Published:Updated:

கார்ப்பரேட் வரி குறைப்பு... பங்குச் சந்தைக்கு என்ன லாபம்?

கார்ப்பரேட் வரி குறைப்பு
பிரீமியம் ஸ்டோரி
News
கார்ப்பரேட் வரி குறைப்பு

பங்குச் சந்தை

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரியை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கணிசமாகக் குறைத்திருக்கிறார். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த வரிக் குறைப்பு அறிவிப்புக்கு, கார்ப்பரேட் நிறுவனங்களுடன் பங்குச் சந்தையும் இணைந்து அமோக வரவேற்பைக் கொடுத்தது. இந்த அறிவிப்பால் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் இந்தியப் பொருளாதாரத்தில் எதிர்பார்க்கக் கூடிய சாதக மற்றும் பாதகமான அம்சங்கள் குறித்து ஆராய்வோம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

அறிவிப்புக்கான தேவை

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரி விகிதங்களைக் குறைக்க வேண்டுமென்ற எண்ணம் ஏற்படக் காரணம், கடந்த 2015-ல் அன்றைய நிதி அமைச்சர் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரி விகிதத்தை இன்னும் நான்கு ஆண்டுகளில் படிப்படியாகக் குறைத்து, 25 சதவிகிதமாக மாற்றுவதாக உறுதியளித்திருந்ததே. இந்தக் காலகட்டத்தில் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள விலக்குகள் படிப்படியாக அகற்றப்படும் என்றும் கூறியிருந்தார்.

ரெஜி தாமஸ், பங்குச் சந்தை நிபுணர்
ரெஜி தாமஸ், பங்குச் சந்தை நிபுணர்

டேர்ன் ஓவர் ரூ.400 கோடிக்குக்கீழ் உள்ள நிறுவனங்களுக்குக் கடந்த சில ஆண்டுகளாகக் கொடுக்கப்பட்டுவந்த வரிச் சலுகைகள் கொஞ்சம் கொஞ்சமாக விலக்கப்பட்டு, வரி விகிதம் குறைக்கப்பட்டு வந்தது. செப்டம்பர் 20-ல் நிதி அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கார்ப்பரேட் வரி விகிதம் 30 சதவிகிதத்திலிருந்து 22 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதுவரை எந்தவொரு வரிச் சலுகையையும் பெறாத நிறுவனங் களுக்கான வரி விகிதம் 25.17 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டு, 2019-2020 நடப்பு நிதியாண்டிலேயே அமலுக்கு வருமென்று கூறப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மத்திய அரசின் இந்த நடவடிக்கையால், கார்ப்பரேட் நிறுவனங்களின் பணப்புழக்கத்தை அதிகரிக்க உதவும்; உற்பத்தித் துறையை மேம்படுத்தும்; வெளிநாட்டு முதலீட்டாளர்களின் முதலீடுகள் பங்குச் சந்தைக்குள் அதிகரிப்பதால், ‘மேக் இன் இந்தியா’ திட்டமும் மேம்படும் எனத் தெரிகிறது (பார்க்க, எதிர்பக்கமுள்ள அட்டவணை).

இந்த வரிக்குறைப்பால் கிடைக்கும் லாபத்தை நிறுவனங்கள் எப்படிப் பயன்படுத்தப்போகின்றன என்பதைப் பொறுத்தே ஒவ்வொரு துறையிலும் இதன் விளைவு காணப்படும். முதலீட்டை அதிகரிப்பது, தேவையை அதிகரிப்பதற்காக விலையைக் குறைப்பது, பங்குதாரர்களுக்கு அதிக டிவிடெண்ட் வழங்குவது அல்லது கடன்களை அடைப்பது எனப் பல வழிகளில் இந்தத் தொகையைப் பயன்படுத்த முடியும்.

பங்குச் சந்தைக்கு லாபமா?

கார்ப்பரேட் வரி விகிதம் குறைக்கப்பட்டிருப்பது நிறுவனங்களின் வருவாயை அதிகரிக்க உதவும். மற்ற விஷயங்கள் அனைத்தும் சமமாக இருக்கையில், கார்ப்பரேட் வரி 30 சதவிகிதத்திலிருந்து 22 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டிருப்பதிலிருந்து, அந்த நிறுவனங்கள் முழுமையான வரியைச் செலுத்தியிருந்தால், அவர்களின் வருமானம் 11% அதிகரித்திருக்கும். எனவே, அதிகமாக வரி செலுத்தும் நிறுவனங்கள், இந்த வரிக் குறைப்பால் முதலில் பயனடையும். இந்த நிறுவனங்களில் முதலீடு செய்ய பரிசீலிக்கலாம். (பார்க்க, பக்கம் 24-ல் உள்ள அட்டவணை). இனி இந்த வரிக் குறைப்பால் எந்தெந்தத் துறையில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படலாம் என்று பார்ப்போம்.

கார்ப்பரேட் வரி குறைப்பு... பங்குச் சந்தைக்கு என்ன லாபம்?

நுகர்வோர் பயன்பாட்டுப்பொருள் நிறுவனங்கள் (FMCG Companies)

நுகர்வோர் பயன்பாட்டுப்பொருள் தயாரிப்பு நிறுவனங்களைப் பொறுத்தவரை, வரிக் குறைப்பு காரணமாகக் கூடுதல் நிதி கைவச மாகக்கூடும். அந்த நிதியை, பண்டிகைக் காலச் சிறப்பு விற்பனையின் போது தள்ளுபடிகளை அறிவிப்பதற்குப் பயன்படுத்தினால், விற்பனை அதிகரிக்கக்கூடும். நிஃப்டி சந்தையில் ஐ.டிசி, நெஸ்லே, பிரிட்டானியா மற்றும் ஹிந்துஸ்தான் யுனிலீவர் உள்ளிட்ட நிறுவனங்களின் வரி விகிதம் 29-35 சதவிகிதத்திலிருந்து 25 சதவிகிதமாகக் குறைக்கப்படுகிறது. எனவே, 2018-19 நிதியாண்டு வருமானத்தின் அடிப்படையில் பார்த்தால், ஒட்டுமொத்தமாக ரூ.2,000 கோடி அளவுக்கு வருவாயைத் தக்கவைத்துக்கொள்ள முடியும். ஆக, இந்த நிறுவனங்கள் 9% நிகர வருவாயை ஈட்டக்கூடும்.

உற்பத்தித்துறை

பங்குச் சந்தையில் உற்பத்தித்துறை சார்ந்த நிறுவனங்களின் பங்களிப்பு 18 சதவிகிதமாக இருப்பதை அதிகரிப்பதன்மூலம் கூடுதல் வேலைவாய்ப்பை உருவாக்குவதில் அரசு கவனமாக உள்ளது. ஆனால், பொருளாதார மந்தநிலையால் வாடிக்கையாளர்களின் வாங்கும் சக்தி குறைந்ததால், கடந்த ஆண்டில் உற்பத்தித்துறையின் செயல்பாடுகள் மந்தமாகவே இருந்தன. உற்பத்தித்துறையின் வளர்ச்சி விகிதம், கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் 12 சதவிகிதமாக இருந்து, நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் வெறும் 1 சதவிகிதமாக உள்ளது. இந்த வரிக் குறைப்பின் காரணமாக, இந்த நிறுவனங்களுக்கான தேவை அதிகரித்து, பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சிப் பாதைக்குத் திருப்பக்கூடும்.

கார்ப்பரேட் வரி குறைப்பு... பங்குச் சந்தைக்கு என்ன லாபம்?

கெமிக்கல் & பார்மா துறை

வரிக் குறைப்பின் காரணமாக இந்தத் துறையில் முதலீடுகள் அதிகரிக்கக்கூடும். அதன்மூலம், இறக்குமதி செய்யப்படும் மருந்துக்கு ஈடான மருந்துகளை இந்த நிறுவனங்களே தயாரிக்க முடியும். இதனால் அவர்களின் உற்பத்தித்திறன் கூடும்.

ஆட்டோமொபைல் துறை

நம் நாட்டின் ஜி.டி.பி-யில் 7.5% பங்களிப்பை இந்திய ஆட்டோமொபைல் துறை செய்கிறது. மேலும், உற்பத்தித்துறையின் ஜி.டி.பி-யில் 49% பங்களிப்பைக் கொடுக்கிறது. இந்தத் துறை சந்திக்கும் பல்வேறு பிரச்னைகளால் கடந்த ஓராண்டாகவே மிகவும் மந்தமாகச் செயல் படுகிறது. சிறு கடன் கிடைக்காதது, பணப்புழக்கத் தட்டுப்பாடு மற்றும் மந்தமான பொருளாதாரம் போன்றவையே இந்தத் துறையின் தேவையைப் பாதிக்கிறது. ஆனால், மிகக் கடுமையான சாலைப் பாதுகாப்பு விதிமுறைகள் மற்றும் கட்டாய நீண்ட கால இன்ஷூரன்ஸ் திட்டங்கள் போன்றவற்றைக் கொண்டுவந்திருப்பதே இந்தத் துறையின் தேவை குறைய முக்கியக் காரணம்.

இந்த வரிக் குறைப்பின் காரணமாக, ஜி.எஸ்.டி வரியில் ரூ.40,000 கோடி அளவுக்குப் பற்றாக்குறை ஏற்படும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில், ரூ.1.45 லட்சம் கோடி அளவுக்கு அரசின் வருமானம் பாதிக்கக்கூடும்!

ஆட்டோமொபைல் துறையின் லாபம் உயர வரிக் குறைப்பு உதவக்கூடும். எனினும், வரிக் குறைப்பின் பலனை நிறுவனங்களின் வளர்ச்சிக் காகவும் எலெக்ட்ரிக்கல் வாகனங்களைத் தயாரிப்பதற்கான ஆய்வுக்காகவும் நிறுவனங்களின் கடன்தொகையைக் குறைப்பதற்காகவும் பயன்படுத்தக்கூடும். இதன்மூலம் நிறுவனங்களின் பணப்புழக்கத்தை அதிகரித்து, கூடுதல் முதலீட்டைத் தரக்கூடும்.

கார்ப்பரேட் வரி குறைப்பு... பங்குச் சந்தைக்கு என்ன லாபம்?

என்டர்டெய்ன்மென்ட் & மீடியா துறை

மீடியா மற்றும் என்டர்டெய்ன்மென்ட் துறையும் இந்த வரிக் குறைப்பால் பலனடையக் கூடும். பத்திரிகை நிறுவனங்களுக்கு நடப்பு நிதியாண்டிலுள்ள வரி விகிதப்படி, சலுகைகள், வரி விலக்குகள் தவிர்த்த வரிக்கு முந்தைய லாபத்துக்கான வரி 28-36 சதவிகிதமாக இருக்கும். இதேபோல, ஜீ என்டர்டெய்ன்மென்ட், சன் டிவி நிறுவனங்களுக்குத் தற்போதுள்ள வரி விகிதப்படி முறையே 37%, 33% என இருக்கும். புதிய வரி விகிதம் நடைமுறைக்கு வந்தால் வரி விகிதம் 25.17 சதவிகிதமாக இருக்கும். எனவே, 11-18% வரை அவர்களின் வரிக்குப் பிந்தைய லாபத்தை அதிகரிக்க முடியும்.

மிகுந்த போட்டியுள்ள இந்தத் துறை சார்ந்த நிறுவனங்களுக்கு இந்த வரிக் குறைப்பு மிகுந்த லாபத்தைத் தரக்கூடும். வரிக் குறைப்பின் பலனை வாடிக்கையாளர்களுக்கான சலுகையாகவோ, சேவையின் தரத்தை உயர்த்துவதற்குச் செலவிடவோ செய்யக்கூடும். அதன் காரணமாக வருவாய் அதிகரிக்கும்.

பி.வி.ஆர், ஐநாக்ஸ் போன்ற பொழுதுபோக்கு மல்டிஃப்ளெக்ஸ் நிறுவனங்களும் 25.17% என்ற வரிக் குறைப்பின் பலனை அனுபவிக்கக்கூடும். தற்போது, இந்த நிறுவனங்களுக்கான வரிவிகிதம் 30% மற்றும் 33% ஆக உள்ளது. வரிக் குறைப்பு, ‘மேட்’ வரி விலக்கம் போன்ற சலுகைகளால் வரிக்கான செலவு சேமிப்பாகக்கூடும். இந்தத் துறைகள் தவிர, ஹோட்டல்கள், லாஜிஸ்டிக்ஸ் மற்றும் மதுபான விற்பனை, மெட்டல் மற்றும் சுரங்கத்துறை, சிமென்ட், நுகர்வோர் பொருள்கள், மிட்கேப் நிறுவனங்கள் மற்றும் பெரிய தனியார் வங்கிகள் போன்றவையும் இந்த வரிக் குறைப்பால் பலனடையக்கூடும்.

கார்ப்பரேட் வரி குறைப்பு... பங்குச் சந்தைக்கு என்ன லாபம்?

நிதி அமைச்சரின் நடவடிக்கை பங்குச் சந்தை முதலீட்டாளர்களின் சென்டிமென்டை மீட்டெடுத்துள்ளது. இண்டெக்ஸ் புள்ளிகள் குறுகிய மற்றும் நடுத்தர கால இலக்காக (ஜூன் 2020) நிஃப்டி 12300 - 12440 என்ற வரம்பை எட்டக் கூடும் என்று அனைவரும் எதிர்பார்க்கிறார்கள்.

வரிக் குறைப்பின் மறுபக்கம்

இந்த வரிக் குறைப்பின் காரணமாக, ஜி.எஸ்.டி வரியில் ரூ.40,000 கோடி அளவுக்குப் பற்றாக்குறை ஏற்படும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில், ரூ.1.45 லட்சம் கோடி அளவுக்கு அரசின் வருமானம் பாதிக்கக்கூடும். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிதிப் பற்றாக்குறை 4 சதவிகிதமாக இருக்கும்.

பணவீக்க விகிதம் சரிசெய்யப்படாத நிலையில், ஜி.டி.பி வளர்ச்சி 12 சதவிகிதமாக இருக்குமென்று அனுமானிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது அந்த வளர்ச்சி கடினமென்று தெரிகிறது. ஜி.டி.பி விகிதம், பட்ஜெட்டில் எதிர்பார்த்தபடி 12 சதவிகிதமாக வளராவிட்டால், நிதிப் பற்றாக்குறை 4 சதவிகிதத்தைவிட அதிகரிக்கக்கூடும். பொதுத் துறை நிறுவனங்களே ஒன்று இன்னொன்றைக் கையகப்படுத்துவதென்பது கடன் அளவை அதிகரிக்கக்கூடும்.

பொருளாதாரத்தை மீட்டெடுக்க உதவுமா?

ஆக, இந்த வரிக் குறைப்பு நடவடிக்கை, பொருளாதாரத்தை மீட்டெடுக்க உதவுமா என்பது முக்கியமான கேள்வி. உலகளாவிய அளவில் பார்த்தால், பல நாடுகளின் பொருளாதார வளர்ச்சி மந்தமாக உள்ளது. இந்தியப் பொருளாதார மந்த நிலையைச் சரிசெய்யும்விதமாக வரிக் குறைப்பு நடவடிக்கையை நிதி அமைச்சர் எடுத்திருந்தாலும்கூட, குறிப்பிட்ட அளவீடுகளைப் பொறுத்துதான் இது பலனளிக்கக்கூடும். அப்படிப் பலனளிக்கத் தேவையான அளவீடுகள் என்ன என்று பார்ப்போம்:

கார்ப்பரேட் வரி குறைப்பு... பங்குச் சந்தைக்கு என்ன லாபம்?

1. வரிக் குறைப்பால் கிடைக்கும் பலன்களை விலைக்குறைப்பு மற்றும் தள்ளுபடிகளின் மூலம் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்குத் தருகிறார்களா? 2. வரிக் குறைப்பால் கிடைக்கும் பலன்களை நிறுவனத்தின் கடன்களைக் குறைக்கப் பயன்படுத்துவார்களா? 3. வரிக் குறைப்பால் கிடைக்கும் பலன்களை மூலதனத்தை அதிகரிக்கப் பயன்படுத்தி, அதனால் வேலைவாய்ப்பை உருவாக்கி, தேவையைப் பெருக்குகிறார்களா? 4. வரிக் குறைப்பால் கிடைக்கும் பலன்களில் ஒரு பகுதியை முதலீட்டாளர்களுக்கு டிவிடெண்டுகளாக அளிக்கிறார்களா?

நிறுவனங்களுக்குக் கிடைக்கும் இந்த வரிக் குறைப்பு சலுகையை நிறுவனங்கள் எப்படிப் பயன்படுத்தும் என்பதில்தான் விஷயம் இருக்கிறது. தேவைத் தொடர்பான மந்தநிலையும் வளர்ச்சி குறைந்திருப்பதும் ஒரே நாளில் மாறிவிடாது. நுகர்வோரிடம் பணப்புழக்கம் அதிகரித்து, நுகர்வும் அதிகரித்தால் மட்டுமே இது சாத்தியமாகும். ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தைக் குறைந்திருப்பதும் கார்ப்பரேட் களுக்கான வரிக் குறைப்பும் பணப்புழக்கத்தை அதிகரிக்கச் செய்யும். சமீபத்திய பணப்புழக்க நெருக்கடியைக் கருத்தில்கொண்டு கார்ப்பரேட் நிறுவனங்கள், வேறெதிலும் கவனம் செலுத்தாமல், முதலில் கடன்களை அடைக்கும் முயற்சியில் இறங்க வேண்டும். இதற்கான ஆரோக்கியமான முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. இது எதிர்பார்த்த பலன்களைக் கொடுக்கும் என நம்புவோம்!