Published:Updated:

இண்டிகோ பெயின்ட்ஸ் ஐ.பி.ஓ வெளியீடு... முதலீட்டாளர்கள் பரிசீலிக்கலாமா?

Indigo Paints
Indigo Paints

நீண்டகால நோக்கில் முதலீட்டை மேற்கொள்பவர்கள், இண்டிகோ பெயின்ட்ஸ் ஐ.பி.ஓ-வைப் பரிசீலிக்கலாமா?

இண்டிகோ பெயின்ட்ஸ் நிறுவனம் புதிய பங்குகளை (ஐ.பி.ஓ) வெளியிட செபியிடம் ஏற்கெனவே அனுமதி பெற்றிருந்த நிலையில், இன்று தொடங்கி 22-ம் தேதி வரை ஐ.பி.ஓ வெளியிட இந்த நிறுவனம் முடிவு செய்திருக்கிறது. இதன் மூலம் 1,000 கோடி ரூபாயைத் திரட்ட இண்டிகோ பெயின்ட்ஸ் திட்டமிட்டிருக்கிறது.

இதற்காக 300 கோடி ரூபாய் மதிப்புள்ள புதிய பங்குகளை வெளியிடுகிறது. மேலும், ஆஃபர் ஃபார் சேல் முறையில் பங்குச் சந்தையில் 58.4 லட்சம் பங்குகளை விற்பனை செய்கிறது. பங்கு விலைப்பட்டை 1,480 - 1,500 ரூபாய் வரை இருக்கும்.

இண்டிகோ பெயின்ட்ஸ் நிறுவனத்தில் ஏற்கெனவே பங்குதாரர்களாக உள்ள சீக்வோயா கேப்பிடல், எஸ்.சி.ஐ இன்வெஸ்ட்மென்ட்ஸ் ஆகிய நிறுவனங்களும், ஹேமந்த் ஜலான் ஆகியோரும் தங்களுடைய பங்குகளை இந்த ஐ.பி.ஓ வெளியீட்டில் விற்பனை செய்யவுள்ளனர்.

Paint
Paint
ஐ.பி.ஓ வெளியீடு... விலையை எப்படி நிர்ணயம் செய்கிறார்கள்?

அதன் அடிப்படையில் சீக்வோயா தற்போது வைத்திருக்கும் 85.34 லட்சம் பங்குகளில் 20 லட்சம் பங்குகளையும், எஸ்.சி.ஐ இன்வெஸ்ட்மென்ட்ஸ் தற்போது வைத்திருக்கும் 92.08 லட்சத்திலிருந்து 21.65 லட்சம் பங்குகளையும், ஹேமந்த் ஜலான் வைத்திருக்கும் 1.02 கோடி பங்குகளிலிருந்து 16.7 லட்சம் பங்குகளையும் விற்பனை செய்யவுள்ளனர்.

இண்டிகோ பெயின்ட்ஸ் ஐ.பி.ஓ-வில் முதலீடு செய்யலாமா என்பது குறித்து, பங்குச் சந்தை நிபுணர் ரெஜி தாமஸிடம் கேட்டோம்.

``பல வருடங்களாகவே இண்டிகோ பெயின்ட்ஸ் நிறுவனம் நல்ல முறையில் செயல்பட்டு வருகிறது. கொரோனா ஊரடங்கு காலத்தில் கட்டுமானம் மற்றும் ரியல் எஸ்டேட் துறை பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த காலம் என்பதால், அன்றைய நிலையில் அனைத்து நிறுவனங்களைப் போல இந்த நிறுவனமும் விற்பனையில் சரிவைச் சந்தித்தது.

IPO
IPO

ஆனால், தற்போது துறை சார்ந்த நடவடிக்கைகள் இயக்க நிலைக்கு வந்திருப்பதால், இண்டிகோ பெயின்ட்ஸ் நிறுவனப் பொருள்களின் மீதான தேவை அதிகரிக்கவே வாய்ப்புள்ளது.

பங்குச் சந்தையின் போக்கு நன்றாக இருக்கும் போது, ஐ.பி.ஓ வெளியிடுவது வரவேற்கத்தக்க விஷயம்தான். இதனுடைய விலைப் பட்டையும் நன்றாக இருக்கிறது. நீண்டகால நோக்கில் முதலீட்டை மேற்கொள்பவர்கள், இண்டிகோ பெயின்ட்ஸ் ஐ.பி.ஓ-வைப் பரிசீலிக்கலாம். எதிர்காலத்தில் லாபம் தரக்கூடிய பங்காக இது இருக்க வாய்ப்புள்ளது" என்றார்.

முதலீட்டாளர்கள் பரிசீலிக்கத் தயாரா?

அடுத்த கட்டுரைக்கு