பிரீமியம் ஸ்டோரி

இந்த வாரம் நாம் அறிமுகப்படுத்தும் நிறுவனம், 1987-ம் ஆண்டில் ஜெர்மனியைச் சார்ந்த ஷாக் அண்ட் கோ ஜி.எம்.பி.ஹெச் என்னும் நிறுவனத்தின் கூட்டணியுடன் காம்ப்போசைட் குவார்ட்ஸ் சிங்க்குகள் (சமையலறையில் பாத்திரம் கழுவும் தொட்டிகள் போன்ற) தயாரிக்க ஆரம்பித்த நிறுவனமான அக்ரிசில் லிமிடெட்.

நிறுவனத்தின் வளர்ச்சி...

ஜெர்மன் தொழில்நுட்பத்துடன் காம்ப்போ சைட் குவார்ட்ஸ் கிச்சன் சிங்குகள் உற்பத்தி செய்வதில் உலக அளவில் நான்காவது பெரிய நிறுவனமாக இந்த நிறுவனம் அறியப்படுகிறது. குவார்ட்ஸ் கிச்சன் சிங்க், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கிச்சன் சிங்க், ஃபாசெட்ஸ், ஃபுட் வேஸ்ட் டிஸ்போசர்ஸ் போன்றவற்றில் ஆரம்பித்து சிம்னிக்கள், குக்-டாப்கள், வொயின் சில்லர்கள் உள்ளிட்ட பல சமையலறை உபயோகத்துக்கான உபகரணங் களை உற்பத்தி செய்து விற்பனை செய்வதில் முன்னணி நிறுவனமாகத் திகழ்கிறது இந்த நிறுவனம். ‘கேரிசில்’ மற்றும் ‘ஸ்டேர்ன் ஹேகன்’ என்ற இரண்டு பிராண்டுகளில் விற்பனை செய்கிறது இந்த நிறுவனம்.

குவார்ட்ஸ் கிச்சன் சிங்க்ஸ் தயாரிப்பில் நிர்மாணிக்கப்பட்ட உற்பத்தி வசதியில் 90% என்ற அளவில் உற்பத்தி செய்துகொண்டிருக்கும் இந்த நிறுவனம், நானூறுக்கும் மேற்பட்ட பல்வேறு தயாரிப்புகளை உற்பத்தி செய்து 55-க்கும் மேற்பட்ட நாடுகளில் விற்பனை செய்து வருகிறது. தயாரிப்புகளை விற்பனை செய்வதற்காக அங்கீகரிக்கப்பட்ட 1,500 டீலர் களைக் கொண்டிருக்கும் இந்த நிறுவனம், தன்னுடைய தயாரிப்புகளை வாடிக்கை யாளர்கள் பார்வைக்கு வைக்கும்படி அமைக்கப்பட்ட 80-க்கும் மேற்பட்ட கேலரி களையும் நிறுவியுள்ளது. மேலும், 82-க்கும் மேற்பட்ட விநியோகஸ்தர்கள் வாயிலாக தன்னுடைய தயாரிப்புகளை வாடிக்கையாளர் களிடம் கொண்டு சேர்க்கிறது இந்த நிறுவனம்.

அக்ரிசில் லிமிடெட்! (NSE SYMBOL: ACRYSIL, BSE CODE: 524091)

1993-ம் ஆண்டில் இந்த நிறுவனம் தன்னுடைய தயாரிப்புகளை ஏற்றுமதி செய்வதில் கவனம் செலுத்த ஆரம்பித்தது. 2004-ம் ஆண்டில் ஒரு நூறு சதவிகித ஏற்றுமதிக்கான உற்பத்தி மையத்தை நிறுவிய இந்த நிறுவனம், 2010-ம் ஆண்டில் `அக்ரிசில் ஜி.எம்.பி.ஹெச்’ என்னும் இன்டர்நேஷனல் துணை நிறுவனம் ஒன்றை ஜெர்மனியில் நிறுவியது. 2011-ம் ஆண்டில் அக்ரிசில் ஸ்டீல் லிமிடெட் என்ற துணை நிறுவனத்தின்கீழ் ஸ்டெயின்லெஸ் ஸ்டீலினால் ஆன சிங்குகளை உற்பத்தி செய்ய ஆரம்பித்தது இந்த நிறுவனம். பின்னர், 2013-ம் ஆண்டில் `கேரிசில்’ எனும் பிராண்டில் கிச்சன் அப்ளையன்சஸை உற்பத்தி செய்து விற்பனை செய்ய ஆரம்பித்தது இந்த நிறுவனம். 2014-ம் ஆண்டில் யுகே நிறுவனமான `ஹோம் ஸ்டைல் புராடக்ட்ஸ் லிமிடெட்’ என்ற நிறுவனத்தைக் கையகப் படுத்தியது.

