பங்குச் சந்தை
நடப்பு
தொடர்கள்
Published:Updated:

சந்தை ஏற்றமோ... இறக்கமோ... எல்லா காலத்துக்கும் கைகொடுக்கும் இண்டெக்ஸ் இன்வெஸ்ட்மென்ட்!

பங்குச் சந்தை
பிரீமியம் ஸ்டோரி
News
பங்குச் சந்தை

கவர் ஸ்டோரி

சமீபத்தில் பங்குச் சந்தையில் நடந்த ஏற்ற, இறக்கமானது சிறு முதலீட்டாளர்களை மிகவும் யோசிக்க வைத்துவிட்டது. பங்குச் சந்தை முதலீட்டைத் தொடர்ந்து செய்யலாமா, வேண்டாமா என்கிற கேள்வி இவர்களின் மனதில் எழுந்துவிட்டது. இதற்குக் காரணம், இந்த முதலீட்டாளர்களில் பலர் கோவிட் 19-க்குப் பிறகு, முதலீடு செய்ய வந்தவர்கள். கோவிட் காலத்தில் இவர்கள் திடீரென பங்கு முதலீட்டில் குதித்தவர்கள்; இவர்களது நல்ல நேரம், சந்தையில் இவர்கள் வாங்கிய பல பங்குகள் ஒரே வருடத்தில் 50% முதல் 100% வரை லாபம் தந்துவிட்டன.

ஆனால், இந்த ஆண்டு ஆரம்பத்தில் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததால், பங்குச் சந்தை கணிசமான இறக்கம் கண்டது. இதனால், ஏற்கெனவே கிடைத்த லாபம் குறைந்தது. உக்ரைன் - ரஷ்ய போர்ப் பதற்றம் ஓரளவுக்குக் குறைந்துள்ள நிலையில், இனியா வது சந்தை உயருமா என்று பார்த்தால், அடுத்து அமெரிக்காவில் பணவீக்க பிரச்னை உருவாகி, அங்கு வட்டி விகிதம் உயர்த்தப்படுவதால், பங்குச் சந்தை மீண்டும் இறக்கம் கண்டன.

இப்போது திடீரென சில ஆயிரம் புள்ளிகள் ஏற்றம் காண்பதும், சில ஆயிரம் புள்ளிகள் இறக்கம் காண்பதுமாக இருக்கும் சந்தையைப் பார்த்து சிறு முதலீட்டாளர்கள் கொஞ்சம் குழம்பித்தான் போயிருக்கிறார்கள். காரணம், பங்குச் சந்தையில் உள்ள பங்குகளை வாங்கு வதால், இழப்பு வந்துவிடுமோ என்கிற பயம் தான் இந்தக் குழப்பத்துக்குக் காரணம்.

சந்தை ஏற்றமோ... இறக்கமோ... எல்லா காலத்துக்கும் கைகொடுக்கும்
இண்டெக்ஸ் இன்வெஸ்ட்மென்ட்!

பேராசையும் பயமும்...

பொதுவாக, பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்கள் எதிர்பார்ப்பது, கணிசமான வருமானத்தைத்தான். எதிர்பார்ப்பு என்ன, அதையே குறிக்கோளாகக்கொண்டே பலரும் செயல்படுகின்றனர். பங்குச் சந்தையில் முதலீடு செய்யும்போது, இந்த ஆசையானது பேராசையாக மாறி, பல சிக்கல்கள் உருவாகி விடுகின்றன. குறிப்பாக, அதீத பயம் கொள்ள வேண்டிய சூழ்நிலைக்கு முதலீட்டாளர்கள் தள்ளப்பட்டு விடுகின்றனர். பேராசையும் (Greed) பயமும் (Fear) மாறிமாறி வருவதனாலேயே சந்தையில் அதீத ஏற்றமும் இறக்கமும் எல்லாக் காலகட்டங்களிலும் (குறுகிய மற்றும் நீண்ட நாள்கள் என்கிற அடிப்படையில்) வந்து போய்க்கொண்டே இருக்கிறது.

ஏற்ற, இறக்க சந்தையில் லாபம் பார்ப்பது எப்படி?

