Published:Updated:

நீண்ட கால முதலீட்டில்... பங்குச் சந்தையில் நஷ்டம் வராது!

முதலீடு
பிரீமியம் ஸ்டோரி
முதலீடு

முதலீட்டு எல்.கே.ஜி - 3

நீண்ட கால முதலீட்டில்... பங்குச் சந்தையில் நஷ்டம் வராது!

முதலீட்டு எல்.கே.ஜி - 3

Published:Updated:
முதலீடு
பிரீமியம் ஸ்டோரி
முதலீடு

இந்தியாவில் பங்குச் சந்தையில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளில் கணிசமாக உயர்ந்தாலும், வளர்ந்த பொருளாதார நாடுகளுடன் ஒப்பிடும்போது குறைவான அளவிலேயே உள்ளது. இதற்குக் காரணம், பங்குச் சந்தையைப் பற்றிய சரியான தகவல்கள் முதலீட்டாளர்களுக்கு பரவலாகச் சென்ற டையவில்லை என்பதே.

தி.ரா.அருள்ராஜன்
பங்குச் சந்தை பயிற்சியாளர், 
www.ectra.in
தி.ரா.அருள்ராஜன் பங்குச் சந்தை பயிற்சியாளர், www.ectra.in

பங்குச் சந்தையில் முதலீடு செய்வது ரிஸ்க் நிறைந்தது; அதில் போடும் பணத்துக்கு எந்த உத்தரவாதமும் இல்லை; நஷ்டம் வந்தால், மிகப் பெரிய அளவில் இருக்கும் என்கிற கருத்துகள்தான் முதலீட்டாளர்களின் மனதில் நிரப்பப்பட்டு இருக்கின்றன. இந்தக் கருத்து களில் ஓரளவு உண்மை இருந்தாலும் முழுக்க உண்மை என்று சொல்லிவிட முடியாது.

பங்குச் சந்தையில் புதிதாக முதலீடு செய்ய வரும் முதலீட்டாளர்கள், இது நீண்ட காலத்துக்கானது என்பதை முதலில் நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும். பங்குச் சந்தை யானது ஏற்றம், இறக்கம் என்கிற இரண்டு செயல்பாடுகளை எப்போதும் கொண்டிருக்கும். சந்தை எப்போதும் ஏறிக்கொண்டே இருக்கும் என்றோ, இறங்கிக்கொண்டே இருக்கும் என்றோ சொல்ல முடியாது. உதாரணமாக, 1995-ல் தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண்ணான நிஃப்டியின் ஆரம்ப மதிப்பு 1000 என்கிற புள்ளியில் ஆரம்பமானது. கடந்த 25 ஆண்டுகளில் பல்வேறு இறக்கங்களை இந்தக் குறியீடு சந்தித்திருந்தாலும், மீண்டும் மீண்டும் உயிர்த்தெழுந்து, தற்போது 16000 புள்ளிகளைத் தாண்டியிருக்கிறது. இது குறுகிய காலத்தில் இறக்கம் கண்டாலும், மீண்டும் உயர்ந்து 18000, 20000 என்கிற புதிய உச்சத்தை நோக்கி சென்றுகொண்டே இருக்கும். பங்குச் சந்தையானது நீண்ட காலத்தில் உயர்ந்து கொண்டே இருக்கும் என்பதை நன்கு புரிந்து முதலீடு செய்தவர்கள் நல்ல வருமானத்தைப் பெற்றிருக்கிறார்கள். குறுகிய காலத்தில் நடந்த இறக்கங்களைக் கண்டு பயந்து ஒதுங்கியவர்கள் நஷ்டத்தையே கண்டார்கள்.

நீண்ட கால முதலீட்டில்... 
பங்குச் சந்தையில் நஷ்டம் வராது!

பங்குச் சந்தை புள்ளிகள் குறுகிய காலத்தில் கொஞ்சம் இறங்கினாலும் நீண்ட காலத்தில் உயர்ந்துவிடும் என்கிற மாதிரி, நல்ல அடிப்படை கொண்ட நிறுவனப் பங்குகளின் விலை குறுகிய காலத்தில் இறக்கம் கண்டாலும் நீண்ட காலத்தில் உயர்ந்துவிடும். பொதுவாக, ஒரு நிறுவனப் பங்கின் விலையானது, அந்த நிறுவனம் எதிர்காலத்தில் எவ்வளவு லாபம் ஈட்டும் என்பதை அடிப்படையாக வைத்து நிர்ணயிக்கப்படுகிறது. இந்த விலையானது பல்வேறு அக மற்றும் புறக்காரணிகளால் ஏறவும் செய்யும்; இறங்கவும் செய்யும். விலை இறங்கும் பங்குகள் இறங்கிக்கொண்டே இருக்கும் என்றோ, விலை ஏறிய பங்குகள் ஏறிக்கொண்டே இருக்கும் என்றோ சொல்ல முடியாது. நல்ல அடிப்படை உள்ள நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தாலும், பிற்பாடு ஏறிவிடும். அடிப்படை இல்லாத பங்குகள் விலை உயர்ந்தாலும், பிற்பாடு இறங்கிவிடும். ஒரு முதலீட்டாளர் நல்ல அடிப்படை கொண்ட பங்குகளை வைத்திருக்கிறாரா, இல்லையா என்பதே முக்கியமான விஷயமே தவிர, எல்லாப் பங்குகளின் விலையும் இறங்கும் அல்லது ஏறும் என்று பொத்தாம் பொதுவாகச் சொல்ல முடியாது.

