Published:Updated:

கவர்ச்சியை இழக்கின்றனவா ஹெச்.டி.எஃப்.சி பங்குகள்..?

ஹெச் டி எஃப் சி
பிரீமியம் ஸ்டோரி
ஹெச் டி எஃப் சி

வங்கி

கவர்ச்சியை இழக்கின்றனவா ஹெச்.டி.எஃப்.சி பங்குகள்..?

வங்கி

Published:Updated:
ஹெச் டி எஃப் சி
பிரீமியம் ஸ்டோரி
ஹெச் டி எஃப் சி

தனியார் வங்கிகளில் தொடர்ந்து சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்து வரும் ஹெச்.டி.எஃப்.சி குழுமத்தின் பங்குகள் அனைத்தும் கடந்த 2021-ல் முதலீட் டாளர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தையே தந்திருக்கின்றன. ஹெச்.டி.எஃப்.சி வங்கி, ஹெச்.டி.எஃப்.சி லைஃப், ஹெச்.டி.எஃப்.சி லிமிடெட், ஹெச்.டி.எஃப்.சி ஏ.எம்.சி ஆகிய நான்கு பங்குகளும் 2021-ல் மைனஸில் வருமானம் தந்திருக்கின்றன.

ஹெச்.டி.எஃப்.சி வங்கி கடந்த ஒரு வருடத்தில் கொடுத்துள்ள வருமானம் -13.13 சதவிகிதமும், ஹெச்.டி.எஃப்.சி லிமிடெட் பங்கு விலை கடந்த ஒரு ஆண்டில் -13.48 சதவிகிதமும் வருமானம் கொடுத்திருக்கிறது.ஹெச்.டி.எஃப்.சி லைஃப் பங்கின் கடந்த வருட வருமானம் -25.24 சதவிகிதம். ஹெச்.டி.எஃப்.சி ஏ.எம்.சி 2021-ல் கொடுத்த வருமானம் -33.3 சதவிகிதமாகவும் இருக்கின்றன.

2021-ல் இந்தியப் பங்குச் சந்தை மிகச் சிறப்பான வளர்ச்சியைக் கண்டிருக்கிறது. அப்போதே ஹெச்.டி.எஃப்.சி பங்குகளின் வளர்ச்சி மைனஸில் இருந்த நிலையில், தற்போது பங்குச் சந்தை மிகுந்த ஏற்ற இறக்கமான வர்த்தகத்தைக் கொண்டிருக்கும் நிலையில், ஹெச்.டி.எஃப்.சி பங்குகளின் விலை மேலும் குறைந்துள்ளன. இது முதலீட்டாளர் களிடம் பெரும் வருத்தத்தை உண்டாக்கி யிருக்கிறது.

இந்த நிலையில், இந்தப் பங்குகளின் எதிர் காலம் எப்படி இருக்கும் என்கிற கேள்விக்கு பதில் தெரிந்துகொள்ளும் முன் இந்த நிறுவனங் களின் ஃபண்டமென்டல்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஹெச்.டி.எஃப்.சி வங்கி...

தனியார் துறையில் பல சாதனைகளை நிகழ்த்திய வங்கியாக இது விளங்குகிறது. தொடர்ந்து 20% வளர்ச்சியைப் பதிவு செய்து வந்த நிலையில், 2021-ம் நிதி ஆண்டில் எதிர்பார்த்த வளர்ச்சியை எட்டவில்லை. காரணம், தன்னுடைய கடன் சொத்துகள் சார்ந்து அதிக எச்சரிக்கையுடன் இந்த வங்கி செயல்பட்டு வருவதுதான். இந்த வங்கி கொரோனா காலத்தில் கடன்கள் வழங்குவதை வெகுவாகக் குறைத்தது. ரீடெய்ல் கடன் அளவையும் கணிசமாகக் குறைத்தது. இந்த வங்கியின் மொத்தக் கடன் (wholesale loan) 21.7% எனில் ரீடெய்ல் கடன் 6.7 சதவிகிதமாக மட்டுமே இருக்கிறது.

