Published:Updated:

ஏற்ற இறக்கத்தில் சந்தை... முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

சி.கே.நாராயண்
பிரீமியம் ஸ்டோரி
News
சி.கே.நாராயண்

பங்குச் சந்தை

இந்தியப் பங்குச் சந்தை ஏற்ற இறக்கத்தில் இருந்து வருகிறது. இத்தகைய சூழலில் வர்த்தகர்கள், முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும் என பங்குச் சந்தை நிபுணர் சி.கே.நாராயணிடம் கேட்டோம். விரிவாக எடுத்துச் சொன்னார்.

‘‘சென்செக்ஸ் ஆயிரம் புள்ளிகள் ஏறுகிறது; மீண்டும் ஆயிரம் புள்ளிகள் இறங்குகிறது. இது போன்ற சூழலில் சந்தையை அணுகுவது சற்றுக் கடினமான விஷயம்தான். இதுதான் பங்குச் சந்தையின் இயல்பு என்பதால், பெரிதாகக் கவலைப்படத் தேவையில்லை.

பங்குச் சந்தையின் இதுவரையிலான வரலாற்றைப் பார்த்தால், சில வருடங்களுக்கு ஒருமுறை 8% - 10% அளவுக்கு ஏற்றம் காணும். அதைத் தொடர்ந்து 3% - 4% என்ற அளவில் சில சிறிய இறக்கங்களையும் பார்க்க முடியும். ஆனால், கடந்த 2020-21-ம் ஆண்டுக் காலத்தில் பங்குச் சந்தையின் செயல்பாடு வேறாக இருந்தது. காரணம், இந்தக் காலத்தில் பங்குச் சந்தையில் காணப்பட்ட காளையின் போக்கில் பெரிதாக எந்த இறக்கமும் நடக்கவில்லை. இதற்கு முக்கியமான காரணம், தொடர்ந்து புதிய முதலீடுகள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன.

சி.கே.நாராயண்
சி.கே.நாராயண்

பங்குச் சந்தையில் தற்போது இரண்டு விஷயங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. ஒன்று, எஃப்.ஐ.ஐ-கள் தொடர்ந்து பங்குகளை விற்று முதலீட்டைப் பெரிய அளவில் வெளியே எடுக்கிறார்கள். அக்டோபர் - நவம்பர் மாதங் களில் 4.5 பில்லியன் டாலர் மதிப்பிலான பங்கு களை விற்றுள்ளனர். இது மிகவும் அதிகம். இதுதான் சந்தையில் நெருக்கடி உருவாகக் காரணம். டாலர் வலுவடைந்து, ரூபாயின் மதிப்பு வலுவிழந்து வருவதால், எஃப்.ஐ.ஐ-கள் முதலீட்டைத் திரும்ப எடுத்து வருகின்றனர்.ஆனால், உள்நாட்டு முதலீடுகள் தொடர்ந்து அதிகரிப்பதால், சந்தையைச் சற்றுக் காப்பாற்றி வருகிறது. சிறு முதலீட்டாளர்களும் அதிக முதலீடுகளை செய்கின்றனர். இந்தப் போக்கு நடக்கவில்லை எனில், எஃப்.ஐ.ஐ 4.5 பில்லியன் டாலர் அளவிலான முதலீடுகளை வெளியே எடுக்கும்போது சந்தை கடும் சரிவைச் சந்தித்திருக்கும். ஆனால், அது நடக்கவில்லை.

மார்ச் 2020 - டிசம்பர் 2021 வரையிலான காலகட்டத்தில் சமீபத்தில்தான் 8%-9% அளவுக்கு சரிந்திருக்கிறது. ஆனால், இந்தச் சரிவும்கூட வழக்கமான இயல்பான விஷயமாகத்தான் நாம் பார்க்க வேண்டும். கடந்த 18 மாதங்களாக எந்தவித இறக்கமும் பார்க்காததால்தான், சமீபத்திய 8%-9% இறக்கம் நமக்குப் பெரிதாகத் தெரிகிறதே தவிர, இந்த சரிவைக் கண்டு பயப்படத் தேவை யில்லை. இந்த இறக்கம் போர்ட் ஃபோலியோ மதிப்பில் சில பாதிப்பை உண்டாக்கி இருக்கும், வர்த்தகர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டிருக்கும் என்பதை மறுக்க முடியாது. காரணம், 90% பேர் காளையின் போக்கில்தான் தீவிரமாக வர்த்தகம் செய்கிறார்கள். இதனால் இறக்கம் காணும்போது நஷ்டம் உண்டாகும் என்பதில் சந்தேகம் இல்லை.

சந்தையில் பல விதமான டிரேடர்கள் இருக்கிறார்கள். அதில் டே டிரேடர் எனில், தெளிவாக அந்த நாளுக்குள் பொசிஷன் எடுத்து, அன்றைய வர்த்தக முடிவுக்குள்ளேயே பொசிஷனை முடித்துவிட வேண்டும். இவர்கள் பெரிய இறக்கம், சிறிய இறக்கம் என்றெல்லாம் பார்க்காமல், சந்தையின் நகர்வுகள் அனைத்தையும் ஒன்றுபோலவே பார்க்க வேண்டும். ஆனால், பொசிஷனை லாபத்தில்தான் முடிப்பேன் என்று நினைத்தால், அவர் தின வர்த்தகர் அல்ல, பல நாள்களுக்கு வர்த்தகம் செய் பவர்தான். இப்படிப்பட்ட மல்ட்டி டே டிரேடர், மல்ட்டி வீக் டிரேடர்களுக்கு 3-4 சதவிகிதத்துக்குமேல் இறக்கம் காணும்போது பிரச்னைகளைச் சந்திக்க நேரிடும். ஏனெனில், பெரும்பாலானோர் குறைவான மூலதனத்தை வைத்துக் கொண்டு வர்த்தகம் செய்கிறார்கள். இவர்களுக்கு சந்தை பெரிய அளவில் சரியும்போது சிக்கல் உண்டாகும்.

ஆனால், முதலீட்டாளர்களுக்கு எந்தவித சிக்கலும் இல்லை. நிஃப்டி இண்டெக்ஸ் 7500 இருக்கும்போதி லிருந்து தங்களுடைய பங்குகளைப் பொறுமை காத்து வைத்திருந்தால், கடந்த அக்டோபரில் நிஃப்டி 18000 வரை வளர்ச்சி அடைந்தபோது முதலீட்டாளர்களுக்கு மிகப் பெரிய வளர்ச்சி கிடைத்திருக்கும். அவ்வப்போது அதில் சில இறக்கம் காணப்பட்டிருந்தாலும் அது கவலைப்படும் அளவுக்கு இருக்காது.

முதலீட்டாளர்களைப் பொறுத்தவரை, நிஃப்டி 16000-16500 என்ற அளவுக்குக் கீழ் இறங்கும்போதுதான் கவலைப்படும் நிலை உருவாகும். அத்தகைய இறக்கம் உண்டாகாதவரை கவலைப்படத் தேவையில்லை. தவிர, சந்தை இறக்கம் காணும்போது நல்ல பங்குகளை வாங்கி முதலீடு செய்யலாம். ஆனால், வழக்கமாக விலை உயரும்போதுதான் வேக வேகமாக பங்குகளைத் துரத்துகிறோம். அப்போது அதிக விலையில் பங்குகளை வாங்குவதால், பிரச்னைகளைச் சந்திக் கிறோம். இறக்கங்களில்தான் நல்ல பங்குகளை வாங்க வேண்டும். ஆனால், சந்தையில் விற்பனை நடக்கும்போதுதான் யாரும் வாங்க முன்வருவதில்லை. தற்போது அத்தகைய விற்பனைச் சூழல் காணப்படுகிறது. இதை முதலீட்டாளர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். சந்தை இறக்கம் முதலீட் டாளர்களுக்கு ஒரு வாய்ப்புதானே தவிர, பிரச்னை அல்ல.

பல நாள், பல வாரத்துக்கு பொசிஷன் எடுத்திருக்கும் வர்த்தகர்கள் போதுமான மூலதனம் வைத்திருக்க வேண்டியது கட்டாயம். ஒரு ஃப்யூச்சர் லாட் வர்த்தகம் செய்ய குறைந்த பட்சம் ரூ.3 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை மூலதனம் தேவை. இத்தகைய மூலதனம் இல்லாதபட்சத்தில் சந்தையில் நெருக்கடியைச் சந்திக்க நேரிடும். அதனால், தவறான முடிவு களை எடுக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டு, பெரும் நஷ்டத்தைச் சந்திக்க நேரிடும். எனவே, போதுமான மூலதனத்துடன் வர்த்தகம் செய்வது நல்லது.

ஒருவேளை, போதுமான மூலதனம் இல்லாத சூழலில் பொசிஷனில் லாக் ஆகிவிடும்பட்சத்தில், உங்களிடம் உள்ள பங்கு நன்கு லாபம் தந்துகொண்டிருந்தால், உதாரணத்துக்கு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சிறப்பாகச் செயல்பட்டுவருகிறது. சந்தை மோசமாக இறக்கம் காணும்போது இது மாதிரியான பங்குகளை விற்காமல் வைத்திருப்பது நன்மை தரும். லாபத்தை எடுக்கிறேன் என்று சிறப்பாகச் செயல்படும் பங்கு களை விற்றுவிட்டால், உங்களிடம் நஷ்டத்தில் உள்ள மற்ற பங்குகளை மீண்டும் மீட்பது கடினமாகிவிடும். சந்தையில் லாபத்தில் உள்ள சிறப்பான பங்குகளை விற்காமல் வைத்திருப்பது நல்ல விஷயம். ஆனால், இதைச் செய்வதுதான் கடினமான காரியம். இதைச் செய்யும் மனநிலைக்கு வந்து விட்டால் நன்மைதான்.

எனவே, உங்களிடம் உள்ள பங்குகள் நல்ல டிரெண்டில் இருக்கிறதா, இல்லையா என்பதை அனலிஸ்ட் நிபுணர் களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். அப்படி இருக்கும் பட்சத்தில், கையில் மூலதனம் இருந்தால், ஆவரேஜ் செய்ய பயன்படுத்தலாம். பொறுத் திருந்து சந்தையில் ஏற்றம் வரும் போது, நல்ல விலைக்கு விற்கும் முடிவை எடுக்கலாம். டே டிரேடர்கள் அன்றைய தினத்தில் மட்டுமே கவனம் செலுத்துங்கள். லாபமோ, நஷ்டமோ அன்றே விற்றுவிட வேண்டும். பங்குகளை வாங்கி விற்பதைப்போல, விற்று வாங்கவும் தெரிந்துகொள்ள வேண்டும்.

பங்குச் சந்தை நீண்ட கால அடிப்படையில் வலுவான காளையின் போக்கில் உள்ளது. சந்தைக்குள் வருவதற்கு முதலீடு கள் காத்திருக்கின்றன. எஃப்.ஐ.ஐ தற்போது விற்பனை செய்துவந் தாலும் மதிப்பு குறையும்போது முதலீடு செய்வார்கள். பொருளா தார வளர்ச்சி மிகச் சிறப்பாக இருக்கிறது. தற்போது காணப் படும் இறக்கம் தற்காலிக மானது தான். நம் முதலீட்டை சரியாகக் கையாண்டால் நஷ்டத்தைக் குறைவாகவும், லாபத்தை அதிக மாகவும் ஈட்ட முடியும்’’ என்றார் சி.கே. நாராயண்.

இந்தப் பேட்டியை வீடியோ வில் பார்க்க: https://youtu.be/p_KkiXHn0SI