குளமானது குழம்பிய நிலையிலும் மீன் பிடிக்க வேண்டும்; சந்தையானது ஏற்ற, இறக்கமாக இருக்கும் நிலையில், நாம் லாபம் பார்க்க வேண்டும். இதற்கு என்ன வழி என்று தெரிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். பங்குச் சந்தையில் 20, 25 ஆண்டு களாக முதலீடு செய்பவர்கள், சந்தையில் ஏற்படும் ஏற்ற, இறக்கங்களைப் பார்த்து, பெரிதாகக் கவலைப்பட மாட்டார்கள். அவர்களுக்குச் சந்தையின் செயல்பாட்டைப் பார்த்து, அனுபவபூர்வமாக உணர்ந் திருப்பார்கள். அவர்கள் மாதிரி முதலீடு செய்துவிட்டு, கவலை இல்லாமல் இருப்பது எப்படி என்று தெரிந்தால், நன்றாக இருக்கும் இல்லையா?

முதலீடு பற்றிய கவலை இல்லாமல் இருக்க...

பங்குச் சந்தையில் முதலீடு செய்துவிட்டு, உங்கள் முதலீடு பற்றிய கவலை இல்லாமல் இருக்க வேண்டும் எனில், பல விஷயங்களைப் பற்றி அக்குவேறு, ஆணி வேறாகத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். உலகப் பொருளா தாரத்தின் தற்போதைய போக்கு மற்றும் எதிர்காலத்தில் அது செல்லக்கூடிய திசை பற்றி நன்கு தெரிந்து வைத் திருக்க வேண்டும்.

அது மட்டுமல்ல, எதிர் காலத்தில் ஒரு துறை, தொழில், ஒரு புராடக்ட் எப்படிப்பட்ட வளர்ச்சி, லாபம், மாறுதல் காணும் என்பதை ஓரளவுக்குக் கணிக்கும் திறன் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களைக் கணிக்கும் ஞானம் ஓரளவுக்கு இருக்க வேண்டும்.

மேலும், தொழில்துறை களின் தற்போதைய செயல் பாடு மற்றும் அது எதிர்காலத் தில் செல்லக்கூடிய திசை, நிறுவனங்களின் தற்போதைய செயல்பாடு (கடந்த 10 ஆண்டு கள் வரை) மற்றும் அவற்றின் நிதி சார்ந்த கணக்கு வழக்கு களைப் படித்துப் புரிந்து கொள்ளும் திறன் (ஆண்டறிக்கைகள், லாப நஷ்டக் கணக்குகள்) மற்றும் ரேஷியோக்களை புரிந்துகொள்ளும் திறன் ஆகியவற்றைப் பற்றியும் நன்கு அறிந்து வைத்திருக்க வேண்டும்.

சந்தை ஏற்றமோ... இறக்கமோ... எல்லா காலத்துக்கும் கைகொடுக்கும்
இண்டெக்ஸ் இன்வெஸ்ட்மென்ட்!

இண்டெக்ஸ் இன்வெஸ்டிங்...

அய்யோ, இவ்வளவும் தெரிந்துகொள்ள வேண்டுமா, இதைவிட சிம்பிளான வழி ஏதும் உண்டா என்று கேட்டால், அதற்கான பதில்தான் இண்டெக்ஸ் இன்வெஸ்ட்டிங் (Index investing). அதாவது, பங்குச் சந்தை குறியீடுகளில் முதலீடு செய்வது.

இண்டெக்ஸ் குறியீடுகளில் நீங்கள் நீண்ட கால நோக்கில் முதலீடு செய்யும்போது, பங்குச் சந்தையைப் பற்றி பெரிய அனுபவமோ, நுணுக்கங்களோ உங் களுக்குத் தெரியத் தேவையில்லை. நீங்கள் சம்பாதிப் பதில் ஒரு பகுதியை பங்குச் சந்தைக் குறியீட்டில் முதலீடு செய்துவிட்டு எந்தக் கவலையும் இல்லாமல் இருக்கலாம்.

அதே சமயம், உங்களுடைய நீண்ட காலத் தேவைக்கு (உதாரணமாக, உங்களுடைய 60 வயதுக்குப் பின் வரும் தேவைகளுக்கு) முதலீடு செய்ய முயல் கிறீர்கள். வெகு நீண்ட காலம் (30 ஆண்டுகளுக்கும் மேலான) என்பதால், ஆண்டுதோறும் சிறிய அளவில் கிடைக்கும் வருமானம்கூட கூட்டு வட்டி (compounding) அடிப்படையில் வளர்ச்சி அடைவதால், மிகப் பெரிய தொகை மாறிவிடும். தினமும் நீங்கள் கவலைப்படத் தேவை இல்லாத ஒரு முதலீடு, உங்களுக்குப் பெருமளவில் பணம் சம்பாதித்துத் தந்தால், அதை யார் வேண்டாம் என்று சொல்வார்கள்?

எஸ்&பி 500 இண்டெக்ஸ் வருமானம்...

இண்டெக்ஸ் குறியீடுகளில் நீண்ட காலத்துக்கு முதலீடு செய்வதால், கிடைக்கும் வருமானம் எப்படி அதிசயித்தக்க அளவில் இருக்கும் என்று பார்ப்போம்.

அமெரிக்க சந்தைக் குறியீடான எஸ்&பி 500 என்பது 65 ஆண்டுக் கால (மார்ச் 4, 1957-ல் அறிமுகப்படுத்தப் பட்டது) நீண்ட வரலாறு கொண்டது. அமெரிக் காவில் பிறந்த ஒரு மனிதர் தன்னுடைய 30-வது வயதில் எஸ்&பி 500 சந்தைக் குறியீட்டில் (அப்போது இந்தக் குறியீட்டை அடிப்படையாக வைத்து எந்த இண்டெக்ஸ் ஃபண்டும் செயல்படவில்லை! எஸ்&பி 500 குறியீடு தந்த வருமானத்தின் அடிப்படையில், அந்தக் குறியீட்டின் அடிப்படையில் அமைந்த ஃபண்ட் வருமானம் தந்திருக்கும்! இந்த வருமானத்தின் அடிப்படையில் இந்தக் கட்டுரை எழுதப் பட்டுள்ளது என்பதை வாசகர்கள் கவனிக்கத் தவறக்கூடாது!) முதலீடு செய்ய ஆரம்பிக்கிறார் என வைத்துக்கொள்வோம். அப்போது அவர் முக்கியமான ஒரு முடிவை எடுக்கிறார். அவருடைய முதலீடுகள் 60 ஆண்டுக் காலத்துக்குமேல் இருக்க வேண்டும் என்பதே அவர் செய்த முடிவு. அதுவரை அவர் செய்த முதலீடு எதையும் விற்கக் கூடாது.

சந்தை ஏற்றமோ... இறக்கமோ... எல்லா காலத்துக்கும் கைகொடுக்கும்
இண்டெக்ஸ் இன்வெஸ்ட்மென்ட்!

இந்த வகையில் அவர் முதலீடு செய்வதால், அவருக்குக் கிடைக்கும் நன்மை என்ன? ஊரே ஒரேயடியாகப் பதறிப்போய் கைக்குக் கிடைத்த விலையில் விற்கும்போது நல்ல பங்கைத் தேர்ந்தெடுத்து வாங்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. அதாவது, ஒரு பங்கின் உண்மையான மதிப்பைவிட பல மடங்கு குறைந்த விலையில் நல்ல பங்குகள் கிடைக்கும்போது வாங்க வேண்டும். அதே போல, ஊரே அதீத ஆசையின் எல்லையில் ஓடி ஓடி அதிக விலை கொடுத்து பங்குகளை வாங்கிக் குவிக் கையில் அவற்றை விற்றுவிட்டு வெளியேறிவிட வேண்டிய அவசியம் இல்லை.

1956 முதல் 2020 வரையிலான காலகட்டத்தில் கிட்டத்தட்ட அமெரிக்க பங்குச்சந்தை 13 முறை புதிய உச்சங்களைத் தொட்டு பின்னர் இறங்கியது. இந்த 13 முறையுமே அவர் தவறாமல் 10,000 டாலர்களை எஸ்&பி 500 இண்டெக்ஸில் முதலீடு செய்தார் என வைத்துக்கொள்வோம். அவர் 91 வயதை அடைந்தபோது அவருடைய முதலீடு எவ்வளவாக உயர்ந்திருக் கிறது என்பதைத் தெரிந்துகொள்ள அட்டவணை - 1-ஐ பாருங்கள்.

இவர் செய்த மொத்த முதலீடு 1,30,000 டாலர்கள். 60 ஆண்டுக் காலத்தில் இந்த 1,30,000 டாலர்களானது ஏறக்குறைய 143 மடங்கு அதிகரித்துள்ளது. அதாவது, ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 10.5% வருமானம் தந்திருக்கிறது. (லாபம் கணக்கிடப்படும்போது வரி, தரகு கமிஷன் போன்றவை கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வில்லை!). அமெரிக்காவில் ஆண்டுதோறும் 10.8% வருமானம், அதுவும் எந்தப் பெரிய கவலையும் இல்லாமல் கிடைத்திருக்கிறது என்பது உண்மையிலேயே பெரிய விஷயம்.

இந்தியாவில் கிடைக்குமா..?

இத்தனை பெரிய வருமானம் அமெரிக்காவில் கிடைக்கலாம். அமெரிக்கப் பங்குச் சந்தை நடந்ததை இங்கே ஏன் உதாரணமாகச் சொல்கிறீர்கள்? நம் நாட்டில் இது மாதிரி நடக்க வாய்ப்பு உண்டா, ஆண்டுதோறும் 10% வருமானம் கிடைக்க வழி உண்டா என்று நீங்கள் கேட்டால், உண்டு என்பது தான் உங்கள் கேள்விக்கான பதில். எந்த நாடாக இருந் தாலும் சரி, வெகு நீண்ட காலத்துக்கான முதலீடுகள் சந்தைக் குறியீடுகளில் (லார்ஜ் கேப் இண்டெக்ஸ்) செய்யப் படும்போது அது நல்லதொரு வருமானத்தையே தர வாய்ப்புள்ளது. (பார்க்க, அட்டவணை - 2).

கடந்த 30 ஆண்டுகளில் சந்தை அடைந்த உச்சமும் இறக்கமும் சந்த உச்சத்தில் இருக்கும்போது முதலீடு செய் திருந்தால் எந்த அளவுக்கு வருமானம் கிடைத்திருக்கும் என்பதையும் அட்டவணை - 2 காட்டுகிறது. (நினை விருக்கட்டும், இண்டெக்ஸ் ஃபண்டுகள் சமீப காலத்தில் நடைமுறைக்கு வந்தவை).

அட்டவணை -2-ஐ பார்த்த பிறகு என்ன நினைக் கிறீர்கள். ‘அட, ஓரளவுக்கு நல்ல வருமானம் கிடைக்கும் போல தெரிகிறதே என்பது தானே! அப்படி எனில், ஒரு கைதேர்ந்த முதலீட்டாளராக அந்த உச்சத்துக்குப் பின்னால் வந்த இறக்கத்தில் நான் முதலீடு செய்திருந்தால் (நினைவிருக்கட்டும், ஆகக் குறைந்த இறக்கத்தையும் உச்சத்தையும் கண்டு பிடிப்பது என்பது எப்பேர்ப்பட்ட கில்லாடி களுக்கும் நடக்காத காரியம்) எந்த அளவு வருமானம் கிடைத்திருக்கும் என்கிறீர் களா? (அட்டவணை-3-ஐ பார்க்கவும்!)

அட்டவணை-3-ல் சந்தை இறக்கம் அடைந்த நாளையும் அந்த நாளில் முதலீடு சென் செக்ஸில் முதலீடு செய்திருந் தால் 4.10.2022 அன்றைய நிலவரப்படியிலான வருமானம் எவ்வளவாக இருக்கும் என்பதையும் காட்டுகிறது.

முதலீட்டை இறக்கத்தில் செய்வதற்கும் உச்சத்தில் செய்வ தற்கும் இடையேயான வித்தியாசம் 3.45% (12.15% - 8.70%) முதல் 8.02% (15.40%-7.38%) என்கிற அளவிலேயே இருக்கிறது. காம்பவுண்டிங் முறையில் அதிக அளவிலான வித்தியாசம் வரும் என்றாலுமே பங்குச் சந்தை குறியீட்டில் நீண்ட நாள் களுக்கான முதலீடுகள் உச்சத்தில் செய்யப்பட்டாலுமே (மிக மிக துரதிர்ஷ்டமான சூழ்நிலைகள் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. 2020 வந்த உச்சமும் இறக்கமும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை) ஓரளவுக்கு நல்ல வருமானத்தையே தந்துள்ளதை உங்களுக்குத் தெளிவாகப் புரிகிறதா?

இதனாலேயே சென்செக்ஸ்/நிஃப்டி போன்ற லார்ஜ்கேப் பங்குகளை உள்ளடக்கிய இண்டெக்ஸ்களில் (மியூச்சுவல் ஃபண்ட் அல்லது இ.டி.எஃப் வாயிலாக) மிக நீண்ட காலத்திற்கான முதலீடுகள் செய்யும்போது சந்தை உச்சத்தில் இருக்கும்போது முதலீடு செய்கிறோமோ என்றும் கவலைப்படத் தேவையில்லை. பங்குச் சந்தை முதலீடு பற்றி எதுவும் தெரிந்துகொள்ளாமலே முதலீடு செய்கிறோமோ என்று நினைத்து அஞ்சவும் தேவையில்லை.

