Published:Updated:

ஐ.பி.ஓ... சிறு முதலீட்டாளர்கள் தவிர்க்க வேண்டிய தவறுகள்..!

பங்கு வெளியீடு
பிரீமியம் ஸ்டோரி
பங்கு வெளியீடு

பங்கு வெளியீடு

ஐ.பி.ஓ... சிறு முதலீட்டாளர்கள் தவிர்க்க வேண்டிய தவறுகள்..!

பங்கு வெளியீடு

Published:Updated:
பங்கு வெளியீடு
பிரீமியம் ஸ்டோரி
பங்கு வெளியீடு

இந்தியாவில் புதிய பங்கு வெளியீடு (IPO - Initial Public Offer) மூலம் 2021–ம் ஆண்டில் ரூ.1.2 லட்சம் கோடி முதலீட் டாளர்களிடமிருந்து திரட்டப்பட்டுள்ளது. ஐ.பி.ஓ மீது சிறு முதலீட்டாளர்களுக்கு ஓர் இனம்புரியாத கவர்ச்சி மற்றும் ஆர்வம் இருக்கிறது. இதனால், அவர்கள் ஐ.பி.ஓ-வில் முதலீடு செய்வதை விரும்புகிறார்கள்.

ஜி.எஸ்.ராஜேஷ் குமார் 
ஈக்விட்டி அனலிஸ்ட், 
Rkgcapitalgains.com
ஜி.எஸ்.ராஜேஷ் குமார் ஈக்விட்டி அனலிஸ்ட், Rkgcapitalgains.com

இந்தியப் பங்குச் சந்தையில் முன்பைவிட மிக அதிகமாக சிறு முதலீட்டாளர்களின் பங்களிப்பு கணிசமாக அதிகரித்துள்ளது. மேலும், பலர் முதல்முறையாகப் பங்குச் சந்தை முதலீட்டில் களமிறங்கியிருக்கிறார்கள். அவர் களின் சராசரி வயது 20 - 35 ஆக இருப்பதாக ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. சிறு முதலீட்டாளர்கள் புதிய பங்கு வெளியீட்டில் முதலீடு செய்யும்போது அவர்கள் தவிர்க்க வேண்டிய முக்கியமான தவறுகள் என்னென்ன?

1. அவசரப்பட்டு முதலீடு செய்ய வேண்டாம்...

பல சிறு முதலீட்டாளர்கள் எந்த ஒரு நிறுவனம் புதிய பங்கு வெளியிட்டாலும் அதில் பணத்தை முதலீடு செய்துவிடுகிறார்கள். புதிய நிறுவனத்தின் பங்கில் முதலீடு செய்யும் முன் அந்த நிறுவனத்தின் அடிப்படை, அதன் நிறுவனர்களின் நேர்மை மற்றும் திறமை, விற்பனை, லாபம், கடன், நிதி நிலவரம், போட்டியைச் சமாளிக்கும் திறன், வணிக மாடல் மற்றும் எதிர்காலத்தில் அந்த நிறுவனத் தின் வளர்ச்சி எப்படி இருக்கும் என்பது போன்ற விவரங்களை அலசி ஆராய்வது அவசியமாகும்.

தெளிவான பிசினஸ் மாடல் இல்லாத நிறுவனப் பங்குகளில் எக்காரணம் கொண்டும் முதலீடு செய்யக் கூடாது என உலகின் முன்னணி பங்குச் சந்தை முதலீட்டாளர் வாரன் பஃபெட் சொல்லியிருக்கிறார். இதை அனைவரும் கருத்தில் கொள்வது கட்டாயம்.

2. பங்கின் விலைப்பட்டை...

நிறுவனம் நிர்ணயம் செய்திருக்கும் விலைப் பட்டை (Price Bond) சரியானதுதானா, அந்த விலை நியாயமானதுதானா என்பதை நிறுவனத்தின் மதிப்பு, அதன் பிராண்ட் வேல்யூ, லாபம் ஈட்டும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் கண்டுபிடிக்க வேண்டும்.

சிறு முதலீட்டாளரால் இதைக் கண்டு பிடிக்க முடியவில்லை எனில், இது பற்றி நன்கு தெரிந்த ஒருவரின் உதவியை நாடலாம். தவிர, குறிப்பிட்ட நிறுவனத்தின் ஐ.பி.ஓ குறித்து பல்வேறு முன்னணி பங்குத் தரகு நிறுவனங்கள் அறிக்கைகள் வெளியிட்டிருக்கும். அவற்றை எல்லாம் நன்கு படித்துப் பார்த்து ஒரு முடிவுக்கு வரலாம்.

ஐ.பி.ஓ... சிறு முதலீட்டாளர்கள்    தவிர்க்க வேண்டிய தவறுகள்..!

3. பங்கு பட்டியல் லாப எதிர்பார்ப்பு...

பல சிறு முதலீட்டாளர்கள் பங்குகள் பட்டியலிடப்படும் அன்று நன்றாக ஏற்றம் காணும். அன்றே விற்று நல்ல லாபம் பார்க்கலாம் என்கிற எண்ணத்துடன், பல நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்கிறார்கள். பல நிறுவனப் பங்குகளில் இது நடக்காமல் போகவே, புதிய வெளியீட்டில் வாங்கிய பங்குகளை இழப்பிலேயே வைத்திருப்பதைப் பார்க்க முடிகிறது. பலர், பட்டியல் தினத்தில் லாபம் பார்க்கலாம் எனக் கடன் வாங்கிக்கூட முதலீடு செய்துவிடுகிறார்கள். இது இரட்டை இழப்பில் (கடன் வட்டி, பங்கு விலை குறைவு) கொண்டுவந்து நிறுத்திவிடும். எனவே, சிறு முதலீட்டாளர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது அவசியமாகும்.

4. பிரபலம் கண்டு உணர்ச்சி வசப்பட வேண்டாம்...

அண்மையில், பேடிஎம் (Paytm), ஸொமேட்டோ (Zomato) போன்ற புதிய தலைமுறை நிறுவனங்களின் புதிய பங்கு வெளியீடு பரபரப்பாகப் பேசப்பட்டது. காரணம், மில்லினியல்கள் என்கிற இளைஞர்கள் மத்தியில் இந்த நிறுவனங்கள் மிக பிரபலமாக இருப்பது காரணமாகும்.

பேடிஎம் பங்கின் வெளியீட்டு விலை ரூ. 2,150. பட்டியலான முதல் நாளே பங்கின் விலை 27% குறைந்துபோனது. அதன் பின்னர், இன்னும் இறங்கியது. இப்போது ரூ.650–க்கு வர்த்தகமாகிக் கொண்டிருக்கிறது.

ஸொமேட்டோ பங்கின் வெளியீட்டு விலையான ரூ.76-ஐ விட 53% அதிகமாகப் பட்டியலானது. ரூ.220 வரைக்கும் ஏற்றம் கண்டு, இப்போது இறங்கி ரூ.73 ஆக வர்த்தகமாகி வருகிறது.

பங்குச் சந்தையின் இயல்பான குணமே ஏற்ற, இறக்கம் என்பதால், பங்குகளின் வணிகம், அதன் பிரபலம் கண்டு உணர்ச்சிவசப்பட்ட நிலையில், பங்குகளில் முதலீடு செய்வதைத் தவிர்ப்பது நல்லது.

5. இறங்கும் சந்தையில்...

பொதுவாக, இறங்கும் சந்தையில் நல்ல நிறுவனப் பங்குகளின் விலை மலிவாகக் கிடைக்கும். அப்போது முதலீடு செய்ய வேண்டும் என்பார்கள். இது புதிய பங்கு வெளியீட்டுக்குப் பொருந்தாது. காரணம், பங்கு பட்டியலிடப் படும்போது மற்றும் அதன்பிறகு இறங்கிவிட்டால், அது மீண்டு லாபத்துக்கு வர அதிக நாள்கள் எடுக்கும். உதாரணமாக, சமீபத்திய எல்.ஐ.சி பங்கு வெளியீட்டைக் குறிப்பிடலாம். பங்கு வெளியீட்டு விலை ரூ.949 என்றாலும் பங்குச் சந்தை நிலவரம் சரியில்லை என்பதால், பங்கின் விலை சுமார் 10% அளவுக்கு இறக்கத்தில் பட்டிய லிடப்பட்டது. மே 31-ம் தேதி யில் பங்கின் விலை ரூ.820-க்கு இறங்கி வர்த்தகமானது. எந்த நிறுவனமாக இருந்தாலும், அதன் நற்பெயரைத் தாண்டி, அதன் பிசினஸ் இன்றைக்கு எப்படி இருக்கிறது என்று பார்த்து, முதலீடு செய்வதுதான் சரியான முடிவாக இருக்கும்.

6. மந்தை மனநிலை முதலீடு...

புதிய பங்கு வெளியீட்டில் பலரும் முதலீடு செய்கிறார்கள் என்கிற மந்தை மனநிலையை (Herd Mentality) பின்பற்றி இப்போது பலரும் முதலீடு செய்ய ஆரம்பிக்கிறார்கள். இதனால், மதிப்பில்லாத புதிய பங்குகளில் பலரும் முதலீடு செய்து நஷ்டப்படுவதைப் பார்க்க முடிகிறது. அதிர்ஷ்டத்தை மட்டும் நம்பாமல் நன்கு விஷயம் தெரிந்துகொண்டு ஐ.பி.ஓ பங்கு களில் முதலீடு செய்வது அவசியத்திலும் அவசியம்.

விண்ணப்பங்களின் எண்ணிக்கை: செபி எச்சரிக்கை..!

இந்தியப் பங்குச் சந்தையை நெறிப்படுத்தும் செபி அமைப்பு அண்மையில் ஒரு முக்கியமான விஷயத்தைக் கண்டுபிடித்திருக்கிறது. அதாவது, பெரிய நிறுவன முதலீட்டாளர்கள் மற்றும் தனிநபர்களாக பெரும் பணக்காரர்கள், பங்குகளில் முதலீடு செய்யும் நோக்கம் எதுவும் இல்லாமல் விண்ணப்பங்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் காட்டும் நோக்கத்துடன் செயல் பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தற்போது சிறு முதலீட்டாளர்கள் உள்ளிட்ட சில முதலீட்டாளர்களின் பிரிவுக்கு மட்டும்தான் ‘அஸ்பா’ (ASBA) முறையில் வங்கிக் கணக்கில் பணம் முடக்கி வைக்கப்படுகிறது. சில பெரும் முதலீட்டாளர்களுக்கு ஏலம் நடைமுறைக்கு வரும்போது மட்டும் வங்கிக் கணக்கில் பணம் இருந்தால் போதும் என்கிற நிலை காணப்படுகிறது. இதை அடுத்து, பங்கு ஒதுக்கீடு செய்யப்பட்டால் பணம் எடுப்பதற்குப் போதிய அளவுக்கு வங்கிக் கணக்கில் பணம் இருந்தால் மட்டுமே விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என செபி அறிவித்துள்ளது. இதை இன்னும் மூன்று மாதக் காலத்துக்குள் நடைமுறைக்குக் கொண்டு வர வேண்டும் என மீடியேட்டர்களுக்கு செபி அறிவுறுத்தியுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism