Published:Updated:

எப்படி மீண்டெழுந்தது பங்குச் சந்தை... இனி மீண்டும் உயருமா, இறங்குமா?

share market
News
share market

அமெரிக்காவில் சந்தை உயர்ந்தது போலவே நம் நாட்டிலும் தொடர்ந்து உயர்ந்து, இப்போது செப்டம்பர் 2-ம் தேதி நிஃப்டி 11,520 புள்ளிகள், சென்செக்ஸ் 39,000 புள்ளிகளாக உயர்ந்துள்ளன!

கடந்த மாதம் 10-ம் தேதி வாக்கில் ஒரு வெபினார். பொருளாதார நிலை எப்படி இருக்கிறது என்பது குறித்துப் பேசினேன்.

மே இரண்டாவது வாரம் என்றால் நிலைமை எப்படியிருந்திருக்கும் என்று தெரியுமல்லவா? நிஃப்டி 9,250-க்கு அருகில். பங்குச் சந்தைகள் இறங்குமுகத்தில் இருந்த நேரம். இந்தியாவில் மட்டுமல்ல, அமெரிக்கா உட்பட பல்வேறு நாட்டு பங்குச் சந்தைகளிலும் அதே நிலைதான்.

அதற்கு ஐந்து மாதங்களுக்கு முன்பு ஜனவரி 2020-ல் நிஃப்டி 12,343. அந்த உச்சத்தில் இருந்து 3,100 புள்ளிகள் விழுந்திருந்தது. ஐந்தே மாதத்தில் சுமார் 25% வீழ்ச்சி கண்டிருந்த நேரம்.

அப்போது பங்குச் சந்தை மன்னர் என்று சொல்லக்கூடிய, பங்குச் சந்தை முதலீட்டால் மிகப்பெரும் பணம் சம்பாதித்து, உலகப் பணக்காரகள் வரிசையில் கடந்த சில பத்தாண்டுகளாக முன்னிலையில் இருக்கக்கூடிய வாரென் பஃபெட் என்ன சொன்னார் என்று பார்த்தால், அப்போதைய நிலைமையின் தீவிரம் இன்னும் கூடுதலாகப் புரியும்.

அவர் தலைவராக இருந்து நிர்வகித்துவரும் பெர்க்‌ஷயர் ஹாத்வே முதலீடு நிறுவனத்தின் வருடாந்தரக் கூட்டம் அது. மே 4-ம் தேதி நடந்தது. நிறுவனத்தின் வரலாற்றில் முதல் முறையாக ஆன்லைனில் நடந்த ஆனுவல் ஜெனரல் பாடி மீட்டிங்.

நான்கு மணி நேரம் நடந்த `பிரசன்டேஷன்’ மற்றும் கேள்வி பதில் நிகழ்ச்சியில் பஃபெட் பேசியதை உலக முதலீட்டாளர்கள் உற்றுக் கவனித்தார்கள்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

அந்தக் கூட்டம் நடந்தபோது, அதுவரை அமெரிக்காவில் 10 லட்சம் பேர் தொற்றுக்கு ஆளாகியிருந்தார்கள். பல நகரங்களிலும் ஊரடங்கு. பல லட்சம் பேர் வேலையிழந்திருந்தார்கள். முதல் காலாண்டில் அமெரிக்க பொருளாதார வளர்ச்சி கணிசமாகக் குறைந்திருந்தது. தவிர, பஃபெட்டின் பெர்க்‌ஷயர் ஹாத்வே நிறுவனம் முதல் காலாண்டில் சுமார் 50 பில்லியன் டாலர் அளவு நஷ்டம் செய்திருந்தது. பெரும்பாலும் பங்குகள் விலை இறக்கத்தால் ஏற்பட்டிருந்த நஷ்டம் அது. கொஞ்சம் கலங்கித்தான் போயிருந்தார் வாரென் பஃபெட்.

மார்ச் மாதத்தில் அவருடைய நிறுவனம் அது முதலீடு செய்திருந்த அத்தனை விமான சேவை நிறுவனப் பங்குகளையும் சுமார் 4 பில்லியன் டாலருக்கு விற்று வெளியேறிவிட்டது என்று சொன்னார். அவர் விற்றபின் அந்நிறுவனப்பங்குகளின் விலை மேலும் கடுமையாக வீழ்ச்சியடைந்தன.

Warren Buffett
Warren Buffett
AP / Nati Harnik

மே 4-ம் தேதி டவ் ஜோன்ஸ் என்ற அமெரிக்க பங்குச் சந்தை குறியீட்டு எண் 23,350-க்கு அருகில் இருந்தது. பிப்ரவரி மாத உச்சமான 29,350-ல் இருந்து 6,000 புள்ளிகள் சரிவு. கிட்டத்தட்ட 20% வீழ்ச்சி.

எப்போதும் நம்பிக்கையோடு பேசும் 90 வயது பஃபெட், அவரது நிறுவனத்தில் 137 பில்லியன் டாலர் அளவுக்குப் பணம் இருக்கிறது என்றும், ஆனால் எதில் முதலீடு செய்வது என்று தெரியவில்லை என்றும் கூறினார். இப்போது பங்கு விலைகள் குறைவாகத் தெரியவில்லை எனும் பொருள்பட ``We did not see anything attractive” என்றார். மேலும், குறையலாம் என்பது அவரது கணிப்பாக இருந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அவர் சொன்னது போலவே நானும் முதலீட்டாளர்களை எச்சரித்தேன். கேள்வி - பதில் பகுதியில் இப்போது வாங்கலாமா என்று கேட்டவர்களுக்கு பதில் சொல்லும்போது, ``ஓரளவு மட்டும் வாங்குங்கள். காரணம், பலராலும் இயக்கப்படும் இந்தச் சந்தையில் எதுவும் நடக்கலாம்’’ என்றும் சொன்னேன். முன் அனுபவம் கற்றுக்கொடுத்த பாடம்!

இவையெல்லாம் நடந்தது மே மாதம். இப்போது செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் டவ் ஜோன்ஸ் குறியீட்டு எண், மீண்டும் முந்தைய உச்சத்துக்கு அருகில். செப்டம்பர் 2-ம் தேதி 29,100.

அதாவது, கொரானா தொற்றால் இழந்தது முழுவதையும் மீட்டாயிற்று.

இந்தியப் பங்குச் சந்தைகளிலும் அதேதான் நடந்திருக்கிறது.

ஜனவரி 15-ம் தேதி நிஃப்டி 12,343 புள்ளிகள் இருந்தது. கொரானா வேகமாகப் பரவுகிறது; மருந்து இல்லை; பொருளாதார நடவடிக்கைகள் முடங்கிவிட்டன என்ற நிலையில் மார்ச் மாதம் 24-ம் தேதி, கிட்டத்தட்ட 4,800 புள்ளிகள் குறைவாக 7,511 புள்ளிகள் என்ற அளவுக்கே போனது.

அது சமயம், பஃபெட் நினைத்தது போலதான் உலகெங்கும் நினைப்பு இருந்தது. ரிலையன்ஸ் 700 இண்டஸ்டிரீஸ் 700 ரூபாய், ஹெச்.டி.எஃப்.சி வங்கி 700 ரூபாய் என்று இவையெல்லாம் விலைகள்தானா என்று வியக்கும் அளவு பங்கு விலைகள் குறைந்தன.

அமெரிக்காவில் சந்தை உயர்ந்தது போலவே நம் நாட்டிலும் தொடர்ந்து உயர்ந்து இப்போது செப்டம்பர் 2-ம் தேதி நிஃப்டி 11,520 புள்ளிகள். சென்செக்ஸ் 39,000 புள்ளிகள்.

பங்குச் சந்தை முன்பு ஏன் அவ்வளவு வீழ்ந்தது, பிரச்னை இன்னும் தீராதபோது, தொற்று எண்ணிக்கை தொடர்ந்து உயர்கிறபோது இப்போது பங்கு விலைகளும் சந்தை குறியீட்டு எண்களும் எவ்வாறு தொடர்ந்து உயர்கின்றன? தொற்றுக்கு முந்தைய நிலைக்கு எப்படி மீண்டு வந்துவிட்டன? இத்தனைக்கும் இந்தியாவின் முதல் காலாண்டு ஜி.டி.பி -23.9% ஆக குறைந்திருக்கிறது! இந்த பாதிப்புகளால் பங்கு விலைகள் குறையாதா?

ஒருபுறம் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு எஸ்.ஐ.பி மூலம் தொடர்ந்து பணம் வருகிறது. மே மாதம் ரூ.5,000 கோடியாக குறைந்தது மீண்டும் ஜூன் முதல் மாதம் ரூ.8,000 கோடி ரூபாயாக சந்தைக்குள் கொண்டுவருகிறது. மற்றொருபுறம், அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் இந்தியப் பங்குச் சந்தைகளில் தொடர்ந்து முதலீடு செய்து வருகிறார்கள்.

பங்குச் சந்தை
பங்குச் சந்தை

மார்ச் மாதம் ரூ.61,900 கோடிக்கு விற்றவர்கள், அதன்பின் தொடர்ந்து வாங்கிக்கொண்டிருக்கிறார்கள்.

மே மாதம் ரூ.14,569 கோடி,

ஜூன் மாதம் ரூ.21,800 கோடி,

ஜூலையில் ரூ.7,563 கோடி,

ஆகஸ்ட்டில் ரூ.38,380 கோடி.

ஆக, பணம் வருகிறது. விலைகள் உயர்கின்றன. இது `லிக்விடிட்டி’யால் மட்டும் நடக்கிறதோ!

எஃப்.ஐ.ஐ.கள் வாங்குவது தொடருமா?

இனிவரும் நாள்களில் கவனித்துப் பார்க்க வேண்டும். மியூச்சுவல் ஃபண்ட், எஃப்.ஐ.ஐ.களின் முதலீடு தொடர்ந்தால், சந்தை இன்னும் உயரலாம். இல்லாவிட்டால், மீண்டுமொரு சிறு இறக்கம் தவிர்க்க முடியாதது!