக்கேஜிங் தேவையும் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கும். காகிதத்தாலான அட்டை கொண்டு பேக்கேஜிங் செய்வது என்பது கன்ஸ்யூமர், ஃபுட் & பெவரேஜ், மது, அக்ரோ-கெமிக்கல், பார்மா, ரீடெயில் மற்றும் ஏனைய துறைகளில் கணிசமான வளர்ச்சியைக் கண்டு வருகிறது. மேலும் ஒரேயொரு முறை உபயோகிக்கும் வகை யிலான பிளாஸ்டிக்குகளை தவிர்க்கும் கட்டாயம் ஏற்பட்டுள்ள தால் காகித அட்டையிலான பேக்கேஜிங் என்பது இன்னும் வளர்ச்சியைச் சந்திக்கும் என்று எதிர்பார்க்கலாம். மேலும், எதிர்காலத்தில் பயோ-டிக்ரேடபிள் பேக்கேஜிங், ஸ்மார்ட் பேக்கேஜிங் எனப் பல முன்னேற்றங்களும் இந்தக் காகித அட்டையிலான பேக்கேஜிங்கில் வருவதற்கான வாய்ப்புகளும் அதிகம் என்பதால் எதிர்காலத்தில் வியாபாரத்துக்கான வாய்ப்பு களுக்கு பஞ்சம் இருக்காது எனலாம்.

டி.சி.பி.எல் பேக்கேஜிங் லிமிடெட்! (NSE SYMBOL: TCPLPACK, BSE CODE: 523301)

ரிஸ்குகள் என்னென்ன?

பேக்கேஜிங் மெட்டீரியல்கள் தயாரிக்கும் துறையில் செயல்படும் நிறுவனங்களுக்கே உரித்தான ரிஸ்க்குகள் அனைத்தும் இந்த நிறுவனத்துக்கும் உண்டு எனலாம். மூலப்பொருள்கள் விலை உயர்வு, வாடிக்கையாளர்களின் (நிறுவன ரீதியிலான) தேவைகளில் ஏற்படும் மாற்றங்கள், நவீன தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்துதல், நுகர்வோர்களின் ரசனை மாற்றம், அந்நிய செலாவணி மதிப்பு மாறுதல், அரசாங்கத்தின் கொள்கை முடிவுகள் என அனைத்துமே இந்த நிறுவனத்தின் செயல்பாட்டில் பாதிப்பை உருவாக்கலாம்.

முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

இந்தப் பகுதி, பங்குகளைப் பரிந்துரை செய்யும் பகுதி அல்ல. முதலீட்டாளர்களுக்குப் பங்குகளை அறிமுகப் படுத்துதல் மற்றும் கல்வியே இந்தப் பகுதியின் நோக்கம். பங்கு முதலீடுகள் சந்தை அபாயத்துக்கு உட்பட்டது என்பதால், எந்தவொரு பங்கை வாங்கும் முன்னும் செபி பதிவு பெற்ற முதலீட்டு ஆலோசகரைக் கலந்தாலோசித்து, அந்தப் பங்கில் முதலீடு செய்வதில் இருக்கும் ரிஸ்க் உங்களுக்கு உகந்ததுதானா என்பதை முடிவுசெய்த பின்னரே, முதலீட்டு நடவடிக்கைகளை நீங்கள் எடுக்க வேண்டும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு