Published:Updated:

Zomato IPO: பங்கு வெளியீடு மூலம் ரூ.8,250 கோடி திரட்டும் ஸொமேட்டோ; அடுத்த இலக்குகள் என்ன?

கொரோனா நோய்தொற்று காலகட்டத்தின் ஆரம்ப காலத்தில் பல பிரச்னைகளை இந்நிறுவனம் சந்தித்தாலும் குறுகிய காலத்தில் தனது வருமானத்தை உயர்த்தியுள்ளது.

Published:Updated:

Zomato IPO: பங்கு வெளியீடு மூலம் ரூ.8,250 கோடி திரட்டும் ஸொமேட்டோ; அடுத்த இலக்குகள் என்ன?

கொரோனா நோய்தொற்று காலகட்டத்தின் ஆரம்ப காலத்தில் பல பிரச்னைகளை இந்நிறுவனம் சந்தித்தாலும் குறுகிய காலத்தில் தனது வருமானத்தை உயர்த்தியுள்ளது.

ஹோட்டல் உணவுப் பொருள்களை வீடுகளுக்கே வந்து டெலிவரி செய்யும் பிரபல ஸொமேட்டோ (Zomato) நிறுவனம் ரூ. 8,250 கோடிக்கு புதிய பங்கு மூலதனம் (IPO) மூலம் நிதி திரட்டுவதற்கு பங்குச் சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான செபியிடம் விண்ணப்பித்திருந்தது. இந்த விண்ணப்பத்தை நேற்று செபி ஏற்றுக் கொண்டது. இதன் மூலம் ஸொமேட்டோ நிறுவனத்தின் ஐ.பி.ஓ ஜூலை மாதத்தில் வெளி வருவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது.

திரட்டப்படும் நிதியில் ரூ.7,500 கோடி நிறுவனத்தின் விரிவாக்க பணிகளுக்காக செலவிடப்பட இருக்கிறது. ரூ.750 கோடி அளவுக்கு இந்த நிறுவனத்தின் மற்றொரு முதலீட்டு நிறுவனமான எட்ஜ், ஆஃபர் பார் சேல் முறையில் தனது பங்குகளை விற்பனை செய்கிறது.

ஐ.பி.ஓ
ஐ.பி.ஓ

ஸொமேட்டோ நிறுவனம் தீபேந்திர கோயல் மற்றும் பங்கஜ் என்பவரால் 2008-ம் ஆண்டு Foodiebay என்ற பெயரில் ஆரம்பிக்கப் பட்டது. பிறகு, 2010-ம் ஆண்டு சீன நாட்டைச் சேர்ந்த Ant குழுமம் என்ற பிரபல நிறுவனம் கணிசமாக முதலீடு செய்தது. இதன் பிறகு இந்த நிறுவனத்தின் பெயர் ஸொமேட்டோ என்று மாற்றம் செய்யப்பட்டது. இப்போது உணவு விநியோகத்தில் இந்தியாவில் முன்னணி நிறுவனமாக ஸொமேட்டோ விளங்குகிறது.

கொரோனா நோய்தொற்று காலகட்டத்தின் ஆரம்ப காலத்தில் பல பிரச்னைகளை இந்நிறுவனம் சந்தித்தாலும் குறுகிய காலத்தில் தனது வருமானத்தை உயர்த்தியுள்ளது. பெரும்பாலான ஹோட்டல்கள் டைனிங் வசதிகளை ஊரடங்கு காரணமாகக் குறைத்துள்ளன. மக்களும் நோய்த் தொற்று பயம் காரணமாக ஹோட்டலுக்குச் சென்று அமர்ந்து சாப்பிடுவதற்கு தயக்கம் கொள்கின்றனர்.

இந்தக் காலகட்டத்தில் மக்கள் விரும்பும் ரெஸ்டாரன்ட் களிலிருந்து வாடிக்கையாளர்கள் விரும்பும் உணவுப் பொருள்களை வீடுகளுக்குச் சென்று சப்ளை செய்யும் இ-காமர்ஸ் நிறுவனங்களின் தேவை அதிகரித்துள்ளது. இந்த வாய்ப்பை ஸொமேட்டோ சரியாகப் பயன்படுத்திக் கொண்டது.

Zomato
Zomato

கடந்த ஆண்டில் ஸொமேட்டோ நிறுவனம் ரூபாய் ரூ.2,486 கோடி வருமானம் ஈட்டியுள்ளது. மேலும் தயாரிக்கப்பட்ட உணவுப் பொருள்கள் மட்டும் அன்றி கடைகளிலிருந்து மளிகைப் பொருள்களை வீடுகளுக்கு சென்று சப்ளை செய்யும் முயற்சியிலும் இந்நிறுவனம் இறங்கியுள்ளது.

இதன் ஒரு பகுதியாக ஸொமேட்டோ நிறுவனம் சென்ற மாதத்தில் மற்றொரு முன்னணி இ-காமர்ஸ் நிறுவனமான கிராஃபர்ஸ் நிறுவனத்தில் ரூ.12 கோடியை முதலீடு செய்துள்ளது.

வீடுகளுக்கு டெலிவரி செய்யும் இ-காமர்ஸ் நிறுவனத்தின் தேவை வரும் காலங்களில் மிக அதிக அளவில் வளர்ச்சி அடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேலும், மதுபாட்டில்களைக் கூட இதுபோன்ற இ-காமர்ஸ் நிறுவனங்களின் மூலம் வாடிக்கையாளரின் வீடுகளுக்கு சப்ளை செய்வதற்கு சில மாநிலங்கள் பரிசீலித்து வருகின்றன. அதனால் வரும் காலத்தில் இந்நிறுவனம் மேலும் வளர்ச்சி அடைவதற்கு வாய்ப்பு உள்ளது.

இந்த நிறுவனத்தின் வருமானம் கணிசமாக உயர்ந்து வந்தாலும் நிறுவனம் தொடர்ந்து பல ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கி வருகிறது. ஆரம்ப காலகட்டத்தில் அனைத்து இ-காமர்ஸ் நிறுவனங்களும் நஷ்டத்தை சந்தித்தாலும் குறுகிய காலத்தில் லாப பாதைக்கு மாறியுள்ளது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

IPO
IPO

ஸொமேட்டோ மட்டுமன்றி மேலும் பல இ -காமர்ஸ் நிறுவனங்களும் ஐ.பி.ஓ வெளியிடுவதற்கு முயன்று வருகின்றன. பேடிஎம், டெலிவரி போன்ற பல நிறுவனங்கள் ஐ.பி.ஓ வெளியிடுவதற்கு தற்போது முயற்சி எடுத்து வருகின்றனர்.

இ-காமர்ஸ் துறை இந்தியாவில் மிகப்பெரிய வளர்ச்சி அடையும் என்று பல வல்லுனர்கள் கணித்துள்ளனர். அதனால், வாசகர்கள் அவரவரின் ரிஸ்க் எடுக்கும் திறனுக்கு தமது முதலீட்டு ஆலோசகர்கள் கூறும் கருத்தைக் கேட்டு ஸொமேட்டோ நிறுவன பங்குகளை ஐ.பி.ஓ மூலம் வாங்கலாம்.