பங்குச் சந்தை
தொடர்கள்
நடப்பு
Published:Updated:

திரிவேணி இன்ஜினீயரிங் & இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்! (BSE Code: 532356, NSE Symbol: TRIVENI)

திரிவேணி இன்ஜினீயரிங்
பிரீமியம் ஸ்டோரி
News
திரிவேணி இன்ஜினீயரிங்

கம்பெனி பயோடேட்டா

இந்தப் பகுதியில் இந்த வாரம் நாம் பார்க்கப்போகும் நிறுவனம் திரிவேணி இன்ஜினீயரிங் & இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் எனும் நிறுவனத்தினுடையது.

1937-ல் தொடங்கப்பட்ட நிறுவனம்...

இன்றைக்கு 1,500-க்கும் மேற்பட்ட பணி யாளர்களுடனும் 17 உற்பத்தி மையங்களுடனும் வெற்றிகரமாகச் செயல்பட்டுவரும் இந்த நிறுவனத்துக்கான வித்தானது 1937-ம் ஆண்டில் இடப்பட்டது. சர்க்கரை மற்றும் இன்ஜினீயரிங் என்ற இரண்டு பெரும் தொழில் பிரிவுகளில் ஈடுபட்டு வருகிறது இந்த நிறுவனம்.

சர்க்கரை உற்பத்தி என்கிற பிரிவின்கீழ் சர்க்கரை மற்றும் ஆல்கஹாலும், இன்ஜினீயரிங் பிரிவின்கீழ் பவர் டிரான்ஸ்மிஷன், தண்ணீர் மற்றும் வடிகால் நீரை சுத்திகரிப்பதற்கான இயந்திரங்கள் உற்பத்தியிலும் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் பங்குகள் 2005-ம் ஆண்டில் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது.

இந்தியாவிலேயே மிகப் பெரிய ஒருங்கிணைந்த சர்க்கரை உற்பத்தி மையத்தைக் கொண்டிருக்கிறது இந்த நிறுவனம். இந்த ஒருங்கிணைந்த உற்பத்தி மையத்தில் பல்வேறு தரப் பிரிவிலான சர்க்கரை, பருகத்தக்க ஆல்கஹால், எத்தனால் மற்றும் மின்சார உற்பத்தி போன்றவற்றில் ஈடுபட்டு வருகிறது. உத்தரப்பிரதேசத்தில் 7 எஃப்.எஸ்.எஸ்.சி 22000 தரச்சான்று பெற்ற சர்க்கரை ஆலைகளைக் கொண்டு இயங்கிவருகிறது இந்த நிறுவனம்.

திரிவேணி இன்ஜினீயரிங் & இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்! (BSE Code: 532356, NSE Symbol: TRIVENI)

விவசாயிகளுடன் நீடிக்கும் உறவு...

உத்தரப்பிரதேசத்தில் உள்ள கட்டாவ்லி, டியோபாண்ட், சபித் கார்க், ராம்கோலா, ராணிநங்கல், சந்தன் பூர், மிலாக் நாராயண்பூர் போன்ற இடங்களில் இந்த நிறுவனத்தின் உற்பத்தி மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்த ஆலைகளுக்குத் தேவைப்படும் கரும்பை விளைவிக்க மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளிடம் ஒப்பந்த ரீதியான உற்பத்திக்கான ஏற்பாடுகளைச் செய்துகொண்டுள்ளது இந்த நிறுவனம். விவசாயிகளுடன் இந்த நிறுவனம் கொண்டிருக்கும் நீண்ட உறவானது இந்திய சர்க்கரை ஆலைகளின் சரித்திரம் ஆரம்பித்த காலத்திலிருந்தே இருந்துவருகிறது. இந்த நிறுவனத்தின் சர்க்கரை ஆலைகளில் நாளொன்றுக்கு கிட்டத்தட்ட 61,000 டன் அளவிலான கரும்பைச் சாறுபிழிந்து சர்க்கரை தயாரிக்கும் அளவிலான நிர்மாணிக்கப்பட்ட உற்பத்தி வசதி இருக்கிறது.

இந்த சர்க்கரை ஆலைகளில் 104.5 மெகாவாட் அளவிலான மின்சாரம் உற்பத்தி செய்யும் அளவிலான ஆறு கோ-ஜெனரேஷன் அடிப்படையிலான மின்சார உற்பத்தி மையத்தையும் கொண்டுள்ளது இந்த நிறுவனம். இந்த கோ-ஜெனரேஷன் வசதிகளில் சர்க்கரை உற்பத்திக்குக் கரும்புகளில் இருந்து சாறு பிழியப்படும்போது மீதமாக இருக்கும் கரும்புச் சக்கையானது பயன்படுத்தப்படுகிறது. இந்த மின்சார உற்பத்தி மையத்தில் உற்பத்தி செய்யப் படும் மின்சாரமானது இந்த நிறுவனத்தின் சொந்த உபயோகத்துக்குப் பயன்படுத்தப்படுகிறது.அதுபோக மீதமிருக்கும் மின்சாரத்தை இந்த நிறுவனம் உத்தரப்பிரதேச பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்துக்கு விற்பனை செய்து விடுகிறது.

திரிவேணி இன்ஜினீயரிங் & இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்! (BSE Code: 532356, NSE Symbol: TRIVENI)

பல்வேறு உற்பத்தியில்...

ஆல்கஹால் உற்பத்திப் பிரிவில் எக்ஸ்ட்ரா நியூட்ரல் ஆல்கஹால் (ENA) எனும் பருகுவதற்கு ஏற்ற ஆல்கஹால் உற்பத்தி செய்ய பயன்படுத்தப் படும் ஆல்கஹாலையும், எரிபொருள் கிரேட் எத்தனாலையும் உற்பத்தி செய்துவருகிறது இந்த நிறுவனம். இதற்காக அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட உற்பத்தி மையத்தை முசாபர் நகர் மற்றும் சபீத்கார்க் எனும் இடங்களில் நிறுவி உள்ளது இந்த நிறுவனம். நாளொன்றுக்கு 320 கிலோ லிட்டர் என்ற அளவில் நிர்மாணிக்கப் பட்ட உற்பத்தித் திறனைக் கொண்டிருக்கும் இந்த நிறுவனத்தின் உற்பத்தி மையமானது ஆண்டொன்றுக்கு 355 நாள்கள் செயல்படுகிறது.

முசாபர் நகரில் இருக்கும் உற்பத்தி மையத்தில் எத்தனால், எக்ஸ்ட்ரா நியூட்ரல் ஆல்கஹால், ரெக்டிஃபைடு ஸ்பிரிட் மற்றும் டீநேச்சர்டு ஸ்பிரிட் என்ற அனைத்து வகை தயாரிப்புகளையும் உற்பத்தி செய்ய முடியும். சபீத்கார்க்கில் உள்ள உற்பத்தி மையம் அதிக தரம் கொண்ட எத்தனால் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. முசாபர் நகர் உற்பத்தி மையத்தில் ஹேண்ட் சானிடைசர் உற்பத்தி (2020-ம் ஆண்டில் ஆரம்பிக்கப் பட்டு) செய்யப்பட்டுவருகிறது.

இன்ஜினீயரிங் தொழில் பிரிவின்கீழ் டிரான்ஸ்மிஷன் கியர்கள் உற்பத்தியில் வாடிக்கை யாளர்களின் தேவைக்கிணங்க வடிவமைக்கப்பட்ட டர்போ கியர்களை உற்பத்தி செய்துதரும் நிறுவனமாக இந்த நிறுவனம் திகழ்கிறது. மேலும், ஹைஸ்பீடு கியர்கள் மற்றும் கியர்பாக்ஸ்களை உற்பத்தி செய்வதில் இந்தியாவில் செயல்படும் மிகப் பெரிய நிறுவனம் இது.

மேலும், பாதுகாப்புத் துறைக் கான உபகரணங்கள் உற்பத்திப் பிரிவு பல்வேறு ஓ.இ.எம் தயாரிப்புகளை உற்பத்தி செய்து இந்தியன் நேவி மற்றும் கோஸ்ட் கார்டு பிரிவுக்கு சப்ளை செய்து வருகிறது. மைசூரில் இருக்கும் இந்த நிறுவனத்தின் அதிநவீன உற்பத்தி மையத்தில் தரமான தயாரிப்புகள் உற்பத்தி செய்யப் பட்டு வருகிறது.

மேலும், டர்போ தயாரிப்பு களில் கணிசமான அளவு ஆராய்ச்சி அனுபவத்தையும் இந்த நிறுவனம் கொண்டுள்ளது. இன்ஜினீயரிங் பிரிவில் குடிநீர் மற்றும் வடிகால் நீர் சுத்திகரிப்புக் கான இயந்திரங்களை உற்பத்தி செய்துவருகிறது. பல்வேறுதரப் பட்ட தண்ணீர் உபயோகிப்பாளர் களுக்கான சுத்திகரிப்புக்கான பிளான்ட்டுகளை உற்பத்தி செய்து விற்பனை செய்துவருகிறது இந்த நிறுவனம். அதிநவீன தொழில் நுட்பத்தின் உதவியுடன் வாடிக்கை யாளர்களின் தேவைக்கு இணங்க இன்ஜினீயரிங், புரக்யூர்மன்ட் மற்றும் கன்ஸ்ட்ரக்‌ஷன் என்ற வகை தீர்வுகளை வாடிக்கையாளர் களுக்கு வழங்கிவருகிறது இந்த நிறுவனம்.

2,000-க்கும் மேற்பட்ட பிராசஸ் உபகரணங்களை உற்பத்தி செய்து சப்ளை செய்துள்ள இந்த நிறுவனம், நிறுவியுள்ள 1,200-க்கும் மேற்பட்ட தண்ணீர் சுத்திகரிப்பு வசதிகளின் மூலம் நளொன்றுக்கு கிட்டத்தட்ட 10,000 மில்லியன் லிட்டர் அளவி லான தண்ணீர் சுத்திகரிப்பானது தற்போது செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவில் மிகப் பெரிய தண்ணீர் சுத்திகரிப்பு புராஜெக்ட்டுகளை இந்த நிறுவனம் செய்து தந்திருப்பது தனிச்சிறப்பு.

ஹைஸ்பீட் கியர் உற்பத்தியில் இந்தியாவில் முதலிடம் வகிக்கும் இந்த நிறுவனம், தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் ஹைஸ் பீட் கியர்கள் விற்பனையில் கிட்டத் தட்ட 80% அளவிலான சந்தைப் பங்களிப்பைக் கொண்டுள்ளது. கேஸ் டர்பைன்கள், ஹைட்ரோ டர்பைன்கள், டீசல் இன்ஜின்கள், எலெக்ட்ரிக் மோட்டார்கள் மற்றும் ஸ்டீம் டர்பைன்களில் இந்த நிறுவனத்தின் ஹைஸ்பீடு கியர்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் உலக அளவில் மின் உற்பத்தி, உர உற்பத்தி, சிமென்ட் ஆலைகள், பெட்ரோகெமிக்கல் மற்றும் ரிஃபைனரி, ஸ்டீல், ரப்பர் மற்றும் பிளாஸ்ட்டிக் உற்பத்தி, மரைன், சர்க்கரை உற்பத்தி போன்ற துறைகளில் பயன்படுத்தப்படுகின்றன.

திரிவேணி இன்ஜினீயரிங் & இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்! (BSE Code: 532356, NSE Symbol: TRIVENI)

ரிஸ்க்குகள் என்னென்ன?

சர்க்கரை உற்பத்தி, நீர் சுத்திகரிப்பு உபகரண உற்பத்தி மற்றும் ஹைஸ்பீடு கியர்கள் உற்பத்தியில் ஈடுபட்டுவரும் நிறுவனங்களுக்கு உரித்தான ரிஸ்க்குகள் அனைத்துமே இந்த நிறுவனத்துக்கும் உண்டு. மூலப்பொருள்கள் விலை உயர்வு, அதி நவீன தொழில் நுட்பம் அறிமுகப்படுத்தப்படுதல், அரசாங்கத்தின் கொள்கை முடிவுகள், அந்நிய செலாவணி மதிப்பு மாறுதல் போன்றவையும் இந்த நிறுவனத்துக்கான ரிஸ்க்குகளே. இந்த நிறுவனம் ஈடுபட்டுவரும் ஒரு சில தொழில் பிரிவுகள் பொருளாதார வளர்ச்சியைச் சார்ந்தே வளரும் வாய்ப்பிருப்பதால், ஏதாவது ஒரு காரணத்தால் பொருளாதாரம் எதிர்பார்த்த அளவு வளர்ச்சி அடையாது போனாலோ, தேக்கநிலையைச் சந்தித்தாலோ அதுவும் இந்த நிறுவனத்தின் செயல்பாட்டை ஓரளவு பாதிக்கவே செய்யும்.

முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

இந்தப் பகுதி பங்குகளைப் பரிந்துரை செய்யும் பகுதி அல்ல. முதலீட்டாளர்களுக்குப் பங்குகளை அறிமுகப் படுத்துதல் மற்றும் கல்வியே இந்தப் பகுதியின் நோக்கம். பங்கு முதலீடுகள் சந்தை அபாயத்துக்கு உட்பட்டது என்பதால், எந்தவொரு பங்கை வாங்கும்முன்னும் செபி பதிவு பெற்ற முதலீட்டு ஆலோசகரைக் கலந்தாலோசித்து, அந்தப் பங்கில் முதலீடு செய்வதில் இருக்கும் ரிஸ்க் உங்களுக்கு உகந்ததுதானா என்பதை முடிவுசெய்த பின்னரே முதலீட்டு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.