Published:Updated:

வரலாற்று உச்சத்தில் பங்குச் சந்தை... பின்தங்கும் மிட்கேப், ஸ்மால்கேப்..!

பங்குச் சந்தை
பிரீமியம் ஸ்டோரி
பங்குச் சந்தை

பங்குச் சந்தை

வரலாற்று உச்சத்தில் பங்குச் சந்தை... பின்தங்கும் மிட்கேப், ஸ்மால்கேப்..!

பங்குச் சந்தை

Published:Updated:
பங்குச் சந்தை
பிரீமியம் ஸ்டோரி
பங்குச் சந்தை

இந்தியப் பங்குச் சந்தையில் நிஃப்டி 16000 புள்ளிகளை உடைத்து, கடந்த ஆகஸ்ட் 3-ம் தேதி முதல்முறையாகப் புதிய உச்சத்தை எட்டியது. 2020 மார்ச்சுக்குப் பிறகு, பங்குச் சந்தை இந்த ஏற்றத்தை இப்போது எட்டியிருப்பது அதீத உற்சாகத்தைத் தரக்கூடிய விஷயம்தான். ஆனால், மிட்கேப், ஸ்மால்கேப் குறியீடுகள் அந்த அளவுக்கு ஏற்றம் அடைய வில்லை. இதற்கு என்ன காரணம்?

ரெஜி தாமஸ் 
பங்குச் சந்தை நிபுணர்
ரெஜி தாமஸ் பங்குச் சந்தை நிபுணர்

சார்ட் நகர்வுகளைப் பார்க்கும்போது, நிஃப்டி மிட்கேப் 50 அதன் வரலாற்று உச்சத்தை (7822), நிஃப்டி 50 குறியீடு 16000 புள்ளிகளைக் கடந்த தினத்துக்கு அடுத்த நாள், அதாவது ஆகஸ்ட் 4-ம் தேதி எட்டியது. நிஃப்டி தான் அடைந்த ஏற்றத்தைத் தக்கவைத்துக்கொண்டது. ஆனால், மிட்கேப் குறியீடு 7822-லிருந்து 422 புள்ளிகள் அதாவது, 5.6% இறக்கம் கண்டுள்ளது. அதேபோல ஸ்மால்கேப் குறியீடு ஆகஸ்ட் 4-ம் தேதி அடைந்த வரலாற்று உச்சமான 5376.40 என்ற நிலையிலிருந்து 367 புள்ளிகள் சரிந்து 5009-க்கு இறங்கியது. கிட்டத்தட்ட 6.8% இறக்கம். இது சந்தையின் இயல்பான போக்கா அல்லது இந்த வேறுபாடு பங்கு விற்பனையை நிகழ்த்துவதற்கான அறிகுறியா?

இதுபோன்ற தருணங்களில் நாம் மனதில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் ஒன்று, சந்தைக் குறியீடுகளின் கட்டமைப்பு. நிஃப்டி 50 குறியீட்டில் உள்ள பங்குகளின் சந்தை மதிப்பும், மிட்கேப் / ஸ்மால்கேப் குறியீடுகளில் உள்ள பங்குகளின் சந்தை மதிப்பும் முற்றிலுமாக வெவ்வேறானவை. நிஃப்டி 50 குறியீட்டில் புளூசிப் எனச் சொல்லப் படுகிற லார்ஜ்கேப் பங்குகள் உள்ளன. இவை மிட்கேப், ஸ்மால் கேப் குறியீடுகளுக்கு எந்தப் பங்களிப்பையும் தருவதில்லை. எனவே, இந்தக் குறியீடுகளுக்கு இடையிலான முதலீட்டாளர் களின் ஈடுபாடு, வர்த்தக அளவு ஆகியவை முற்றிலும் வித்தியாசமானவை.

வரலாற்று உச்சத்தில் பங்குச் சந்தை... பின்தங்கும் மிட்கேப், ஸ்மால்கேப்..!

இரண்டாவது, குறியீடுகளின் ஏற்ற இறக்கமானது பெரும்பாலும் ஒரே மாதிரியான போக்கில் காணப்பட்டாலும், லாபத்தை எடுக்கும் போக்கு இவற்றில் உள்ள பங்குகளில் வெவ்வேறு கால கட்டங்களில் நிகழ்கின்றன. கடந்த கால அனுபவங்களும், வரலாற்று ஆதாரங்களும் உணர்த்துவது என்னவெனில் முதலீட்டாளர்கள் மிட்கேப், ஸ்மால்கேப் பிரிவுகளை ஒருவித குழப்பத்துடனேயே அணுகுகிறார்கள். அவற்றில் லாபத்தை எடுக்கும் வாய்ப்பு கிடைத்ததுமே பயன்படுத்தி விடுகிறார்கள். ஆனால், லார்ஜ்கேப் பங்குகளைப் பொறுத்தவரை, முதலீட்டின் அடிப்படை விஷயமான ‘வாங்கி நீண்ட காலத்துக்கு வைத்திருக்கும் போக்கை’க் கடைப்பிடிக்கிறார்கள். எனவே, நிஃப்டி 50 குறியீடு தொடர்ந்து அதன் உச்சங்களில் தன்னைத் தக்கவைத்துக் கொள்ள முடிகிறது.

மிட்கேப் குறியீடு Vs நிஃப்டி குறியீடு
மிட்கேப் குறியீடு Vs நிஃப்டி குறியீடு

மேலே தரப்பட்டுள்ள சார்ட் ஒப்பீடு மிட்கேப் குறியீடு (நீலக்கோடு) மற்றும் நிஃப்டி குறியீட்டில் (கறுப்புக் கோடு) ஏற்பட்டுள்ள ஏற்ற இறக்கங்கள் குறித்த விளக்கத்தைத் தருகிறது. இங்கு கவலைப்படுவதற்கான அறிகுறிகள் காரணங்கள் ஏதும் தெரிகிறதா? பெரும்பாலும் மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் இரண்டும் லார்ஜ்கேப் நகர்வைப் பொறுத்தே நகரும். ஆனால், இவற்றில் குறிப்பிடத்தக்க போக்கு உருவாகும்போது வளர்ச்சியானது சதவிகித அடிப்படையில் லார்ஜ்கேப் பங்குகளைக் காட்டிலும் அதிகமாக இருக்கும். எனவே, இவற்றில் லாபத்தை எடுக்கும் போக்கும் தீவிரமாக இருக்கும். இதுதான் இப்போது நிகழ்ந்திருக்கிறது.

ஒரு பங்கை வாங்க அடிப்படை காரணங்கள் வலுவாக இருக்கும்போது, குறியீடுகளின் ஏற்ற இறக்கத்தின் தாக்கம் அந்தக் குறிப்பிட்ட பங்கில் குறைவாகவே இருக்கும். எனவே, கவலைப்பட வேண்டியதில்லை. குறியீடுகளை அவற்றிலுள்ள பங்குகளே இயக்குகின்றன. குதிரையை வண்டிக்கு முன்னால் கட்டுவதுதான் சரி. இது முதலீட்டுக்கும் பொருந்தும்!

தமிழில்: திவ்யா