Published:Updated:

பங்குச் சந்தையில் 3000 புள்ளிகள் சரிவு, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி... வைரஸ் காரணமா?

பங்குச் சந்தை சரிவு
பங்குச் சந்தை சரிவு

இன்று (3.3.2020) மிகவும் முக்கியமான நாளாக இருக்கும். பொதுவாக பதற்றத்துக்குப் பிறகு சந்தை சற்றே முன்னேறும். ஆனால், வெளிநாடு பங்குகளின் எஃப் & ஓ சந்தையானது வரலாறு காணாத இறக்கத்தில் உள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக இந்திய பங்குச்சந்தை மீண்டும் சரிவைச் சந்தித்துள்ளது. கடந்த வார வீழ்ச்சிக்குப் பிறகு, மார்ச் 2-ம் தேதிதான் பங்குகள் ஓரளவுக்கு ஏறுமுகத்தைக் காட்டின. ஆனால், அன்றைய தினத்தில், இந்திய அரசாங்கம் புதுடெல்லி மற்றும் தெலங்கானா ஆகிய இரண்டு மாநிலங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு நோயாளிகள் இருப்பதை உறுதிப்படுத்தியது. இதன் காரணமாக நேற்றைய நாளின் வர்த்தகம் இறக்கத்தில் முடிந்தன. கடந்த 7 வர்த்த நாள்களில் சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் சரிந்தன.

கொரோனா வைரஸ் தாக்கம்: சீனாவில் குறைகிறது... கவலை அளிக்கும் மற்ற நாடுகளின் நிலவரம்!

மேலும் நேற்று, இந்திய ரூபாயின் மதிப்பானது அமெரிக்க டாலருக்கு நிகராக 72.73 ரூபாய் என்ற நிலையில் இருந்தது. இது கடந்த பிப்ரவரி 28, வெள்ளிக்கிழமையைவிட (72.24) 50 பைசா குறைவாகும். ஆய்வாளர்கள் இந்திய ரூபாயின் மதிப்பானது வலுவிழந்த பொருளாதாரம் மற்றும் குறைந்த வெளிநாட்டு நிதி ஆகிய காரணங்களால் குறைந்திருக்கும் என்கின்றனர். கடந்த ஓராண்டில் ரூபாயின் மதிப்பு, அதிகளவில் சரிந்திருப்பது இதுவே முதல்முறை.

சரியும் சந்தை
சரியும் சந்தை

கடந்த வாரம்தான், `கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து நிதிச்சந்தைகளைப் பாதுகாப்போம்' என முக்கிய உலக வங்கிகள் அறிவித்திருந்தன. இந்த நம்பிக்கையால் பங்குச்சந்தையில் சற்றே ஏற்றம் காணப்பட்டது. இதன்மூலம் இந்திய பங்குகள் 2.1 சதவிகிதம் உயர்ந்தன. இந்தியாவில் புதிதாக இரண்டு கோரோனா வைரஸ் பாதிப்புகள் உறுதிசெய்யப்பட்ட பின், நிலைமை தலைகீழானது. நிஃப்டி 0.62 சதவிகிதம் சரிந்து 11,132 புள்ளிகளுடன் நேற்று முடிவடைந்தது. நிஃப்டி வங்கியின் குறியீடுகளும் 1 சதவிகிதம் சரிந்து 28,868-ல் முடிவடைந்தது.

நடப்பு வாரத்தின் தொடக்க தினமான நேற்று, வர்த்தக இறுதியில் எல்லாத் துறைகளின் பங்குகளும் வீழ்ச்சியிலேயே முடிந்தன. இதில், பிஎஸ்இ மெட்டல் பங்குகள் 2 சதவிகிதமாகக் குறைந்தது. மேலும், 340-க்கும் மேற்பட்ட பிஎஸ்இ-யின் பங்குகள் 52 வார குறைந்த விலையைச் சந்தித்தன.

Stock Exchange
Stock Exchange

இதில் ஏசிசி, அசோகா பில்ட்கான், அப்போலோ டையர்ஸ், பரோடா வங்கி, கனாரா வங்கி, கெய்ல் இந்தியா, ஹீரோ மோட்டார்கார்ப், ஹிந்தியால்கோ, ஹிந்தான் சிங்க், இந்தஸ் இந்த் வங்கி, எல் அண்ட் டி, எம்&எம், மாரிக்கோ, என்பிசிசி, என்டிபிசி, ஆயில் இந்தியா, பிஎன்பி, வேதாந்தா ஆகியவையும் அடங்கும். ஐடி துறையைத் தவிர பிற எல்லா துறையின் பங்குகளும் வீழ்ச்சியையே சந்தித்தன.

340-க்கும் மேற்பட்ட பிஎஸ்இ-யின் பங்குகள் 52 வார குறைந்த விலையைச் சந்தித்தன.

இதுகுறித்து பங்குச்சந்தை நிபுணர் மற்றும் ரெலிகேர் புரோக்கிங் நிறுவனத்தின் துணைத் தலைவருமான அஜித் மிஸ்ரா கூறுகையில், `இந்திய பங்குச்சந்தையானது குறைந்த கச்சா எண்ணெய்யின் விலை, கொரோனா வைரஸின் பாதிப்பில்லாத காரணத்தால் உலக சந்தைகளைவிடச் சிறப்பாக இருந்தது. ஆனால், தற்போது இரண்டு புது கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளதால், இந்திய பங்குகளின் செயல்பாடு பாதிக்கும். இனி, உலகளவில் பங்குச்சந்தையின் நிலைமையானது கொரோனா வைரஸின் பாதிப்பைப் பொறுத்தே இருக்கும். மேலும், முதலீடு செய்பவர்கள் தரமான பெயர்களைப் பார்த்து சரியான முறையில் முதலீடு செய்ய வேண்டும்" என்றார்.

CoronaVirus
CoronaVirus

இதுபற்றி டிரேடிங்க் பெல்ஸின் மூத்த ஆய்வாளரான சந்தோஷ் மீனா தெரிவிக்கையில் "நிஃப்டி பெரும் முன்னேற்றத்தைச் சந்தித்து 11,200 - 11,100 என்ற புள்ளிகளைத் தொட்டது. ஆனால், திங்கள்கிழமை வர்த்தகம் முடிவடையும்போது 11,100 புள்ளிகளுடன் முடிந்தது. இன்று, (3.3.2020) மிகவும் முக்கியமான நாளாக இருக்கும். பொதுவாகப் பதற்றத்துக்குப் பிறகு, சந்தைகளானது சற்றே முன்னேறும். ஆனால், வெளிநாடு பங்குகளின் எஃப் & ஓ சந்தையானது வரலாறு காணாத இறக்கத்தில் உள்ளது. எனவே, உலகச் சந்தையில் நிச்சயம் ஓர் ஏற்றம் வேண்டும். ஏனெனில் உளவியலாகவும் 11,000 புள்ளிகளானது 10,700 புள்ளிகளாக வீழ்ந்தால் ஆபத்துதான். இதற்கு மாறாக அப்படியே 11,450 அல்லது 11,700 புள்ளிகளானது முக்கிய எதிர்ப்பு நிலையாகும்" என்றார்.

இன்று (3.3.2020) மிகவும் முக்கியமான நாளாக இருக்கும். பொதுவாக பதற்றத்துக்குப் பிறகு, சந்தைகளானது சற்றே முன்னேறும்.
சந்தோஷ் மீனா

வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான இன்று (3.,3.2020), தொடக்கத்திலிருந்தே சென்செக்ஸ் 150 புள்ளிகளுக்கு மேலும், நிஃப்டி 50 புள்ளிகளுக்கு மேலும் அதிகரித்து வர்த்தகமாகிக் கொண்டிருக்கின்றன.

பங்குச்சந்தையின் மிகப்பெரிய சரிவு குறித்து, ஜியோஜிட் நிதிச்சேவைகள் மையத்தின் முதன்மை தலைமை ஆய்வாளர் வினோத் நாயர் கூறுகையில், "உலக மத்திய வங்கிகள் பொருளாதாரத்தை மீட்கும் நடவடிக்கைகளில் இறங்கும் என்ற எண்ணத்தில்தான் சந்தைகள் உயர்ந்தே காணப்பட்டன. ஆனால், கடந்த பிப்ரவரி மாதம் உள்நாட்டு உற்பத்தியின் அளவு விநியோகத்தின் காரணமாகப் பலவீனமாகக் காணப்பட்டன. இதனால், இனிவரும் நாள்களிலும் சந்தைகளில் நிலையற்ற தன்மையே காணப்படும்" என்றார்.

Stock Market Index
Stock Market Index
சரியும் பொருளாதாரம்... மீட்க முடியுமா?

கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் உறுதிசெய்யப்பட்ட பின், அனைத்து முதலீட்டாளர்களிடம் அச்சம் ஏற்பட்டுள்ளது . ஏற்கெனவே டெல்லியில் நடந்த கலவரம் காரணமாக அந்நிய முதலீட்டாளர்கள், இந்தியாவில் முதலீடு செய்வதற்கு சற்று தயக்கம் காட்டினர். தற்போது இந்திய பங்குச்சந்தை கொரோனாவால் மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பொருளாதாரத்தை மீட்க அரசுகளும் மத்திய வங்கிகளும் துரித நடவடிக்கையில் இறங்க வேண்டும் என்பதே உலகளாவிய முதலீட்டாளர்களின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.

அடுத்த கட்டுரைக்கு