Published:Updated:

`பச்சக்கிளி' காமெடியும் NSE பங்குச்சந்தை கதையும்!

National Stock Exchange

பங்குச்சந்தையில் அனுபவமே இன்றி NSE-க்குள் ஆனந்த் நுழைந்தது முதல் அடுத்தடுத்து அங்கு உச்சிக்கு சென்றது வரை எதுவுமே தற்செயலாகவோ, தகுதியின் அடிப்படையிலோ நடந்ததல்ல. மாறாக, அந்த மர்ம சாமியாரின் வேலைகளால் நடந்தது.

`பச்சக்கிளி' காமெடியும் NSE பங்குச்சந்தை கதையும்!

பங்குச்சந்தையில் அனுபவமே இன்றி NSE-க்குள் ஆனந்த் நுழைந்தது முதல் அடுத்தடுத்து அங்கு உச்சிக்கு சென்றது வரை எதுவுமே தற்செயலாகவோ, தகுதியின் அடிப்படையிலோ நடந்ததல்ல. மாறாக, அந்த மர்ம சாமியாரின் வேலைகளால் நடந்தது.

Published:Updated:
National Stock Exchange
Note: The Subject Line நியூஸ்லெட்டரின் Explainer கட்டுரை இது. தமிழின் முதல் Daily Curated நியூஸ்லெட்டரின், மிகச்சிறந்த செய்தி அனுபவத்தைப் பெற கீழே உங்கள் மெயில் ஐடி-யைக் கொடுத்து சப்ஸ்கிரைப் செய்யுங்கள். தினமும் காலை 7 மணிக்கு உங்கள் இன்பாக்ஸிற்கே வந்துசேரும்!

வடிவேலுவின் `பச்சக்கிளி’ காமெடியையே விஞ்சும் ஒரு சம்பவம் மும்பையில் நடந்திருக்கிறது. அதுவும் சாதாரண இடத்தில் இல்ல. இந்தியாவின் மிகப்பெரிய பங்குச்சந்தையான NSE (National Stock Exchange)-ல்.

என்ன நடந்தது?

2013 முதல் 2016-ம் ஆண்டு வரை NSE-ன் CEO-வாக இருந்தவர் சித்ரா ராமகிருஷ்ணன். இவர் 90-களில் தொடக்கத்திலிருந்தே NSE-ன் தோற்றம் & வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றியவர். இந்த சித்ரா சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேல், கம்பெனியின் முக்கியமான முடிவுகளை, முகம்தெரியாத இமயமலையில் வாழ்வதாக நம்பப்படும் ஒரு சாமியாரின் அறிவுரையைக் கேட்டு எடுத்திருக்கிறார். இந்த விவரங்கள் அனைத்தையும் கடந்த வெள்ளிக்கிழமையன்று தன் விசாரணை அறிக்கையில் வெளியிட்டிருக்கிறது செபி.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

National Stock Exchange
National Stock Exchange

என்ன விசாரணை, என்ன அறிக்கை? 📃

கதையே இங்குதான் தொடங்குகிறது. பங்குச்சந்தையில் IPO வெளியிடவேண்டும் என்பது NSE-ன் நீண்டகால திட்டம். இதற்கான பணிகளை 2016 வாக்கில் தீவிரமாக மேற்கொண்டுவந்தது அந்நிறுவனம். ஆனால், அச்சமயத்தில்தான் Colocation முறைகேட்டில் சிக்கியது. சில குறிப்பிட்ட புரோக்கர்கள் மட்டுமே பலனடையும் வகையில் நடந்த மோசடி இது.

 • இதுகுறித்து எழுந்த புகாரில் செபி NSE-யை விசாரிக்க, முறைகேடு நடந்தது உறுதியானது. அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த சமயத்தில் சித்ராவும் CEO பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்தார். NSE-ன் IPO கனவும் தள்ளிப்போனது.

 • இதே காலகட்டத்தில் செபி இன்னொரு பிரச்னை தொடர்பாகவும் விசாரணையைத் தொடங்கியது. அது, 2013-ம் ஆண்டு NSE-ன் CSA (Chief Strategic Advisor)-வாக நியமிக்கப்பட்ட ஆனந்த் சுப்ரமணியம் தொடர்பானது.

யார் இவர்?

இந்தக் கேள்விதான் பலரின் சந்தேகங்களுக்கு தொடக்கப்புள்ளி. 2013 வரைக்கும் பங்குச்சந்தை வட்டாரத்திற்கு அதிக பரிச்சயமில்லாதவர், ஆனந்த். ஆனால், திடீரென NSE-ன் CSA-வாக 2013-ம் ஆண்டு 1.5 கோடி ரூபாய் சம்பளத்திற்கு நியமிக்கப்பட்டார். இதற்கு முன் வேறொரு நிறுவனத்தில் அவர் பெற்றுக்கொண்டிருந்த சம்பளம் ஆண்டுக்கு 15 லட்சம் மட்டுமே. அதிர்ச்சி இதோடு நிற்கவில்லை.

 • 2014-லிலேயே ஆனந்திற்கு அப்ரைசல் கிடைக்கிறது. 20% உயர்வுடன் சம்பளம் 2.01 கோடி ரூபாயாக உயர்கிறது. 💰

 • அதற்கு அடுத்த 5 வாரத்திலேயே இன்னொரு அப்ரைசல்; இப்போது 15% உயர்வு. சம்பளம் 2.31 கோடி ரூபாய். இப்படியே போக 2015-ம் ஆண்டு அவரின் ஆண்டு சம்பளம் (CTC) 5 கோடி ரூபாயைத் தொடுகிறது. இதெல்லாம் பங்குச்சந்தையில் பழுத்த அனுபவம் கொண்ட NSE-ன் மூத்த ஊழியர்களுக்கே கிடைக்காத சம்பளம்! 😳

 • CEO-வான சித்ராவுக்கு அருகிலேயே கேபின், வாரத்திற்கு 3 நாள் மட்டும் வேலை, First Class விமானப் பயணம் எனப் பல சலுகைகள் அடுத்தடுத்து ஆனந்திற்கு கிடைக்கின்றன. CEO-வான சித்ராவுக்கு இருக்கும் அதிகாரங்கள், சலுகைகள் என அனைத்தும் ஆனந்திற்கு குவிய, விரைவில் Group Operating Officer-ராகவும் பதவி உயர்வு பெறுகிறார். இதையடுத்துதான், NSE-யிலிருந்து ஆனந்த் தொடர்பாக மொட்டை கடுதாசிகள் புகார்களாக செபிக்குப் பறக்கின்றன. 📮

இதுதொடர்பாக நடந்த விசாரணையில்தான் எல்லா விஷயங்களும் தெரியவந்திருக்கின்றன.

சரி, ஏன் ஆனந்திற்கு இவ்வளவு சலுகைகள்? 🤔

இங்குதான் சூட்சுமமே! பங்குச்சந்தையில் அனுபவமே இன்றி NSE-க்குள் ஆனந்த் நுழைந்தது முதல் அடுத்தடுத்து அங்கு உச்சிக்கு சென்றது வரை எதுவுமே தற்செயலாகவோ, தகுதியின் அடிப்படையிலோ நடந்ததல்ல. மாறாக, அந்த மர்ம சாமியாரின் வேலைகளால் நடந்தது.

 • சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சித்ரா ஒரு சாமியாரிடம் அறிவுரை கேட்டு நடக்கிறார் என மேலே பார்த்தோம் அல்லவா? அந்த சாமியாரிடம் நிர்வாகத்தின் ஒவ்வொரு முடிவு தொடர்பாகவும் அறிவுரை கேட்டிருக்கிறார் சித்ரா.

 • அந்த சாமியாரின் மின்னஞ்சல் முகவரியான rigyajursama@outlook.com-க்கு NSE-யின் நிர்வாக விவரங்கள், எதிர்காலத் திட்டங்கள், கம்பெனி ரகசியங்கள், இவ்வளவு ஏன்… பணியாளர்களின் அப்ரைசல் விவரம் 😲 முதற்கொண்டு அனைத்தையும் பகிர்ந்திருக்கிறார். பதிலுக்கு அந்த சாமியாரும் சித்ராவுக்கு ஒவ்வொரு இடத்திலும் அறிவுரை வழங்கியிருக்கிறார்.

 • அப்படி ஒரு அறிவுரை மூலமாகத்தான் ஆனந்த் உள்ளே நுழைந்தார்; ஆனந்தின் பதவி உயர்வு, வாரத்திற்கு 3 நாள் வேலை என எல்லா சலுகைகளும் அவரின் சித்து வேலைகளே! இதை இருவருக்குமிடையேயான மின்னஞ்சல் உரையாடல்கள் மூலம் உறுதிப்படுத்தியிருக்கிறது செபி.

`பச்சக்கிளி' காமெடியும் NSE பங்குச்சந்தை கதையும்!

இதெப்படி சாத்தியம்? 🧐

இரண்டே சாத்தியங்கள்தான்; ஒன்று, சித்ரா அந்தளவுக்கு ஆன்மிக நம்பிக்கையில் மூழ்கியிருந்து, அந்த மர்ம சாமியாரின் விளையாட்டில் ஏமாந்திருக்கவேண்டும். அல்லது சித்ரா தெரிந்தே, ஏதோ ஒரு ஆதாயத்திற்காக ஆனந்திற்கு கூடுதல் சலுகைகள் வழங்கியிருக்கவேண்டும்.

 • ``நிர்வாக விஷயத்திற்காக பிற நபர்கள் தங்கள் நண்பர்களிடமோ, ஆலோசகர்களிடமோ ஆலோசனைகள் பெறுவதில்லையா? அப்படித்தான் இதுவும். இது என் பணியை சிறப்பாக செய்ய உதவியது. வேறு எந்த ஆதாயமும் நான் அடையவில்லை” என இதற்கு முட்டுக்கொடுத்திருக்கிறார் சித்ரா.

 • இந்த விஷயம் NSE-யின் பிற நிர்வாகிகளுக்குத் தெரிந்துமேகூட, கம்பெனி பெயர் கெட்டுவிடக்கூடாது என நேரடியாக செபியிடம் புகார் அளிக்காமல் கமுக்கமாக இருந்திருக்கின்றனர். சிலபல மொட்டைக் கடுதாசிகள்தான் செபியை விசாரணை வரை இழுத்து வந்திருக்கிறது.

யார் அந்த சாமியார்?

வேறு யார்? ஆனந்தாகத்தான் இருக்கமுடியும் என்கிறது செபி. தனிப்பட்ட முறையில் சித்ராவின் நம்பிக்கைக்குரிய ஊழியராகவும், இன்னொருபுறம் முகம்தெரியாத சாமியாருமாக இரண்டு வாழ்க்கை நடத்தி ஆதாயம் அடைந்திருக்கிறார். இந்தியாவின் மிகப்பெரிய பங்குச்சந்தையான NSE-ன் CEO-வை ஒரு பொம்மைபோல ஆட்டுவித்திருக்கிறார் என்றிருக்கிறது செபி (இன்னும் இதை வேறு ஆதாரங்கள் வழி உறுதிப்படுத்தவில்லை; மின்னஞ்சல் உரையாடல்களை வைத்துமட்டுமே இந்த முடிவுக்கு வந்திருக்கிறது).

சரி, இனி என்ன நடக்கும்?

 • முறையாக நியமனங்களை மேற்கொள்ளாதது, NSE-ன் முக்கிய தகவல்களை 3-ம் நபருக்கு கசியவிட்டது ஆகிய குற்றங்களுக்காக சித்ரா, ஆனந்த், முன்னாள் NSE CEO விஜய் நரேன் ஆகிய மூவருக்கும் தலா 2 கோடி ரூபாய் அபராதம் விதித்திருக்கிறது செபி. மேலும், அடுத்த 3 ஆண்டுகளுக்கு பங்குச்சந்தை தொடர்பான எந்தவொரு நிறுவனங்கள் பக்கமும் எட்டிப்பார்க்கவே கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளது (நரேனுக்கு மட்டும் 2 ஆண்டுகள்).

 • கூடவே அடுத்த 6 மாதங்களுக்கு எந்தவொரு புதிய சேவையையும் தொடங்கக்கூடாது என NSE-க்கும் குட்டு வைத்திருக்கிறது.

இப்படியாக, ஒரு ஹைடெக் பச்சைக்கிளி Episode-ஐ வெளிச்சத்திற்கு கொண்டுவந்திருக்கிறது செபி. அவ்வளவு பெரிய பங்குச்சந்தை நிர்வாகத்தில் எப்படி இந்த இருவரும் யாரின் தடங்கலுமின்றி, நினைத்ததையெல்லாம் சாதித்திருக்கின்றனர் என ஆச்சர்யமாகப் பார்க்கிறது வர்த்தக உலகம்.
Note: The Subject Line நியூஸ்லெட்டரின் Explainer கட்டுரை இது. இதேபோல தினசரி நிகழ்வுகளை எளிமையாக, விரிவாகப் புரிந்துகொள்ள கீழே உங்கள் மெயில் ஐடி-யைக் கொடுத்து சப்ஸ்கிரைப் செய்யுங்கள். தினமும் காலை 7 மணிக்கு அன்றைய முக்கியமான அப்டேட்கள் உங்கள் இன்பாக்ஸிற்கே வந்துசேரும்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism