Published:Updated:

கொரோனா காலத்திலும் பங்குச் சந்தை ஏற்றம் காண்பது எப்படி?

பங்குச் சந்தை - கொரோனா
பங்குச் சந்தை - கொரோனா

கோவிட்டால் பாதிப்படைந்த 2020 பிப்ரவரி 24-லிருந்து மார்ச் 24 வரை இருந்த 22 டிரேடிங் தினங்களில் 18 முறை அமெரிக்க பங்குச் சந்தை ஏறியதாக செய்தி நிறுவனங்கள் கூறுகின்றன. 38% வரை இறங்கிய இந்தியச் சந்தையும், ஜூலை 2-க்குள் 62% அளவு ஏறிவிட்டது.

கோவிட் 19 இந்த உலகத்துக்கு புதிய சவால் என்றாலும், இத்தகைய சவால்கள் மனித குலத்துக்குப் புதியதல்ல. கடந்த நூற்றாண்டில்கூட ஸார்ஸ், எபோலா, பன்றிக் காய்ச்சல், பறவைக் காய்ச்சல் என்று அவ்வப்போது வைரஸ் தாக்குதல்கள் நடந்தே இருக்கின்றன. அப்போதெல்ல்லாம் ஆட்டம் காணாத பங்குச் சந்தை கொரோனா காலத்தில் பெரிதாக ஏற்ற, இறக்கம் கண்டது ஆச்சர்யம்தான்.

கோவிட்டால் பாதிப்படைந்த 2020 பிப்ரவரி 24-லிருந்து மார்ச் 24 வரை இருந்த 22 டிரேடிங் தினங்களில் 18 முறை அமெரிக்க பங்குச் சந்தை ஏறியதாக செய்தி நிறுவனங்கள் கூறுகின்றன. 38% வரை இறங்கிய இந்தியச் சந்தையும், ஜூலை 2-க்குள் 62% அளவு ஏறிவிட்டது.

கொரோனா: `இந்தியா தைரியமாக நடவடிக்கைகளை எடுத்தது!’ - WHO பாராட்டு

உயர்ந்தது டீமேட் அக்கவுன்ட் கணக்கு!

பொதுவாக, பங்குச் சந்தை உச்சத்தில் இருக்கும்போதுதான் சிறு முதலீட்டாளர்கள் அதில் இறங்குவது வழக்கம். ஆனால், இறக்கம் மிகுந்த 2020 மார்ச், ஏப்ரல் மாதங்களில் 1,20,000 புதிய டீமேட் அக்கவுன்டுகள் திறக்கப்பட்டதாக சென்ட்ரல் டிபாஸிட்டரி (CDSL) கூறுகிறது.

share market
share market

தங்கள் கம்பெனியில் புதிய அக்கவுன்டுகள் திறப்பு ஏறக்குறைய இரண்டு மடங்கு உயர்ந்திருப்பதாக ஜெரோதா கம்பெனியின் சி.இ.ஓ. நிதின் காமத் கூறுகிறார். பங்குச் சந்தை உளவியலில் ஏற்பட்டு இருக்கும் இந்த மாற்றம் புதியது. இந்த கிடுகிடு இறக்கதந்துக்கும், தடதட ஏற்றத்துக்கும் பின்னால் உள்ள காரணங்களைப் பார்க்கலாம்.

இறக்கத்தின் காரணங்கள்:

1. கோவிட்டின் வீச்சு: சர்வதேசத்திலும் பரவிய இந்த நோய்க்கு இன்று வரை தீர்வு கிடைக்கவில்லை. உலகம் முழுக்க நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்கு நடவடிக்கைகளால் வீட்டுக்குள் மக்கள் முடங்கியதால், செலவழிப்பது குறைந்தது; இதனால் நிறுவனங்களின் வருமானமும் குறைந்தது. இதனால் பலரும் பங்குச் சந்தையிலிருந்து சற்று ஒதுங்கியிருக்க நினைத்ததன் விளைவு, சந்தைப் புள்ளிகள் சரிந்தன.

பங்குச் சந்தை
பங்குச் சந்தை

2. செய்திகளின் தாக்கம்: டிவியும், இன்டர்நெட்டும் வந்தபின் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தும்மினால், இந்தியப் பங்குச் சந்தை நடுங்குகிறது என்பார்கள். உலகச் செய்திகள் நொடி நேரத்தில் நம்மை வந்து அடைகிறது. அதில் 90% கோவிட் செய்திகளே என்பதால், அவற்றின் நெகட்டிவ் தாக்கமும் உடனுக்குடன் நடைபெற்று சந்தை சரிந்தது.

3. உலகமயமாக்கல்: அதிவேக ஏரோப்ளேன்களின் வரவுக்குப் பின் நாடுகளுக்கிடையே இருந்த பயண நேரம் மட்டுமன்றி செலவும் கணிசமாகக் குறைந்துவிட்டது. இதனால், சீனாவின் மூலப்பொருள் + இந்தியரின் உழைப்பு = அமெரிக்காவின் நுகர்வு என்பது போல நாடுகளின் பொருளாதாரமும் ஒன்றுடன் ஒன்று பிண்ணிப் பிணைந்துவிட்டன. இதனால் சீனாவில் ஒரு தொற்று நோயாக ஆரம்பித்த கோவிட்டின் சர்வதேசப் பரவல் எளிதானது மட்டுமின்றி, உலகின் ஒன்றிணைந்த பொருளாதாரத்தையும் தாக்கவே உலகச் சந்தைகள் விழுந்தன.

ஏற்றத்தின் காரணங்கள்:

சந்தை இறங்கியதன் காரணங்கள் புரிகிறது. ஆனால், கோவிட்டின் கோர தாண்டவம் இன்னும் முடியாத நிலையிலும் சந்தை ஏறுவது ஏன்?

1. சந்தை எப்போதும் வரப்போகும் நிகழ்வுகளை முன்கூட்டியே பிரதிபலிப்பதால், கோவிட்டின் செயலிழப்பையும் முன்மொழிகிறது.

2. `ஒர்க் ஃப்ரம் ஹோம்’ கலாசாரம் மக்களுக்கு அதிக அளவு நேரத்தை தந்திருப்பதால், இதுவரை பங்குச் சந்தையில் இறங்க ஆவல் இருந்தும் நேரமில்லாதிருந்தவர்களும் இப்போது பங்கேற்கிறார்கள்.

share market
share market

3. 'சோஷியல் அனிமல்ஸ்' என்று வர்ணிக்கப்படும் மனிதர்களால் வெகு நாள்கள் தனித்திருக்க இயலாது. ஒர்க் ஃப்ரம் ஹோம், க்வாரன்டீன், சோஷியல் டிஸ்டன்சிங் என்று பல்வேறு காரணங்களால் இன்று ஒவ்வொருவரும் தனித்திருக்க வேண்டிய கட்டாயம். கிரிக்கெட், டென்னிஸ் போன்ற விளையாட்டுக்கள், சினிமா, நாடகங்கள், இன்னிசை கச்சேரிகள் இவை எல்லாம் இல்லாத சூழ்நிலை. ஆகவே, மனிதன் தனக்குத் தேவையான குழுச் செயல்பாடுகளை (group activity) பங்குச்சந்தையில் பெற விழைகிறான் என்று டான் ஈகன் என்னும் 'பிஹேவியரல் சயின்ஸ்' நிபுணர் கூறுகிறார்.

4. சந்தை இறங்கியதால் ஏற்கெனவே பங்குச் சந்தையில் ஈடுபட்டிருந்தவர்கள் தாங்கள் வைத்திருக்கும் பங்குகள் விலை குறைந்ததும் ஆவரேஜ் செய்ய வாங்க வருகிறார்கள். புதிதாக இறங்குபவர்கள் விலை குறைந்திருக்கும் இந்தச் சமயம் பங்குகள் வாங்கலாம் என்று எண்ணி நுழைகிறார்கள்.

உயரும் ஆயுள் காப்பீடுகளின் ப்ரீமியம் தொகை... பின்னணி என்ன?

முதலீட்டாளர்களின் மனமுதிர்ச்சி...

இந்தக் காரணங்களால் பங்குச் சந்தை ஏறி வருகிறது. இன்னொரு கோவிட் அலை வந்து தாக்கலாம்; பொருளாதாரச் சரிவு ஏற்படுத்தும் சேதமும், கம்பெனிகளின் லாபக் குறைவும் முழுமையாகத் தெரியவந்து பங்குச் சந்தை மீண்டும் இறங்கலாம்; லாக்டௌன் முடிந்தபின் பலரும் தங்கள் வேலை, பயணம் என்று பழைய வாழ்க்கைமுறையைத் தொடரலாம். ஆனாலும் பங்குச் சந்தை இறங்கும்போது கூட அதில் உற்சாகமாக ஈடுபடும் அளவு நம் முதலீட்டாளர்களின் மனநிலையில் ஏற்பட்டிருக்கும் திருப்பம், அவர்களின் மனமுதிர்ச்சியைக் காட்டுகிறது என்பதை மறுக்க இயலாது.

அடுத்த கட்டுரைக்கு