நல்ல அடிப்படை உள்ள பங்குகளைக் கண்டறிய பல்வேறு நிறுவனங்களின் வருமானத்தைத் தொடர்ந்து கவனித்துக்கொண்டே இருக்க வேண்டும். நிறுவனங்களின் வருமானம் தொடர்பான செய்திகளைத் தொடர்ந்து கவனித்துக்கொண்டே இருக்க வேண்டும்.

பங்குச் சந்தையில் நல்ல அடிப்படை உள்ள பங்குகளை நீண்ட காலத்தில் முதலீடு செய்து வைத்திருப்பதன்மூலம் பணவீக்கம் தாண்டிய வருமானம் கிடைக்கும் என்பதுடன், வருமான வரி கட்டுவதும் குறையும். அதாவது, பங்குச் சந்தையில் செய்த முதலீட்டை ஒரு வருடம் கழித்து விற்கும்போது, நீண்ட கால மூலதன ஆதாய வரியாக (Long term capital gain tax) லாபத்தில் 10% வரியாகக் கட்டினால் போதும். தவிர, நீண்ட கால முதலீட்டின் லாபத்தில் முதல் ஒரு லட்சம் ரூபாய் லாபத்துக்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது. பங்குச் சந்தையில் சரியான போர்ட்ஃபோலியோ உருவாக்கி செயல்படுவதன்மூலம் பிற முதலீடுகளில் கிடைக்கும் வருமானத்தைவிட கூடுதலான வருமானம் பார்க்கலாம்.

பங்குச் சந்தையில் குறுகிய காலத்தில் பங்குகளை வாங்கி விற்பவர்கள் டிரேடர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். பங்குச் சந்தையின் போக்கைப் பற்றியும் டெக்னிக்கல் அனாலிசிஸைப் பற்றியும் நன்கு தெரிந்துகொண்டு செயல் படுபவர்கள் மட்டுமே இந்த டிரேடிங்கில் நல்ல லாபம் பார்க்க முடியும். பங்குச் சந்தைக்கு புதிதாக வருகிறவர்கள் அதுபற்றித் தெரிந்துகொள்ளாமல், டிரேடிங்கில் ஈடுபடுவது பணத்தை இழக்கவே வாய்ப்புகளை உருவாக்கும்.

பங்குச் சந்தைக்குள் வருவதற்கு முன்பே, அதைப் பற்றிய பல்வேறு கருத்துகளை மனதில் கொண்டே பங்குச் சந்தைக்குள் வருகிறார்கள். இந்தக் கருத்துகள் என்பது பெரும்பாலும் தங்களைச் சுற்றி உள்ள உற்றார், நண்பர்கள், படித்தது, கேட்டது என்பது போன்றவையாகவே உள்ளன. ஆனால், பங்குச் சந்தைக்குப் புதிதாக வரும் முதலீட்டாளர்கள் சில தங்க விதிகளை மறக்காமல் பின்பற்ற வேண்டும். அவை,

 சந்தைக்குள் வருபவர்கள் தங்கள் சேமிப்பின் ஒரு பகுதியை அதாவது, உபரிப் பணத்தை மட்டுமே சந்தைக்குள் கொண்டு வர வேண்டும்.

 அந்தப் பணத்தையும் மூன்று பகுதியாகப் பிரித்து, இறக்கம் வரும்போதும் வாங்க வேண்டும்.

 வெவ்வேறு துறை சார்ந்த பங்குகளில் முதலீடு செய்ய வேண்டும்.

 சொந்தமாக முடிவுகளை எடுப்பவராக இருக்க வேண்டும்.

பங்குச் சந்தை முதலீடு பற்றி முதலீட்டாளர்களின் மனதில் இருக்கும் தவறான விஷயங் களைக் களைந்து, சரியான விஷயங்களைத் தெரிந்து கொண்டுவிட்டோம். இனி, பங்குச் சந்தை முதலீட்டைத் தொடங்க என்ன செய்ய வேண்டும், அதற்குத் தேவைப் படும் ஆவணங்கள் என்னென்ன என்பது பற்றி அடுத்த வாரம் பார்ப்போம்.

(வளரும்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism