Published:Updated:

பங்குச்சந்தையில் வரலாற்றுச்சரிவு: ஏன் சரிந்தது? முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

பங்குச்சந்தை சரிவு
பங்குச்சந்தை சரிவு ( vikatan )

கச்சா எண்ணெய்க்கான தேவைப்பாடு குறைந்திருப்பதைச் சரிசெய்வதற்காக உற்பத்தியைக் குறைக்கும் முயற்சியை சவுதி அரேபியா முன்னெடுத்தது. ஆனால், அதை ரஷ்யா ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்கள் உற்பத்தியை அதிகரிப்போம் என்று அறிவித்தார்கள்.

இந்த வாரம், வர்த்தக வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமையே இந்திய பங்குச்சந்தை மிகப்பெரிய சரிவைக் கண்டு, முதலீட்டாளர்களுக்குப் பெரும் அதிர்ச்சியளித்துள்ளது. திங்களன்று, சென்செக்ஸ் 2,467 புள்ளிகளுக்குமேல் சரிவடைந்து 35,104 புள்ளிகளை எட்டியது. இதன்காரணமாக ஒரே நாளில் சந்தை மூலதனத்தில் சுமார் 7 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டது. ஒரே நாளில் இத்தகைய சரிவென்பது இந்திய பங்குச்சந்தையில் வரலாறு காணாத சரிவாகும்.

அருள்ராஜன்
அருள்ராஜன்

இத்தகைய சரிவுக்கு கொரோனா வைரஸ் மட்டுமேதான் காரணமா, இந்தச் சூழலில் முதலீட்டாளர்கள் எவ்வாறு செயல்பட வேண்டுமென்று பங்குச்சந்தை நிபுணர் தி.ரா.அருள்ராஜனிடம் கேட்டோம்.

"இந்திய பங்குச்சந்தை இறக்கத்தில் இருப்பதற்கு, முதல் காரணம், உலகிலுள்ள அனைத்துப் பங்குச்சந்தைகளும் இறக்கத்தைச் சந்தித்துள்ளன. அதன் தாக்கமாக நம்முடைய சந்தையும் இறங்கியுள்ளது என்பதே பொதுவான காரணம். பங்குச்சந்தை ஏற்ற இறக்கம் என்பது உலகப் பொருளாதாரத்தோடு நேரடியாகத் தொடர்புகொண்ட ஒரு விஷயம். தற்போது உலகப்பொருளாதாரமும் மந்த நிலையில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. குறிப்பாக, அமெரிக்கப் பொருளாதாரம் நெருக்கடி நிலையை நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கிறது.

காரணம் என்னவென்றால், உலகின் பல நாடுகளும் சீனாவோடு வியாபாரத் தொடர்பு கொண்டிருக்கின்றன. மூலப்பொருள்களின் தேவைக்காக, உதிரிபாகங்களின் தேவைக்காக, முழுமையான தயாரிப்புகளுக்காகச் சீனாவைச் சார்ந்திருக்கும் சூழலில் உலக நாடுகள் பலவும் இருக்கின்றன. தற்போது கொரோனா வைரஸின் தீவிரத் தாக்குதலால் சீனாவுடனான தொடர்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டுவிட்டன. இதனால் சீனாவை நம்பியிருக்கும் பெரிய பெரிய நிறுவனங்களின் செயல்பாடுகள் பாதிக்கப்படுகின்றன. உதாரணத்துக்கு, ஆப்பிள் நிறுவனம் எதார்த்தத்தை உணர்ந்து, அடுத்த காலாண்டுக்குத் தனது வருமான இலக்கைக் குறைத்துக்கொண்டிருக்கிறது.

கொரோனா வைரஸ் தாக்கம்
கொரோனா வைரஸ் தாக்கம்

கொரோனா வைரஸ் கட்டுக்குள் வந்துவிடும் என்று எதிர்பார்த்த நிலையில் பாதிப்பு அதிகரித்துக்கொண்டே போகிறது. இதன் பாதிப்பின் வீச்சு பெரிய அளவில் இருக்கிறது. இறப்பு எண்ணிக்கை, பாதிக்கப்பட்ட நாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. சீனாவைத்தாண்டி இத்தாலியிலும் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. இதனால், தற்போது சீனா தாண்டி மற்ற நாடுகளிலும் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்திவருகிறது.

அடுத்ததாக, வியன்னாவில் நடந்த ஒபேக் நாடுகளின் கூட்டத்தில், கச்சா எண்ணெய்க்கான தேவைப்பாடு குறைந்திருப்பதைச் சரிசெய்வதற்காக உற்பத்தியைக் குறைக்கும் முயற்சியை சவுதி அரேபியா முன்னெடுத்தது. ஆனால், அதை ரஷ்யா ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்கள் உற்பத்தியை அதிகரிப்போம் என்று அறிவித்தார்கள். அதன்மூலம் பெட்ரோலியச் சந்தையில் ரஷ்யாவின் பங்களிப்பை உயர்த்த நினைப்பதாகப்படுகிறது. இதனால் ரஷ்யாவைப் போட்டியாளராகப் பார்த்த சவுதி அரேபியா, `நாங்களும் உற்பத்தியைக் கூட்டுவோம்' என்று கூறி, ஏப்ரல் 1 முதல் உற்பத்தியை அதிகரிக்க முடிவெடுத்தது.

இந்தியாவிலேயே இன்னும் இரு வாரங்களில் மருத்துவப் பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும்!

அதோடு நிறுத்தாமல் தங்களது வாடிக்கையாளர்களுக்கு 20% சலுகை விலையில் விற்கப்போவதாகவும் கூறியது. அதையடுத்து, கச்சா எண்ணெய்க்கான சந்தையிலும் அதன் விலை 30 சதவிகிதத்துக்கும் மேல் குறையத்தொடங்கியது. இத்தகைய விலை நிர்ணயிக்கும் வியாபாரப்போட்டி ஆரோக்கியமானதாக இல்லை. இதனால் ஷேல் கேஸ் உற்பத்தியும் பாதிக்கப்படுகிறது. சவுதி அரேபியா கச்சா எண்ணெய் உற்பத்தி செய்வதற்கு ஒரு பேரலுக்கு 9 டாலர் என்ற அளவில் செலவாகிறது. ஆனால், ஷேல் கேஸ் தயாரிப்புக்கு ஒரு பேரலுக்கு 25 டாலர் வரை ஆகிறது. எனவே, இந்த விலைவீழ்ச்சியானது ஷேல் கேஸ் தயாரிப்பு நிறுவனங்களுக்கு கடன் கொடுத்த வங்கிகள் வாராக்கடன் பிரச்னையில் சிக்கக்கூடுமோ என்ற சிக்கலும் எழுகிறது. இது அமெரிக்கப் பொருளாதாரத்தை மேலும் நலிவடையச் செய்யக்கூடும்.

பலத்த அடிவாங்கிய இந்தியப் பங்குச்சந்தை... ஒரே நாளில் ரூ.5 லட்சம் கோடி இழப்பு!

இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்னையைப் பொறுத்தவரை, ஏற்கெனவே பொருளாதார மந்த நிலையில் சிக்கியுள்ளது. இந்நிலையில் எஸ் பேங்க் பிரச்னை எழுந்து, நிதித்துறைமீதே ஒரு கேள்விக்குறியை ஏற்படுத்தியுள்ளது. இதன்காரணமாகவும் பங்குச்சந்தை வீழ்ச்சிக்கு வாய்ப்புள்ளது. அந்நிய முதலீட்டாளர்களைப் பொறுத்தவரை இத்தகைய பங்குச்சந்தைகளின் சரிவான சூழலில் தங்களின் பங்குகளை விற்று, டாலரிலும் தங்கத்திலும் முதலீடு செய்யப்பார்க்கிறார்கள். இதன்காரணமாகப் பங்குச்சந்தைகள் வீழ்ச்சியடைவதும், தங்கம், டாலர் விலைகள் ஏற்றம் பெறுவதும் நடக்கிறது. எனவேதான் அமெரிக்க பெடரல் வங்கி பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக 0.5% வட்டியைக் குறைத்தார்கள். ஆனால், இதனால் மட்டுமே பொருளாதாரத்தை மேம்படுத்திவிட முடியாது. உலகம் முழுவதுமே விநியோகச்சங்கிலி வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால், உற்பத்தி பாதிக்கப்பட்டு விலை கூடும் நிலையில் உள்ளது. இந்தியாவிலேயே இன்னும் இரு வாரங்களில் மருத்துவப் பொருள்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படக்கூடும். ஏனென்றால் பெரும்பாலான மருத்துவ மூலப்பொருள்கள் சீனாவிலிருந்துதான் தருவிக்கப்படுகின்றன. எனவே, கொரோனா வைரஸின் தாக்கம், கச்சா எண்ணெய் விலையில் நடக்கும் போட்டி ஆகியவை முடிவுக்கு வந்தால்தான் பங்குச்சந்தை மீண்டெழும்.

கச்சா எண்ணெய்
கச்சா எண்ணெய்
vikatan

பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும்?

முதலீட்டாளர்களைப் பொறுத்தவரை அவர்களின் முதலீட்டை கடன் பத்திரங்களின்மீது மாற்றி வைத்துக்கொள்ளலாம். பங்குச்சந்தையில் மிகவும் முன்னணி நிறுவனங்களாகத் தேர்வுசெய்து, விலை இறங்கும்போது ஒவ்வொரு இறக்கத்திலும் கொஞ்சம் கொஞ்சமாக முதலீடு செய்து வர வேண்டும்" என்றார்.

எனவே, இத்தகைய சூழலில் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள், நீண்டகால நோக்கில் முன்னணி நிறுவனங்களில் மட்டும் மிகவும் கவனத்துடன் சிறுகச் சிறுக முதலீடு செய்யலாம் அல்லது சற்று பொறுமை காத்திருப்பதே நல்லது.

அடுத்த கட்டுரைக்கு