ஆனால், உங்கள் முதலீட்டைப் பங்குச் சந்தையில் இருந்து எடுக்கும்போது சந்தை இறக்கத்தில் இருந்தால், என்ன செய்வது என்கிற கேள்விக்கு மட்டும் நீங்கள் பதில் கண்டாக வேண்டும். உதாரணமாக, 2020-ம் ஆண்டில் கோவிட்-19 பாதிப்பு உலகத்தில் பரவ ஆரம்பித்த காலத்தில் 24.3.2020 அன்று பங்குச் சந்தை பெரிய இறக்கம் ஒன்றைச் சந்தித்தது.

அந்த இறக்கத்தின்போது உங்களுக்கு பணம் தேவைப்பட்டு முதலீட்டை (சென்செக்ஸில் அதற்கு முந்தைய காலத்தில் உச்சத்தில் செய்யப்பட்ட முதலீடு) விற்றிருந்தால், எந்த அளவிலான வருமானம் உங்களுக்குக் கிடைத்திருக்கும் என்பது கணக்கிட்டுப் பார்த்தால், அப்போது கிடைக்கும் தொகையையும் ஆச்சர்யம் தருவதாகவே இருக்கும். (பார்க்க அட்டவணை-4)

சந்தை ஏற்றமோ... இறக்கமோ... எல்லா காலத்துக்கும் கைகொடுக்கும்
இண்டெக்ஸ் இன்வெஸ்ட்மென்ட்!

இண்டெக்ஸ் இன்வெஸ்ட்டிங் கற்றுத் தரும் பாடம்...

இதிலிருந்து வெகு நீண்டகால முதலீடுகளைச் செய்யும்போது சந்தை ஏற்றத்தில் இருக்கிறதா அல்லது இறக்கத்தில் இருக்கிறதா என்பதைப் பற்றிக் கவலைப்படாமல் முதலீடு செய்வதற்கு இண்டெக்ஸ் இன்வெஸ்ட்மென்ட்டைத் தேர்வு செய்வது நல்லது என்பதுதான்.

சந்தையில் முதலீடு செய்ய வேண்டும் என்ற ஆர்வமும் அதில் முதலீடு செய்வதில் இருக்கும் ரிஸ்க்கையும் புரிந்துகொண்டு, அதே சமயத்தில் பெரிய அளவில் அனுபவம் இல்லாத மற்றும் குறைவான பரிச்சயம் கொண்டவர்களுக்கு இண்டெக்ஸ் இன்வெஸ்ட்டிங் எனப்படும் இந்த பேசிவ் இன்வெஸ்ட்டிங் முறை நன்றாகவே உதவும். எல்லா முதலீட்டு நடைமுறைகளைப் போல் இந்த வகை முதலீட்டு நடைமுறையிலும் ஒரு சில ரிஸ்க்குகள் இருக்கவே செய்யும். அந்த ரிஸ்க்குகள் என்னவென்று புரிந்துகொண்டு சந்தைக் குறியீடுகளில் நீங்கள் முதலீடு செய்யலாம்.

உங்களுக்கேற்ற இண்டெக்ஸ் குறியீடு எது?

தனிப்பட்ட பங்குகளில் முதலீடு செய்வதில் நிறைய ரிஸ்க் இருப்பதால், பங்குச் சந்தை குறியீடுகளில் முதலீடு செய்யும் முடிவை எடுத்துவிட்டீர்கள். இனி எந்தக் குறியீடுகளில் முதலீடு செய்வது என்பதுதானே உங்கள் கேள்வி.

இன்றைக்கு நமது பங்குச் சந்தையில் லார்ஜ் கேப் இண்டெக்ஸை (நிஃப்டு, சென்செக்ஸ்) அடிப்படையாகக் கொண்ட ஃபண்டுகள் வந்துவிட்டன. இவற்றில் உங்களுக்குப் பொருத்தமாக இருக்கும் ஏதாவது ஒரு குறியீட்டை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் ஃபண்டில் நீங்கள் முதலீடு செய்யலாம். அப்படிச் செய்யும்போது, நீங்கள் மறக்கக் கூடாத ஒரே ஒரு விஷயம், உங்கள் முதலீட்டை நீண்ட காலத்துக்கு வைத்திருக்க வேண்டும் என்பது மட்டுமே!

பங்குச் சந்தை பற்றி பெரிதாகத் தெரியாது; ஆனால், நீண்ட காலத்தில் ஓரளவு நல்ல லாபம் பெற நினைத்தால், உங்கள் முதலீட்டில் ஒரு பகுதியை இண்டெக்ஸில் முதலீடு செய்ய பரிசீலிக்கலாமே!