2017-ம் ஆண்டில் அகமதாபாத் மற்றும் மும்பையில் `ஸ்டர்ன்ஹாகன்’ என்னும் பிராண்ட்டில் அதிநவீன ஷோரும் மற்றும் எக்ஸ்பீரியன்ஸ் சென்டரை ஆரம்பித்தது இந்த நிறுவனம். 2018-ம் ஆண்டில் ஹங்கேரி நிறுவனமான `நெக்ஸ்ட்ஷிப்’ எனும் நிறுவனத் துடன் தொழில்நுட்பக் கூட்டணியை அமைத்து காம்ப்போசைட் டைல்ஸ்களை உற்பத்தி செய்ய ஆரம்பித்தது. 2019-ம் ஆண்டில் ஜெர்மன் முன்னணி பிராண்டான `குரோஹே’ எனும் பிராண்ட் நிறுவனத்துக்கான குவார்ட்ஸ் கிச்சன் சிங்குகளை உற்பத்தி செய்து சப்ளை செய்ய ஆரம்பித்தது. 2020-ம் ஆண்டில் `அக்ரிசில் யு.எஸ்.ஏ இங்க்’ எனும் நிறுவனத்தை அமெரிக்காவில் நிறுவிய இந்த நிறுவனம், அதே ஆண்டில் தன்னுடைய குவார்ட்ஸ் சிங்க் உற்பத்திக்கான நிர்மாணிக்கப்பட்ட உற்பத்தி அளவுதனை அரை மில்லியன் என்ற அளவுக்கு அதிகரித்தது. 2021-ம் ஆண்டில் தன்னுடைய குவார்ட்ஸ் சிங்க் உற்பத்தி வசதிக்கான நிர்மாணிக்கப்பட்ட அளவை ஏழு லட்சம் என்ற அளவுக்கு அதிகரித்தது இந்த நிறுவனம்.

அக்ரிசில் லிமிடெட்! (NSE SYMBOL: ACRYSIL, BSE CODE: 524091)

நிறுவன தயாரிப்புகள்...

இந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் என்று பார்த்தால், சமையலறை (கிச்சன்) மற்றும் குளியலறை (பாத்ரூம்) ஃபிட்டிங்ஸ் என்ற இரண்டு பெரும் பிரிவில் இயங்கிவருகிறது இந்த நிறுவனம். சமயலறைக்கான தயாரிப்புகளில் சிங்குகள் மற்றும் அப்ளையன்ஸ்கள், குளியலறைக்கான தயாரிப்பு களில் பாத்ரூம் ஃபிட்டிங்ஸ் போன்றவற்றைத் தயாரித்து விற்பனை செய்துவருகிறது இந்த நிறுவனம்.

இந்த நிறுவனத்தின் விற்றுவரவில் உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி வர்த்தகத்தின் பங்களிப்பு கடந்த நிதியாண்டின் இறுதி நிலவரப்படி, தன்னுடைய மொத்த விற்றுவரவில் உள்நாட்டு விற்பனையின் பங்களிப்பு 21 சதவிகிதமாகவும், ஏற்றுமதி வர்த்தகத்தின் பங்களிப்பு 79 சதவிகிதமாகவும் இருக்கிறது. இதே காலகட்டத்தில் விற்றுவரவில் தயாரிப்புகளின் பங்களிப்பு என்ற ரீதியாகப் பார்த்தால் குவார்ட்ஸ் சிங்குகள் 71 சதவிகிதத்தையும், ஸ்டீல் சிங்குகள் 14 சதவிகிதத்தையும், ஏனைய கிச்சன் அப்ளையன்சஸ் 10% பங்களிப்பையும் கொண்டிருந்தது. கடந்த நிதியாண்டில் 4,13,176 குவார்ட்ஸ் சிங்குகளை விற்பனை செய்த இந்த நிறுவனம், இதற்காக பிரத்யேகமாக 1,500-க்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்களைக் கொண்டிருந்தது. 120-க்கும் மேற்பட்ட குவார்ட்ஸ் கிச்சன் சிங்குகளை வெற்றிகரமாக வடிவமைத்து விற்பனை செய்து வருகிறது இந்த நிறுவனம். மார்ச் 2021-க்கு முந்தைய 18 மாதங்களில் தன்னுடைய நிர்மாணிக்கப்பட்ட உற்பத்தி வசதியை ஆண்டொன்றுக்கு 5,00,000 என்ற அளவிலிருந்து 7,00,000 என்ற அளவுக்கு அதிகரித்துக் கொண்டுள்ள இந்த நிறுவனம், இன்னும் ஆண்டு ஒன்றுக்கு 1,40,000 குவார்ட்ஸ் கிச்சன் சிங்குகளை உற்பத்தி செய்யும் அளவுக்கான வளர்ச்சிக் கான முயற்சிகளையும் எடுத்து வருகிறது.

கடந்த நிதியாண்டில் 68,852 ஸ்டீல் சிங்குகளை விற்பனை செய்த இந்த நிறுவனம், தன்னுடைய பாவ்நகர் வசதியில் (அக்ரிசில் ஸ்டீல் லிமிடெட் எனும் துணை நிறுவனம் வாயிலாக) ஆண்டொன்றுக்கு 50,000 சிங்குகளுக்கு கோட்டிங் செய்வதற்கான ஏற்பாட்டைச் செய்துள்ளது. கிச்சன் ஃபிட்டிங் குகள், ஹுட்ஸ், குக்டாப்ஸ், டிஷ் வாஷர்ஸ், வொயின் சில்லர்கள், குக்கிங் ரேஞ்சுகள், மைக்ரோவேவ் ஓவன்கள் போன்ற தயாரிப்புகளை இந்த நிறுவனம் ‘கேரிசில்’ என்னும் பிராண்டில் அமெரிக்காவில் உள்ள துணை நிறுவனமான அக்ரிசில் யு.எஸ்.ஏ இங்க் எனும் நிறுவனத்தின்மூலம் விற்பனை செய்துவருகிறது.

பாத்ரூம் ஃபிட்டிங்குகளில் லக்சரி பிராண்டாக இருக்கும் இந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் ஜெர்மனியில் உள்ள ‘அக்ரிசில் ஜி.எம்.பி.ஹெச்’ என்ற துணை நிறுவனத்தின் வாயிலாக சந்தைப் படுத்தப்படுகிறது. இதற்கென அறுபதுக்கும் மேற்பட்ட தனிப்பட்ட ஷோரூம்கள் அங்கே செயல்பட்டுவருவது குறிப்பிடத் தக்க விஷயமாகும். இந்தியாவில் நல்லதொரு ஸ்திரமான சந்தையைக் கொண்டிருக்கும் இந்த நிறுவனம், உலகச் சந்தையில் யுகே, ஜெர்மன் மற்றும் அமெரிக் காவிலும் கால்பதித்து வெற்றி கரமாகச் செயல்பட்டு வருகிறது. அமெரிக்கா, இஸ்ரேல், டென் மார்க் மற்றும் ஜெர்மனியில் பல முன்னணி நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டு வருவதும் சிறப்பானதொரு விஷயமாகப் பார்க்கப்படுகிறது.

உலக அளவில் கிச்சன் சிங்கு களுக்கான சந்தையின் அளவு அமெரிக்க டாலர் மதிப்பீட்டில் 3.1 பில்லியன் டாலர் என்ற அளவில் இருக்கிறது. இது 2021 முதல் 2030 ஆண்டு வரையிலான காலகட்டத்தில் 4% அளவில் (சி.ஏ.ஜி.ஆர்) வளரும் என்று தொழில் ரீதியிலான மதிப்பீடுகள் கூறுகின்றன. எண்ணிக்கையின் அடிப்படையில் பார்த்தால், 80 - 90 மில்லியன் யூனிட்டுகள் என்ற அளவில் இருக்கிறது. இதில் ஒன்பது மில்லியன் என்ற அளவில் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் அல்லாத சிங்குகள் இருக்கின்றன. இதில் கிட்டத்தட்ட ஐந்து மில்லியன் அளவிலான குவார்ட்ஸ் சிங்குகள் ஷாக் டெக்னாலஜி மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது. குவார்ட்ஸ் சிங்குகளுக்கான தேவை 25% (சி.ஏ.ஜி.ஆர்) என்ற அளவில் வளரும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

அக்ரிசில் லிமிடெட்! (NSE SYMBOL: ACRYSIL, BSE CODE: 524091)

ரிஸ்க்குகள் என்னென்ன?

குவார்ட்ஸ் சிங்குகள், ஸ்டெயிலெஸ் ஸ்டீல் சிங்குகள் மற்றும் கிச்சன் அப்ளையன்ஸ் உற்பத்தித் துறையில் இயங்கும் நிறுவனங்களுக்கே உரித்தான ரிஸ்க்குகள் அனைத்தும் இந்த நிறுவனத்துக்கும் உண்டு. மூலப்பொருள்கள் விலை உயர்வு, தொழில்நுட்பத்தில் காலப்போக்கில் வருகிற மாற்றங்கள், வாடிக்கையாளர்களின் ரசனை மாறுதல், தொழில் ரீதியான ஏற்பட வாய்ப்புள்ள கடுமையான போட்டி, அந்நியச் செலாவணியின் மதிப்பு மாறுதல் போன்ற ரிஸ்க்குகளும் இந்த நிறுவனத்துக்கு உண்டு.

அக்ரிசில் லிமிடெட்! (NSE SYMBOL: ACRYSIL, BSE CODE: 524091)

முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

இந்தப் பகுதி பங்குகளைப் பரிந்துரை செய்யும் பகுதி அல்ல. முதலீட்டாளர்களுக்குப் பங்குகளை அறிமுகப் படுத்துதல் மற்றும் கல்வியே இந்தப் பகுதியின் நோக்கம். பங்கு முதலீடுகள் சந்தை அபாயத்துக்கு உட்பட்டது என்பதால், எந்தவொரு பங்கை வாங்கும் முன்னும் செபி பதிவு பெற்ற முதலீட்டு ஆலோசகரைக் கலந்தாலோசித்து, அந்தப் பங்கில் முதலீடு செய்வதில் இருக்கும் ரிஸ்க் உங்களுக்கு உகந்ததுதானா என்பதை முடிவுசெய்த பின்னரே, முதலீட்டு நடவடிக்கைகளை நீங்கள் எடுக்க வேண்டும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு