Published:Updated:

கொரோனாவால் வீழ்ச்சியில் உள்ள பங்குச்சந்தையில் எப்படிச் செயல்படுவது? முதலீட்டாளர்களுக்கு டிப்ஸ்!

பங்குச்சந்தை
பங்குச்சந்தை ( vikatan )

இன்றைய சூழலில் சேமிப்பு அனைத்தையும் பங்குச்சந்தையில் முதலீடு செய்வது சரியானதாக இருக்காது. கொரோனா வைரஸ் பரவலால் நிறைய நிறுவனங்களின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. சம்பளம் முழுமையாகக் கிடைக்காமல்போக வாய்ப்புள்ளது.

இந்தியப் பங்குச்சந்தை கடந்த ஒரு மாத காலமாகவே தொடர்ந்து இறக்கம் கண்டே வருகிறது. விதிவிலக்காக சில நாள்கள் மீண்டுவருவதும் நடக்கிறது. ஆனபோதும் சரிவிலிருந்து மீளும் விதமாக அந்த ஏற்றம் இல்லை. ஒரே நாளில் சந்தை மூலதனத்தில் லட்சக்கணக்கான கோடி ரூபாய்க்கும்மேல் இழப்பு ஏற்படுவதும் சகஜமாக உள்ளது.

இறக்கத்தில் பங்குச்சந்தை
இறக்கத்தில் பங்குச்சந்தை
vikatan

எனவே, இந்தியப்பங்குச்சந்தை முதலீட்டாளர்களிடம் இருவேறான மனநிலை நிலவுகிறது. ஒருபக்கம் சந்தையின் தொடர்சரிவினால் முதலீட்டு வருமானம் வெகுவாகக் குறைந்திருப்பது கண்டு பதற்றத்தோடு இருப்பவர்கள். இன்னொரு பக்கமோ, இந்த இறக்கத்தைப்பயன்படுத்தி பெருமளவு முதலீடு செய்பவர்களெனக் காண முடிகிறது. இந்தச் சூழலில் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதற்கான சில டிப்ஸ்களை பங்குச்சந்தை நிபுணர் வ.நாகப்பனிடம் கேட்டோம்.

# இந்தப் பிரச்னை பொருளாதாரரீதியிலான பிரச்னை கிடையாது. பொதுவாக பொருளாதார வீழ்ச்சியால்தான் பங்குச்சந்தை இறக்கம் காணும். ஆனால், தற்போது கொரோனா வைரஸ் என்னும் மருத்துவக்காரணத்தால் உலகளாவிய விநியோகச்சங்கிலி தொடர்பு அறுந்து பொருளாதார வீழ்ச்சியை உலகின் பல்வேறு நாடுகள் எதிர்கொண்டுள்ளன. அதன் தொடர்ச்சியாகவே இந்தியச் சந்தையிலும் எதிரொலிக்கிறது.

# 1957ம் ஆண்டில் இன்ஃபுளுவென்சா என்ற தொற்றுநோய் பரவி உலகெங்கும் மிக அதிக எண்ணிக்கையில் உயிரிழப்பு ஏற்பட்டது. அதுபோன்றதொரு சூழல்தான் தற்போது நிலவுகிறது. பங்குச்சந்தையில் மருத்துவரீதியிலான தாக்கத்தை, இன்றைய சந்ததியினர் தற்போதுதான் முதன்முறையாகப் பார்க்கிறார்கள்.

வ.நாகப்பன்
வ.நாகப்பன்
vikatan

# தற்போது வீழ்ச்சிகண்டுள்ள பங்குச்சந்தை எப்படியானாலும் சுழற்சிமுறையில் மேலே வந்துவிடும். அதுதான் இந்தியப்பங்குச்சந்தையின் இயல்பு. ஆனால், தற்போதைய சூழல் சற்று வித்தியாசமானது.

# இன்றைய சூழலில் சேமிப்பு அனைத்தையும் பங்குச்சந்தையில் முதலீடு செய்வது சரியானதாக இருக்காது. கொரோனா வைரஸ் பரவலால் நிறைய நிறுவனங்களின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. சம்பளம் முழுமையாகக் கிடைக்காமல்போக வாய்ப்புள்ளது.

# சில நிறுவனங்கள் தற்காலிகமாக மூடப்படவும் வாய்ப்புள்ளது. எனவே, தற்காலிக அல்லது நிரந்தர வேலையிழப்புக்கான வாய்ப்புகள் இருக்கின்றன. சம்பளத்தைக் குறைக்கும் நடவடிக்கையும் எடுக்கப்படுகின்றன. திடீரென வேலையிழப்பு ஏற்பட்டால் அதை எதிர்கொள்வதற்கு கைவசம் சேமிப்பு இருப்பது அவசியம். எனவே உங்களுடைய தேவைக்குப்போக மிச்சம் இருப்பதை முதலீடு செய்வது நல்லது.

பங்குச்சந்தையைவிட சற்று பாதுகாப்பான முதலீடாக மியூச்சுவல் ஃபண்ட் பார்க்கப்படுகிறது. ஆனால், தற்போது மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டிலும்கூட வருமான இழப்பு ஏற்படுகிறது. எனவே மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்களின் மனநிலையும் குழப்பமாகவே இருக்கிறது. எனவே, மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்கள் எப்படி நடந்துகொள்ளவேண்டுமென்று மியூச்சுவல் ஃபண்ட் ஆலோசகர் சொக்கலிங்கம் பழனியப்பனிடம் சில டிப்ஸ் கேட்டோம்.

சொக்கலிங்கம் பழனியப்பன்
சொக்கலிங்கம் பழனியப்பன்
vikatan

# எஸ்.ஐ.பி முறையில் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்பவர்கள், முதலீட்டை அப்படியே தொடர வேண்டும். சந்தை இறக்கத்தில் இருப்பதால் யூனிட் விலை குறைவாக இருக்கும். எனவே, கூடுதல் பலன் கிடைக்குமென்பதால் எஸ்.ஐ.பியைத் தொடர்வது அவசியம்.

# மியூச்சுவல் ஃபண்டில் மொத்த முதலீடு செய்பவர்கள், பங்குச்சந்தை சரியச்சரிய கூடுதல் தொகையை முதலீடு செய்துவந்தால் நல்ல பலனளிக்கும்.

# பங்குச்சந்தை சரிவுக்குப்பயந்து பதற்றத்தில் முதலீட்டை விலக்க வேண்டாம். அத்தகைய முடிவை ஒத்திப்போடுங்கள்.

# இன்னும் ஒரு வருடம் அல்லது ஒன்றரை வருடங்களில் பங்குச்சந்தை மீண்டெழும். அப்போது நல்ல வருமானத்தைப் பெறலாம்.

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு
vikatan

# முதலீட்டுக்கான அசெட் அலோகேசனில் கவனம் வைக்கவும். பங்குச்சந்தை இறக்கத்தில் இருப்பதால் பங்கு சார்ந்த ஃபண்டுகளில் மட்டுமல்லாது கடன் சார்ந்த ஃபண்டுகளிலும் 30% அளவுக்கு முதலீடு செய்வது நல்லது. பங்குச்சந்தை மீண்டெழும்போது கடன்சார்ந்த ஃபண்டுகளில் செய்யப்பட்ட முதலீட்டைக் குறைத்துக்கொள்ளலாம்.

# நீண்டகால இலக்கில் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்பவர்கள், முதலீட்டைப்பற்றிக் கவலைப்படவே வேண்டாம்.

அடுத்த கட்டுரைக்கு