அதே சமயம், இந்த வங்கியின் நிகர வாராக் கடன் அளவும் 1.32 சதவிகிதத்திலிருந்து 1.47 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. மொத்தக் கடனில் 0.9% கடன்கள் மறுசீரமைப்புக்கு உட்படுத்தப்பட இருக்கிறது.

வங்கியின் வாராக்கடன் ஒதுக்கீடுகளும் சொத்துகளின் தரமும் தொடர்ந்து வலுவாக இருக்கிறது. கடன் வசூலிப்பும் கொரோனாவுக்கு முந்தைய நிலைக்குத் திரும்பிக்கொண்டிருக் கிறது.

2020 டிசம்பரில் ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் தொடர் தொழில்நுட்பக் கோளாறுகள் குறித்து ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்தது. எதிர்பாராத அளவுக்கு அபராதம் விதித்ததுடன், புதிய கிரெடிட் கார்டுகள் வழங்கவும் தடை விதித்தது. மேலும், புதிதாக டிஜிட்டல் சேவை களை முன்னெடுக்கவும் தடை விதித்தது. இதனால் ஹெச்.டி.எஃப்.சி வங்கி கிரெடிட் கார்டு பிரிவில் தனது சந்தை பங்களிப்பை இழந்தது.

ஆனால், ரிசர்வ் வங்கியின் அந்தத் தடை நீக்கப்பட்டதும் குறுகிய காலத்திலேயே நான்கு லட்சம் புதிய கிரெடிட் கார்டுகளை வழங்கி, இழந்த சந்தை மீண்டும் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொழில்நுட்பத்தில் தொடர்ந்து முதலீடு செய்வதில் ஹெச்.டி.எஃப்.சி வங்கி எப்போதுமே முன்னோடியாக இருக்கும். தொடர்ந்து அதன் மொத்த செலவில் 10 சதவிகிதத்தைத் தொழில் நுட்ப மேம்பாடுகளுக்காக முதலீடு செய்து வருகிறது.

இந்த வங்கி குறித்து பல சாதகமான அம்சங்கள் வலுவாக இருந்தாலும் அதன் கடன் வளர்ச்சி தற்போது எச்சரிக்கையான அணுகுமுறையால் சற்று மந்தமாகியிருக்கிறது.

ஆனாலும், ஹெச்.டி.எஃப்.சி வங்கி அதன் கவர்ச்சியை இழந்துவிடவில்லை. வரும் காலாண்டுகளில் வங்கியின் வளர்ச்சி மீண்டும் 20% எனும் அளவுக்குத் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பங்கு விலையும் சற்று அதிகமான மதிப்பிலேயே வர்த்தகமாகிறது.

கவர்ச்சியை இழக்கின்றனவா 
ஹெச்.டி.எஃப்.சி பங்குகள்..?

ஹெச்.டி.எஃப்.சி லிமிடெட்...

ரியல் எஸ்டேட் துறையில் ஹெச்.டி.எஃப்.சி லிமிடெட் நிறுவனம் தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டுவருகிறது. சமீப ஆண்டுகளாக மந்தமாக இருந்த ரியல் எஸ்டேட் துறையில் தற்போது மீட்சியானது மெள்ளத் தொடங்கி யிருக்கிறது. இதில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் சில காரணிகள் பற்றிப் பார்க்கும்போது, குறைந்த வட்டி விகிதம், ஐ.எல்&எஃப்.எஸ் சர்ச்சைக்குப் பிறகு, பில்டர் கன்சாலிடேஷனை முடிவுக்குக் கொண்டுவந்தது, பத்திரப் பதிவு வரிக் குறைப்பு போன்றவை குறிப்பிடத்தக்க காரணிகளாக உள்ளன.

