Published:Updated:

பால்கிருஷ்ணா இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்! அறிவோம் பங்கு நிறுவனம்..!

பால்கிருஷ்ணா இண்டஸ்ட்ரீஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
பால்கிருஷ்ணா இண்டஸ்ட்ரீஸ்

K N O W Y O U R C O M P A N Y - (NSE SYMBOL: BALKRISIND, BSE CODE: 502355)

டயர்கள் உற்பத்தியில் 1987-ம் ஆண்டு கால்பதித்து இந்தத் துறையில் முன்னணி நிறுவனமாக இருந்து வருகிறது பால்கிருஷ்ணா இண்டஸ் ட்ரீஸ் லிமிடெட் நிறுவனம்.

இந்த நிறுவனத்துக்கான தொழில் அடித்தளம் 1950-களிலேயே அமைக்கப்பட்டுவிட்டது. கடந்த 30 ஆண்டுகளாக விவசாயம், கட்டுமானம் மற்றும் எர்த்மூவிங், துறைமுகம் மற்றும் சுரங்கத்துறை உள்ளிட்ட பல தொழில் நிறுவனங் களில் பயன்படுத்தப்படும் பல்வேறு பெரியரக வாகனங்களுக்கான சிறப்பியல்புகள் கொண்ட டயர்களை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறது இந்த நிறுவனம்.

வாடிக்கையாளர்களின் தேவை மற்றும் அவர்கள் செய்யும் உபயோகம் என்பதை முழுமையாகக் கருத்தில் கொண்டு தன்னுடைய தயாரிப்புகளை உற்பத்தி செய்துவரும் இந்த நிறுவனம் கிட்டத்தட்ட 2,700-க்கும் மேற்பட்ட அதிக செயல்திறன் கொண்ட டயர் மாடல்களை உற்பத்தி செய்து விற்பனை செய்துவருவது குறிப்பிடத் தக்கதொரு விஷயமாகும்.

இன்றைக்கு இந்தியாவிலேயே மிகப்பெரிய ஆஃப் ஹைவே டயர் உற்பத்தி செய்யும் நிறுவனம் என்ற முன்னணி நிலையில் இருக்கிறது பால்கிருஷ்ணா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம்.

பால்கிருஷ்ணா இண்டஸ்ட்ரீஸ்
பால்கிருஷ்ணா இண்டஸ்ட்ரீஸ்

நிறுவனத்தின் வளர்ச்சி...

1987-ம் ஆண்டில் அவுரங்காபாத்தில் ஆரம்பிக்கப்பட்டது இந்த நிறுவனம். 1995-ம் ஆண்டில் ஆஃப் ஹைவே டயர்கள் உற்பத்தியைத் தொடங்கியது. 2002-ம் ஆண்டில் ராஜஸ்தானில் உள்ள பிவாடி எனும் இடத்தில் மற்றும் ஓர் உற்பத்தி வசதியைத் தொடங்கியது இந்த நிறுவனம்.

2003-ம் ஆண்டில் அனைத்து நிலப்பரப்புகளிலும் இயங்கக்கூடிய வாகனங்கள், விவசாய நிலத்தில் இயங்கக்கூடிய வாகனங்கள் மற்றும் எர்த்மூவிங் துறையில் உபயோகப் படுத்தப்படும் வாகனங்கள் போன்ற வற்றுக்கான டயர்களை உற்பத்தி செய்ய ஆரம்பித்தது.

2004-ம் ஆண்டில் ரேடியல் அக்ரிமேக்ஸ் எனும் வகை டயர்களை அறிமுகப்படுத்தியது. 2006-ம் ஆண்டில் ராஜஸ்தானில் உள்ள சோபான்கி எனும் இடத்தில் மற்றும் ஓர் உற்பத்தி வசதியை நிறுவியது. 2009-ம் ஆண்டில் 1,000 கோடி ரூபாய் வர்த்தகம் என்ற இலக்கைத் தாண்டியது இந்த நிறுவனம். 2015-ம் ஆண்டில் குஜராத்தில் உள்ள பூஜ் எனும் இடத்தில் உற்பத்தி வசதியை (greenfield) ஆரம்பித்தது.

2018-ம் ஆண்டில் தன்னுடைய வாலுஜ் மற்றும் பூஜ் உற்பத்தி வசதிகளில் விரிவாகத்துக்கான திட்டங்களை அறிவித்த இந்த நிறுவனம் 2019-ம் ஆண்டில் தன்னுடைய பூஜ் உற்பத்தி மையத்தில் 51 இன்ச் அளவிலான டயர்களை உற்பத்தி செய்ய ஆரம்பித்தது.

2020-ம் ஆண்டில் தன்னுடைய டயர் உற்பத்திக்குத் தேவைப்படும் கார்பன் பிளாக்குகளை, தானே உற்பத்தி செய்துகொள்ளும் அளவுக்கான உற்பத்தி மையத்தை குஜராத்தில் பூஜ் எனும் இடத்தில் நிர்மாணித்தது.

இந்த நிறுவனத்துக்கு வட இந்தியாவில் இருக்கும் உற்பத்தி வசதிகளுக்குத் தேவைப்படும் மின்சாரத்தில் தேவைப்படும் 50% அளவை காற்றாலைகள் மூலம் 2004-ம் ஆண்டிலிருந்து தானே உற்பத்தி செய்துகொள்கிறது.

சார்ட்
சார்ட்

தொழில் பிரிவுகள்...

இந்த நிறுவனத்தின் தொழில் பிரிவுகள் என்று பார்த்தால், விவசாயத்தில் பயன்படுத்தப்படுகிற சிறப்பியல்புகள் கொண்ட வாகனங் களுக்கான டயர்கள் தயாரிப்பு, தொழிற்சாலைகளில் பயன்படுத்தப் படுகிற சிறப்பியல்புகள் கொண்ட வாகனங்களுக்கான டயர்கள் தயாரிப்பு, ஆஃப்-தி-ரோடு பிரிவில் சுரங்கம் மற்றும் கட்டுமானத் துறையில் உபயோகப்படுத்தப்படும் ஹெவி வெகிக்கிள்கள் மற்றும் இயந்திரங்களுக்கான டயர்கள் என்ற மூன்று பெரும் தொழில் பிரிவுகளில் இயங்கிவருகிறது.

உலக அளவில் ஆஃப் ஹைவே டயர் உற்பத்தி மற்றும் விற்பனையில் மிகப் பெரியதொரு முன்னோடி நிறுவனமாகத் திகழும் இந்த நிறுவனம், ஆண்டொன்றுக்கு 2,85,000 மெட்ரிக் டன் எடை அளவிலான டயர்களை உற்பத்தி செய்யும் நிர்மாணிக்கப்பட்ட உற்பத்தித் திறனைக் கொண்டுள்ளது.

இந்தியாவில் மகாராஷ்டிராவில் உள்ள டோம்பிவாலி மற்றும் வாலூஜ், குஜராத்தில் உள்ள பூஜ், ராஜஸ்தானில் உள்ள சோபான்கி மற்றும் பிவாடி போன்ற இடங்களில் தன்னுடைய உற்பத்தி வசதியைக் கொண்டு இயங்கிவருகிறது இந்த நிறுவனம்.

இந்த நிறுவனம் தன்னுடைய தயாரிப்புகளை அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் இந்தியா உள்ளிட்ட 160-க்கும் மேற்பட்ட நாடுகளில் விற்பனை செய்வதற்கான விநியோகஸ்தர்களைக் கொண்டு இயங்கி வருகிறது.

இந்த நிறுவனம் உற்பத்தி செய்கிற சிறப்பியல்புகள் கொண்ட டயர்கள் மேலே சொன்ன துறைகளில் பயன் படுத்தப்படுவதற்காக உற்பத்தி செய்யப்படும் வாகனங்களில் மட்டுமே உபயோகப்படுத்தப் படுவதால், இந்தவித வாகனங்களை உற்பத்தி செய்யும் ஓ.இ.எம் (Original Equipement Manufacturers) எனும் வாகன உற்பத்தியாளர்களே இது போன்ற டயர் உற்பத்தி நிறுவனங் களுக்கான முக்கிய வாடிக்கையாளர் களாக இருக்கின்றனர்.

இந்த வகை நிறுவனங்களில் முன்னணி நிறுவனங்களான ஜே.சி.பி, டாஃபே, கேட் (CAT), பெராரி, குயோப்டா (KUOBTA), ஜான் டீர் (JOHN DEERE), நியூ ஹாலன்ட் (NEW HOLLAND), க்ளாஸ் (CLAAS), கோல்டனி (GOLDONI), டெர்எக்ஸ் (TEREX) உள்ளிட்ட பல முக்கிய நிறுவனங்கள் இந்த நிறுவனத்தின் வாடிக்கை யாள ராக இருக்கின்றன என்பது குறிப்பிடத் தக்கதொரு விஷயமாகும்.

இந்த நிறுவனங்கள் தவிர, தேய்மானத்தின் காரணமாக டயர்கள் மாற்றப்படும்போது நடக்கும் விற்பனையும் இந்த நிறுவனத்தின் வியாபாரத்துக்கான வாய்ப்பாக இருக்கிறது.

விவசாயம், தொழிற்சாலைகள், கட்டுமானம் மற்றும் சுரங்கம் போன்ற பல்வேறு ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாத துறைகளில் பயன்படுத்தப் படும் ஹெவி வாகனங்களுக்கான டயர்களை உற்பத்தி செய்துவருவதால், நல்லதொரு தொழில் ரீதியிலான டைவர்சிஃபிகேஷனைக் கொண்டு திகழ்கிறது இந்த நிறுவனம்.

மேலும், தனக்குத் தேவையான மூலப்பொருள்களையும் பல்வேறு சப்ளையளர்கள் மூலமாகப் பெற்றுக் கொண்டும், தன்னுடைய தயாரிப்பு களில் அதிக அளவில் உபயோகிக்கப் படும் கார்பன் பிளாக்குகளைத் தானே சொந்தமாகத் தயாரித்துக்கொண்டும் இருக்கிறது இந்த நிறுவனம்.

எதிர்காலத்தில் அதிகரிக்கக்கூடிய தயாரிப்புகளுக்கான தேவைகளை உணர்ந்து அதற்கான விரிவாக்கத் திட்டங்களையும் அவ்வப்போது செய்துவருகிறது இந்த நிறுவனம். பி.கே.டி எக்ஸிம் யு.எஸ் இங்க், பி.கே.டி யு.எஸ்.ஏ இங்க், பி.கே.டி டயர்ஸ் (கனடா) இங்க், பி.கே.டி யூரோப் (எஸ்.ஆர்.எல்) போன்ற அயல்நாட்டில் செயல்படும் துணை நிறுவனங்களை யும், இந்தியாவில் பி.கே.டி எக்ஸிம் லிமிடெட், பி.கே.டி டயர்ஸ் லிமிடெட், த்ரிஸ்ட்டா சிந்தெட்டிக்ஸ் லிமிடெட் என்ற துணை நிறுவனங்களையும் கொண்டு செயல்பட்டு வருகிறது இந்த நிறுவனம்.

ரிஸ்க்குகள் என்னென்ன?

டயர் உற்பத்தித் துறையில் செயல்படும் நிறுவனங்களுக்கு உரித்தான ரிஸ்க்குகள் அனைத்தும் இந்த நிறுவனத்துக்கும் உண்டு. விவசாயம் சம்பந்தப்பட்ட தயாரிப்பு களைக் கொண்டிருப்பதால் பருவ மழை சார்ந்த ரிஸ்க்குகளும், சுரங்கத் துறை, தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமானத் துறை சார்ந்த தயாரிப்பு களைக் கொண்டிருப்பதால், பொருளாதார வளர்ச்சி (எதிர் பாரமல் வருகிற தேக்கநிலை அல்லது எதிர்பார்த்த அளவுக்குப் பொருளாதார வளர்ச்சி இல்லாது போதல்) சார்ந்த ரிஸ்க்குகளும் இந்த நிறுவனத்துக்கு உண்டு.

இவை தவிர, மூலப்பொருள்கள் விலை உயர்வு, புதிய டெக்னாலஜி மற்றும் போட்டி, அந்நியச் செலாவணி மதிப்பு மாறுதல் போன்றவையும் இந்த நிறுவனத்துக்கு உரித்தான ரிஸ்க்குகள் ஆகும்.

புள்ளிவிவரம்
புள்ளிவிவரம்

முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

இந்தப் பகுதி பங்குகளைப் பரிந்துரை செய்யும் பகுதி அல்ல. முதலீட்டாளர்களுக்குப் பங்குகளை அறிமுகப்படுத்துதல் மற்றும் கல்வியே நோக்கம்.

பங்கு முதலீடுகள் சந்தை அபாயத்துக்கு உட்பட்டது என்பதால், எந்தவொரு பங்கை வாங்கும் முன்னும் செபி பதிவு பெற்ற முதலீட்டு ஆலோசகரைக் கலந்தாலோசித்து, அந்தப் பங்கில் முதலீடு செய்வதில் இருக்கும் ரிஸ்க் உங்களுக்கு உகந்ததுதானா என்பதை முடிவுசெய்த பின்னரே முதலீட்டு நடவடிக்கைகளை நீங்கள் எடுக்க வேண்டும்!

பிட்ஸ்

ஜூம் (Zoom)நிறுவனத்தின் நிறுவனர் எரிக் யுவான், ஆறு பில்லியன் டாலர் மதிப்புள்ள பங்குகளை ‘தான’மாகத் தந்திருப்பதாக பங்குச் சந்தைக்குத் தெரியப்படுத்தி இருக்கிறார். ஆனால், யாருக்குத் ‘தானம்’ தந்தார் என்பதைச் சொல்லவில்லை!