Published:Updated:

`நிர்மலா சீதாராமனின் வரிச் சலுகை அறிவிப்பு!’ - 10 ஆண்டுகளில் இல்லாத உச்சத்தில் பங்குச்சந்தை

வரும் அக்டோபர் மாதத்துக்குப் பிறகு, தயாரிப்பு துறையில் தொடங்கப்படும் புதிய நிறுவனங்களுக்கு கார்ப்பரேட் வரி 15 சதவிகிதம் மட்டுமே விதிக்கப்படும்.

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்

`இந்தியப் பொருளாதாரத்தை 5 டிரில்லியன் டாலராக மாற்றுவதுதான் எங்கள் இலக்கு' என மோடி தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது. அதற்கான பல்வேறு நடவடிக்கைகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்னெடுத்து வருகிறார்.

தற்போது இந்தியப் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பல புதிய தொழில் சலுகைகளை அவர் அறிவித்திருக்கிறார். அந்த அறிவிப்பின்படி வருகிற அக்டோபர் மாதத்திற்குப் பிறகு, தயாரிப்புத் துறையில் தொடங்கப்படும் புதிய நிறுவனங்களுக்கு கார்ப்பரேட் வரி 15 சதவிகிதம் மட்டுமே விதிக்கப்படும். இதுவரை நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டு வந்த கார்ப்பரேட் வரி என்று அழைக்கப்படும் வருமான வரி 30 சதவிகிதத்திலிருந்து 22 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

ShareMarket High
ShareMarket High

2023-ம் ஆண்டு வரை இந்தச் சலுகைகள் நிறுவனங்களுக்குக் கிடைக்கும். ஏப்ரல் 1-ம் தேதி தொடங்கிய நடப்பு நிதியாண்டிலிருந்து புதிய வரிவிகிதம் அமலுக்கு வருகிறது. இந்த அறிவிப்புகளால் உற்பத்தி பெருகும் என்றும் புதிய முதலீடுகள் அதிகம் ஈர்க்கப்படும் என்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தொழில் தொடங்குவதற்கு அதிக ஆர்வம் காட்டுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அறிவிப்பால் இந்திய நிறுவனங்களுக்கு 1.45 லட்சம் கோடி வரிச் சலுகைகள் கிடைக்கும்.

இந்த அறிவிப்பின் எதிரொலியாக இந்தியப் பங்குச்சந்தைகள் கிடுகிடுவென உயர்ந்து வர்த்தகமாகியுள்ளன. மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 2038 புள்ளிகள் (+5.57%) உயர்ந்து 38104.80 என்கிற நிலையில் வர்த்தகமாகிக் கொண்டிருக்கிறது. தேசியப் பங்குச்சந்தையான நிஃப்டி 598 புள்ளிகள் (+5.68%) அதிகரித்து 11303.67 என்கிற நிலையில் வர்த்தகமாகிக் கொண்டிருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத ஏற்றமாக இன்று ஒரே நாளில் 2000 புள்ளிகளை தாண்டியது.