ரியல் எஸ்டேட் துறையில் டிமாண்ட் அதிகரிக்கும்போது வீட்டுக் கடன் பிரிவில் இருக்கும் ஹெச்.டி.எஃப்.சி லிமிடெட் கடன் வளர்ச்சியும் கணிசமாக அதிகரிக்கும். வீட்டுக் கடன்கள் வழங்குவதில் நடப்பு நிதி ஆண்டில் முதல் ஒன்பது மாதங்களில் 48% வளர்ச்சி கண்டுள்ளது. கடன் வசூலிப்பு தரமும் 98.9% எனும் அளவுக்கு முன்னேற்றம் கண்டுள்ளது. மொத்த வாராக்கடன் 2.32 சதவிகிதமாகவும், தனிநபர் வாராக்கடன் 1.44 சதவிகிதமாகவும் உள்ளது. வாராக் கடன்களைச் சமாளிப்பதற்காக ரூ.13,150 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது தேவையான அளவைவிட அதிகமாகவே உள்ளது.

தனிநபர் அல்லாத கடன் வகையில் மொத்த வாராக்கடன் 5.04% என்ற அளவில் உள்ளது. சில பெரிய நிறுவனங்களின் கடன்களால் இதன் வாராக் கடன் அதிகரித்துள்ளது. பெரு நிறுவனக் கடன்கள் தொடர்ந்து இதற்கு பெரும் கவலையாக இருந்து வருகிறது.

ஹெச்.டி.எஃப்.சி லிமிடெட் பங்கு விலை 10 வருடத்தில் இல்லாத குறைந்த விலையில் வர்த்தகமாகிறது. ஹவுஸிங் ஃபைனான்ஸ் பிரிவில் விலை குறைவான பங்குகளில் ஒன்றாக இருக்கிறது.

ரெஜி தாமஸ்
ரெஜி தாமஸ்

ஹெச்.டி.எஃப்.சி லைஃப்...

ஒருகாலத்தில் மிகவும் விலை உயர்ந்த லைஃப் இன்ஷூரன்ஸ் பங்காக இது இருந்தது. இன்ஷூரன்ஸ் பிரிவில் தொடர்ந்து தீவிரமாகச் செயல் பட்டு வருகிறது. இந்த நிறுவனம் அதன் அனைத்துக் காப்பீட்டு பிரிவுகளிலும் வலுவாகச் செயல்பட்டு வருகிறது. தனிநபர் பிரீமியம் வருமான வளர்ச்சி 21 சதவிகிதமாக சிறப்பாக உள்ளது. லாப வளர்ச்சியிலும் எல்.ஐ.சி நிறுவனத்தை விடவும் அதிக வளர்ச்சியைப் பதிவு செய்கிறது.

ஒவ்வொரு 100 ரூபாய் பிரீமியம் வரவிலும் நிறுவனத் துக்கு ரூ.26.4 லாபமாக வருகிறது. அதே சமயம், எக்சைட் லைஃப் நிறுவனத்தை அதிக விலைக்கு வாங்கியது இதற்கு சற்று பாதகமாக உள்ளது.

அதன் எம்பெடட் (embedded) மதிப்பைவிட 2.5 மடங்கு அதிக விலைக்கு வாங்கியுள்ளது. ஆனால், இதன்மூலம் நீண்ட காலத்தில் பலனை அனுபவிக்கக்கூடியதாகவும் உள்ளது.

ஹெச்.டி.எஃப்.சி ஏ.எம்.சி...

இந்த நிறுவனம் அதன் சந்தைப் பங்களிப்பில் தொடர்ந்து இது தன்னுடைய இடத்தை இழந்து வருகிறது. மேலும், இதன் ஃபண்டுகளின் செயல்பாடும் சிறப்பாக இல்லை. கடந்த ஐந்து ஆண்டுகளாகவே இதன் திட்டங்கள் பலவும் குறைவான அளவிலேயே வளர்ச்சியைக் கண்டிருப்பது நிறுவனத்தின் மீதான கவலையை அதிகரிக்கச் செய்வதாக இருக்கிறது. தற்போது இதை அடையாளம் கண்டு சரிசெய்யும் முயற்சியில் நிறுவனம் ஈடுபட்டிருக்கிறது.

புதிய மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை அறிமுகப் படுத்தாததும் இதற்குப் பாதகமாக உள்ள இன்னொரு முக்கிய பிரச்னை. நாவி, சாம்கோ, ஜிரோதா போன்ற புதிய ஏ.எம்.சி.களும் மியூச்சுவல் ஃபண்ட் பிரிவில் நுழைந்துள்ளன. எனவே, போட்டி அதிகமாக இருக்கும்.

இதுவும் கடந்து போகும்...

மேற்கண்ட ஹெச்.டி.எஃப்.சி நிறுவனங்கள் 2021-ல் பங்குச் சந்தையில் சிறப்பாகச் செயல்படவில்லை. இவற்றின் செயல்பாடு இனி எப்படி இருக்கும் என்று பங்குச் சந்தை நிபுணர் ரெஜி தாமஸிடம் கேட்டோம்.

“தற்போது பங்குச் சந்தை இருக்கும் சூழல் அனை வருக்கும் தெரிந்தது போல மிகுந்த ஏற்ற இறக்கமான நிலையில்தான் இருக்கிறது. ரஷ்யா-உக்ரைன் போர், தொடர்ந்து உயரும் கச்சா எண்ணெய் விலை, டாலர் வலுவடையும் போக்கு போன்ற பல்வேறு காரணங் களால் சந்தை அதிக ஏற்ற இறக்கங்களுக்கு உள்ளாகி வருகிறது. இதனால் பெரும்பாலான முன்னணிப் பங்குகள் மிக மோசமாக இறங்கியிருக்கின்றன. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனப் பங்கும் இதற்கு விதிவிலக்கல்ல.

வங்கிப் பங்குகள் அனைத்துமே இறங்கியிருக் கின்றன. இந்தியாவில் மட்டுமல்ல, தற்போது உலகம் முழுவதுமே வங்கி, நிதிசார் பங்குகள் கடும் இறக்கம் கண்டுள்ளன. ஹெச்.டி.எஃப்.சி பங்குகள் குறித்து பார்த்தோமானால், அவை அனைத்தும் தங்களுடைய தொழில் பிரிவில் வலுவான அடித்தளத்துடன் இருக்கின்றன.

ஹெச்.டி.எஃப்.சி வங்கிக்கு விதிக்கப்பட்ட தடை, அபராதம் போன்றவை எல்லாம் மிகத் தற்காலிகமான பாதிப்புகள்தான். அதிலிருந்து எளிதில் மீண்டுவந்துவிட்டது. மற்ற வங்கிகளுடன் ஒப்பிடும்போது, ஹெச்.டி.எஃப்.சி பல்வேறு விஷயங்களில் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. சந்தையின் தேவை என்ன என்பதை முன்கூட்டியே ஆராய்ந்து அதைச் செயல்படுத்தும் வங்கியாக இருந்துவருகிறது.

எனவே, முதலீட்டாளர்கள் ஹெச்.டி.எஃப்.சி பங்குகள் மீது பாசிட்டி வான போக்கையே கையாளலாம். தற்போது சந்தையில் உள்ள மோசமான சூழல் விலகியதும் ஏற்றம் காண்பதற்கான அத்தனை சாத்தியங்களும் உள்ளன. இது ஒரு கடந்து செல்லும் மேகம்தான். இதற்காக இந்தப் பங்குகளை நாம் வெறுக்கத் தேவையில்லை” என்றார்.

முதலீட்டாளர்கள் கொஞ்சம் கவனத்துடன் செயல்படுவது நல்லது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism