நடப்பு
தொடர்கள்
பங்குச் சந்தை
Published:Updated:

ஜிண்டால் ஸ்டெயின்லெஸ் லிமிடெட்! (BSE Code: 532508, NSE Symbol: JSL)

ஜிண்டால் ஸ்டெயின்லெஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜிண்டால் ஸ்டெயின்லெஸ்

கம்பெனி பயோடேட்டா

கம்பெனி பயோடேட்டா பகுதியில் நாம் இந்த வாரம் பார்க்கப்போகும் நிறுவனம் ஜிண்டால் ஸ்டெயின்லெஸ் லிமிடெட். இந்தியாவின் ஒருங்கிணைந்த ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் உற்பத்தியைக் கொண்டிருக்கும் மிகப் பெரிய நிறுவனம் இது.

ஸ்டீல் உற்பத்தியில்...

இந்தியாவில் நம்பர் 1 ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் உற்பத்தி நிறுவனமாக இருக்கும் இந்த நிறுவனம், 50 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்துடன் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை, சுமார் 25 சதவிகிதத்துக்கும் மேலான சந்தைப் பங்களிப்புடன் இயங்கிவரும் இந்த நிறுவனம், தன்னுடைய தயாரிப்புகளை நாற்பதுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது.

ஜிண்டால் ஸ்டெயின்லெஸ் லிமிடெட்! (BSE Code: 532508, NSE Symbol: JSL)

நிறுவனத்தின் உற்பத்தி மையங்கள்...

ஆண்டொன்றுக்கு 1.1 மில்லியன் டன் அளவிலான ஸ்டெயின்லெஸ் ஸ்டீலை உருக்கி உருவாக்கும் நடைமுறை கொண்ட உற்பத்தித் திறனைக் கொண்டிருக்கிறது இந்த நிறுவனம். இந்தியாவில் கிழக்குப் பகுதியில் ஒடிசாவில் உள்ள ஜாஜ்பூர் என்னும் இடத்தில் இந்த நிறுவனத்தின் அதிநவீன உற்பத்தி மையம் செயல்பட்டுவருகிறது. இந்த மையத்தில் ஆண்டொன்றுக்கு 2.5 லட்சம் டன் என்ற அளவிலான பெரோ அல்லாய் உற்பத்திக்கான வசதி உள்ளது. இது எஸ்.எம்.எஸ் சிமெக் அண்ட் ஆண்ட்ரிட்ஸ் சன்ட்விக் (SMS Siemag and Andritz Sundwig) என்ற நிறுவனத்தின் தொழில்நுட்பத்துடன் நிறுவப்பட்டுள்ளது.

இந்த உற்பத்தி மையத்துடன் இணைந்த சொந்த உபயோகத்துக்கான (captive) மின்சார உற்பத்தியானது தற்போது 264 மெகாவாட் என்ற அளவில் உள்ளது. மேலும், ஆண்டொன்றுக்கு 3.2 மில்லியன் டன் அளவிலான ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் தயாரிப்புக்குத் தேவைப்படும் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் வகையில் விரிவாக்கம் செய்யும் அளவில் மின் உற்பத்தி பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிறுவனத்தின் உற்பத்தி மையத்தில் கோல்டு ரோலிங் கிரேடு ஸ்டீலில் 200, 300 மற்றும் 400 என்கிற சீரிஸ்களை உற்பத்தி செய்ய முடியும். ஆண்டொன்றுக்கு 1,50,000 டன் என்ற அளவிலான கோல்டு ரோலிங் உற்பத்தி வசதியும் இந்த நிறுவனத்தின் உற்பத்தி மையத்தில் இருக்கிறது. இன்றைக்கு இந்த நிறுவனம் இந்தோனேசியாவின் உள்நாட்டுச் சந்தையில் 60% சந்தைப் பங்களிப்பைக் கொண்டிருக்கிறது.

மேலும், தென்கிழக்கு ஆசியாவில் இந்தத் துறையில் ஒரு மிகப் பெரும் நிறுவனமாகவும் திகழ்கிறது. தென்கிழக்கு ஆசியாவில் ஆட்டோமொபைல், பாத்திரங்கள், பேப்ரிக்கேஷன், பைப்புகள் மற்றும் டியூப்கள், பாமாயில் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்குத் தேவைப்படும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீலை உற்பத்தி செய்து சப்ளை செய்துவருகிறது இந்த நிறுவனம்.

இதன் மூலம் வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப வடிவமைக்கப்பட்ட ஸ்டீலைத் தேவைப்படும் நேரத்தில் சரியான அளவில் உற்பத்தி செய்து வாடிக்கையாளர்களின் தொழில் மையத்துக்கே நேரடியாக சப்ளை செய்து வருகிறது. இந்த உற்பத்தி மையத்தில் ஆண்டொன்றுக்கு 18,000 டன் அளவிலான கோம்போ லைன் உற்பத்தி வசதியும், 14,500 டன் அளவிலான பாலிஷிங் வசதியும் நிறுவப்பட்டுள்ளது.

ஜிண்டால் ஸ்டெயின்லெஸ் (ஹிசார்) லிமிடெட் எனும் நிறுவனத்தை இந்த நிறுவனத்துடன் இணைக்கும் பணிகள் நடந்துகொண்டிருக்கிறது. இந்த இணைப்புக்கான நடைமுறைகள் பல்வேறு படிநிலைகளில் செயல்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.

ஜிண்டால் ஸ்டெயின்லெஸ் லிமிடெட்! (BSE Code: 532508, NSE Symbol: JSL)

நிறுவனத்தின் தயாரிப்புகளும் பயன்பாடும்...

ஸ்லாப்கள், ஹாட் ரோல்டு காயில்கள், கோல்டு ரோல்டு காயில்கள், மற்றும் ப்ளேட்டுகள் போன்றவற்றை உற்பத்தி செய்து வருகிறது. ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கிரேடு வாரியாகப் பார்த்தால் 200, 300, 400 மற்றும் டியூப்ளெக்ஸ் போன்ற ரகங்களை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறது.

இந்த நிறுவனத்தின் ஆட்டோமோட்டிவ் பிரிவில் புகைபோக்கிகள், டிஸ்க் ப்ரேக்குகள், எரிபொருள் டேங்குகள், ஹோஸ் கிளாம்ப்புகள் போன்றவற்றை உற்பத்தி செய்வதற்கு இந்த நிறுவனத்தின் ஸ்டீல் பயன்படுத்தப்படுகிறது.

ரயில்வே பிரிவில் கோச்சுகள், வேகன்கள் மற்றும் மெட்ரோக்கள் கட்டுமானத்தில் உபயோகிக்கப் படுகின்றன. கன்ஸ்யூமர் டியூரபிள் பிரிவில் சமயலறையில் பயன்படுத்தும் குக்கர் ஊள்ளிட்ட பாத்திரங்கள், பாத்ரூம் ஆக்சஸரீஸ், அவென்கள், வாஷிங் மெஷின்கள் உள்ளிட்ட பலவற்றைத் தயாரிக்க இந்த நிறுவனம் தயாரிக்கும் ஸ்டீல் உபயோகிக்கப்படுகிறது.

ப்ராசஸ் தொழில்துறையில் ஸ்டோரேஜ் டேங்குகள், பைப் லைன்கள், டியூப்கள் மற்றும் வால்வுகள், பாய்லர்கள் மற்றும் ஸ்டீம் ஹீட்டர்கள், சுடுதண்ணீர் டேங்குகள், பர்னர்கள், கிரில்கள் மற்றும் பேக்கிங் டிரேக்கள், வொயின் ஸ்டோரேஜ் செய்யும் வாட்கள், பைப்லைன்கள், பம்ப் மற்றும் வால்வுகள், கெட்டில்கள், சாஸ்கள் வைக்கும் பாத்திரங்கள் உள்ளிட்ட பலவற்றைத் தயாரிக்க இந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் உபயோகிக்கப்படுகின்றன.

ப்ரிசிஷன் ஸ்ட்ரிப் மற்றும் பிளேட் ஸ்டீலானது ரேசர் பிளேடுகள் பெட்ரோகெமிக்கல் மற்றும் எண்ணெய் / எரிவாயு துறை, எலெக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட பல தயாரிப்புகளில் உபயோகிக்கப்படுகின்றன.

நியூக்ளியர் துறையில் பைப்பிங் பிஷ்ஷன் ரியாக்டர்கள், டேங்குகள் மற்றும் சிம்னிக்கள் தயாரிப்பில் ஜிண்டால் ஸ்டெயின் லெஸின் ஸ்டீல் உபயோகப் படுத்தப்படுகிறது. பிளம்பிங் பிரிவில் குளிர்ந்த நீர் மற்றும் வெந்நீர் பைப்புகள், குடி தண்ணீருக்கான பாத்திரங்கள், ஓவர் ஹெட் வாட்டர் டேங்குகள் போன்றவற்றைத் தயாரிக்க இந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் பயன் படுத்தப்படுகின்றன.

ரிஸ்க்குகள் என்னென்ன?

ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் உற்பத்தியில் ஈடுபட்டிருக்கும் நிறுவனங்களுக்கு உரித்தான ரிஸ்க்குகள் அனைத்தும் இந்த நிறுவனத்துக்கும் உண்டு. மூலப் பொருள்களின் விலையில் ஏற்படும் பாதகமான விலை ஏற்றங்கள், இறக்குமதி சார்ந்த போட்டி, ஏற்றுமதிக் கான வரிவிதிப்பு, அரசாங்கங்களின் கொள்கை முடிவுகள், தொழில் சார்ந்த கடுமையான போட்டி உருவாகுதல், அதி நவீன தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்படுதல், அந்நிய செலாவணி மதிப்பு மாறுதல் போன்றவை அனைத்துமே இந்த நிறுவனத்துக்கான ரிஸ்க்குகள் ஆகும்.

இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளை உபயோகிக்கும் துறைகள் பலவும் பொருளாதார முன்னேற்றத்தைச் சார்ந்தே வளர்ச்சி அடையும் துறைகள் ஆகும். எனவே, ஏதாவது ஒரு காரணத்தால் உலகப் பொருளாதாரம் எதிர்பார்த்த அளவில் வளர்ச்சியடையாமல் போனாலோ அல்லது தேக்க நிலையைச் சந்தித்தாலோ அதுவும் இந்த நிறுவனத்தின் செயல்பாட்டை பாதிக்கவே செய்யும்.

ஜிண்டால் ஸ்டெயின்லெஸ் லிமிடெட்! (BSE Code: 532508, NSE Symbol: JSL)

முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

இந்தப் பகுதி பங்குகளைப் பரிந்துரை செய்யும் பகுதி அல்ல. முதலீட்டாளர்களுக்குப் பங்குகளை அறிமுகப் படுத்துதல் மற்றும் கல்வியே இந்தப் பகுதியின் நோக்கம்.

பங்கு முதலீடுகள் சந்தை அபாயத்துக்கு உட்பட்டவை என்பதால், எந்தவொரு பங்கை வாங்கும் முன்பும் செபி பதிவு பெற்ற முதலீட்டு ஆலோசகரைக் கலந்தாலோசித்து, அந்தப் பங்கில் முதலீடு செய்வதில் இருக்கும் ரிஸ்க் உங்களுக்கு உகந்ததுதானா என்பதை முடிவுசெய்தபின் முதலீட்டு நடவடிக்கைகளை நீங்கள் எடுக்க வேண்டும்!